Wednesday, 18 May 2016

கன்னி மேரி


       சக இலக்கிய  வாசகரும் எனது தோழியுமான திருமதி. மேரி எர்னஸ்ட்  கிறிஸ்டி அவர்களின் முதல்  சிறுகதை  இது. 


 மேரியின் நினைவெழுகிறது. வேளாங்கண்ணி கான்வெண்ட்டில் ஒரு குயர் கோடுபோட்ட நோட்டில் கதையெழுதிக் கொண்டிருப்பாள். மாநிறம். சிறிய வட்ட முகம். ஒல்லியான தேகம். முழு பாவாடை சட்டை போட்டிருப்பாள். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இந்நேரம் அந்த நாவலைப் பிரசுரித்திருப்பாளா தெரியாது. ஒரு இரண்டு பக்கங்கள் கூட வாசித்திருக்க மாட்டேன். கான்வெண்ட் அம்மாங்க கூப்பிட்டுவிட்டார்கள். மூன்று அம்மாங்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மெழுகுவர்த்தி அம்மா. ஒருவர் நிர்வாக அம்மா. ஒருவர் பூஜை அம்மா. நிர்வாக அம்மா சமையல் நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்வார். சமையல் செய்யும் துருதுரு அரைக்கால் பாவாடை சட்டை போட்ட சிறிய பெண் ரோசி ஏழாவதுதான் படித்திருப்பதாக சொன்னாள் அவளுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் தங்கியிருந்தோம். தினமும் ஃபாதர் காலை 0630க்கு வந்து திருப்பலி நிறைவேற்றுவார். பலிபீடத்தை நாங்கள் பூஜையம்மாவுடன் சேர்ந்து அலங்கரித்து திருப்பலிக்குத் தயார் செய்வோம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து அரைகுறை வெளிச்சத்தில் குழாயடியில் வாளியில் தண்ணீர் நிரப்பி குளித்துத் துவைத்து ஒரேயொரு கழிவறை அதில் காலைக்கடன்களை முடித்துவிட்டு ஆறு மணிக்கு ரோசி தரும் தேநீரை அருந்திவிட்டு ஆறேகாலுக்கு பூஜையறையில் இருப்போம். பூஜையம்மா அங்கு நின்று ரோஜாக்களை வரிசைப்படுத்திக் கொண்டிருப்பார். நாங்கள் பலிபீடத்தை பட்டுச்சரிகைத் துணியால்  போர்த்திவிட்டு இரண்டு கலர் புடவைகளை மடித்து மேலிருந்து கீழாக பீடத்தின் முன்புறம் தொங்கவிட்டு மடிப்புகள் வைத்து பூக்களையோ வேறு ஏதேனும் டிசைனையோ செய்து குண்டூசியால் குத்தி அலங்காரத்தை முடித்து திருப்பலிப்பாடல்களைத் தயார் செய்துகொண்டு அமர்ந்திருப்போம். ஃபாதர் வருவார். திருப்பலி நிறைவேற்றுவார். ரோசி தரும் தேநீரை அருந்திவிட்டு செல்வார். நாங்கள் எங்கள் அறைக்குச் செல்வோம். ஒரே அறை. ஒரு சன்னல். ஒரு வென்டிலேட்டர். ஒரு சீலிங் ஃபேன். மூலையில் ஒரு குடிபானைத் தண்ணீர்.  சுறுசுறுப்பாக சமையல்வேலையை முடிப்பதில் ரோசிக்கு நிகர் ரோசிதான். எட்டரைக்குள் காலை உணவு தயார்செய்து எனக்கு மதிய உணவையும் என் டிபன்பாக்ஸில் கட்டிவைத்திருப்பாள். கூட்டிப் பெருக்கும் வேலையை மேரி செய்வாள். கழுவித் துடைக்கும் வேலையை திலகவதி செய்வாள். இன்பெண்டா இருவருக்கும் தேவையான உதவிகளை கூடமாட செய்வாள். அல்லது ரோசிக்குக் கம்பெனி கொடுத்துக் கொண்டிருப்பாள். அங்கு எனக்கு ஒரு வேலையும் கிடையாது. நான் நாகப்பட்டினம் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்தேன். எங்கள் ஊரிலிருந்து நாகப்பட்டினம் இரண்டு மணிநேரம் இரண்டு பேருந்துகள் மாறிச் செல்லவேண்டும் என்பதால் வேளாங்கண்ணி கான்வெண்டில் பணம் கட்டி தங்கியிருந்து சென்றேன். நானும் ஏதாவது செய்கிறேன் என்று அருகே சென்றால்கூட பரவாயில்லை மேடம் நீங்கள் போங்கள் நாங்களே கொஞ்சநேரத்தில் முடித்துவிடுவோம் என்று அனுப்பிவிடுவார்கள். ஆலாய்பறந்து பூச்செடிகளை நறுக்கிவிடுவார்கள். தண்ணீர் ஊற்றுவார்கள். தோட்டத்தை சுத்தம் செய்வார்கள். பூ கட்டும் வேலையும் அவர்களுடையதே. சிரிப்பொலிகளோடு அவர்கள் செய்துகொண்டிருக்கும்போதே நான் சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிடுவேன். ஒன்பது மணிக்கு பேருந்தைப் பிடித்தால்  ஒன்பதே முக்காலுக்கு அலுவலகத்தில் இருப்பேன்.  அலுவலகம் சென்றுவிட்டால் எனக்கு வெளியுலகம் மறந்துவிடும். மாலை ஐந்தே முக்காலுக்குதான் வீடு பற்றிய பிரக்ஞை எழும். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பி  மடத்துக்கு வந்து சேர ஏழு மணியாகிவிடும்.  ரோசி எனக்காக தேநீர் எடுத்து வைத்திருப்பாள். அவள் வாய் சும்மாவே இருக்காது. எதையாவது லொடலொடவென்று பேசிக்கொண்டேயிருப்பாள். ஆனால் உணர்ச்சிவேகத்துடன் தலையையும் கைகளையும் ஆட்டி கண்களை உருட்டியும் விழித்தும் வெகுளியாய் பேசுகையில் எனக்கு உள்ளூர சிரிப்பு வரும். ஆனால் அவள் மிகவும் சீரியஸாக அன்று நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருப்பாள்.
                 

    மேரி, திலகவதி, இன்பெண்டா வருவதற்கு இரவு மணி ஒன்பதரை ஆகிவிடும். மெழுகுவர்த்தி அம்மா(பூஜை அம்மாங்க)அவர்களுக்கு வேளாங்கண்ணி திருத்தல பழையகோவிலில் மெழுகுவர்த்தி விற்கும் இடத்தில் வேலை கொடுத்திருந்தார்கள். வர்த்தி தவிர ஜெபமாலை, மோதிரம், செயின், தீர்த்தப்புட்டிகள், சுரூபங்கள் இவற்றையும் விற்பனை செய்து  இரவு வத்தி அம்மாவிடம் கணக்கு ஒப்படைக்க வேண்டும். தினப்படியா அல்லது மாதசம்பளமா அதைப்பற்றியெல்லாம் நான் விசாரித்துக் கொண்டதில்லை. மதிய சாப்பாட்டை ஒரு சிறு டப்பாவில் கட்டி எடுத்துக்கொண்டு பத்து மணிக்கு ஸ்டாலில் இருக்க வேண்டுமாம். மேரி இராமநாதபுரம் தாண்டி ஒரு சிறு குக்கிராமத்திலிருந்து பெற்றோரால் ஒன்பதாவதுக்கு மேல்  படிக்க வைக்க முடியாததால் இங்கு வந்து இந்த வேலையில் சேர்த்து விட்டதாகக் கூறியிருந்தாள். அவளுடைய ஒரு தங்கையும் தம்பியும் அவளூரிலேயே படித்துக் கொண்டிருந்தார்கள். நான் இருந்த ஒரு வருடத்தில் அவளைப் பார்க்க அவள் அம்மாவோ அப்பாவோ வந்ததில்லை. ஒரு தொலைபேசி அழைப்பும் வந்ததில்லை. அவள் மட்டும் மாதாமாதம் வீட்டுக்கு பணம் அனுப்பும்படி நிர்வாக மதரிடம் பணம் கொடுத்துவிடுவாள். திலகவதியும் இன்பெண்டாவும் வத்தியம்மாவுக்கு தெரிந்தவர்களின் சிபாரிசுகளால் வந்து சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்கள். இருவரும் பத்தாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். சுடிதார் அணிபவர்கள். திலகவதி அப்போது ஒரு பையனைக் காதலித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் அந்தப் பையனின் கடிதங்களை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் அவனுக்குப் பதில் கடிதம் இன்லேண்ட் லெட்டரில் எழுதிக் கொண்டிருப்பாள். மேரி கூட நீலநிற இன்லேண்ட் லெட்டரில் மாதம் ஒரு கடிதம் எழுதுவாள். அது அவளது அப்பா ராமுவுக்கு. என்னிடம் கொடுத்துதான் தபால்பெட்டியில் சேர்க்கச் சொல்லுவாள். உன் பெயர் மேரி உன் அப்பா பெயர் ராமு ஏன் என கடைசிநாள் அவளிடம் பிரியாவிடை பெற்றுப் பிரியும்வரை கேட்டதில்லை. அவள் முதுகை சுவரில் சாய்த்துக் கொண்டு முட்டிகளை மேல்நோக்கி நிமிர்த்தி தொடைகளில் நோட்டை வைத்துக்கொண்டு நீலநிற ரெனால்ட் பேனாவால் தலைசாய்த்து குனிந்து எழுதிக் கொண்டேயிருப்பதை ரசித்துக்கொண்டேயிருப்பேன். அருகில் அமர்ந்து என்ன எழுதுகிறாள் என்றுகூட பார்க்கமாட்டேன். ஆர்வம் அடங்கமாட்டாமல் ஒரே ஒருநாள் என்ன கதை என்று கேட்டேன். ஒரு நாவல் என்று மட்டும் சொன்னாள். கொடு பார்ப்போம் என்று சொல்லி வாங்கி அப்போது எழுதிக் கொண்டிருந்த இரண்டு பக்கங்களை வாசித்தேன். உள்ளே ஒரு பெண் தன் காதலனிடம் தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வாதம் புரிந்துகொண்டிருந்தாள். சாட்டையடி போல அவள் பேசியதில் எனக்கு ஒரு கணம் மெய்சிலிர்த்துவிட்டது. ஆரம்பத்தை தேடப்போனேன். "மேடம் இது எட்டாவது நோட்டு. ஆரம்பமெல்லாம் என் பெட்டியில் இருக்கிறது. எதுவும் ஒழுங்குமுறையில் இருக்காது. எழுதிமுடித்துவிட்டு திரும்பவும் முதலிலிருந்து சரிபார்த்து வரிசைப்படுத்தவேண்டும்" என்றாள். இன்னும் கொஞ்சநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருக்கவேண்டும் போலத் தோன்றியது. அப்போதுதான் என்னை மதர் அழைத்த நேரம். போய் திரும்பி வருவதற்குள் அவள் அந்தப் பெண்ணை அவள் காதலனுடன் சேர்த்து வைப்பதில் மூழ்கிப் போனாளோ அல்லது புதுமைப் பெண்ணாக்கி புரட்சி காணச்சென்றுவிட்டாளோ அக்கதை பற்றி  மேலும் தொந்தரவு செய்யக்கூடாது என அதற்குப்பிறகு எதுவும் கேட்கவில்லை. ஆனால் எப்படி கதை எழுதுகிறார்கள் நாவலெல்லாம் எழுதுகிறார்கள் இந்த சின்னஞ்சிறு பெண்ணுக்கு என்ன வாழ்க்கையைப் பற்றித் தெரியும் அவளின் நாவலில் வரும் பெண்ணை என்னமாய் பேசவைக்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன். என் சிந்தனையைக் கலைக்குமளவுக்கு திடீரென்று கொல்லென்று சிரிப்பொலி கேட்கும். ரோசிதான் கைதட்டி குதூகலித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு திலகாவை நோண்டி நோண்டி அவளின் காதலை கிண்டல் செய்வதுதான் வேலை. இன்பெண்டாவும் இந்த கிண்டலில் சேர்ந்துகொண்டு திலகாவை வெட்கமுறவோ சினமுறவோ வைப்பாள். நான் கையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை வைத்துக் கொண்டு இந்த சம்பாஷணைகளுக்கும் காதுகொடுத்துக் கொண்டிருப்பேன். சிலநேரம் நானும் வாய்விட்டுச் சிரித்துவிடுவேன். ஆனால் மேரிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல அவள் கை எழுதிக் கொண்டேயிருக்கும். இரவு பதினோரு மணிவரை எழுதுவாள். நான் பத்தரைக்கு படுத்துவிடுவேன். மற்ற மூவரும் படுத்தாலும் அருகருகே படுத்துக்கொண்டு மெதுமெதுவாக சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள். நான் தூக்கம் வரும்வரை மேரியையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவளுக்கு படுக்கவே மனமிருக்காது. ஆனால் பதினோரு மணிக்குமேல் டியூப் லைட் எரியக்கூடாது என நிர்வாக அம்மா உத்தரவு. அதனால் நோட்டை எழுதிய கடைசிப் பக்கத்தில் அடையாளத்திற்கு பேனாவை வைத்து மூடிவிட்டு என் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்வாள். அதை ஏனோ என் மனம் விரும்பியது. ரோசி கடைசியாக ஒரு முறை வெளியே போய்விட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுப்பாள். ஆனாலும் அவள் வாய் ஓயாது. ஸ்டாலில் அன்று நடந்ததை அவளுக்கு சொல்லியாகவேண்டும். திலகாதான் அதட்டி அவளைத் தூங்கவைப்பாள். ஒரு சிறிய இரவு விளக்கு எங்கள் அறையில் இரவு முழுதும் எரியும். நான் புரண்டு இடது பக்கம் திரும்பி படுக்கும்போது மெல்லிய விளக்கொளியில் மேரி மல்லாக்க படுத்துக்கொண்டு இருகைகளையும் கோர்த்து மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் படிய வைத்துக் கொண்டு கண்களைத் திறந்தபடி ஏதோ யோசனையில் மூழ்கியிருப்பது தெரியும். அவளைப் பிரிந்த நாள் வரை அவள் கண்மூடித் தூங்கி நான் பார்த்ததில்லை. அப்படி என்னதான் யோசிப்பாள்? இப்போதும் அப்படித்தான் இருப்பாளா? அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ எனக்குத் தெரியாது ஆனால் நான் எப்போதும் அவளைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருப்பேன்.
               மேரி அமைதியானவள்.கணுக்கால் வரை தொங்கும் முழுப் பாவாடையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு காலை முதல் இரவு வரை ஓயாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் சோர்வென்றோ முடியவில்லை என்றோ ஒருநாளும் முணுமுணுத்ததில்லை. ரோசியும் இன்பென்டாவும் அம்மாங்க திட்டியதை பகிர்ந்து கொண்டபோது கூட அவள் யாரையும் குறைகூறியதில்லை. அவள் வாயிலிருந்து முத்து உதிர்வதைப் போல அடிக்கடி வரும் வார்த்தைகள் "சித்த பொறுமையா இருங்களேண்டி" என்பதுதான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று கிடையாது அவளிடம். பொறுமையாக இருக்கும் அவள் எளிமையுமானவள் என ஒருநாள் அவள் துணிவைக்கும் பெட்டியைப் பார்த்தபோது தெரிந்துகொண்டேன். ஒரு இரும்பு டிரங்கு பெட்டி வைத்திருந்தாள். அதில் மாற்றி மாற்றி தினமும் அணிந்து கொள்ளும் நான்கு ஜோடி பாவாடை சட்டைகள். எப்போதாவது என கட்டிக்கொள்ள ஒரு புடவை கூட கிடையாது. கதையெழுதிய கத்தை கத்தையாய் காகிதங்களும் பத்து பதினைந்து ஒரு குயர் நோட்டுகளுமே அவள் இரும்புப் பெட்டியை நிறைத்திருந்தன. திலகவதி நல்ல புடவைகள் வைத்திருந்தாள். அதிகமானவை அவளின் காதலன் அவளுக்கு காதல் பரிசாக வழங்கியவை. என்றாவது ஒரு ஞாயிறன்று வற்புறுத்தி அவள் புடவையை மேரிக்கு அணிவித்துவிடுவாள். நான் அப்பொழுதெல்லாம் சுடிதார்தான். திருமணத்திற்கு பிறகுதான்  புடவைக்கு மாறினேன். ரோசி ஞாயிறன்று கண்டிப்பாக புடவைதான் அதுவும் திலகா வைத்திருக்கும் புடவையிலேயே பளபளவென எது மின்னுகிறதோ அதை எடுத்து உடுத்திக் கொள்வாள். எல்லாவற்றிலும் அன்னியோன்யத்தை கடைப்பிடித்தவள் .புடவையை அணிந்துகொண்டு முந்தானை நுனியைப் பிடித்துக் கொண்டு அவள் பூனை நடை நடந்து காண்பிப்பதைப் பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். மேரிக்கு புடவை அணிந்ததும் அந்த சிறு முகத்தில் இயல்புக்கு மேல் வெட்கம் வந்துவிடும். இலேசாகத் தெரியும் மேரியின் இடுப்பில் விரலை விட்டு ரோசி கிச்சுகிச்சு மூட்டிவிடுவாள். ஒரு கையால்  முகத்தை மூடிக் கொண்டு மறுகையால் அவளைத் தடுத்து "ஏய் போதும்டி விட்றி" என மேரி நாணிக் கோணி சிரிக்கும்போது அது  நாட்டிய அபிநயம் போலவே தோணும். "நேரமாகிவிட்டது வாருங்கள்" என பூஜையம்மாவின் அழைப்புக்குரல் கேட்டதும் அவர்களின் பின்னால் பெரிய திருத்தலத்திற்கு ஞாயிறு காலை திருப்பலி பூசைக்கு ஓடுவோம். மேரிக்கு புடவையைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடக்கத் தெரியாது. எனக்கோ மெதுவாக நடக்க வராது. வேகமாக நடந்து முன்னே சென்று ஓரிடத்தில் நின்றுகொள்வேன். தூரத்தில் மேரி புடவையில் நடக்கத் தெரியாமல் சாவி கொடுக்கப்பட்ட பதுமைபோல் நடந்துவரும் அழகை ரசித்துக் கொண்டிருப்பேன். ரோசி தன்னிடமிருந்த ஜிமிக்கி தோடு ஒன்றை மேரிக்கு போட்டுவிட்டிருந்தாள். இன்பெண்டா அவள் கைவண்ணத்தை மேரியின் நீள கரிய கூந்தலில் காட்டியிருந்தாள். ஆகமொத்தத்தில் அந்த இளங்காலைத் தோற்றவெளியில் அவள் நடந்து வந்தது இருபக்கமும் சேடியர் அணைத்துத் தாங்கி அந்தப்புரத்திலிருந்து அரண்மனைக்கு அழைத்துவரப்படும் இளவரசி போலவே என் கண்ணுக்குத் தோன்றியது. கதையெழுதுபவளைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்ததால் எனக்கும் கற்பனைகள் வந்துவிட்டதோ என நினைத்து சிரித்துவிட்டேன். அந்நேரம் அருகே அவர்கள் வந்துவிட மேரிக்கு ரொம்பவும் கூச்சமாகிப் போய்விட்டது. அவள் திலகாவைப் பார்த்து, "பாருடி புடவையெல்லாம் வேணாம்னு சொன்னா கேக்கிறியா மேடம் கூட சிரிக்கிறாங்க பாருடி" என்று சிணுங்கிக்கொண்டே பொய்க்கோபம் காட்டினாள். அது எனக்கு இன்னும் அழகாய்த் தோன்றவே சிரிப்பை மேலும் வரவழைத்தது. "போங்க மேடம்" என்று தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள். ஆனால் புடவை அவள் காலில் மிதிபட்டு எங்கே அவள் குப்புற விழுந்துவிடப் போகிறாளோ என்று அவள் பதட்டத்துடன் நடந்துவந்ததை அவள் நெற்றி வியர்வை காண்பித்துக் கொடுத்தது. புடவை அவளுக்கு சௌகரியப்படவில்லைதான். ஆனாலும் எங்களுக்காக அந்த சிரமத்தை ஏற்றுக்கொண்டு ஒருவழியாக வந்து சேர்ந்தாள். மேரி வரவும்  திருப்பலி தொடங்கவும் சரியாக இருந்தது. இத்தனை நேரம் மேரிக்காகவே அனைத்தும் காத்திருந்ததைப் போல எனக்குத் தோன்றியது. 
                   

   நான் நாகப்பட்டினத்திலிருந்து மாற்றலாகி  வந்தபிறகு வேளாங்கண்ணி செல்லும்போதெல்லாம்  பழைய கோவிலுக்கு மேரியைப் பார்ப்பதற்காக செல்வேன். அங்கே ஸ்டாலில் அதே புன்னகையுடன் மெலிதான குரலில் பேசுவாள். நாவல் என்னவாயிற்று எனக் கேட்பேன். "வேலை சரியாயிருக்கு மேடம். இங்கேர்ந்து கிளம்பவே சில நாள் லேட்டாயிடுது. எழுத நேரம் கிடைக்கல" என புன்னகைப்பாள். எனக்கு உள்ளுக்குள் மனம் எதையோ எண்ணி கனத்தாலும்  வெளியே சிரித்து திலகாவிடமும் தலையாட்டிவிட்டு விடைபெறுவேன். அடுத்தமுறை சென்றபோது திலகவதிக்கு அந்த பையனோடு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னாள் மேரி. இன்பெண்டாவையும் அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்களாம். ரோசிக்கு திருமண தேதி குறித்துவிட்டார்களாம். அவளும் சீக்கிரமே மடத்திலிருந்து கிளம்பிவிடுவாள். நீங்களெல்லாம் இருந்தபோது நான் வீட்டைப்பத்தி எந்த நினைவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன். நீங்களெல்லாம் இல்லாமல் எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை அக்கா.  ஆனால் வீட்டுக்கும் செல்லமுடியாது ஏதோ இங்கு கொஞ்சம் சம்பாதிக்கிறேன். இதைவிட்டால் என் குடும்பத்துக்கு வேறு கதியில்லை என்று அவள் என் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நா தழுதழுக்க கண்கள் கலங்கி பேசுவதை அன்றுதான் நான் கண்டேன். இதுவரை மேடம் மேடம் என்று சொன்னவள் அக்கா என்று அழைத்ததும் எனக்கு உள்ளம் உடைந்து அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிப்படுத்திவிட்டேன். அவளிடம் நான் எதிர்பார்த்திருந்தது இதைத்தானோ? உதட்டைக் கடித்து இருவரும் அழுகையை அடக்கினோம். அந்த சிறிய வட்ட முகம்  துயரக் கண்களுடன் பாவாடை சட்டையணிந்து சிறு புன்னகை உதட்டில் தவழ எனக்கு விடையளித்ததுதான் இன்றுவரை என் கண்களில் பதிந்து போய் உள்ளது. ஏனெனில் அடுத்தமுறை நான் சென்றிருந்தபோது வத்தியம்மாவைத் தவிர மற்ற பெண்கள் அனைவரும் புதியவர்கள். யாருக்கும் மேரியைத் தெரியவில்லை. சிஸ்டரிடம் கேட்டேன்.  "மேரி இங்கு இல்லை. அவள் போய்விட்டாள்" என்று மட்டும் சொன்னார்கள். மேற்கொண்டு எதுவும் கேட்கமுடியாத அளவுக்கு அங்கு ஒரே கூட்டம். விற்பனையை மும்முரமாக வத்தியம்மா கவனித்துக் கொண்டிருந்தார்கள்.  சிறிது நேரம் அவள் வேலை பார்த்த இடத்தை வெறித்துப் பார்த்துவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன். அதன்பிறகும் வேளாங்கன்னிக்குச் செல்கிறேன். ஆனால் பழைய கோவிலுக்குப் போவதில்லை. ஏனெனில் மேரி அங்கு இல்லை.

No comments:

Post a Comment