வெண்முரசு - சொல்வளர்காடு - துகிலுரிதலும் உடலுரிதலும்
வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் இந்திரநீலம், இமைக்கணம் மூன்றும் மகாபாரதத்தின் மையக் கதைப்போக்கில் இருந்து வெகுவாக விலகியவை. சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய நாவல்கள் பாண்டவர்களின் கான்வாழ்க்கையைப் பேசுகின்றன என்றாலும் இம்மூன்று நாவல்களையும் ஒரு வகையில் மகாபாரதத்தின் அரசியல் களத்தில் இருந்து பெரும்பாலும் விலகியவை என்று சொல்லலாம். சொல்வளர்காடு தருமனும் கிராதம் அர்ஜுனனும் மாமலர் பீமனும் தமக்கான மெய்மையை பன்னிரண்டு ஆண்டுகால கான்வாழ்க்கையில் பெறுவதைப் பேசுகின்றன. ஆனால் கிராதம், மாமலர் ஆகிய நாவல்களைவிட சொல்வளர்காடு சிக்கலானது. நாவலுடைய பேசுபொருள் சார்ந்த சிக்கல் என்பதைவிட வெண்முரசு வரிசையில் சொல்வளர்காடு வைக்கப்பட்டிருக்கும் இடம் சார்ந்து இந்நாவலில் ஒரு சிக்கல் உள்ளது. உண்மையில் அச்சிக்கல் ஒரு உப பிரதியாக நாவல் முழுவதுமே பேசப்படுகிறது. இக்கட்டுரையில் அச்சிக்கலின் வழியாக நாவலை அணுகிப் பார்க்கலாம் என எண்ணுகிறேன்.
வெண்முரசு நாவல்கள் ஒவ்வொன்றும் உருவ அளவில் தனி நாவலாகவே வாசிக்கத்தக்கவை. ஒவ்வொரு நாவலிலும் ஒரு திட்டமான கால அளவும் கதைப்போக்கும் உள்ளது. ஆகவே முந்தைய நாவலைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்திரம் தெரிந்தாலே வெண்முரசின் எந்தவொரு நாவலையும் தனிநாவலாகவே வாசித்துச் செல்லலாம். சொல்வளர்காடு வெண்முரசு நாவல் வரிசையின் பதினொன்றாவது நாவல். பாண்டவர்களின் வனவாழ்வின் தொடக்கம் இந்நாவலில் இடம்பெறுகிறது. பாரதவர்ஷம் என்று அழைக்கப்பட்ட வேதகால இந்தியாவின் வேதக் கல்வி நிலைகளாக உள்ள வெவ்வேறு காடுகளின் வழியே பாண்டவர்களும் திரௌபதியும் கான்வாழ்க்கையை கழிக்கத் தொடங்குவதை இந்நாவல் பேசுகிறது.
இதற்கு முந்தைய நாவலான பன்னிரு படைக்களம் திரௌபதி துகிலுரியப்படுதல் என்ற உச்சத்தில் சென்று முடிகிறது. ஒரு வகையில் மகாபாரதத்திலேயே உச்ச தருணம் அது. அனைத்தும் தலைகீழாகிறது. துரியோதனனின் இணை அரசனாக சூதுக்களத்தில் அமர்ந்த தருமன் அனைத்தும் இழந்த ஒரு நாடிலியாக களத்தை விட்டு எழுகிறான். பேரரசியாக இருந்த திரௌபதி விலைமகளைப் போல சூதுக்களத்தில் ஆடை களையப்படுகிறாள். திரௌபதியை சூதுக்களம் வரை கொண்டு வந்து சேர்க்கும் அரசியல் நிகழ்வுகளை உளநிலைகளை பன்னிரு படைக்களம் நாவல் விரிவாகப் பேசுகிறது. அவற்றை இங்கு விவாதிக்க வேண்டாம். ஆனால் துகிலுறிதல் என்ற செயலை மட்டும் - மகாபாரதத்தின் மூலப்பிரதியில் இச்சம்பவம் கிடையாது என ஜெயமோகன் சொல்கிறார் - எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் ஆடை களையப்படும் செயலை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
ஆடை என்பது மனித குலம் உருவாக்கிக்கொண்ட பண்பாடுகளின் ஒரு வெளித்தெரியும் சாதனை. ஆடை உடலிச்சையை கட்டுக்குள் வைக்க வேண்டியதையும் சமூகமாகத் திரளும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. எந்தவொரு பண்பாட்டு மீறலும் ஆடையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு ஆண்மையச் சமூகத்தில் ஆண்களை விட பெண்களின் ஆடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெண்ணின் ஆடை களைந்திருப்பதை சுட்டிக்காட்டும் ஆண் கண்ணியமானவனாக நினைக்கப்படுகிறான். பெண்ணின் ஆடை விலகுவதை விலகிய நினைவுகளை ஆண் நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆடை வறுமையின் செல்வத்தின் பாலியலின் இச்சையின் நாகரிகத்தின் வெளிப்பாடாக உள்ளது.
சுருக்கமாக ஆடை என்பதை பண்பாடு என்றும் ஆடையின்மையை பண்பாட்டின்மை என்றும் வரையறுக்கலாம். (உலகம் முழுவதும் இயங்கும் நிர்வாணக் குறுங்குழுக்களை கழித்துவிட்டுப் பார்த்தால் இன்றும் இவ்வரையறையில் பெரிய மாறுதல்கள் இல்லை)
திரௌபதி ஒரு தேசத்தின் அரசி. அதாவது ஒரு பண்பாட்டின் உச்சப் பிரதிநிதி. அவளுடைய ஆடை களையப்படுவதன் வழியே அப்பண்பாட்டின் மிக இழிந்த ஒரு நிலைக்கு அவள் கொண்டுவரப்படுகிறாள். பாண்டவர்களுக்கும் சூதுக்களத்தில் அதுதான் நிகழ்கிறது எனினும் துகிலுரிதல் என்பது ஒரே நேரத்தில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் மிகப்பெரிய அவமரியாதையை கொண்டு வருகிறது. அதுவொரு தலைகீழாக்கம். ஒரு விபத்துபோல. ஒரு போர், ஒரு மரணம் ஒரு, ஒரு திருவிழா போல. அதுவரையிலான சமூக ஒப்புதலை பாண்டவர்களும் திரௌபதியும் இழக்கின்றனர். இழந்து கானகத்தை நோக்கி அவர்கள் செல்லத் தொடங்குகின்றனர்.
துகிலுரிதல் என்ற ஸ்தூல நிகழ்வு அதுவரையில் அகத்தில் பேணிக்கொண்ட வேடங்களை அனைவரையும் களையும்படிச் செய்கிறது. பாண்டவர்களை என்ன செய்வது என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது. சூதுக்கள நிகழ்வுக்காக துரியோதனனை ஏறத்தாழ சாகும்வரை அடிக்கும் பீஷ்மர் பாண்டவர்களுக்கு நாட்டினை திருப்பிக் கொடுக்கலாமா என்ற கேள்வி வரும்போது துரியோதனனை நோக்கியே சாய்கிறார். அஸ்தினாபுரத்தின் பேரரசனாக நின்று முடிவெடுக்க வேண்டிய திருதராஷ்டிரர் வெறும் தந்தையென்றே மாறி நிற்கிறார். விதுரர் திருதராஷ்டிரரால் அவருக்கு அஸ்தினாபுரிக்கு இணையானது என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட அஸ்வதந்தம் என்கிற வைரத்தை பிரிய முடியாதவராக இருக்கிறார். துரியோதனனுக்கு மண்ணாசையும் கர்ணனுக்கு வஞ்சமும் குறைவதே இல்லை.
இதுவரையிலான வெண்முரசு நாவல்கள் எதிலும் இந்நாவலில் இடம்பெறும் கிருஷ்ணன் பாத்திரம் இவ்வளவு நீண்ட தன்னுரையாடலை நிகழ்த்தியது கிடையாது. கிருஷ்ணன் தடுமாறும் கணங்களை முதன்முறையாக சொல்வளர்காடு சித்தரிக்கிறது.
ஆனால் நாவலின் பின்புலமாக அமைவது வேதக் கல்வி நிலைகளில் நடைபெறும் தத்துவ உரையாடல்களும் வேதகால முனிவர்கள் பற்றி சொல்லப்பட்ட கதைகளுமே. யாக்ஞவல்கியர், கார்கி, மைத்ரேயி,உத்தாலகர், ஜனகர் என பெயர்களாக கேள்விப்பட்டிருந்த எண்ணற்ற முனிவர்கள் நாவலில் பாத்திரங்களாக இடம்பெறுகின்றனர்.
ஒருபுறம் பாண்டவர்களின் யாதவர்களின் அரசியல் சூழல். மறுபுறம் தத்துவ விவாதங்கள் என நாவல் நிகழ்கிறது. உலகியல்வாதம், அத்வைதம், சமணம் என பௌத்தத்துக்கு முந்தைய இந்தியாவின் அத்தனை தத்துவ தரப்புகளையும் நாவல் பேசுகிறது. அது வெறும் விவாதமாக இல்லாமல் கருத்துக்களின் வளர்ச்சி நிலையாகவும் வாசிக்கத்தக்கதாக உள்ளது. உதாரணமாக பாண்டவர்கள் முதலில் செல்லும் சுனகக் காட்டிலும் அடுத்ததாகச் செல்லும் துவைதக் காட்டிலும் தருமனை படையெடுத்துச் சென்று நாட்டினை கைப்பற்றவே சொல்கின்றனர். ஆனால் இவ்விரு கல்விநிலையும் தத்துவ ரீதியாக எதிர்தரப்பு. கௌஷீதகம் என்கிற காட்டில் நடந்ததாக சொல்லப்படும் கதைகள் அனைத்துமே மானுட விழைவின் ஆடையற்ற தன்மையை சித்தரிக்கிறவையாகவும் விழைவின் மீது அறம் என்கிற கருத்துநிலை வெற்றி கொள்ளும் தருணங்களாகவும் உள்ளன.
எட்டாவது காடான மைத்ராணியத்தில் தருமன் சந்திக்கும் அருகப்படிவர் இவ்வாறு கூறுகிறார்.
/அரசே, இப்புவியில் அனைத்து கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில் மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!/
இத்தகையதொரு வளர்ச்சியை நாவலில் தத்துவ உரையாடல்களின் உச்சமெனக் கொள்ளலாம். ஆனால் நாவலின் அரசியல் தளமும் தத்துவத் தளமும் இணையும் புள்ளி எது?
தொடக்கத்திலேயே சொன்னது போல இந்நாவல் துகிலுரிதலுக்குப் பிறகு இடம்பெறுகிறது. ஒரு வியாழவட்டம்(பன்னிரண்டு ஆண்டுகள்) என்பதை ஒரு பிறவி என்று கருதலாம் என நாவலில் ஒரு இடத்தில் வருகிறது. பாண்டவர்களும் திரௌபதியும் இறந்து பிறக்கின்றனர். இறப்புக்கு முந்தைய நினைவாக அவர்களுடைய கடந்தகாலம் உள்ளது. அக்கடந்தகாலத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள இயலாதது. அதாவது இறப்பு போன்ற ஒரு நிகழ்வாக அந்த துகிலுறிதலை கற்பனை செய்யலாம். அதற்கு காரணமானவர் தருமன். தருமனின் எத்தனையோ வகையான இரைஞ்சுதல்களுக்கும் தன்னிரக்க பேச்சுகளுக்கும் பிறகு கூட திரௌபதி அவர் மீது கனிவதில்லை. விதுரர் இறப்பின் தருணத்தில் நின்று அவளிடம் இரக்கிறார். அப்போதும் அவள் கனிவதில்லை. ஏறத்தாழ இதுபோன்றதொரு தருணம் கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் இடையே நிகழ்கிறது. கிருஷ்ணன் யாதவ குலங்களுக்கு இடையேயான உட்பூசல்களை வன்முறையைக் கொண்டு தீர்த்த பிறகு பலராமன் கிருஷ்ணனிடமிருந்து முற்றாகவே விலகிச் செல்கிறார். அணுக்கமான உறவுநிலைகளின் நொய்மை ஒருமுறை அறுபட்டதும் அந்த இடத்திலேயே நின்று விடுகிறது. தருமன் இந்த அறுபடலைத்தான் நாவல் முழுக்க ஒட்டவைக்க முயன்று கொண்டே இருக்கிறார். திரௌபதி அவளுக்கு அவ்வளவு தேவைப்படுகிறாள். அவர் திரும்ப கடந்தகாலத்துக்குச் செல்ல விரும்புகிறார். 'அனைத்தும் சீரடைந்துவிடும்' என்று நம்ப விரும்புகிறார்.
இந்தப் பின்னணியிலேயே தருமனுக்கு அத்தனை மெய்மையும் உரைக்கப்படுகிறது. தருமன் அடையும் தெளிவுகளைவிட அவர் அடையும் குழப்பங்களே நாவலில் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றன. திரௌபதியின் உள்ளே எரியும் நெருப்பை அறியும்படி அவரை அருகப்படிவர் பணிக்கிறார்.
யக்ஷ வனத்தில் நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி இறந்து கிடக்கும் தருமனின் தம்பியரை அவர் யக்ஷனுக்கு அளிக்கும் பதில்களே மீட்கின்றன. அவர் தன்னை உணர்கிறார். அங்கிருந்து கந்தமாதனம் என்கிற எரிமலைக்குச் செல்லும் தருமன் தோல் உருகி வழிந்தவராக பாண்டவர்களிடம் திரும்புகிறார். ஏறத்தாழ இறந்து பிறக்கிறார்.துகில் உரியப்பட்டதால் திரௌபதி உணரும் அழலை தான் எரிந்து தருமன் உணர்கிறார். திரௌபதியின் விலக்கம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தருமன் அடையும் மெய்மையின் முன் அவளுடைய விலக்கம் சிறுத்துப் போகிறது.
பீமன் இறுதியாக தருமனிடன் கந்தமாதன மலையில் நீங்கள் கண்டதென்ன என்று கேட்கிறான். தருமன் 'அனலைக் கண்டேன்' என்று சொல்கிறார்.
அனலை பசி என்று மேலும் விளக்குகிறார். இந்த நாவலில் இடம்பெறும் தத்துவ விவாதங்கள் மானுடத்தின் அடிப்படை இச்சைகளையும் கணக்கில் கொள்கின்றன. நாவலின் எந்தவொரு உபகதையிலும் முழுமை நோக்குக்கான விழைவும் அடிப்படை உணர்வுகளான பயமும் காமமும் சுயம் குறித்த அலைகழிதலும் இணையாக ஓடிச்செல்வதை உணர முடியும்.
மனிதர்களை அவர்களுடைய அத்தனை பாவனைகளும் களைந்தபிறகு எஞ்சுவதைக் கொண்டு மட்டுமே சொல்வளர்காடு அணுகிறது. நாவலை வாசிக்க பெருந்தடையாக அமைவது கூர்மையான உளவியல் தருணங்களும் இணையாகச் செல்லும் தத்துவ உரையாடல்களுமே. ஆனால் வாசித்துச் செல்லும்போது ஒரு புள்ளியில் தனிமனித உணர்வுகளும் தத்துவமும் இணைந்து பயணிக்கத் தொடங்குவதைக் காண்கிறோம். முழு நாவலிலும் நெகிழச் செய்யும் ஒரேயொரு தருணம் நாவல் இறுதியில் பீமனிடம் ஏற்படும் மாற்றமே. பீமன் எப்போதும் தருமனை பகடி செய்தபடிதான் இருக்கிறான். நாவலின் இறுதியில் தன்னை மீறிச்சென்று தன் தமையன் ஒரு அறிதலை அடைந்ததும் பீமனால் அதைத் தாள இயலவில்லை. ஒரு வகையில் அது பீமனின் ஆணவம் அழியும் தருணம்கூட.
இறப்பினை ஒத்த துகிலுறிதல் நிகழ்வால் திரௌபதி தருமனை விலகுவதில் தொடங்கும் நாவல் தருமன் உடலுருகிப் பெற்ற மெய்மையால் தன்னை விலகிவிடுவாரோ என்று பீமன் அஞ்சுவதில் முடிவது நல்லதொரு நகைமுரணன். சொல்லளர்காடு தமிழில் எழுதப்பட்ட முதன்மையான மெய்யியல் நாவல்களில் ஒன்று.
புகைப்பட உதவி: venmurasu.in
Comments
Post a Comment