கோவில் பிரசாதமும் கொழுக்கட்டையும்

மஹா சிவ ராத்திரிக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது சென்ற வாரம் தான் எனக்குத் தெரிய வந்தது. மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி அது. அதுவு‌ம் வார இறுதியில் விடுமுறை கூடுதல் திருப்தியைத் தரும் தானே. ஏனெனில் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் பலர் சனிக்கிழமை விடுப்பெடுப்பார்கள். குறைந்த மனிதர்கள் மட்டுமே இருக்கும் அலுவலகம் எப்படியோ அன்று விடுப்பெடுக்காதவர்களிடம் ஒரு அணுக்கத்தைக் கொண்டு வந்து விடுகிறது. என் நெருங்கிய நண்பனான ராஜ்பிரதாப் என்னுடன் நண்பனானதும் அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான். 2008-ஆம் ஆண்டு நாங்கள் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களில் கடுமையான மழை. கிட்டத்தட்ட கல்லூரிக்கு கால வரையறையன்றி விடுப்பளிக்கப்பட்டது. தஞசை திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு. ஆகவே என் ஊருக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டிருந்தது. பிரதாப் நான் படியிறங்கிச் செல்லும் போது கண்ணில் படும் அறையில் தங்கி இருந்தான். அவன் அப்போது வைத்திருந்த அலைபேசி Nokia 2626. விலை குறைந்தவற்றில் இணைய வசதியும் FM கேட்கும் வசதியும் உடைய அலைபேசி அது. எந்நேரமும் காதில் ஏர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டபடி இருப்பான். பல விடுதி அறைகள் காலியாக இருக்கும் அந்நாட்களில் பிரதாப் மிக நெருங்கிய நண்பனாகிவிட்டான்.

என் நண்பர்களில் அதிக சிடுசிடுப்பு கொண்ட ரொம்ப நல்ல பையன் பிரதாப். அது போன்ற நட்புக்காக அல்லது பரிமாறுதல்களுக்காக ஆட்கள் அதிகமில்லாத சனிக்கிழமை அலுவலகம் எனக்குப் பிடித்தமானது. நாலு நாலரைக்கெல்லாம் விழிப்பு தட்டி இன்னும் பத்து நிமிடத்தில் எழுந்து விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் கண் மூடி குற்றவுணர்வுடன் வழக்கம் போல் ஆறரைக்கு எழுந்தேன். ஆறு தூர்வாரும் பணி நடைபெற்றதால் மதியம் வரை அதை வேடிக்கைப் பார்ப்பதிலேயே நகர்ந்து விட்டது. அதன் பிறகு மதிய உணவு. அம்மாவுக்கு கோவிலுக்கு புறப்படுவதற்கு சில உதவிகள். ஆனால் என்னையும் அம்மா அழைப்பார் என்றொரு எரிச்சல் ஓரத்தில் இருந்தபடியே இருந்தது. அழைக்கவும் செய்தார்.

"கோவிலுக்குப் போயிட்டு வந்துடுவுமா" என்றார்.

அண்ணனும் அப்பாவும் கிளம்பமாட்டார்கள். நானும் முரண்டினால் அம்மாவிடமிருந்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் குத்தல் பேச்சுகளை வாங்க வேண்டி வரும். ஆகவே முடிந்த அளவுக்கு முகத்தை மலர்வுடன் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

பேச்சோடு பேச்சாக "நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் இரும்மா. மொபைல எடுத்துக்க. முடிஞ்சதும் கால் பண்ணு. நான் வந்து கூட்டிட்டு வர்றேன்" என முடிந்தவரை மழுப்பலாக அங்கு இருக்கமாட்டேன் என்பதை தெரிவித்தேன். அம்மாவும் அந்நேரம் அவ்வளவு "உஷாராக" இல்லாததால் சரி என்று சொல்லி விட்டார். நயனவரதேஸ்வரர் என்ற அறுநூறு ஆண்டு கால பழமை வாய்ந்த ஒரு சிவன் கோவில் தக்களூர் நுழையும் வழியில் கொரடாச்சேரி கமலாபுரம் சாலையில் உள்ளது. நாங்கள் அங்கு செல்லவில்லை. விடையுரம் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றோம். பக்கம் தான். அரை கிலோமீட்டர். இதுவு‌ம் பழைய கோவில் தான். ஆனால் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு பாழடைந்து கிடந்தது. எங்கள் ஊரின் ஆஸ்தான மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி டாக்டர் அந்த கோவிலை எடுத்துக் கட்டினார். கோவிலுடைய பழமை முழுதாக காணமற்போனது வருத்தத்துக்கு உரியதே எனினும் எடுத்து செய்யாமல் இருந்திருந்தால் அந்த கோவிலே இல்லாமல் ஆகியிருக்கும்.

கோவிலைச் சுற்றி சிமெண்ட் தளம் போடப்பட்டிருக்கும். கோவிலில் நுழையும் போது பெண்கள் சுற்றி அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தனர். பெண்கள் கூடியிருக்கும் இடம் பெரும்பாலும் வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. அது போல சம்மணம் போட்டு ஆண்களால் அப்படி இயல்பாக அமர முடியாது. மூடிய அறையினுள் சீட்டு விளையாடும் போது நாங்கள் அப்படி அமர்வோம் அல்லது நண்பர்கள் மது அருந்தும் போது அப்படி அமர்வார்கள். சற்று நேரத்திற்குள்ளேயே அப்படியே படுத்துவிடுவார்கள். அந்த வண்ணமயமான சம்மண வட்டத்தை பெண்களால் மட்டுமே உருவாக்க முடிகிறது.

அந்த மாலையின் மன மலர்விற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அளவுக்கதிகமான பிள்ளைகள். அந்த கோவிலுக்கு பின்புறம் இருக்கும் அரசுப் பள்ளியில் தான் அண்ணன் வேலை பார்க்கிறான். ஆகவே அந்தப் பள்ளியின் பயல்கள் என்னையும் "சார் சார்" என்பார்கள். சில விவரமானதுகள் "தம்பி சார்" என்றோ "சார் தம்பி" என்றோ அழைக்கும். சிறு பிள்ளைகளுக்கு சினிமா நடிகனுக்கும் கழை கூத்தாடிக்கும் பிறகு அறிமுகமாகும் முக்கியமான பிம்பம் பள்ளி ஆசிரியர். ஆகவே அவர்கள் அந்த ஆசிரியனை வெறும் முகத்துடன் மட்டுமின்றி உடை அவன் பயன்படுத்தும் பொருட்களுடன் இணைத்தே நினைவில் வைத்திருப்பார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளித் தலைமையாசிரியராக இருந்த சுப்ரமணியம் வெள்ளைச் சட்டை போட்டு வந்தால் சாந்தமாக இருப்பார் என்றும் சந்தன நிற சட்டை அணிந்திருந்தால் அடி பின்னி எடுத்து விடுவார் என்றும் ஒரு பிரபலமான நம்பிக்கை எங்கள் பள்ளியில் இருந்தது. அண்ணன் உடைகளை நான் அணிந்து செல்வதாலும் அவனுடைய இரு சக்கர வாகனத்தில் நானும் செல்வதாலும் அவர்கள் பெரும்பாலும் குழம்பி விடுகின்றனர். இத்தனைக்கும் எங்கள் இருவரின் முகமும் ஒட்டவே ஒட்டாது.

மகேஸ்வரனும் அவன் தங்கையும் வழக்கத்துக்கு மாறாக அன்று நல்ல உடை அணிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் கோவிலுக்கு போன போது மணி ஆறைத் தொட்டது. பிரதோஷம் என்பதால் நந்திக்கு அர்ச்சனை நடந்தது. பூஜைகள் தொடங்க ஏழைத் தாண்டும் என்றனர். எனக்கும் ஏனோ உடனே கிளம்ப மனமில்லை. சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்து விட்டேன். அம்மா நந்தியாவட்டையும் செம்பருத்தியும் கலந்து மாலை கட்டித் தொடங்கினார். மஞ்சள் அரளியோடு சிகப்பு அரளி கலந்த மாலையை மேலு‌ம் சிலர் கட்டினர். குரு சந்நிதிக்கு எதிரே பிள்ளைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. உச்சியில் ஒரு நட்சத்திரம். இருட்டியிருந்தாலும் வானத்தில் நீலம் எஞ்சி இருந்தது. நான் அமர்ந்திருந்த தளத்தில் சூடு குறைந்திருக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து கூச்சலிட்டு ஓடுவது போலத்தான் தெரிந்தது. ஆற்றுச் சுழியை நோக்கி நகர்ந்தால் நாமும் சுழல்வோமே அது போல அந்த குரு சந்நிதிக்கு எதிரே ஒரு சுழல் உருவாகியது போல சுற்றி இருந்த பிள்ளைகள் எல்லாம் அங்கே ஓடி குதித்துக் கொண்டிருந்தனர். நெருங்க நெருங்க விசை கூடுவது போல தூரத்தில் நடந்து வரும் பிள்ளைகள் சுழலை நெருங்கியதும் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். பெரும்பாலும் ஓடிப்பிடித்து தான் விளையாடினர்.ஆனால் தப்பிக்கும் போது ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளின் உடல் லாவகமாக வளைகிறது. ஒருத்தியை துரத்தி பிடிக்க முடியாததை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருவன் கூச்சலிடத் தொடங்கினான். ஓடியவள் திரும்பி வந்து சமாதானப்படுத்தினாள்.ஓரிடத்தில் சினிமா நடந்தது. ஒரு பெண்பிள்ளையும் இரண்டு பசங்களும் சேர்ந்து அவர்கள் உயரத்தில் பாதி இருக்கும் சிவப்பு டிஷர்ட் அணிந்த சிறுவனைத் தாக்குகிறார்கள். அவனும் பயங்கரமான முக பாவனைகளுடன் துள்ளி விழுகிறான். பின்னர் "சோம்பியாக" மாறி எல்லோரையும் கடிக்க வருகிறான். மீண்டும் அடித்து வீழ்த்தப்படுகிறான். அந்த பெண் சுருண்டு விழுந்து கிடக்கும் அவன் காலை எத்துகிறாள். மற்றொருவன் அவன் தலையை உதைக்கிறான். அவன் கால் மண் கதாநாயகனின் எண்ணெய் அப்பிய தலையில் படுகிறது. இன்னொருவன் அவனை இழுத்து ஒதுக்கிப் போடுகிறான். மீண்டும் சோம்பி எழுந்து விட்டது. அவர்களை விட சிறிய பிள்ளைகள் அவர்களை துரத்துகின்றன.

மற்றொரு புறம் இரு கைகளையும் விரித்து சுற்றி அதனால் மயங்கி மயங்கி விழுந்தனர் மேலு‌ம் சிலர். ஒரு சிகப்பு நிற நாய் பாசத்துடன் தலையை என்னை நோக்கி நீட்டியது. "நீ ஒருத்தன் தான் நைனா கம்முன்னு ஒக்காந்துக்கீர. நம்மளாண்ட வம்பேதும் வெச்சிக்க மாட்டேன்னு நெனிக்கிறேன்" என்பது போன்ற பாவனை அதற்கு. சிவாச்சாரியார்கள் ஏழெட்டு பேர் ஒரு டெம்போ டிராவலரில் இருந்து இறங்கினர். பெருமாள் கோவில் பட்டாச்சார்யார்கள் ஒல்லியாகவும் சிவாச்சாரியார்கள் குண்டாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றும். தமிழ் நிலத்தில் சைவம் தழைத்தோங்குகிறது போல. ஆனால் இந்த சிவாச்சாரியார்களிடம் ஒரு விலக்கம் தோன்றியது. ஏனெனில் எல்லோரும் உடல் பூசியவர்கள் என்றாலும் யாருமே கருப்பாக இல்லை.

குமார் அண்ணன் தான் எங்கள் கோவில் அர்ச்சகர். அது மட்டுமல்லாமல் இன்னும் பல கோவில்களில் அவர் ஒருவரே பூஜை செய்து வருகிறார். பிடிவாதமாக இருப்பவர். திருமணம் செய்து கொள்ளவில்லை இன்னும். சிறியதும் பெரிதுமாக எங்கள் சுற்றுவட்டாரத்தில் கோவில்கள் ஓரளவு நல்ல நிலையில் இருப்பதற்கு முழுக்காரணம் குமார் அண்ணன் தான்.

முதல் கால பூஜை ஏழு மணிக்குத் துவங்கியது. மஞ்சள் சந்தனம் பால் தேன்கலந்த பஞ்சாமிர்தம் தயிர் திருநீறு என லிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. நயனவரதேஸ்வரர் ஆலயத்தை விட சிறியதெனினும் சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் லிங்கம் பெரிது. அம்மன் சிற்பம் இக்கோவிலில் தான் கலையாக இருக்கும். பெரும்பாலும் சிறிய பிள்ளைகளை முன்னே அமர வைத்திருந்தனர். அவை சிறிது நேரத்துக்கெல்லாம் ஆர்வம் இழந்துவிட்டன. ஒரு இரண்டு வயது பொடிசு எழுந்து நடந்து நந்தியை நெருங்கிவிட்டது. நான் நந்தி மீது கால் வைத்து வழுக்கி விழுந்து விடப் போகிறது என எண்ணிய போதே அது அம்மாவின் பக்கம் திரும்பிவிட்டது. அதன் அம்மாவை அப்போது தான் கவனித்தேன். இப்பொடிசு அவர் வயிற்றில் இருக்கும் போது அவரைப் பார்த்திருக்கிறேன். சற்று கருமையாகத் தெரிவார் அப்போது. இப்போது முகம் சற்றே மாறியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அங்குள்ளவர்களை கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. குமார் அண்ணனிடம் கூட சற்று முதுமை தெரிகிறது.

அபிஷேகம் முடிந்து அலங்காரத்துக்கென இருந்த நேரத்தில் மீண்டும் வெளியே வந்தேன். சிறுசுகள் அப்போதும் விளையாடிக் கொண்டிருந்தன. சில பொடிசுகள் உட்கார்ந்த இடத்திலேயே தூங்கின. நான்கு கால் நண்பன் வாலாட்டியபடி மீண்டும் பக்கத்தில் வந்தான். சிவன் சந்நிதி நோக்கி நேராக நின்றிருந்த கூட்டம் அம்மன் சந்நிதிக்கு அர்ச்சகர் நகர்ந்த போது கூட்டல் குறியின் கிடைக்கோடு போல வளைந்து திரும்பியது. சில பெண்களின் பார்வை மேலே விழுவதையும் நம் பார்வை அவர்கள் மேல் விழுவதையும் வழக்கம் போல் தவிர்க்க முடிவதில்லை.

யாரோ ஒருவர் என் கையில் தேங்காயும் பழமும் கொடுத்தார். அம்மாவுக்கு பரம திருப்தி. ஒரு விதத்தில் எனக்கும் தான். லிங்கத்தை இறுதியாக திரும்பிப் பார்த்த பின் வெளியேறினேன். அம்மா எனக்கும் சேர்த்து பிரசாதத்துடன் வெளியே வந்தார். செருப்பினுள் கால் நுழைத்த போது ஜில்லென்றிருந்தது. மூன்று மணி நேரம் பனியில் கிடந்ததால் வண்டியிலும் ஈரம் படிந்திருந்தது. கோவில் பிரசாதமும் கொழுக்கட்டையும் சாப்பிட்டுவிட்டு தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். தூக்கம் கண்ணைச் செருகிறது.

"ஈஸ்வரா என்றபடி படுக்க வேண்டியது தான்."

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024