உண்மைகளின் பெட்டகம்
உனக்கு நினைவிருக்கிறதா
எத்தனையோ நாட்களுக்கு முன்
நான் உன்னைப் பார்க்க வந்தேன்
நான் திரும்பிய பிறகு
என் வரவு உன்னை மகிழ்வித்ததாய்ச் சொன்னாய்
அன்றுதான் நம் பெட்டகத்தில்
முதல் உண்மை விழுந்தது
நேற்று கூடலுக்குப் பின்
'நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்' என்று கேட்டாய்
நான் எவ்வளவென்று சொன்னேன்
உன் கண்களில் இருந்து வழிந்த உண்மை நம் பெட்டகத்தில் சென்று தங்கியது
உனக்குத் தெரிகிறதா
நாம் மகிழ்ந்திருந்த கணங்கள் அனைத்தும் உண்மையானவை
உண்மையை நம்பாதவன் இப்படிச் சொல்கிறான் என்று ஆச்சரியப்படுகிறாய்தானே?
கண்மணி
நேற்றேதான் உணர்ந்தேன்
உண்மை என்பது வேறெதுவும் இல்லாத மகிழ்ச்சிதான்
எதையும் திரும்ப எடுக்க முடியாத அந்த உண்மைகளின் பெட்டகத்தை நம் மகிழ்ச்சியால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்
வெகுநாட்களுக்கு முன்பு நிரம்பிய ஒரு பெட்டகத்தின் முன் நின்று தான் உன் பிரார்த்தனைகளை
தினம் நீ முணுமுணுக்கிறாய்
Comments
Post a Comment