பெருஞ்சுழி 50

உடல் விரித்துப் படுத்திருந்தான் அரிமாதரன். வெட்டுண்ட தழும்புகள்  அணி செய்வது போல உடல் முழுக்க பரவியிருந்தன. அரிமாதரன்  விழித்த போது  இரவில்  இசைத்த  பாணர்கள்  அனைவரும்  புறப்பட்டிருந்தனர். எழுந்த  கணத்தில்  அரிமாதரனுக்கு  சுயம் நினைவிலில்லை. தேர்தட்டில்  ஆதிரையை பார்த்து நிற்பதும் சவில்யம்  சுனதபாங்கம்  ஆநிலவாயில்  திருமீடம்  என நான்கு தேசங்களும்  இணைக்கப்பட்டு சுனதம் என்ற ஒற்றை தேசமாக  ஆக்கப்பட்டதும் அதன் தலைநகர்  சுனதபாங்கத்தில் சுனதன்  எரியூட்டப்பட்ட  எரிமேடையைச் சுற்றி அமைக்கப்பட்டதும் அவன் நினைவில்  எழுந்தன. மேற்கொண்டு அரிமாதரன்  சிந்திக்க விரும்பவில்லை.
ஆழி காதுகளை அறைந்து கொண்டிருந்தது. அரிமாதரன் ஆழியை நோக்கி  நடந்தான். அவன் அடிக்கடி  கண்டிருந்த சிற்பம் ஒன்று ஆழியின் அருகே ஒரு மண்டபத்தில்  அமைக்கப்பட்டிருந்தது. ஆறடி உயரத்தில்  நிமிர்ந்து அருள் வழியும்  விழிகளுடனும் ஆணவம்  மின்னும்  நகைப்புடனும் ஆதிரை நின்றிருக்க அவளுக்கு சற்று பின்னே அவளை விட உயரமும்  உடல் அகலமும் கொண்ட அரிமாதரனின் சிற்பம் ஒரு கையில்  மழுவுடனும் மறு கையில்  கதையுடனும் தோளில்  மாட்டிய வில்லுடனும் முறைத்து நின்றிருந்தது. அந்த சிற்பம்  போல தன் முகத்தை முறைப்புடன் வைத்துக் கொள்ள முயன்றான் அரிமாதரன். சிரிப்பு தான்  வந்தது.
பக்தியுடன்  அச்சிற்பத்தை  வணங்கிக் கொண்டிருந்த தோள் விரிந்த இளையவன்  ஒருவரின் "இளையவரே இவர்களை அறிவீரா?" என்றான் அரிமாதரன்.
சற்று திகைத்தவனாய் அரிமாதரனை பார்த்தவன் "இவர்களை அறியாதவர் ஆழிமாநாட்டில் இருக்க முடியுமா என்ன? இறை வடிவான சுனதரின்  ஆசி பெற்று ஆழிமாநாட்டை உய்விக்க பிறந்த பெருந்தாய் ஆதிரையும் அவர் வீரமைந்தன் அரிமாதரரும்" என்றவன் "ஆழிமாநாட்டை தன் வீரத்தாலும் அன்னையின்  விவேகத்தாலும் வென்றெடுத்தவர் அரிமாதரர். எட்டாண்டுகளுக்கு முன் வனம் புகுந்தார்  என்கின்றனர். அவர் உருவாக்கிய  நியதிகளால் ஆளப்படுகிறது ஆழிமாநாடு" என்றவன் மீண்டும்  சிற்பத்தை வணங்கி மீணடான்.
அவன் சென்றதும்  சில கணங்கள்  சிந்தித்த அரிமாதரன்  சிரிக்கத் தொடங்கினான். எண்பது  வயதுக்கு மேல்  இருக்கும்  அந்த முதியவன் சிரித்துக்  கொண்டே  ஆழி நோக்கிச்  செல்வதை சிலர் கண்டனர். அவன் சிரிப்பையும் உள்ளிழுத்துக்  கொண்டு  அமைதியாக  கரையுடன்  பேசிக் கொண்டிருந்தது  ஆழி வழக்கம் போல்
(பெருஞ்சுழி  நூல்  ஒன்று நிறைவு)

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024