Pages

Monday 3 October 2016

பெருந்துயர் நோக்கி - பின் தொடரும் நிழலின் குரல் குறித்து
உயிர்த்தெழுதலுடன் பின் தொடரும் நிழலின் குரல் முடிவுற்றதாகவே எண்ணியிருந்தேன். மறுமுறை படிக்கையில் மிஞ்சும் சொற்களில் ஜெயமோகனின் கடிதமே நாவலை முடித்து வைப்பதை உணர முடிகிறது. அருணாசலம் சுய மீட்பாக கதிருக்கு எழுதுவதையும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதையும் இணைத்து வாசித்தால் மட்டுமே நாவலிலிருந்து முழுமையாக வெளிவர முடிகிறது.

முதலில் நூல் வடிவமைப்பு. எதிர்காலத்தில் இந்நாவலை மின் நூலாக வாசிக்கப் போகிறவர்கள் தாளில் வாசித்தவர்கள் அடைந்து எதையும் இழக்காமலிருக்க வடிவமைப்பாளரின் திறனும் வாசகரின் தீவிர கவனமும் அவசியம் என்றே எண்ணுகிறேன். பன்னிரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கும் பின் தொடரும் நிழலின் குரல் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியின் பிண்ணனியில் ஒரு இடதுசாரி அறிவுஜீவி அடையும் தடுமாற்றங்களையும் கண்டடைதல்களையும் விவரிக்கும் ஒரு நாவலென மேம்போக்காக குறிப்பிடலாம்.

நாவல் மனித வாழ்க்கையை நீட்டிச் சொல்லும் வடிவம் என்ற எண்ணமுடையவர்கள் இந்நாவலை அணுகுவது சிரமம். ஏனெனில் எழுநூற்று இருபத்திரண்டு பக்கங்களுக்கு விரியும் இந்த நாவலை ஒரு தனி மனிதன் அக மோதலாக அறத்திற்கான தேடலாக வகுக்கக்கூடிய அதே நேரத்தில் ஒரு பெரும் சித்தாந்தத்தின் தோற்றத்தில் இருந்து அது தோற்று நிற்கும் இடம்வரை விரியும் பெரும் வரலாறாக விரித்துச் செல்லவும் முடியும்.

இங்கு நான் சொல்கிற எதுவும் ஏற்கனவே நாவலில் இருந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. ஏனெனில் சித்தாந்தத்தின் எந்த படியில் நிற்பவரும் அணுகக்கூடிய அடிப்படைகளையே இப்படைப்பு விவாதிக்கிறது.
வரலாற்று ரீதியாக இன்று மதமாக தேங்கி நிற்கும் அத்தனை கருத்தியல்களும் மனித இனம் இன்றைய நாகரிகம் நோக்கி நகர்ந்தபோது அதன் முந்தைய அமைப்பிலிருந்த நற்கூறுகளை கைவிடுவதை நோக்கி ஆதமங்கமாகப் பேசியதாகவே எனக்குப்படுகிறது. இயற்கையை மனித மனம் பிரித்துக் காணத் தொடங்கிய போதே இந்தியாவின் ஆதி தரிசனமான சாங்கியம் தோன்றி இருக்க வேண்டும். பௌத்தம் பேரரசுகள் எழுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. பேரரசுகள் கொண்டிருக்க வேண்டிய விரிந்த சமூக அமைப்புக்கான அறம் குறித்து அது பேசுகிறது. கிறிஸ்தவமும் விரிந்த மக்கள் பங்களிப்புக்கு அவசியமான பண்புகளையே வலியுறுத்துகிறது. அது போலவே இயந்திர யுகத்துக்கான கருத்தியல் மார்க்ஸியம். இயந்திரங்களால் உற்பத்திக்கு மனிதனை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறைந்த போது அதற்கு முந்தைய யுகத்தின் கருதுகோள்களான மனிதாபிமானத்தையும் மனிதனின் அவசியத்தையும் அறிவார்ந்த முறையில் முன் வைத்தது மார்க்ஸியம். மார்க்ஸியத்தின் நடைமுறைப் பங்களிப்பை காத்திரமாக ஆராய்கிறது பின் தொடரும் நிழலின் குரல்.

முரணியக்க சிந்தனை மார்க்ஸியர்களுக்கு இன்றியமையாத பண்பு. தொழிற்சங்க ஊழியனாக அறிமுகமாகும் அருணாசலத்தின் ஒவ்வொரு சிந்தைனையிலும் இந்த முரணியக்கம் வெளிப்படுவதை காண முடியும். இடதுகால் வைத்து வீட்டை விட்டு வெளியேறுவதிலிருந்தே அவனுடைய சஞ்சலங்கள் தொடங்கி விடுகின்றன. நாகம்மையை அவன் அணுகும் விதத்தில் வெளிப்படும் தயக்கங்களும் அதையே பிரதிபலிக்கின்றன. கட்சித் தலைமை அவனை முதல் நிலைக்கு கொண்டு வர விரும்புகிறது.  அது கட்டயாமாகவும் இருக்கிறது. முந்தைய யுகத்தின் மதிப்பீடுகளுடன் கூடிய மனிதரான கெ.கெ.எம்மை மெல்ல பின்னுக்குத் தள்ளுகிறது காலம். நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கன்யாகுமரி திருவனந்தபுர மார்க்ஸியர்களின் பிரதிபலிப்புகளாகவே தெரிகின்றனர். கெ.கெ.எம்மை முழுதும் உதற முடியாமல் ஏற்கவும் முடியாமல் தவிக்கிறான் அருணாசலம். அவன் நிகழ்காலம் அவன் கண் முன்னே இறந்து போகிறது. அவனுடைய தயக்கமும் குழப்பமும் கலந்த நம்பிக்கைகளால் தீர்மானமாக தெளிவாக முன் வைக்கப்படும் அறிவுஜீவயான கதிரின் கருத்துகளுடன் விவாதிக்க முடிவதில்லை. கெ.கெ.எம் ஒரு யுகத்தில் வாழ்கிறார். கதிர் அந்த யுகத்தை "பரிசோதனைக்குரிய இறந்த காலமாக" கருதும் இன்னொரு யுகத்தில் வாழ்கிறான். அருணாசலம் நடுவே திண்டாடுகிறான். அவனுடைய வெற்றியும் முன்னேற்றமும் அவனுக்கு உவப்பை அளிக்கவில்லை. கெ.கெ.எம் முழுமையாகவே இருட்டடிப்பு செய்யப்படுகிறார். கட்சி ஊழியர் ஒருவரின் வழியே பல வருடங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு பிச்சை எடுத்து இறந்த வீரபத்ரபிள்ளை என்பவரைப் பற்றி அருணாசலம் அறிய நேர்கிறது.

சோவியத் ரஷ்யாவில் கட்சியால் தூரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட நிகலாய் புகாரின் எனும் புரட்சியாளரின் மனைவி அன்னா லாறினா ஐம்பது வருட சைபீரிய வதை முகாம் வாழ்க்கைக்குப் பிறகு ஐம்பது வருடங்களுக்கு முன் தன் கணவன் தன்னிடம் தந்து சென்ற வார்த்தைகளை நீதி மன்றத்தில் எடுத்துரைத்ததை கட்சியால் துரத்தப்பட்டு பிச்சையெடுத்து இறந்த ஒரு இளம் கவிஞனுடன் துல்லியமாகப் பொருத்தி உருவாக்கப்பட்ட புனைவு பின் தொடரும் நிழலின் குரல்.

வீரபத்ரபிள்ளை குருஷேவ் காலத்தில் வாழும் ஒரு அறிவுஜீவி. அவரிடம் புகாரின் குறித்த தகவல்கள் ஐம்பதுகளிலேயே கிடைக்கின்றன. சோவியத்தில் நடப்பவற்றை மக்களுக்கு சொல்ல நினைக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு மனம் சிதைந்து இறக்கிறார்.

அருணாசலம் அவர் குறித்து தேடத் தொடங்குகிறான். அவன் நம்பியிருந்த சித்தாந்தத்தின் முகம் அவனுக்கு வெளித்தெரியத் தொடங்குகிறது. எஸ்.எம்.ராமசாமி வழியாக (இவர் சுந்தர ராமசாமியின் சாயல்) வீரபத்ரபிள்ளை எழுதிய சில குறிப்புகளும் கதைகளும் நாடகங்களும் அருணாசலத்திற்கு கிடைக்கின்றன. சோவியத் ரஷ்யாவால் கொலை செய்யப்பட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளில் ஒருவரான நிகலாய் புகாரின் குறித்து வீரபத்ரபிள்ளை அறிய நேர்ந்தது அவரைச் சிதைக்கிறது. அருணாசலம் வீரபத்ரபிள்ளையால் சிதைக்கப்படுகிறான். முதல் முறை படித்தபோது பொறுமையிழக்கச் செய்யும்  ஒழுங்கின்மையை மட்டுமே நான்காவது பகுதியான நடுகல் வாழ்க்கையில் இருந்து உணர முடியும். அந்த பொறுமையின்மையின் எல்லையில் அருணாசலம் மெல்ல மெல்ல வீரபத்ரபிள்ளையாக மாறுகையில் அச்சரடில் நானும் மிகத் துல்லியமாக இணைக்கப்பட்டு விட்டதை உணர்ந்த போது அதிர்ந்து விட்டேன்.

வீரபத்ரபிள்ளையின் அகமனம் அவரைத் துளியும் பொருட்படுத்தாத ஒருவருக்கு எழுதிய தொடர் கடிதங்களில் வெளிப்படுகிறது என்பது நிம்மதியிழக்கச் செய்கிறது. நடுகல் வாழ்க்கையும் கண்ணீரைப் பின் தொடர்ந்தவனும் அகம் புறம் என இரண்டிலும் தோல்வியடைந்த ஒருவன் சித்தரிக்கப்படுகிறான். நிகலாய் புகாரின் குறித்து வீரபத்ரபிள்ளை எழுதத் தொடங்கியதும் கட்சி அவரை மெல்ல மெல்ல தூக்கி எறியும் விதம் அதிர்ச்சியூட்டுவது.

இந்நாவலின் வடிவமின்மை முதல் முறை வாசிக்கையில் அயர்வையே கொடுத்தது. மறு வாசிப்பின் போதே நாவலின் உள் ஒழுங்கையும் வடிவக் கட்டுமானத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் அருணாசலத்தை சுற்றி விரியும் ஒரு எதார்த்த உலகம். ஒரு கால மாற்றம். மதிப்பீடுகளின் மாற்றம். அவன் மனம் சலனம் கொள்ளுதல். பின்னர் அருணாசலம் வாசிக்கும் கடிதங்களினூடாக அறிமுகமாகும் வீரபத்ரபிள்ளையின் அக வாழ்க்கை. அவருள் ஏற்படும் அகச்சலனம். அச்சலனத்திலிருந்து நாடகங்களினூடாக சிறுகதைகளினூடாக கவிதைகளினூடாக விரியும் புகாரினின் வாழ்க்கை. கோர்ப்பசேவ் காலத்தில் அன்னா புகாரினினாவை பேட்டி காணும் ஒரு நிருபர். கனவுகளும் லட்சியங்களும் தியாகங்களும் பொருளற்றுப் போய் திகைத்து நிற்கும் கணத்தில் மீண்டும் கனவிலிருந்து நினைவு நோக்கி குதிப்பது போல மீண்டும் அருணாசலத்திடமே வந்து குதிக்கிறோம். அருணாசலம் கட்சியில் முக்கியத்துவம் இழந்தவனாக மீண்டும் எஸ்.எம்.ராமசாமியை சந்திக்க வருகிறான். நக்சலைட் இயக்கத்தில் இருந்து மீண்டவரான ஜோணி அங்கே இருக்கிறார். அப்போது நடக்கும் உரையாடலும் அதன்பின் ஜோணி ராமசாமிக்கு எழுதும் கடிதம் என இரு அத்தியாயங்கள். ஒரு தனி அமர்வில் முன் தயாரிப்புடன் விவாதிக்க வேண்டிய நுண் தகவல்களும் அந்த தகவல்களினூடாக உருவாகிய உணர்வு நிலைகளும் கொண்ட அத்தியாயங்கள் இவை. அந்த அத்தியாயங்களை கூர் கொள்ளச் செய்வது அந்நேரம் அருணாசலம் அடையும் திடுக்கிடலே. ராமசாமியும் ஜோணியும் கதிரும் தங்கள் அறிவினூடாகவும் ஒரு லட்சியக் கனவின் வழியாகவும் தங்கள் இறுதியை கண்டு கொள்கின்றனர் அல்லது நின்று விடுகின்றனர்.

அருணாசலம் முற்றாக சமநிலை இழக்கிறான். அந்த சமன்குலைவிற்கு முந்தையதாக அவன் மீண்டு வருவது போல் அமைக்கப்பட்டிருக்கும் அத்தியாயம் ஆற்றில் தத்தளிப்பவனை மேலே தூக்கி மீண்டும் ஆழம் நோக்கி அழுத்தும் உணர்வை தருகிறது . அருணாசலம் கந்தசாமியை சந்திக்கையில் உண்மையில் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வே ஏற்படுகிறது. ஜெயமோகன் மீதான அருணாசலத்தின் வெறுப்பே அவன் ஜெயமோகனை எவ்வளவு பொருட்படுத்துகிறான் என்பதை உணர்த்துகிறது. எல்லோரும் தங்களுடைய பல் பரிமாண அறிவினால் சோர்ந்து ஓயும் புள்ளியில் நின்றுவிட ஜெயமோகன் மட்டுமே அவ்விடத்தில் நிற்க மறுக்கிறான் என்பதே அருணாசலத்தை அவனை நோக்கி உந்துகிறது போலும். கிட்டத்தட்ட நாகம்மையும் அப்படியே. அறமற்ற ஒன்றின் முன் எந்த சமரசமும் இன்றி எதிர்த்து நிற்க அவளால் முடிகிறது. புகாரினினாவும் அவ்வகையே.

அருணாசலம் பைத்தியமாகிறான். வாசகனும் அந்த கனத்தை உணர முடியும் என்பதனாலேயே அது கடந்தே ஆக வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஓநாயுடன் சேர்ந்து வாழ்வது எப்படி என்ற அபத்த நாடகம் முழுக்கவே நகைச்சுவையாலும் கூரிய விமர்சனங்களாலும் நிறைந்திருந்தாலும்  அக்கனத்தை அது கூட்டவே செய்கிறது. அதன்பிறகு உயிர்த்தெழுதல். மறுமுறை படிக்கும் போதும் அழ வைத்து விட்டது. அருணாசலம் கதிருக்கு எழுதுவதில் அவன் மீள்வதும் ஜெயமோகன் அருணாசலத்துக்கு எழுதுவதில் தொகுப்பதும் என முடிகிறது பின் தொடரும் நிழலின் குரல்.

இந்த நாவல் வருவதற்கு சில வருடங்களுக்கு முன்பு ஜெயமோகன் "நாவல் கோட்பாடு" என்ற திறனாய்வு நூலை எழுதியிருந்தார். விஷ்ணுபுரமோ பின் தொடரும் நிழலின் குரலோ படிப்பதற்கு முன் அந்நூலை படித்துவிட நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஏனெனில் நாவல் என்ற வடிவத்தின் உண்மையான பயனையும் அது ஏற்க வேண்டிய சாவல்களையும் அதில் எதிர்பார்க்கக் கூடியவற்றையும் அந்நூல் விளக்கி இருக்கும். அந்த நூலின் சவாலை நான் வாசித்தவரை மிக வெற்றிகரமாக எதிர்கொண்ட நூல் பின் தொடரும் நிழலின் குரல் தான்.
தமிழின் குறிப்பிடத் தகுந்த நாவல்களில் பலவற்றை வாசித்திருப்பதால் சற்று நிமிர்வுடனே இதை என்னால் சொல்ல முடியும். தமிழின் தலை சிறந்த நாவல் இன்றுவரை பின் தொடரும் நிழலின் குரலே.

பல்வேறுபட்ட மொழிநடைகள் வாழ்க்கைச் சூழல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய பெரு விவாதங்கள் அச்சமூட்டும் நாடகத் தருணங்கள் என விரிந்து பரவினாலும் அது விவாதிக்க விரும்பும் மையம் சிதறவோ ஒரு பக்கச் சரிவு கொள்ளவோ இல்லை. எழுத்தாளரின் அரசியல் எதுவாக இருப்பினும் பூடகமாகக் கூட அந்த அரசியல் சார்பின சாயல் வெளிப்படாமல் இருப்பதே சிறந்த படைப்பாக இருக்க முடியும். சித்தாந்தம் அறிந்த எந்தவொரு கம்யுனிஸ்ட்டும் "அவதூறு" என ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி விட முடியாத படைப்பு இது.

நாவலின் வரும் இரகசியப் பேச்சாளன் என்ற சிறுகதையை படிப்பவர்கள் தங்கள் வாழ்வின் அதிகபட்ச தன்னம்பிக்கையை அக்கதையில் வரும் உரையினூடாக அடைய முடியும். அதேநேரம் அதன் சமன் செய்யும் எதிர்நிலையும் அச்சிறுகதையிலேயே உள்ளது. "மா நிஷாத" (வேடனே வேண்டாம்)என்று ஒரு பறவைக்காக இரங்கியவனின் அந்த தவிப்பினை தாங்கியபடியே முழு நாவலும் பயணிக்கிறது. ஞானத்திற்கும் பலத்திற்குமான மோதலாக ஒரு புறமும் அவ்விரண்டும் இல்லாதவர்கள் அந்த இரு பற்சக்கரங்களுக்கு இடையே சிக்கி அழிவதை விளக்குவதாக மறுபுறமும் விரிகிறது. ஒரு கொலையைக் கூட ஒரு துளி கண்ணீரைக்கூட புறக்கணித்து கடந்து  சென்றுவிடக்கூடாது என்ற ஆதி கருணையின் அருகே நகரும் படைப்பு இது.

கதிரின் உரைகள் உரையாடல்கள் வீரபத்ரபிள்ளை கட்சியிடம் தன் தரப்பை முன் வைப்பது எஸ்.எம்.ராமசாமி அருணாசலத்திடம் இருமுறை உரையாடுவது ஜோணியின் கடிதம் விசாரணைக்கு முன் எனும் சிறுகதை கந்தசாமியின் உரையாடல் லேவ் தல்ஸ்தோயும் தாஸ்தவேஸ்கியும் பங்கு பெறும் நாடகம் புகாரினினா லாறினா இடம்பெறும் கட்டுரை என தனி அமர்வுகளின் வழியே விவாதித்து தெளிவுபடுத்திக் கொள்ளக் கூடிய இடங்கள் நாவலில் பல உள்ளன. அறம் நோக்கி நகரும் ஒரு மனம் தன்னை எந்த அளவிற்கு சிதைத்துக் கொள்ளும் என்பதன் சாட்சியாய் நிற்கும் அருணாசலம் முன் தல்ஸ்தோயின் பீயரும் நெஹ்லூதவும் சிறு பிள்ளைகளாக எனக்குத் தெரிகின்றனர். ஏய்டனும் அஜிதனும் அருணாசலத்தின் அருகில் நிற்கின்றனர்.

இத்தகைய பெருந்துயர்களின் முன் மலைத்து நிற்கையில் மட்டுமே வாழ்க்கை எவ்வளவு பொருள் பொதிந்தது என உணர முடிகிறது.


No comments:

Post a Comment