பெருஞ்சுழி 46

முரசொலிப்பதற்காக இரு பக்க வீரர்களும் செவி கூர்ந்திருந்தனர். முதல்  நிலையில்  இருந்தவர்கள்  தங்கள்  உயிர் பிரிந்து விடக் கூடாது  என்ற எண்ணம்  மட்டும்  கொண்டவர்களாக அடுத்த நிலை போர் வீரர்கள்  தங்கள்  வீரம் வெளிப்படுவதை தங்கள்  தளபதிகள் பார்க்க  வேண்டும்  என்ற கவலை கொண்டவர்களாக அதற்கு  அடுத்த நிலை குதிரை வீரர்கள்  ஆர்வம்  மிகுந்த விழிகளுடன்  போரினை எதிர்பார்ப்பவர்களாகவும் இருந்தனர். போர் முரசங்கள் கொலை தெய்வமென நா சுழற்றி அமர்ந்நிருந்தன.
காமிலரை திரும்பி  நோக்காமல் முரசறைபவனுக்கு கை காட்டினான் வன்தோளன். திடுக்கிட்டுத் திரும்பிய காமிலர் அவனை தடுத்துவிட்டு "இளவரசே" என அதிர்ச்சியும் கடுமையும் கலந்த குரலில் அவனை நோக்கினார். "நீள்வில்" என்று சேவகனிடம் பணித்தான். அவனை விட இரு மடங்கு  உயரமிருந்த வில்லினை நேராக  நிற்க வைத்து எரியம்பு பொறுத்தி  விகந்தரும் அகல்யையும் பிணைக்கப்பட்ட எறிபொறியை குறி வைத்தான். " இளவரசே ! என்ன செய்ய இருக்கிறீர்கள்? " என அவன்  கைகளை பற்றிக் கொண்டார்  காமிலர். "எரிந்து நம் முன்  வந்து விழுவதை விட எறிபொறியிலேயே அவர்கள்  சிதையேறட்டும். முதியவர்களை  காட்டி என்னை தடுத்து விட நினைக்கிறாளா சிறுமி?" என சினத்துடன் காமிலரின் கையை தட்டி விட்டான்  வன்தோளன்.
தாழ்ந்த குரலில் "இளவரசே நம் படைகளின்  பெரும்பகுதி  இன்னமும்  மன்னரின்  கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மேலும்  தங்களை  தாயுடன்  இணைத்தே புரிந்து  கொண்டிருக்கின்றனர்  நம் வீரர்கள். இப்போது  அவர்களை ஆதிரை கொன்றாலும் நீங்கள்  கொன்றாலும்  அது நம் வீரர்களை  சோர்வுறச் செய்யும். அவள் இன்னமும்  மன்னரைக் கொல்ல ஆணையிடாததன் மூலம்  அவள் அமைதியை விரும்புகிறாள் எனத் தெரிகிறது. நம் படைபலத்தை சவில்யம்  அஞ்சுவதற்கு இதுவே சான்று. நம் தூது எழட்டும்" என்றார்  காமிலர்.
வன்தோளன்  தளர்ந்து  தேர்தட்டில்  அமர்ந்தான். "போர் வீரர்களாலும் தளபதிகளாலும்  நடத்தப்படுவதாக எண்ணுவது ஒரு மாயை இளவரசே. போர் என்றும்  உத்திகளாலும் தருணங்களாலுமே முடிவு செய்யப்படுகிறது. உண்மையில்  தன் ண
தருணத்தில்  ஆதிரை  வீணடிக்கிறாள் என்றே தோன்றுகிறது" என்றார் காமிலர்.பின்  கொம்பொலிகள் எழுந்தன. எதிர் திசையிலும் கொம்பொலிகள்  எழவே போர் தற்காலிகமாக நின்றது.
இரு புறங்களில்  இருந்தும்  தூதர்கள்  கொடியுடன் களமையத்திற்கு வந்தனர். தூதுவர்கள்  திரும்பியதும்  விகந்தரும்  அகல்யையும்  எறிபொறிகளில்  இருந்து இறக்கப்பட்டனர்.  வன்தோளனின்  படைகள்  மெல்ல மெல்ல  பின் வாங்க ஆணையிடப்பட்டன. கலைந்த ஒலிகளுடன் வீரர்கள்  பின் வாங்கிச் சென்றனர். வன்தோளன்  ஏதோ தவறு நடப்பதாக  எண்ணிக் கொண்டிருக்கும்  போதே  மீண்டும்  எறிபொறிகள்  நிமிர்ந்தன. எரிந்தவாறே விகந்தரும்  அகல்யையும்  அவனெதிரே வந்து  விழுந்தனர். அந்நிகழ்வை கண்டு சிரிப்பது போல சவில்யத்தின்  முரசு முழங்கத் தொடங்கியது. கணநேரத்தில்  வன்தோளன்  தன்னை மீட்டுக்  கொண்டு பின் வாங்கினான். தன்னுள்  மகிழ்ச்சி  பரவுவது  ஏன் என எண்ணி வியந்தான்.  "சுழற்போர் அணிவகுப்பு" என கூவியவண்ணம் வாளினை உறுவியவாறே வன்தோளன்  பின் வாங்கினான். பாறை வளைவுகளில்  மோதித் திரும்பும்  ஆறென மொத்த படையும்  சுழன்று திரும்பியது. புற்றிலிருந்து எழும்  நாகங்களென சவில்யத்தின்  படைகளை  அவர்கள்  வளைத்து சூழ்ந்தனர். பக்கவாட்டில்  போர் புரிய அறிந்திராத சவில்யத்தின்  வீரர்கள்  சுனதபாங்கத்தின்  வெறித்தாக்குதலை சமாளிக்க  முடியாமல்  இறந்து மண்ணில்  வீழ்ந்தனர். நாற்பத்தி இரண்டு அம்புகள் கொண்ட வன்தோளனின்  அம்பறாத்தூணி முப்பது  விநாடிகளில் தீர்ந்தது. அவன் வேகம் கண்டு திகைத்தான்  வன்தோளனின் போர் சேவகன். தொண்டை முழை  கண் உட்காது திறந்த வாய் உதரவிதானம் இவற்றில் மட்டுமே  வன்தோளனின்  அம்புபட்டது. ஒரு அம்பிற்கு ஒரு வீரன் என்ற கணக்கில்  இறந்து கொண்டிருந்தனர். சவில்யத்தின்  வீரர்கள்  அணுகிய போது வில்லினை கீழே வைத்துவிட்டு  கதையை எடுத்துக்  கொண்டான். இரு கைகளிலுமாக மாறி மாறி சுழன்றது அவன் கதை. பேருடல் கொண்டவனான வன்தோளனின் கையிலிருக்கும்  போதே அக்கதை பெரிதாகத் தோன்றியது. ஒரு சுழற்சிக்கு பத்து பேரின்  தலையை சிதறடித்து அவன் கை மீண்டது.
அவன் உடல் முழுக்க குருதியும்  சிதறிய நிணங்களும் வழிந்தன. ஆதிரை  போரிடவில்லை. கவனித்துக்  கொண்டிருந்தாள். மையப்பகுதியை முன்னேற விட்டு இரு புறங்களிலிருந்தும் மையத்தை காப்பதே வன்தோளனின்  வியூகம்  என கணபாரர் புரிந்து கொண்ட போது முக்கூட்டு  நாடுகளின்  மையப்படை சவில்யத்தின்  பிரதான  அரணை நெருங்கியிருந்தது. மையத்தில்  அவர்களை நுழையவிட்டு பக்கவாட்டினை வலுப்படுத்தினார் கணபாரர். இரு பக்கவாட்டுகளும் இணைந்து மையத்தை நெருங்கின. வன்தோளன்  வலப்பக்கவாட்டையும் காமிலர்  இடப்பக்கவாட்டையும் சிதறடித்தனர். ஒற்றைத் தேரில்  தனியே களமிறங்கினாள் ஆதிரை. அவள் எய்த பிறைச் சந்திர அம்புகள்  சிரங்களை கழற்றி எறிந்தன. வன்தோளன்  உத்வேகத்துடன்  போர் புரிந்து கொண்டிருந்த போது காமிலரின்  சிரம் ஒரு பிறைச் சந்திர அம்பால் கழற்றப்பட்டு பல கூர் முனை அம்புகளால் செலுத்தப்பட்டு அவன் தேர்தட்டில்  வந்து விழுந்தது.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024