வைத்தீஸ்வரன் கோவில் - ஒரு பயணம்
இரண்டு பாட்டிலில் அண்ணன் தண்ணீரை எடுத்து கைப்பையில் வைத்தபோது கடுப்பாக இருந்தது.
"அப்ப ரெண்டு நா வெளில தங்குறதுன்னா வாட்டர் டேங்க எடுத்து பைக்குள்ள வெப்பியா" என்றேன். வழக்கம் போல் அவன் பொருட்படுத்தவில்லை.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நாடி ஜோசியம் பார்ப்பதற்காக அல்லாமல் ஒரு அர்ச்சனை செய்வதற்காக அனைவரும் புறப்பட்டோம். மிகவும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் சென்றேன் என நான் இணைத்துக் கொள்வேன் என உங்களுக்குத் தெரியும். ஏனெனில் முற்போக்கோ அல்லது அதற்கு கொஞ்சம் முன்ன பின்ன போக்குள்ளவர்கள் இது போன்ற பரிகார ஸ்தலங்களுக்கு செல்லமாட்டார்கள் அல்லவா! அதுவும் பின் நவீனத்துவம் பேசுபவன் பின் நவீனத்துவத்தை அன்றி வேறு எது பேசினாலும் நிராகரிப்பவன் எப்படி பரிகார ஸ்தலங்களுக்கு செல்ல முடியும். ஒருவேளை செல்லாமல் இருந்தால் இன்னும் பல "பரிகாரம்"செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பகுத்தறிவுடனும் வருவதுணரும் முற்போக்கறிவுடனும் "வற்புறுத்துவதற்கு" முன்னமே ஒப்புக் கொண்டேன். மேலும் பயணமென்பதே மலர்ச்சியூட்டும் அனுபவமல்லவா! "நல்லா சமாளிக்கடா டேய்" என்பன போன்ற கிண்டல்கள் தாராளமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
விடிவெள்ளி மறைவதற்கு முன் அதாவது அஞ்சுலேர்ந்து ஆறுக்குள்ள பஸ் ஏறிடணும்னு பிளான். பஸ்ஸும் ஏறியாச்சு. திடீர்னு வேட்டையாடு விளையாடு படத்துக்குள்ள பூந்தது மாதிரி பயங்கரமா சத்தம். அதன்பிறகே அது பேருந்தின் தீம் மியூசிக் எனத் தெரிந்தது. அந்த அரசுப் பேருந்தில் எங்கு கை வைத்தாலும் இசை வரும் என்பது போல் "கடகடகடகட"த்துக் கொண்டிருந்தது. நடத்துநரிடம் மிகப்பணிவன்புடன் ரயில் நிலையத்தில் நிறுத்துமாறு அப்பா கோரிக்கை விடுத்தார். நடத்துநர் கண்டுகொள்ளாத போதும் கோரிக்கையை நினைவுறுத்தும் வகையில் நடத்துநரைப் பார்த்து புன்னகை பூத்தது எனக்கு எரிச்சல் ஏற்படுத்தியது. கோரிக்கை நிறைவேறியும் புண்ணியமில்லை. சேவை புரிவதெற்கென்றே - பல சமயங்களில் தேவைப்படாத போதும் - காத்திருக்கும் சில நல் உள்ளங்கள் இனிய முகத்துடன் மயிலாடுதுறை செல்லும் அந்த விரைவுத் தொடர்வண்டி அன்றைய தினம் வராது என்றனர். அண்ணன் பம்மினாலும் அம்மா விடவில்லை. "முன்னாடியே கேட்டு வெக்கமாட்டியா இதெல்லாம்" என்றுவிட்டு என்னையும் முறைத்தார். ஆனால் அந்த "ரயில் ஐடியா" அவனுடையதே. சென்னை செல்லும் ஒரு ஏசி கோச் பேருந்தை ஓடிப்போய் பார்த்தேன். சத்தியமாக அது ஏ.சிப் பேருந்து என எனக்கு அப்போது தெரியாது. சும்மா "சாஞ்சு உட்காந்துட்டு" போகலாமென்ற ஒரு நப்பாசைதான். நப்பாசை நிறைவேறவில்லை.
ஒரு சுமாரான பேருந்தில் ஏறி பயணமானோம். மூக்கு வழியாக பெயர்களை உச்சரிக்க வேண்டிய தகழியின் "கயிறு" நாவலை வாசிக்கத் தொடங்கினேன். தகழி கயிறுக்கு எழுதியிருந்த முன்னுரையே அவரை அணுக்கமாக உணர வைத்து விட்டது. கயிறு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல். சி.ஏ.பாலன் மொழிபெயர்த்திருக்கிறார். சாகித்திய அகாதெமியே...அய்யய்யோ இது பயணக் கட்டுரையல்லவா. சரி கோந்நோத்து பிள்ளையும் கோடாந்திர ஆசானும் நங்ஙயவரும் கோந்நாச்சரும் அப்படியே இருக்கட்டும். பயணம் தொடரலாம்...ரைட்..
அரைக்கிலோமீட்டர் தாண்டினால் "ஒருங்கிணைந்த" தஞ்சை முழுவதும் வயல்வெளிகள் தான். மயிலாடுதுறையும் அவ்வாறே. ஆனால் "போர்" பாசனம் அதிகம் என்பதால் நம்மூர் சேனல்களில் சூடாக காவிரிப் பிரச்சினை நடந்த போதே விதைத்துவிட்டனர். பெரும்பாலான வயல்கள் இளம்பச்சையாகத் தெரிந்தன. மயிலை பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு குறுகிய சந்தைக் கடந்து இன்னொரு பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
"வைஸ்வர்ன் சீகாழி சிம்பம்" என்று புரியாத மொழியில் அந்த தனியார் பேருந்தின் நடத்துநர் கத்திக் கொண்டிருந்தார். பின்னர் அது வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி சிதம்பரம் என நானே ஊகித்துக் கொண்டேன். வழக்கம் போல் அப்பா முன்படி வழியாக ஏறி மூன்று பேர் அமரும் இருக்கையில் மிகுந்த கருணையுடன் அம்மாவுக்கு ஜன்னல் இருக்கையை கொடுத்துவிட்டு அமர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து எங்களூர் பக்கம் கவனிக்க முடிகிறது. ஆஸ்த்துமா நோயாளிகள் போல் ஆண்கள் அனைவரும் ஜன்னல் பக்கம் போய் அமர்ந்து கொள்கிறார்கள். சற்று மாறி அமருங்கள் என்று சொன்னால் பிச்சை போட கையில் பணமில்லாதவர்கள் பிச்சைக்காரர்களை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பது போல தலையை திருப்பிக் கொள்வார்கள். அல்லது அவர்கள் மகளையோ தங்கையையோ ஆபாசமாகத் திட்டியது போன்ற ஒரு பாவனை முகத்தில் சூடிக் கொள்வார்கள். மாறி அமருமாறு அப்பாவிடம் அண்ணனை விட்டு சொல்லச் சொன்னேன்.
"ஷி டூ வான்னா கம் ஹியர் நா" என சிவந்த பெண் ஒருவர் கோவிலுக்கு வெளியே வந்தவாறு பேசியதே நான் முதலில் இறங்கியதும் கேட்டது. திருவாரூர் நாகை மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக சுற்றுலாத் தளங்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோவில். நவக்கிரகத் தளங்களிலும் ஒன்று. ஆனால் இந்த நவக்கிரகத் தளங்கள் அனைத்திலும் நடைபெறுவது அப்பட்டமான கொள்ளையடிப்பு. கொஞ்சம் உப்பும் மிளகும் இணைந்த ஒரு பொட்டலம் விற்கிறார்கள். பத்து ரூபாய் என்பது அதற்கு மிக அதிகம். அதுபோலவே மஞ்சள்பையில் ஒரு தேங்காயுடன் அர்ச்சனை பொருட்கள் ஐம்பது ரூபாய். தேங்காய் இல்லாமல் முப்பது ரூபாய். நிச்சயம் இது பகல்கொள்ளை. நவக்கிரகத் தளங்கள் அனைத்திலும் கிட்டதட்ட ஒன்றுபோல் இதுபோன்ற கொள்ளையடிப்புகளை காணலாம். வெளி மாநிலத்தவர்களும் நகரவாசிகளும் கேள்வி கேட்காமல் "தோஷம்" கழிவதற்காக வாங்கிச் செல்கின்றனர். கழிவறைப் பயன்படுத்துவதற்கு ஐந்து ரூபாய். எங்கும் காணப்படுவது போன்ற அசிங்கமான டாய்லெட்.
கோவில் பற்றிய விக்கிபீடியா தகவல்களுக்கு மேல் என்னிடம் ஏதுமில்லை. அரளிப்பூ மாலை அணிந்தவாறு சில ஆண்களும் பெண்களும் கோவிலை சுற்றி வந்தனர். தாவணி அணிந்த ஒரு பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தால். ஒல்லியான தேகம். பொன்னிறம். அவள் தெலுங்கு என்று ஏன் எண்ணினேன் என இன்னும் தெரியவில்லை. " இங்கவே நிக்க எடம் இருக்குல்ல" என்று அவள் சொல்லியும் இன்னும் மனம் அவளை தெலுங்காகவே எண்ணுகிறது. செவ்வாய்க்கு அர்ச்சனை செய்த பிறகு சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டுமாம். இரண்டு அர்ச்சனை தட்டுகள். அறுபது ரூபாய். குறைந்தது ஐந்து நூற்றாண்டு பழமையுடைய சிவன் கோவிலை இழுத்துக்கட்டி இன்றைய வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கோவிலுக்கு எப்பக்கமிருந்து நுழைந்தாலும் ஒரு கோவிலுக்குரிய எந்த அம்சத்தையும் அங்கு காண முடியாது. வண்ணம் பூசப்படாத கோபுரம் பார்க்க விகாரமாக இருக்கிறது.
அர்ச்சனை சிறிது நேரத்தில் முடிந்துவிடும் என நினைத்தால் "என் நேரம்" அபிஷேகம் தொடங்கிவிட்டது. "ஸ்லிம்மான" செவ்வாய் சிற்பத்தில் விபூதியை பால் ஆகியவை ஊற்றப்பட்டு பின்னர் கழுவப்பட்டன. பெரும்பாலான அர்ச்சகர்கள் கைலாயத்தின் பூத கணங்கள் போல் பேருருவம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அர்ச்சனை சீட்டு மூன்று ரூபாய் தான்.
செவ்வாய் அர்ச்சனை முடிந்து சிவனை நோக்கி நடந்தோம். அடிதடி நடப்பதற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த கூட்டம். இருந்தும் பெண்கள் அதிகமாக இருந்ததாலோ என்னவோ அப்படி ஏதும் நடக்கவில்லை. நாங்கள் சிவ தரிசனத்துக்கு முண்டியடிக்கையில் கந்த ஷஷ்டி கவசத்தை பாடியபடி ஒரு ஆள் முன்னே சென்றார். பக்தி பரவசத்துடன் அவருக்கு பலர் வழிவிட்டனர். நானும் இதே "உபயத்தை" கையாண்டிருக்கலாம்.
ஒரு அம்மா குண்டுக் குழந்தையை தூக்கியபடி தூரத்தில் தெரிந்த சிவனைக் காண முயன்றார். "வேணா வேணா...வேண்ணா" என அந்த குழந்தை ஆழ்வார்க்கடியான் போல் சிவனைப் பார்க்க விடமால் முண்டியது. அதன் அம்மா எப்படி பிடித்தாலும் வழுக்கி நழுவக் கற்றிருக்கிறது அது. சில நொடிகள் கடும் கோபத்துடன் என்னைப் பார்த்தது. கருப்புப் பெண்ணொருத்தி கண்ணை மூடியவாறு வாய்க்கு நேராக வணங்கியபடி வேண்டிக் கொண்டிருந்தாள். அழகி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சுட்டு விரலின் அடியிலிருந்து நுனி வரை அவள் வாய் திறந்தது. அருள் வந்துவிட்டதோ என ஒரு நொடி பயந்துவிட்டேன். பின்னரே கொட்டாவி விட்டிருக்கிறாள் எனத் தெரிந்தது. பாதகத்தி பக்தியில் தூங்கிவிட்டாள் போல.
"யய்யா யய்யா கொஞ்சுணூன்டு நவுந்துக்கையா இத மட்டும் அய்யங்காலுல வெச்செடுத்துட்டு போயிடுறேன்" என்றவாறே ஒரு வயதான ஆத்தா ஆதார் கார்டை லிங்கத்துக்கு நேரே வைத்தது. பின்னர் எடுத்துக் கொண்டு "ஆறு மாசமா அலையவிட்டானுவய்யா. இங்குன வந்து வேண்டிப்போனதும் ஒடனே கெடச்சுட்டு" என்று வெற்றிக் களிப்புடன் கூறிவிட்டு சென்றது ஆத்தா. தெலுங்கச்சியை மீண்டும் சிவன் சந்ததியில் பார்த்தேன். நிறைய பேர் அப்படி அவளை பார்த்திருப்பார்கள் போல. அந்த அலட்சியமும் திமிறும் ஒவ்வொரு அசைவிலும் அவளில் வெளிப்பட்டு மேலும் அழகூட்டியது. நம்மவர்கள் பலர் "முடிச்சிட்டேண்டா மாப்ள" என்று வெற்றிக் களிப்புடன் பிதுங்கிய கூட்டத்தில் தீபத்தை எடுத்து வைந்த அர்ச்சகரிடம் தங்களின் அர்ச்சனை பொருட்களை வாங்கியவாறு வெளியேறினர். பெரும்பான்மையினரின் திருப்தி ஒரு வேலையை முடித்ததால் ஏற்படுவது போலவே தெரிந்தது.
கோவில் முகப்பில் அது முகப்பென்றே சொல்லி விட முடியாத அளவிற்கு நிறைய கடைகள். முகப்பு வரை நடந்து சென்றுவிட்டு மீண்டும் "கொள்ளப்பக்கம்" வந்தோம். நிறைய குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
"வாற வழிலயே குடிக்கவும் கைகழுவவும் தனித்தனியா தண்ணி இருக்கு சாமி. நானும் உங்கள மாதிரி தரிசனத்துக்கு வந்தவன் தான். அந்த வழியா வந்ததாதல சொல்றேன்" என்று காவி உடுத்திய ஒருவர் சொன்னது அப்பாவை ரொம்பவே திருப்தி கொள்ளச் செய்தது.
"தர்மம் பண்ணிட்டு போங்க சாமி" என்றதும் என் குடும்பத்தினரின் முகம் போன போக்கை பார்க்காமல் விட்டுவிட்டேன்.
"மத்தியானம் எனக்கு திருவண்ணாமலை ட்ரெயின். எதாவது தர்மம் பண்ணுங்க சக்தி" என்றவாறே பின்னால் வந்தார். தீர்க்கமான முகம் அவருக்கு. இருந்தும் என் குடும்பத்தினருக்கு அவர் இழிந்தவர் தான். நம்மிடம் பிச்சை கேட்பவர்களை இழிந்தவர்களாக தானே நாம் எண்ணுவோம்!
ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிட்டோம். அவர் சொன்னது போல் கை கழுவுவதற்கு இரு திருகிகளும் குடிப்பதற்கு நீர் சுத்திகரிப்பு அமைப்புடன் கூடிய இரு குழாய்களும் இருந்தன. நீர் சுத்திகரிப்பு அமைப்பில் தண்ணீர் வரவில்லை.
"தண்ணி வந்தா நம்ம மக்கள் தான் அதுல போய் பாத்திரம் வெளக்கிட்டு நிக்குமே" என்றான் அண்ணன். உண்மை.
வெளியே புறப்படும் போது முறுக்கு சீடை போன்ற "தேவஸ்தான பிரசாதங்கள்" விற்கும் கடையில் ஒரு "டிப்பிக்கல்" இந்திய தகப்பன் ஏதோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
"கோவிலுக்கு வந்துட்டு கரச்சல் பண்ணாம கெளம்புங்க சார்" என்றார் அந்த கடைக்காரர்.
அந்த நிதானம் அவரை கோபப்படுத்தியது. அவருடைய இரு பெண்களும் மனைவியும் மருண்ட விழிகளால் அவரை பார்த்து நிற்பதில் இருந்து வீட்டிலும் சத்தம் போடுபவர் என ஊகித்துக் கொண்டேன். பெரும்பாலும் தன்னுடைய தோற்றமும் பாவனையும் அனைவரையும் மிரட்டிவிடும் என்ற பழங்குடி நம்பிக்கை கொண்ட எளிமையான மனிதர். சரியான சொற்களில் பேசாமல் மற்ற பாலூட்டிகள் போல "ஆய் ஊய் ஏய் ஆங் ஓங்" என்று சத்தமிடுபவர் போல.
சொற்கள் கிடைக்காததால் அவர் சொன்னதையே மாற்றி "கோவில்ல வேல பாக்கிறவங்க கரச்சல் பண்ணாம இருக்க கத்துக்கங்க" என்றார். நான் சிரித்துவிட்டேன்.
காலில் ஏதோ அடிபட்டு கட்டு போட்டிருந்த ஒரு தாத்தா (முன்னவரின் அப்பாவாக இருக்கலாம். அந்த இளம் பெண்கள் இரு பக்கமும் அவரை பிடித்திருந்தனர்) "என்னடா என்னடா பேசுற. மரியாதையா பேசு மரியாதையா பேசு" என்று மிரட்டும் தொணியில் பேசினார். ஆனால் அவர் குரல் பரிதாபமாகவே ஒலித்தது. வெளியே சில குடும்பங்கள் குரங்குகளுக்கு பழம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய "நட்சத்திர ஜன்னலில்" குடும்பம் வட்டமாக அமர்ந்திருந்தது. அருகில் நாங்களும் அமர்ந்தோம். அண்ணன் அம்மன் சன்னிதியில் உப்பு கொட்டுவதற்காக சென்றிருந்தான். நட்சத்திர ஜன்னல் குடும்பத்தில் பாட்டியின் புட்டத்துக்கு நேரே தலை வைத்தவாறு அந்த குடும்பத்தின் பேரன் படுத்திருந்தான். ஓங்கி குசு விடும் சத்தம் கேட்டது. அந்தப் பையன் சட்டென எழுந்து கொண்டு கண்டபடி திட்டினான். குசு சத்தம் கேட்டபோது கூட அது கேட்காதது போல் பாவனை செய்தேன். ஆனால் அந்தப் பையன் எழுந்து கொண்டதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அலைபேசியை பார்த்தவாறே சிரித்துக் கொண்டு அவர்களை கடந்து சென்றுவிட்டேன்.
பேருந்தில் ஏறியபோது வழக்கம் போல் மனைவிக்கு ஜன்னல் இருக்கை கொடுத்திருந்த ஒருவரிடம் அம்மாவை அமர வைப்பதற்காக மாறி அமரும்படி சொன்னேன். "இல்ல.." என இழுத்தவர் "வொய்புக்கு வாந்தி வரும் அதான்" என்றார். இப்படி கூசாமல் பொய் சொல்ல தமிழனால் மட்டுமே முடியும் என எண்ணிக் கொண்டேன். இருந்தும் கோபமே வரவில்லை. வைத்தீஸ்வரனின் அருள் போல.
nanum senru vandhen...un eluthodu...innum sirudhu neram surri irukalam ena thonrriyadhu....
ReplyDeletenanri...vinod