Friday 13 May 2016

வாக்களித்தல் ஒரு உயர் நாகரிகச் செயல்பாடு

அன்பு  நண்பர்களுக்கு  வணக்கம்

    தினமலர்  நாளிதழில்  எழுத்தாளர்  திரு. ஜெயமோகன்  அவர்கள் “ஜனநாயக  சோதனைச் சாலையில்” என்ற தலைப்பில்  எழுதிய  தொடர் கட்டுரைகள்  வாக்களிப்பது  குறித்த பெருமிதத்தை  வாசித்தவர்களிடம் உருவாக்கி  இருக்கும்  என நம்புகிறேன். அத்தகைய  பெருமிதத்துடன்  சக குடிமகனாக  நான்  உணர்ந்தவற்றை உங்களுடன்  பகிர்வதே இக்கட்டுரையின்  நோக்கம்.

இனி…
              நம்முடைய அரசியல்  ரீதியான  பரிணாம  வளர்ச்சியை  உற்று நோக்கும்  போது  ஒன்று  புலப்படும். அரசாட்சியில்  பங்கேற்பவர்களின் எண்ணிக்கை  கூடிக்  கொண்டே  வந்திருக்கிறது  என்பதை  கவனிப்பவர்கள் உணர முடியும். பழங்குடி  இனங்கள்  பெரும்பாலும்  தலைமை  அற்றவை.  வலுவான  தலைமை  இல்லாத  எந்தவொரு  இனக்குழுவும் நீடிக்க  முடியாது. இவ்வுண்மையை உணர்ந்த இனங்களில்  ஒரு தலைவன்  உருவாகி வருவான். அவனுடைய  தலைமையை  அக்குழுவில்  உள்ள அனைவரும்  ஏற்க வேண்டும்  என்பதற்காக  பல தொன்மங்கள் உருவாக்கப்பட்டு அத்தலைவன் இறைவன் அளவிற்கு  உயர்த்தப்படுவான். அவனை ஏற்பது மட்டுமே  மக்களின்  கடமை. இது போன்ற  பல சிறு அரசுகள்  ஒன்றிணைந்து  பேரரசு உருவாகும்  போது மக்களால் ஏற்கப்பட்ட  சிற்றரசர்கள் இணைந்து  அவர்களினும் வலிமையான  ஒரு பேரரசனை ஏற்கிறார்கள். தமிழகத்தில்  அப்படி  உருவாகி வந்த ஒரு பேரரசன் ராஜராஜ சோழன். மன்னராட்சியில் மக்களுக்கு  பெரிதாக அதிகாரங்கள்  கிடையாது. யார் உயிரையும்  பறித்து விடும் ஏகபோக அதிகாரம் மன்னனிடம்  இருந்தது. தன்னுடைய  சுய விருப்புகளாலும் அரசியல்  காரணங்களுக்காகவும் ஆயிரக்கணக்கான  மக்களை  போர் புரிய  வைக்க  மன்னனால்  முடிந்தது. அறிவு  விரிவடைந்து  கொண்டே இருப்பது.  அறிவுடையவர்கள்  பெருகப்  பெருக  மன்னராட்சியில் இருக்கும்  எதேச்சதிகார  போக்கினை எதிர்க்கும்  மனநிலை  உலகம்  முழுக்கவே  வலுப்பெற்றது. மன்னனை ஒரு எல்லைக்கு மேல்  எதிர்த்து  பேசினாலே உயிர் போகும்  அபாயம்  இருந்த காலத்தில்  குருதி  உறவின் வழியாக  ஆட்சியாளன் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது   என்பதை  வலியுறுத்தியவர்கள் நிச்சயம்  உலகம்  முழுக்கவே  வேட்டையாடப்பட்டிருப்பார்கள். அப்படி  எண்ணற்ற போர்களின் கலகங்களின் கண்ணீரின்  வழியாகவே  ஜனநாயகம்  என்னும்  உயர் நாகரிகச் செயல்பாடு பிறந்து  வந்துள்ளது. 

மக்களாட்சி  என்பதே துதிபாடும்  மந்தை மனநிலைக்கு  எதிரானது. ஒவ்வொரு  தனி மனிதனின்  குரலும்  ஒலித்தாக வேண்டும்  என்பதே ஜனநாயகத்தின்  அடிப்படை. ஒண்டுவதற்கு குடிசை இல்லாதவனும் தனித் தீவுகளையே விலைக்கு  வாங்கி  வைத்திருப்பவனும் தன்னுடைய  ஆட்சியாளனை தேர்ந்தெடுக்கும்  போது ஒரே “மதிப்பு” உடையவர்களே. ஆனால்  ஜனநாயகம்  பற்றிய  அடிப்படை  புரிதல் திட்டமிட்டே நம்மிடம்  உருவாகாமல்  செய்யப்படுகிறதோ என்று  சந்தேகம்  கொள்ளும்  அளவுக்கு  நாம் மந்தைகளில்  ஒருவராக  இருப்பதையே  விரும்புகிறோம். யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று  கேட்டால்  இன்னும்  பெரும்பான்மையானவர்கள்  பதில்  “ஜெயிக்கிற  கட்சிக்கு” என்பார்கள் அல்லது ஏதேனும்  ஒரு கட்சியின்  பெயரையோ கட்சித்  தலைவரின் பெயரையோ சொல்வார்கள். தான் வாக்களிக்கப் போகும்  வேட்பாளரின் பெயர் கூட பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.கட்சிகள்  எப்போதுமே  தன் மந்தையில்  ஒருவராகவே  மக்களை  வைத்திருக்கவே விரும்பும். இதற்கு  எதிரான  மனநிலையான தனித்துச்  செல்வதே  ஜனநாயகத்தின்  இன்றியமையாத  பண்பு. பெரும்பாலும்  மக்களின்  எண்ணம் “ஒரேயொரு  ஓட்டினால் என்ன நடந்து விடப்  போகிறது” என்பதே. நாம் அனைத்தையும்  போட்டியாகவே காண விழைகிறோம்.  ஒரு கால்பந்து   விளையாட்டை  எந்த அணிக்கும்  ஆதரவோ எதிர்ப்போ தராமல்   காண்பவர்களால் அப்போட்டியை ஒரு அழகிய குழு நடனமாகக் காண முடியும். ஜனநாயகமும்  அப்படித்தான்.  நான் வாக்களிக்கப் போகும்  வேட்பாளன் குற்றவாளியாக இருக்கக்  கூடாது  என்ற ஒரு காரணியை மட்டும்  அடிப்படையாகக்  கொண்டால்  அரசியல்  கட்சிகள்  பணம் படைத்தவர்களை விடுத்து நேர்மையானவர்களை தேர்தலில்   நிறுத்த வேண்டிய  நிலை  ஏற்படும்.  இவையனைத்தும்   தொடங்க வேண்டிய  இடம்  வேட்பாளர்  குறித்த  நம் விழிப்புணர்விலிருந்தே. பெரும்பாலான மக்கள்  இன்றும்   வாக்களிப்பது   ஜாதியின்  அடிப்படையில்.  எனவே ஜாதி செல்வாக்கு   இருக்கக்  கூடியவர்களை கட்சிகள்  முன்னிறுத்துகின்றன. ஜாதி  நிலப்பிரபுத்துவ காலத்தில்  மக்களை  ஒருங்கிணைத்த  ஒன்று  தான்.  ஜாதியின் மீது போலியான வெறுப்பைக் கக்கிவிட்டு “நாகபதலியா நாகப்பதலியா” எனப் பார்க்கும்   முற்போக்கு  வாதிகள்  நம்மிடம்  அதிகம்.  ஜாதியை  என் கொள்ளு தாத்தாவிற்கு இணையாக நான்  மதிக்கிறேன்.  ஆனால்  அவர்  இறந்து  விட்டார்.  முழு  மரியாதையுடன்  அடக்கம்  செய்து விட்டு  நினைவில்  நிறுத்திக்  கொள்ள வேண்டியது தான்.  நடுக்கூடத்தில் அவருக்கு  அலங்காரம்  செய்து  அழுது  கொண்டிருந்தாலும் பிணம்  அழுகல் வாடை அடிக்கவே  செய்யும். “ஜாதி” எனும்  அளவுகோலிருந்து “நேர்மை” எனும் அளவுகோலுக்கு நாம்  மாறினால்  கட்சிகளுக்கு நேர்மையானவர்களை முன்னிறுத்துவதைத் தவிர  வேறு வழி இருக்காது.

உங்கள்  தொகுதியின் வேட்பாளர்  பட்டியலை  எடுத்துப்  பாருங்கள். நிச்சயம்  சில சுயேட்சை வேட்பாளர்கள்  இருப்பார்கள்.  ஜனநாயகத்தின்  மிக முக்கியமான  உறுப்பினர்கள்  இவர்கள்.  நோட்டாவிற்கு வாக்களித்து  ஜனநாயகத்தின்   மீதான  தங்கள்  “தார்மீகக்  கோபத்தை” காண்பிக்க நினைப்பவர்கள்   பெரும்பாலும்  பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்  மீதே “கோபம்” கொண்டிருப்பார்கள். இந்த சுயேட்சைகள் ஏனோ அவர்கள்  கண்ணுக்குத்  தெரிவதில்லை.  வாக்கினை  பிரிப்பதற்காக அரசியல்  கட்சிகளால் நிறுத்தப்படுபவர்கள் மற்றும்  கட்சிகளில்  இருந்து  பிரிந்து  சுயேட்சையாக  நிற்பவர்கள்  இவர்களைக்  கடந்து நிச்சயம்  ஒருவரேனும்   மக்கள்   பிரச்சினைகளுக்காக  அலைபவராக உண்மையில்  தன் தொகுதிக்கு  ஏதேனும்  செய்து விட வேண்டும்  என்ற நினைப்புடையவராக இருப்பார்.  அத்தகையவர்களுக்கு  நாம்  வாக்களிப்பதால் இன்றைய  சூழலில்  செய்தி ஊடகங்களால்  உருவாக்கப்படும்  “தேர்தல்  திருவிழா” போன்ற மாயைகளை தாண்டி அவர்கள்  வெற்றி பெறுவது  சாத்தியமில்லை  எனினும்  உண்மையான  ஜனநாயக  நோக்கர்கள் சுயேட்சைகளுக்கான ஆதரவு  பெருகியிருப்பதையும் “மந்தை” மனநிலை குறைந்திருப்பதையும் கண்டு  கொள்ள முடியும். அவர்களுடைய  குரல்களை  தொடர்ந்து  கவனித்து வரும் அரசியல்  கட்சிகள்  மக்களின்  ஜனநாயக  விழிப்புணர்வு  பெருகியிருப்பதை உணர்ந்து  தங்களுடைய  “அசமந்தத்தை” சற்றேனும்  தளர்த்த வேண்டிய  நிலை உருவாகும். இது போன்ற செயல்பாடுகள்  தான் ஜனநாயகத்தை  மேலும்  மேலும்  வலிமை கொள்ளச்  செய்யும். மேலு‌ம்  ஒரு குற்றவாளிக்கு  நான் வாக்களிக்கவில்லை என்ற பெருமிதமும்  எஞ்சும். இது விடுத்து  தனிமனிதத் துதிகளும் தலைவர்களின்  பிம்பங்களை  நம்புவதும்  ஜனநாயகத்திற்கு  எதிரான  செயல்பாடே. ஜனநாயகம் குறித்து  உலகம் முழுக்க நடைபெறும்  ஆரோக்கியமான விவாதங்களையும் சோதனைகளையும் கவனிப்பதும்  பங்கு பெறுவதும் உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உறுப்பினராக நம் கடமை.  வாக்களியுங்கள். நன்றி

இப்படிக்கு

உங்கள்  சக குடிமகன் சுரேஷ் 

No comments:

Post a Comment