வலி
வலி
1
வலிக்கும் போது ஏன் எதுவுமே பிடிக்காமல் போகிறது?
உணவு கசக்கிறது
பெண்ணுடல் வெறுப்பளிக்கிறது
சிரிப்பவர்கள் துவேஷத்தைக் கிளப்புகின்றனர்
குழந்தைகள் எரிச்சலூட்டுகின்றனர்
கூரைகள் அச்சமளிக்கின்றன
யாரோ ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டதாக உடல் நம்பத் தொடங்குகிறது
கேட்கும் சொற்கள் நஞ்சாகின்றன
படிக்கும் சொற்கள் பொருளிழக்கின்றன
சொல் வலியே
மொத்த உலகத்தையும் எதிரியென வகுத்துக் கொள்ளும் அளவு நீ என்ன அவ்வளவு பெரிய வீரனா
2
அகவலியை அடிவயிற்றில் ஒரு விரும்பத்தகாத உணர்வென முதலில் உணர்கிறேன்
அது மெல்லிய ஆனால் வலுவான தொடக்கம்
வலியின் அடுத்த அடி இன்னும் வலுவானதாக இருக்கும்
ஆனால் அது எங்கிருந்து எழப்போகிறது என்று ஊகிக்கவே முடியாது
கைகள் எடையிழக்கின்றனவா
உள்ளம் நம்பிக்கை இழக்கிறதா
வாய் கசக்கிறதா
பற்கள் நரநரவென்று கடித்துக் கொள்கின்றனவா
கண்கள் எரிகின்றனவா
காது மடல்கள் சுடுகின்றனவா
என்றெல்லாம் தேடித்தேடி
ஒரு பெருமூச்சை வெளித்தள்ளும்போது
எங்கிருந்து என்று தெரியாமல் அவ்வலி பீறிட்டு எழும்
அது எங்கு அடித்தது என்று ஊகிக்கவே முடியாது
ஆனால் அடிவாங்கிய பிறகு
பசிக்காது
உறக்கம் வராது
ஓரிடத்தில் உட்கார முடியாது
ரொம்ப தூரம் நடக்கவும் முடியாது
பெரிய கொடுமை
இறக்கவும் முடியாது
கண்ணகி கத்தியதற்கு
மனம் வலித்து செத்துப்போன பாண்டியன்தான்
எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!
After a month I read Ur writing sir what u said is that I experienced in most of times.well said sir
ReplyDelete🙏
DeleteHow to overcome the pain of backstabbing? Can you tell Sir.
ReplyDelete