போர்கள் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?

(இங்கு நான் எழுதப் போவது புதிது இல்லை. எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயத்தை ஒருமுறை நினைவூட்டுவதற்காக இந்தக் குறிப்பு)


சில நாட்களுக்கு முன்பு ஒரு காலைப் பொழுதில் வீட்டு மாடியில் இருந்து விரைவாக இறங்கினேன். போர்ட்டிக்கோவில் கிடந்த ஒரு நீளிருக்கையில் முட்டையிட அமர்ந்திருந்த பெட்டைக்கோழி என் காலடிச் சத்தம் கேட்டு பதறி எழுந்தது. எனக்கு குற்றவுணர்வாக இருந்தது. ஏறத்தாழ பாதிமுட்டை அதனிலிருந்து வெளிவந்திருந்தது. எப்படியோ முட்டையை முழுமையாக வெளியேற்றிவிட்டு அங்கிருந்து ஓடியது. கோழி முட்டையில் ஒரு மெல்லிய சிவப்புப் படலம் இருக்கும். ஆனால் அந்த முட்டையில் ரத்தம் நன்றாகவே தெரிந்தது. அன்று முழுக்க மனம் சமாதானம் அடையவில்லை. நம்மைச் சுற்றி அப்படி காரணமே இல்லாமல் வதைபடும் ஏராளமான விலங்குகளைப் பார்க்கிறோம். நான் சைவ உணவின் ஆதரவாளன் இல்லை. நான் சொல்ல வருவது வேறு. விலங்குகளுக்கும் நமக்குமான ஒரே வேறுபாடு இதுதானே? எந்தவொரு மனிதனையும் அப்படி வதைக்க முடியாது. வதைக்கக்கூடாது என்பதே இன்றைய உலகின் முதன்மையான லட்சியம். மனிதன் வதைபடுகிறவனாக யாருடைய வளர்ச்சிக்காகவோ மகிழ்ச்சிக்ககாவோ துன்புறுத்தப்படுகிறவனாக மாறுவதை நாம் எதிர்க்கிறோம். தனிமனித உரிமை என்று நாம் பேசுவது இதைத்தான். எந்தவொரு மனிதனும் அவனுடைய விருப்பமின்றி எந்தவொரு செயலையும் செய்வதற்கு வற்புறுத்தப்படக்கூடாது. மனிதன் அவனுடைய வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் நிலையைத்தான் மிருகநிலை என்று வரையறுக்கிறோம். வனமிருகங்கள் சுதந்திரமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் எந்த நேரத்திலும் அவற்றின் இருப்பிடத்தை மனிதன் அபகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புடன்தான் அவை வாழ்கின்றன. பழைய அரசாங்கங்கள் - மன்னராட்சி - ஏறத்தாழ அவ்வாறுதான் இருந்தன. எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டினால் அபகரிக்கப்படலாம். வரலாற்று வளர்ச்சியினூடாக நாம் கற்றுக் கொண்ட நாகரிகம் என்பது இந்த அபகரிப்பினைத் தடுப்பதுதான். அபகரிக்கப்படாத ஒரு நிலத்தில் வாழும் மனிதன்தான் தன்னுடைய வாழ்க்கையின் பொருளினைத் தேடும் வாய்ப்பினை பெறுகிறான். நமக்கு பிறப்பு இறப்பு பற்றி அவ்வளவு உறுதியாக ஒன்றும் தெரியாது.‌ குறிப்பிட்ட காலம் உயிரோடு இருக்கும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக் கொண்டு அதன் வழியாக மகிழ்ச்சியையும் நிறைவையும் நோக்கிப் போகவேண்டும். உலகத்தின் 'புறவயமான லட்சியம்' என்று இதை மட்டும்தான் சொல்ல முடியும். இதற்கு வழி ஏற்படுத்தித் தருவதுதான் மதங்கள், தத்துவங்கள், அரசாங்கங்கள்,குடும்பங்கள் போன்ற அமைப்புகளின் நோக்கமாக இருக்க வேண்டும். மேற்சொன்ற ஒவ்வொரு அமைப்புடனும் ஒவ்வொரு மனிதனும் ஒரு இடைவிடாத பேரத்தில் இருக்கிறான். அதில் வெல்கிறவர்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு பொருளை கண்டடைகின்றனர். 


மேலே நான் சொல்லி இருப்பது ஒரு லட்சிய சமூக கற்பனை. ஆனால் இந்தக் கற்பனையை நோக்கித்தான் நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம். இதனை உறுதியாக நம்பும்போதுதான் நம்மைப் போலவே இன்னொரு மனிதருக்கு உள்ள வாழும் உரிமையையும் நாம் அங்கீகரிக்கத் தொடங்குகிறோம். மனிதன் என்ற எல்லையைக் கடந்து வன உயிரினங்களும் காக்கப்பட வேண்டும் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். வனங்களைப் பேணுவதில் ஒரு எல்லைவரை மனித வாழ்க்கை நன்றாக அமைய வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மனிதமைய சுயநல நோக்கும் இருக்கிறதுதான். ஆனால் வெறும் சுயநல நோக்கு மட்டுமே நம்முடைய சூழியல் அக்கறைகளுக்கு காரணமில்லை. உயிர்க்குலத்தின் மீதான உயிரோடு இருப்பவற்றின் மீதான இயல்பான காருண்யமும் இணைந்துதான் நம் சூழியல் நோக்கை கட்டமைக்கிறது.


நான் முதலில் சொன்ன உதாரணத்தில் என்னுள் வேதனையைத் தூண்டியது உணவுக்காக வளர்க்கப்படும் ஒரு உயிர். அது அடுத்த நிலையில் உள்ளது. முதலில் மனிதன் வதைபடுவதைத் தடுக்கவும் அடுத்ததாக வனவிலங்குகள் வதைபடுவதை தடுக்கவும் வேண்டும். அதன்பிறகுதான் உணவுவிலங்குகளைப் பற்றி யோசிக்க முடியும். நான் சொல்ல வருவது இதுதான். இந்த சமூகம் தொடர்ந்து சுதந்திரமாக இயங்க அடிப்படையாக இருப்பது எல்லா மனிதருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கருதுகோள்தான். அவரவர் மகிழ்ச்சிக்கான வழியை இன்னொருவரை துன்புறுத்தாமல் அவரவர் தேடிக்கொள்ளும் உரிமை உள்ளது. இந்த கருதுகோளை நாம் ஏற்காவிட்டால் தார்மீகரீதியாக நமக்கான வாழும் உரிமையை நாமே கைவிடுகிறோம் என்பதே அதன் பொருள். இதுவரை நான் சொல்லி வந்த பார்வைக்கு எதிரானதாக இருப்பதாலேயே போர் என்ற பாமரத்தனத்தை நான் எதிர்க்கிறேன்.


ஒவ்வொரு மனிதரும் தான் சார்ந்திருக்கும் அமைப்புகளுடன், வாழ்வதற்காக நிறைய பேரங்களில் ஈடுபடுகின்றனர். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அவர்கள் எந்த அமைப்பினை சார்ந்திருக்கிறார்களோ அந்த அமைப்பு அவர்கள் உயிருக்கு உத்திரவாதத்தைத் தர மறுக்கும்போது எல்லாமும் குழம்பிப்போய் விடுகிறது. போரில் நடப்பது அதுதான். நான் இந்தியாவின் தெற்கில் உள்ள தமிழ்நாட்டில் வசிக்கிறவன். தொன்னூறுகளில் பிறந்தவன். என் தந்தை அறுபதுகளில் பிறந்தவர்.‌அவரோ நானோ நேரடியாக எந்தப் போரையும் கண்டதில்லை. இதற்காக நாங்கள் இந்த தேசத்துக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய உலகில் பொருளாதார ரீதியாக ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டுடன் ஆழமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே உலகின் எந்தவொரு மூலையில் தொடங்கப்படும் போரும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடத் தொடங்கும்போது இரு நாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்க்கை மீதான தங்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். வாழ்வதற்கான ஒரு அர்த்தத்தை‌ உருவாக்கிக் கொள்ளுதல் என்ற ஒற்றை நோக்கமும் சிதைக்கப்பட்டுவிடுகிறது. சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் வாழ்வின் அர்த்தமாக அவர்களுடைய குடும்பம் குழந்தைகள் தொழில் போன்றவை இருக்கலாம்.‌ இவை சிதைகின்றன. இன்னும் பெரிய லட்சியங்கள் கொண்டவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அத்தகைய நோக்கங்கள் நிறைவேற ஒரு ஸ்திரமான தேசம் அவசியமாகிறது. ஒரு விவாதம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீண்டுகொண்டே போகலாம். தவறில்லை. ஆனால் குறுகிய கால நோக்கில் தொடுக்கப்படும் போர்கள் ஒரு தலைமுறையின் மகிழ்ச்சிக்கான தேடலை சிதைத்து விடுகின்றன. புறவயமாக நோக்கினால் பொருளாதாரத் தொடர்புகள் காரணமாக ஒரு நாட்டில் நடக்கும் போர் இன்னொரு நாட்டை பாதிப்பதால் விலைவாசி ஏற்றம் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு வேலையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதையும் கடந்து அகவயமாக யோசிக்கும்போது மனிதர்கள் பசியால் மரணிக்கிறார்கள் தாக்குதல்களில் மடிகிறார்கள் நேற்று வசித்த வீடு இடிந்து கிடப்பதை காண்கிறார்கள் என்கிறபோது நாம் நிம்மதியான வாழ்க்கையையே வாழ்ந்தாலும் நமக்குள் முளைக்கும் சங்கடங்களை நிம்மதியின்மைகளை சுரணேயின்றி நம்மால் கடந்துவிட முடிகிறதா என்ன? உலகில் எந்தவொரு மூலையில் நடக்கும் போரும் நியாய உணர்வு கொண்ட ஒட்டுமொத்த மனிதர்களையும் நிம்மதியிழக்க வைக்கிறது. அதன் வழியாக அவர்கள் மகிழ்ந்து வாழ்வதற்கான வழியும் அடைபட்டு போகிறது. சுயநலமானவர்கள் வெற்றிகரமாக வாழலாம் ஆனால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.‌ மகிழ்ச்சி என்பது பிறருடன் தொடர்புடைய ஒரு கருதுகோள். உலகின் எங்கோவொரு மூலையில் இயற்கையாலன்றி நம்முடைய திறனின்மையால் தூண்டப்பட்ட ஒரு போரினால் ஒரு குழந்தை இறக்கும்போது நம்மால் மகிழ்ந்திருந்துவிட முடியுமா? அப்படி மகிழ்ந்திருக்க முடிந்தால் அது உண்மையான மகிழ்ச்சி தானா? போர் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புவது இந்த அதீதமான சுயநலத்தின் காரணமாகத்தான். நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024