சில கவிதைகள் - 4
வராதிருத்தல்
கருணையின் ஈரம் வற்றிய சதுப்பில்
தனித்தலையும் உயிர் அவன்
அவன் உரிமைகளும் மீறல்களும்
உலர வைத்தன
அவன் மீதான அக்கறைகளை
அவன் கபடின்மையில்
களிம்பேறிய போது
அவன் கரங்கள்
தாவைபிடித்து பிறர் முகம்
திருப்பிய போது
தன்மீதே குவிந்திருக்க வேண்டும்
பிறர் கவனம்
எனப் பதறிய போது
அவன் சிரிப்பு இளிப்பானது
பொருள் பொதிந்த அவன் வார்த்தைகள்
சலிப்பூட்டின
அக்கறை மிகுந்த பார்வைகள்
அவனைத் தவிர்க்கலாயின
அவன் உற்சாகங்கள் வடியத் தொடங்கின
அவன் லட்சியங்களில் பாசி படிந்தது
இறுதியாக
அவன் நினைத்தான்
எல்லோரையும் போல்
இதற்கு பிறந்திருக்கவே வேண்டாம்
--------
பிரிந்து செல்ல முனைதல்
வெறுப்பும் ஆங்காரமும் தன்னிரக்கமும்
இழந்த மனம்
பொருளிழந்தலையும்
பாலிதீன் பை போல
நிலையற்றதிர்கிறது
உன் சொல்லிலா நாட்கள்
சுவையிலா உணவு
நகையிலா உரையாடல்
நானிலா நான்
நான் எனும் வெறுமையை
நான் நான் நான் என
பதறி நிரப்புகிறாய் நீ
நீ எனும் முழுமையை
நீ நீ நீ என
சொல்லியே அழிக்கிறேன் நான்
உன் நினைவற்றுழைக்க
உன் துணையற்றுறங்க
எத்தனை இனிமைகளை நான் மறுக்க வேண்டும்
எத்தனை புன்னகையை நான் மறக்க வேண்டும்
எத்தனை அசைவுகளை நான் ஒதுக்க வேண்டும்
உப்பும் கன்னங்களில்
திரும்பிச் சிரிக்கும் குழவிகளில்
திக்கலில்
விக்கலில்
பரிசுத்தமான கண்ணீரில்
புலரியின் தனிமையில்
உச்சியின் தகிப்பில்
உடலறியா இருப்பென நிற்கும்
உயிரென
ஒவ்வொரசைவிலும்
கலந்து விடுகிறாய்
----------
ஈசல் காலம்
எத்தனை நாள் இருந்துவிடப் போகிறார்கள்
என ஒருவன் பரிதாபப்படுகையில்
அவர்களின் எதிர்காலத்தில் இன்பம் என ஏதும் இருக்கப் போவதில்லை
என என் தனித்த இரவுகளில் உணர்கையில்
அசைவின்மைக்குள் செல்ல மறுக்கும்
அவள் முகம் பார்க்கையில்
தடுமாற்றத்தில் தலை குனியும்
அவரது விழி தவிர்க்கையில்
ஒரு பழைய வரி
மிக மிகப் பழைய வரி
எத்தனை தடுத்தும் எண்ணத்தை அறைகிறது
இத்தனை கருணையற்றதா இறை
இவ்வளவு கறாரானதா காலம்
இன்னும் எதையும் இழந்தவிடவில்லை
என என்னும் போது
ஏளனத்துடன் பல் இளிக்கும் காலத்தை
உடல் வீங்க ரத்தம் தெறிக்க
விளாச வேண்டும்
கருணையிலா அவ்விறையை
காற்றற்ற அறையில் பூட்டி
வதைக்க வேண்டும்
இல்லாமல் ஆகப் போவதில்லை இந்நொடி
வராமல் ஆகப் போவதில்லை மறுநொடி
மறந்து போகப் போவதில்லை இறந்த நொடி
துடித்துப் பறக்கும் ஈசலா காலம்
சிறகிழந்த ஈசல் அள்ளும்
கோணியா நான்
அள்ளிச் சேர்த்து
அவித்துத் தின்கிறேன்
ஈசல் காலத்தை
என் மொழியெனும்
கலத்தில் வைத்து
-----------
இருப்பதற்கான நியாயங்கள்
சில அடிகள் தூரத்தில் நீ இருக்கிறாய் என்பதும்
என் தனிமையை போக்காவிட்டாலும்
அதை அறிவாய் என்பதும்
இந்நொடி எங்கோ
இச்சொற்களுக்கென
உன் விழிகள்
விழித்திருக்கின்றன என்பதும்
என்
உணர முடியா ஆழத்தின் அவதிகளை
நீள் இரவுகளின் பயங்களை
நெருங்கும் கெடுவை
ஒரு சொல்லாலும் கேட்பதில்லை நீ
ஆனால்
காணும் போதே
அனைத்தையும் கரைக்கிறது
உன் புன்னகை
நெருக்கம் தரும் நேர்நோக்கிற்கென
அனலுமிழும் ஓர விழிகளின்
தகிப்பிற்கென
உன்னை வென்றெழும் வெறிக்கென
உன்னிடம் தோற்றழும் தன்னிரக்கத்திற்கென
நீ இருக்கிறாய் என்ற கொண்டாட்டத்திற்கென
இருக்கிறேன்
நான்
-----------
மேடை ஆடும் நடனம்
நிலையற்றவளே
விண்முட்டி மண்தொடும்
உன் உடலதிர்வுகள்
ஒவ்வொன்றையும்
மட்டுமல்ல
உன் விழிகளின் சொடுக்கல்களை
உன் விரல்களின் அபிநயங்களை
சட்டெனப் பிடிக்கும் அடவுகளை
ஏற்று நிலைத்திருக்கிறது மேடை
அறிவாய் நீ
அது நிலையாய் இருப்பதால் தான்
நீ ஆடுகிறாய் என
ஆனாலும் அடம்பிடிக்கிறாய்
மேடையை ஆடச் சொல்லி
பிளந்து பிரிகிறது மேடை
சரிந்து உள் விழுகிறாய் நீ
யானைகளின் காலடிகளுக்கிடையில்
சிக்கியவள் என
திகைத்து நோக்குகிறாய்
எப்படி என்கிறாய்
சாத்தியமா எனப் பதறுகிறாய்
அத்தனை அதிர்வுகளும்
நீ அறிந்தது தானடி
உன் அடவுகளை அடைகாத்திருந்தது மேடை
வெடித்து வெளியேறுகிறது நடனம்
உன்னடி பணிகிறது மேடை
நீ அதன் ஆசிரியை
---------
நண்பர்களே
நம் சிரிப்பில் கண்ணீரில் எழுச்சியில்
அன்பில் நம்பிக்கையில்
கொண்டாட்டத்தில்
ஒரு போலித்தனத்தை
எப்போதும் உணர்கிறேன்
எனச் சொல்பவனுக்கு
நீங்கள் சொல்லும் பதிலை
எனக்கும் அனுப்பி வையுங்கள்
-----------
ஒரு காதல் கவிதை
காதலைப் பற்றியே ஏன் எழுத வேண்டும்
ஏனெனில் அது காமத்தின் ஆடை என்கிறீர்களா
அனைத்தும் காமத்தின் மீதே கட்டப்பட்டுள்ளது
என்று சொன்னால் அடிக்க வருவீர்கள்
அல்லது க கா என்ற மோனையினால் எழுதப்படுகிறதா
எப்படியோ
காதல் என்றால் அது வாசிக்கத் தூண்டுகிறது
நேசிக்கத் தூண்டுகிறதா என்பது தனி
பார்த்தீர்களா
நானும் வாசிக்க நேசிக்க என்கிறேன்
வாசிப்பவனால் நேசிக்கவே முடியாது
ஏனெனில் அவன் வாசிப்பை நேசிக்கிறான்
எப்படியோ
இதுபோன்ற சந்தங்கள் கவிதை ஆகாது
அல்லது ஆகா
பின் நான் தொடங்கிய காதல் கவிதை
மீண்டும் முதலில் இருந்து
காதலென்றால்
அரிப்பு தும்மல் போல ஒரு உணர்வா
அல்லது அழுகை சிரிப்பு போன்றதா
அல்லது அரிப்புக்கும் அழுகைக்கும் இடையே எழுவதா
அரிப்பென்பதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்
எப்படியோ
எழுத நினைத்த கவிதையை இன்னும் தொடங்கவில்லை
நண்பன் ஒருவன் சொன்னான்
பின்ன நான் என்று சொல்லி மாட்டிக்கொள்ள
எனக்கென்ன பைத்தியமா
சில இரவுகளுக்கு மேல் நீடிக்கும் எதுவும்
சில மாதங்களுக்குள் சில இரவுகள் கூட வராத எதுவும்
காதல் அல்ல கணக்குகள் என்று
நான் அதிர்ந்தேன்
மேலும் சொன்னான்
காதலுக்கு மிகப்பெரிய அவமதிப்பு மணம்
மிகப்பெரிய சன்மானம் துயர்
ஏனடா என்றேன்
நீ ஊற்றி வரைந்த அவ்வுருவம்
அவன் அல்லது அவள் அல்ல என்றுணர்ந்தும்
ஒட்டிக் கொண்டிருப்பதை விட
அயோக்கித்தனம் வேறில்லை என்றான்
ஏனிருக்க முடியாது என்றேன்
புகைப்படங்களில் அலைகள் தெரியாது
என்றான் சம்மந்தமேயில்லாமல்
வீடியோ எடுக்கலாமே என்றேன்
அதில் கணங்கள் கிடையாது என்றான்
சட்டென எனக்குப் புரிந்தது
காதலென்பது கணத்தின் பேருணர்வு
கொலைவெறி போல
முலைசுரப்பு போல
கொலை முலை என்கிறேன்
மீண்டும் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்
எப்படியோ
அவ்வுணர்வொழிந்த அத்தனையும்
கொண்டாட்டத்தின் மறுநாளைய கழிவகற்றலே
அகற்றாத கழிவுகள் எதுவும்
என் அகத்தில் இல்லையென
சொல்பவன்
என் போல தனித்தவனே
குளித்து நிற்கும் புல்லின் முதல் மாசு காதல்
இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை
காதல் வந்து அடைக்கிறது
கண்களையும் தொண்டையையும்
கவிதை முடிந்தது
எழுந்து செல்லலாம்
-----------
ரோப்
கருப்புத் துணியை தலையில் சுற்றிய
அந்தப் பெண்ணின் கையைத்தான் முதலில் பார்த்தேன்
அவள் பற்றியிருந்த பெல்டின் நுனியில் இருந்தது
நாய் என எண்ணிய போது
அவள் முகத்தை மகிழ்ச்சியானதாய்
கற்பனை செய்த மனம்
அது ஆடென்று அறிந்ததும்
ஏனோ சுணங்கியது
-----------
முகநூலில்
உனக்கும் எனக்குமான பரஸ்பர நண்பர்கள்
பெருகும் போது
குதூகலிக்கும் அதே நேரத்தில்
எச்சரிக்கையும் அடைகிறது மனம்
----------
நீயும் அதை உணர்கிறாயா
உன் மீதெழும் தூய பொறாமை
இதுவரை கடந்த என் நாட்களை
பழந்துணியென சுருட்டி
இடக்கையால் எறிய வைக்கச் சொல்கிறது
இறுதிப்படியில் நான் நின்று
விண்ணில் பறப்பவன் நீ என
கற்பனை செய்கிறேன்
லாவகங்களை நான் தொலைத்து
நாசூக்கானவள் நீ என வியக்கிறேன்
நம்மிடையே இருக்கும் இடைவெளியை
எதைக்கொண்டு அளப்பது என் நண்பனே
மறுமுனையில் நீ எண்ணுவதும் இது தானா
உன் ஓர விழிகளின் பேரழகில்
குன்றிப் போனவனாய் குற்றம் செய்தவனாய்
எண்ணி மருகும் என் மனதைத்தான்
எதிர்முனையில் நீயும் கொண்டிருக்கிறாயா என் தோழி
எத்தனை வலிமைகளின் வழி
எத்தனை நளினங்களின் வழி
புண்பட்டு புண்பட்டு
நானறிவது இவ்வுலகை
தீராக் கொடுந்தனிமையென
ஒவ்வொரு நொடியும் நானரற்றும்
அவ்வுணர்வின் மறுமுனையில் உள்ளது
விடியலில் முதலெண்ணம் எழும் முன்
நான் நான் நான் நான்
நான் மட்டுமே எனும் திண்ணம்
உன் எதிரே எது நண்பா
உன் மறுமுனை எது தோழி
-----------
கடவுளை சமைப்பது எப்படி
முற்றிலும் தனித்திருத்தல்
பிறரறியாவண்ணம் சிரித்தல்
அறியும் வண்ணம் மட்டுமே அழுதல்
அடுத்தவன் துயர் கண்டு இரங்குதல்
காமத்தை கண்களில் காட்டாதிருத்தல்
ஆகியவை அடிப்படை விதிகள்
வழிபாட்டாளர்களின் அளவு மற்றும் ரசனைக்கேற்ப
சேர்க்க வேண்டிய
உப்புகளும் புளிகளும் மிளகுகளும் உண்டு
ஒருபோதும் பிறழாதிருப்பது ஒருவகையினரது தேவை
ஒவ்வொன்றுக்கும் பரிகாரம் தேடுபவருக்கு விதிகள் வேறு
அச்சடித்த புத்தகத்தை அப்படியே நம்புகிறவனுக்கு
கடவுள் கலவையில் காரத்தை குறைவாக கொடுக்க வேண்டும்
அத்தனையும் அறிய விழைபவனுக்கு
ஒற்றைச் சுவை கொண்ட கடவுளே உவப்பு
உப்பில்லா கடவுளரும்
காரம் மிகுந்த இறையும்
புளிக்கும் தெய்வங்களும்
ஓயாது சண்டையிடும் பெருவெளி
காலம் என்றழைக்கப்படுகிறது
அத்தனை கடவுளரையும்
அடுப்புப் பாத்திரத்தில் அள்ளிப் போட்டு
கொதிக்க வைத்து
எனக்கென சமைத்து
யாருக்கும் கொடுக்காமல்
யாரையும் பார்க்க விடாமல்
தனியே
நான் மட்டும்
மென்று
உமிழ்நீர் சுரக்க
சுவைத்து
உண்கிறேன்
என் கடவுளை
அவ்வுணவில்
உன் கடவுளும் உண்டு
சியர்ஸ்
---------
Comments
Post a Comment