புதுமைப்பித்தன் எனும் அறிவன் - காணொளி
புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து எழுபத்தைந்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறேன். என் உரைகளில் இதுவே நீண்டது. ஆனால் திரும்ப கேட்டுப் பார்க்கும்போது எந்தவிதமான நீட்டி முழக்குதல்களும் இல்லாமல் நவீன இலக்கியம் எந்த மொழியை எனக்குக் கொடுத்திருக்கிறதோ அதே மொழியில் செறிவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த உரையை வழக்கமான பேச்சாளர்கள் போல இழுத்து நீட்டினால் நான்கு மணிநேரம்வரும். ஆகவே உரையை சற்று கவனமுடன் கேட்கும்படி நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். ஏறத்தாழ இருபது நாட்கள் புதுமைப்பித்தன் குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் வாசித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். இன்று இவ்வுரையை பதிவு செய்து முடித்தவுடன் ஒரு கடினமான தேர்வை எழுதி முடித்த விடுதலை உணர்வும் வெறுமையும் மனதை நிரப்புகின்றன. இவ்வுரையின் பெரும்பகுதியை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன். புதுமைப்பித்தனின் பிற்கால கதைகள் பற்றி மட்டும் எழுத நேரமில்லாததால் குறிப்புகளாக எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் அவற்றையும் விரிவாக்கி எழுதி முழுக் கட்டுரையைப் பகிர்கிறேன். ஒரு மேதையை முழுதாக வாசிக்கும்போது அவருடைய உணர்ச்சிகளிலும் மேதைமையிலும் தோய்ந்திருக்கும் போது தகப்பன் தோளேறிய குழந்தைபோல அவரைவிட சில செண்டிமீட்டர்கள் கூடுதலாக சிலவற்றை தரிசித்து விடுகிறோம். அவ்வாறாக நானடைந்த சில புரிதல்களை இந்தக் காணொளியில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இக்காணொளி பரவலான கவனத்தைப் பெற வேண்டும் என்றும் புதுமைப்பித்தன் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன். நண்பர்கள் இவ்வுரை குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டால்- உரையை பகிர்ந்து கொண்டாலும் - மகிழ்வேன். உரையின் சுட்டி முதல் கீழே
https://youtu.be/-Fxkz6W9Ex8
#tamilliterarytalks
Comments
Post a Comment