Monday 25 April 2022

வெஸ்டிபியூல் - கதை

 டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன்.


பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி  'வெஸ்டிபியூல்' என்றான்.


'என்னது?' பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன். எனக்காக நிறுத்தி மறுபடியும் 'வெஸ்டிபியூல்' என்றான்.


நான் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டவனாக 'இது பழைய வேர்ட் டா. மாளிகையின் உள்பகுதிக்கும் நுழைவுக்கும் இடைப்பட்ட இடம்.' 


இரண்டாம் பகுதியை ஆங்கிலத்தில் சொன்னான். இரண்டு அறைகளும் விசாலமான கூடமும் கொண்ட வீடுகளையே மாளிகை என்று அன்று நினைத்துக் கொண்டிருந்த - இன்று அப்படி நினைக்க முடியவில்லை. ஏனெனில் இருபது வருடங்களுக்கு வங்கிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து நானே அப்படி ஒரு 'மாளிகை'யை கட்டிவிட்டேன் - எனக்கு அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. 


மேலும் விளக்கினான். ஆனால் அந்த விளக்கம் சற்று அதீதமெனப்பட்டது.


'பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா தன்னை மன்னராட்சியில் இருத்திக் கொள்வதா ஜனநாயகம் பக்கம் நகர்வதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்தது. அதற்கு முன்புவரை அரசாங்கத்தை அணுக முடியாமல் இருந்த சாமானியர்கள் அரசாங்கம் தனக்குள் அதாவது தனது கட்டிடங்களுக்குள் - அரசாங்கம் என்பது பிரம்மாண்டமான கட்டிடங்கள் தானே (பின்னாட்களில் நான் இக்கூற்றை சற்று விரிவுபடுத்தி ஆன்மீகம் என்பது கலைநயம் மிக்க கட்டிடம் என்றும் குடும்பம் என்பது அன்புமிக்க கட்டிடம் என்றும் சொல்லி சில நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறேன்) - அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரம் தன்னை முழுதாக இக்கட்டிடங்கள் திறந்துகாட்டிவிடக்கூடாது. பிரம்மாண்டமான நுழைவாயிலுக்கும் உள்ளடங்கிய பூட்டப்பட்ட அறைகளுக்கும் இடையே இருக்கும் காத்திருக்கும் பகுதிதான் வெஸ்டிபியூல் என்று அழைக்கப்பட்டது' என்று சொல்லி நிறுத்தினான்.


சூரனூர் என்ற கிராமத்துக்குச் செல்லும் பேருந்தில் இரண்டு பேர் இப்படி பேசி வருவது வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படாததற்கு காரணம் சூரனூருக்கு முன்பிருந்த எங்களுடைய பொறியியல் கல்லுாரிதான். முதலில் இப்படி ஆங்கிலத்தில் பேசுகிறவனையும் அதை கேட்டுக் கொண்டிருப்பவையும் ஊர்க்காரர்கள் மிகுந்த மரியாதையுடனும் அச்சத்துடனும் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆங்கிலமும் இளப்பத்துக்கு ஆளாக்கக்கூடிய மொழிதான் என்று‌ தெரிய - அதாவது நான் சுந்தர ராமசாமியின் ரத்னாபாயின் ஆங்கிலம் கதையை வாசிக்க - இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. ஆனால் அன்று தீராத தாழ்வுமனப்பான்மையிலும் பயத்திலும் உழன்று கொண்டிருந்த எனக்கு (இன்றும் இந்த சமாச்சாரங்கள் முழுதாக மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று சொல்ல முடியாது) குறைந்தபட்சம் குறைவான அறிவு கொண்ட கிராமத்து ஆட்கள் எங்களை பிரம்மிப்புடன் பார்ப்பது பிடித்திருந்தது. இன்று யோசிக்கும்போது கல்லுாரி நாட்களில் நானொரு 'கிராமத்தானாக' இருந்துவிடக்கூடாது என்ற அதீத ஜாக்கிரதை உணர்ச்சி என்னிடம் இருந்தது என்று தோன்றுகிறது. நான் கல்லூரியில் பழகும் நண்பர்களில் கூட என்னைப்போல் தமிழ் மீடியத்தில் படித்தவர்களோ என் ஜாதி ஆட்களோ குறைவு. இன்று யதேழ்ச்சியாக அப்படி அமைந்தது என்று சொல்லி நான் என்னை சமாதானம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் நமக்குப் பிடித்ததை தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நம்முடைய தன்னலம்தான் என்பதை உணராதவனா நான்? பார்த்திபனுடன் என்னை நெருக்கி வைத்துக் கொண்டதற்கும் அவனுடைய ஆங்கில அறிவும் அதேநேரம் அவ்வளவு லட்சணமாக இல்லாத முகமும் தானே காரணம். போதும். முழுத்தூய்மை ஒன்றை உள்ளே கற்பனை செய்துகொண்டு அந்த நிலையில் நீடிக்க முடியவில்லையே என்று மாயச்சாட்டையொன்றெடுத்து என்னை நானே ரத்தம் வர அடித்துக் கொள்வது எனக்கும் பிடித்த பொழுதுபோக்கு தான்.


பேருந்தை விட்டு இறங்கினோம். கண்கள் உணர்வதற்கு முன்னே  கூர்மையான உணர்வுகளை - விரும்பத்தக்கவையும் தகாதவையுமான இரண்டையும் - நமக்கு காட்டிவிடும் இன்னொரு உறுப்பு உடலில் இருக்கும் எனத் தோன்றுகிறது. கடுமையான விலகலையும் ஒவ்வாமையையும் உணர்ந்த பிறகே எதிரே அப்பா நிற்பது கண்ணுக்குத் தெரிந்தது. எப்படி பார்த்து ஒரு நொடி முடிவதற்கு முன்பாகவே சிமெண்ட் கரை மங்கலாக்கிய கால்களும் சுருட்டு நாற்றமடிக்கும் ஒட்டிக் குழிவிழுந்த கன்னங்களும் மெலிந்த உடலும் நரைத்து மண்டிய தாடியும் நினைவுக்கு வருகின்றன என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தது. நாற்பது வயதில் இன்றிருக்கும் தோற்றத்தின் முதல் படியில் காலெடுத்து வைத்த அப்பா அடுத்த இரண்டு வருடங்களில் இறுதிப்படியை எட்டிவிட்டார். இரண்டாம்முறை வாசித்தால் இன்னொரு‌ பொருள் தரும் தரமான இலக்கிய படைப்பு போல இரண்டு சந்திப்புகளுக்கு இடையில் இன்னும் சீரழிந்திருக்கும் அப்பாவை மேலும் கூர்ந்து நோக்கினாலே கண்டுபிடிக்க முடியும்.


'சிகரெட் மட்டுமில்லடா ஓவரா மேட்டர் பண்ணினாகூட அம்பது வயசுலயே ஒடம்பு டொக்கு விழுந்துடும்' என்று கிட்டத்தட்ட அப்பா இன்றிருக்கும் தோற்றத்தில் அன்றிந்த கணித ஆசிரியர் தமிழ்வாணனைப் பற்றிய அரிய கண்டுபிடிப்பு ஒன்றைச் சொன்ன பரணிதரன் வேறு ஞாபகத்துக்கு வந்து இந்த மனிதரின் உடல் தோற்றத்துடன் அம்மாவையும் பிணைக்கிறான். இத்தனை ஒவ்வாமைகள் இவருடன் பேசத்தொடங்கும் எங்கு போய் அழுந்துகின்றன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அவருடன் பேசும் சொற்களில் அந்த அழுத்தத்தின் விசையும் தெரியும்.


பார்த்திபன் அருகில் இருப்பதை உணர்ந்தவர் என்னைக் கண்டதும் விளிம்புகள் சுருங்கி புன்னகையாக மாறவிருந்த உதட்டினை பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டார். அந்த அளவாவது இங்கிதத்துடன் நடந்து கொண்டாரே என எனக்கு ஆறுதலாக இருந்தது. அவர் இறந்தால் - எனக்கிருந்த இறப்புகள் பற்றிய முன்னறிவு கொஞ்சமான மருத்துவ அறிவு இவற்றைக் கொண்டு அவர் அந்த நாளில் இருந்து மூன்று வருடங்களில் இறந்து விடுவார் என்று கணித்திருந்தேன். மாறாக அடுத்த இரண்டு வருடங்கள் நான்கு மாதங்களில் இறந்தார் - நினைத்து வருந்த வேண்டிய பட்டியலில் இந்த இங்கிதத்தையும் அந்த கணம் சேர்த்தேன். ஆனால் உடனடியாக அந்த தருணத்தை பட்டியலில் இருந்து நீக்க நேர்ந்தது. அருகில் நின்றிருந்த ராமலிங்கம் 'என்னா கதிரவா அப்பா நிக்கிறது தெரியலையாக்கும்' என குற்றம்சாட்டும் தொனியுடன் அருகே வந்துவிட்டார். நடக்க விரும்பாதது நடந்தால் எப்படி பெரும்பாலானவர்கள் உறைந்து நிற்பார்களோ நானும் அப்படி நின்றேன். ஆனால் அதற்குள்ளாக பார்த்திபன் அப்பாவிடம் கையை நீட்டிவிட்டான்.


'அங்கிள் நீங்க கதிரோட அப்பாவா?' 


ஒரு கணம் ஆசுவாசமாக இருந்தாலும் அடுத்த நொடியே அவன் குரலில் ஏதும் இளக்காரம் இருந்ததா எனத் தேடத் தொடங்கியது மனம். ஆனால் அப்பாவைவிட விகாரமாயிருந்த அப்பாவின் சினேகிதர் ராமலிங்கத்துக்கு பார்த்திபனின் அழைப்பு திருச்சியின் ஜுன் மாத உச்சி வெயிலில் கூட குளிர்ச்சியை அளித்திருக்கும். நகரத்திலிருப்பவர்கள் என ராமலிங்கம் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும் அத்தனை பேருமே அரசாங்க ஊழியர்கள். அரசாங்க ஊழியர் என்றால் கிராமங்களில் இன்றுமே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது எனில் இருபது வருடங்களுக்கு முந்தைய நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். ராமலிங்கம் அரசாங்கமே தன்னிடம் பேசியதாக நினைத்து மகிழ்ந்து போனார். சற்றுநேரத்துக்கு முன் அப்பாவை நான் விலக்குவதை கண்டுபிடித்த அவரது கூர்மையை எண்ணி ஆங்காரமடைந்த மனம் அவர் தற்போது மகிழ்ந்ததை எண்ணி ஆசுவாசம் கொண்டது.


அப்பாவைவிட இந்த ராமலிங்கத்தைத்தான் நான் அதிகமும் வெறுக்கிறேன் என்று புரிந்தது.‌ எங்கு படித்தேன் அல்லது யார் சொல்லி கேட்டேன் என நினைவில் இல்லை. ஆனால் சாரம் இதுதான். நாம் ஒருவரை வெறுத்தால் அவருடைய உற்ற நண்பரை இரண்டு மடங்கு வெறுப்போம். ராமலிங்கத்துக்கு இது அப்படியே பொருந்தும். ராமலிங்கம் அப்பாவின் பால்ய சினேகிதர். 


அப்பா 'நான் உயிரோடு இருக்கிறதுக்கே அவன்தான் காரணம்' என சில சமயம் நன்றியுடனும் சில சமயம் கசப்புடனும் சொல்வார். என் அப்பாவின் கடந்த காலத்துக்கு தன்னை ஜவாப்தாரியாக வரித்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.


நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு 'அப்பாவ விட்றாத தம்பி அவர நல்லா பாத்துக்க' என்றெல்லாம் அம்மாவின் முன்னிலையிலேயே ராமலிங்கம் அடிக்கடி சொல்வார்.


'சிறு வயதில் காதலித்த எவளையோ நினைத்து இருபது வருடங்களாக குடித்தே சீரழிகிறவனை‌ எங்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறவனை என்ன எழவுக்குடா நான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அவரிடம் மானசீகமாக கேட்பேன். அந்த மானசீகத்தின் வெப்பம் உயரத் தொடங்கியது தெரிந்தோ என்னவோ அப்படிச் சொல்வதை ராமலிங்கம் குறைத்துக் கொண்டார். ஆனால் அப்பாவை திறமை இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் திறன் வாய்ந்தவர் என்பதற்கு ராமலிங்கமே சாட்சி. உண்மையான திறமைசாலிகளுக்கு மட்டுமே அவர்கள் மேல் அபாரமான பக்தி கொண்டவர்கள் கிடைப்பார்கள் என்பது இந்த நாற்பது சொச்ச வருட வாழ்வில் நான் உணர்ந்திருக்கும் உண்மை. இன்றுவரை அப்படி என் மேல் பக்தி செலுத்த யாரும் கிடைக்கவில்லையே!


சிறு வயதிலேயே அப்பா அம்மா இருவரும் இறந்துவிட கட்டிட வேலைகளுக்கு போகத் தொடங்கி கொத்தனாராகி மேஸ்திரியானவர். அவரை 'நாட்டு இஞ்ஜினீர்' என்றும் ஊரில் அழைப்பார்கள். ஊரில் பெரும்பாலான வீடுகளை கட்டியவர் அப்பாதான். அன்றும் வீடு கட்ட அவரை அழைக்க ஆட்கள் வீடு தேடி வந்தபடிதான் இருந்தனர். ஆனால் அவர் தன்ன மிகுந்த பிரயாசைப்பட்டு சீரழித்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவர் சீரழிவு தொடங்க காதல் தோல்வி ஒரு சாக்காக இருந்தது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர் அளவுக்கு திறன் வாய்ந்தவர்கள் எங்கள் ஜாதியிலேயே ஊரில் கிடையாது. எந்தச் சூழலிலும் யாரிடமும் கைகட்டி நின்றதும் கிடையாது. நான் ஒழுங்காகப் படிக்கவும் அவர் கண்டிப்புதான் - யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது ஒருமுறை கூட அவர் என்னை கை ஓங்கியது கிடையாது - காரணமாக இருந்தது. ஆனால் அப்பா ஏன் இப்படி தன்னை சீரழித்துக் கொண்டார்? இதையெல்லாம் இன்று சாவகாசமாக உட்கார்ந்து யோசிக்கும்போது நன்றாக இருக்கிறது தான். அப்பா இன்று யாரோ ஒரு மனிதராக மாறிவிட்டார்.‌ ஒருவேளை இன்னும் சில வருஷங்கள் கழித்து அவர் இறந்திருந்தால் இவ்வளவு கருணையோடு அவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த தினத்தில் இந்த காருண்யமெல்லாம் எதுவும் மனதில் இல்லை.


'எதுக்கு வந்தீங்க?' என்ற கேள்வியை அப்பா ராமலிங்கம் இருவரும் மட்டுமல்ல பார்த்திபனும் எதிர்பார்த்திருக்க மாட்டான். அவர்கள் திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும்போதே நான் என் கல்லூரி விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். தூரம் சென்ற பிறகு திரும்பி பார்த்த போது அப்பாவும் ராமலிங்கமும் ஒரு வெஸ்டிபியூல் பேருந்தில் ஏறினர். உறுதியற்ற அதன் மையப்பகுதி பாம்பு போல அசைவது அவ்வளவு தூரத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. திடீரென ஒரு பிரம்மை தோன்றியது. அந்த வெஸ்டிபியூலில் நானும் அவரும் எதிரெதிரே நின்று கொண்டிருந்தோம்.


No comments:

Post a Comment