சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் - 2

வரலாற்றுப் புனைவுகளை வாசிக்கும் ஒரு நவீன இளைஞனுக்கு இப்படி ஒரு கேள்வி தொடக்கத்தில் எழு வாய்ப்பிருக்கிறது.

வரலாற்றுப் புனைவுகள் உண்மையை நெருங்கிச் சித்தரிக்க முயன்றாலும் ஆசிரியனின் உள எழுச்சி கற்பனை வீச்சு இவை சார்ந்து ஏதோவொரு விதத்தில் வரலாற்றின் மீதான இனப் பெருமிதங்களை உருவாக்கி விடுகிறன்றன. அப்படியான பெருமிதங்கள் உருவாவது குறிப்பிட்ட சமூகத்தினரை மேன்மையாக எண்ண வைக்காதா? சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கான வாய்ப்பினை இவ்வகை நூல்கள் உருவாக்கி விடாதா?

காவல் கோட்டம் பெரும்பாலும் கள்ளர்கள் மற்றும் நாயக்கர்களின் வரலாற்றை விரித்துச் சொல்லும் நூல். ஆனால் இச்சமூகங்கள் இந்நூலில் ஆய்வுக்களமாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனப் பெருமிதங்களைச் சொல்லும் குறுகல் போக்குடைய ஒரு நூலில் இருந்து இத்தகையை வரலாற்றுப் புனைவுகள் வேறுபட்டு நிற்கும் இடம் இதுவே. அத்தனை நுண் தகவல்களுக்கும் வரலாற்று மனிதர்களுக்கும் சடங்குகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் வஞ்சகளுக்கும் மையமென இருப்பது நூலாசிரியனின் மனவெழுச்சி. அதுவே ஒரு நூலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. ஒரு கறாரான வரலாற்று விசாரணை பாவனையை மேற்கொள்ளும் நூலை நாவலாக்குவது அத்தனை பாவனைகளுக்கும் உண்மைத் தகவல்களுக்கும் ஆழத்தில் இருக்கும் எழுத்தாளனின் மனவெழுச்சியே. அதுவே நெல்சன் தொடங்கி பலரால் விரித்தெழுதப்பட்ட மதுரை குறித்த அபுனைவுகளில் இருந்து புனைவான காவல் கோட்டத்தை வேறுபடுத்துகிறது.

நவீன சமூகத்தில் ஆங்கிலேயர் நமக்கு உருவாக்கி அளித்த ஆய்வுமுறைகளைக் கொண்டே நம்முடைய தொடக்க கால சமூகங்களும் (primitive tribes or elemental society) அதன் வளர்ச்சி நிலைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. அவை ஏன் ஆய்வு செய்யப்பட வேண்டும்?

தன்னைக் குறித்த சரியான பார்வையைக் கொண்டுள்ள சமூகம் மட்டுமே உலகின் பொதுக் கருத்தியலுக்கு இசைந்து போக முடியும். சுயம் குறித்த உயர்வுணர்ச்சியோ தாழ்வுணர்ச்சியோ கொண்ட சமூகங்கள் முறையே அழிவை உருவாக்குபவையாக அழிந்து போகிறவைகளாக மாறிப் போகின்றன. உதாரணமாக ஒரு ஆப்பிரிக்க பழங்குடி குறித்த ஒரு சராசரி இந்தியனின் பார்வை எப்படி இருக்கும்? அவன் தன்னளவிற்கு இன்னும் உயரவில்லையே என அவனைக் கண்டு இரக்கம் கொள்வான். நம்மிடம் நிகழும் பெரும்பாலான "உச்" கொட்டல்கள் அவர்களை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தால் உருவாவதே. இதே ஒரு ஐரோப்பியனைக் காணும் இந்தியன் ஒரு வகை குன்றல் மனநிலையை அடைகிறான். அந்த கண்டம் போல தன் நாடு இல்லை என வருந்துகிறான். இவ்விடத்தில் அவன் கொள்வது தாழ்வுணர்ச்சி. இந்த மனநிலை பொது சமூகத்தில் பிரதிபலிப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் உள்காடுகளுக்குள் அவர்களின் பழங்குடி தெய்வத்தை தேடிச் செல்லும் அமெரிக்கனை நாம் மனவெழுச்சியோடு நோக்குகிறோம்.

இவர்களும் அவர்களும் வேறு வகையான வாழ்க்கை கொண்டவர்கள் என்ற பிரக்ஞை இல்லாமல் எல்லோரையும் ஒரு ஏணியில் வரிசையாக நிற்க வைக்கிறோம். இந்தப் பொது மனநிலைக்கு எதிரானதாகவே மானுடவியல் இன வரைவியல் ஆய்வுகள் அமைகின்றன. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் உற்பத்தி முறை நீதி வழங்கல் முறை மண உறவு முறை என அனைத்தையும் பிரித்து வகைப்படுத்தி அவற்றில் காணப்படும் பொதுக்கூறுகளை  பட்டியலிடுகிறது. "அந்நியர்கள்" என எண்ணப்படுகிறவர்களை "அந்நியமானவை" என ஒதுக்கப்படுபவற்றை நவீன அறிவு தொடர்ந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சு.வேணுகோபாலின் ஆட்டம் குறுநாவலில் திருவிழா முடிந்த பிறகு குப்பையில் வீசப்படும் உணவையும் கறியையும் குறவர்கள் எப்படி பதப்படுததி மீண்டும் உண்கிறார்கள் என்பது சொல்லப்பட்டிருக்கும். ஒருவகையில் வெந்த சோற்றை மீண்டும் அரிசியாக்கும் வித்தை அது.அப்போது அவர்கள் "பொறுக்கித் திண்பவர்கள்" என்ற பொது மனநிலை சற்றே அசைக்கப்படுகிறது.

தேவரடியாள் முறையை "விபச்சாரம்" என்றும் களவு-காவல் உறவை "திருட்டு" என்றும் பொதுமைப்படுத்தி புரிந்து வைத்திருப்பதன் வழியாக நம்முடைய கடந்த காலம் குறித்த ஒரு குற்றவுணர்வும் அதனால் எழுந்த தாழ்வுணர்ச்சியும் நம்மிடம் எஞ்சுகிறது. இதன் மறுபக்கமாக உலகின் தொன்மையான நாகரிகம் ஒன்றின் சொந்தக்காரர்கள் இந்தந்த பேரரசர்களால் ஆளப்பட்டவர்கள் முதன்மையான மக்கள் என்பது போன்ற உயர்வுணர்ச்சியில் திளைக்கத் தொடங்குதல். இவை இரண்டுக்கும் இடையே நிகழ்ந்து போனவற்றை பதிவு செய்யப்பட்டவற்றை அறிவின் கண் கொண்டு பார்த்து நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பவற்றை பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவற்றை ஊகிக்கும் ஒரு அறிவார்ந்த தன்மை வரலாற்றுப் புனைவுகளில் உண்டு. ஆகவே வரலாற்றுப் புனைவுகளை இனப்பெருமிதம் என ஒதுக்குபவர்கள் பெருமிதத்துக்கும் தாழ்வுக்குமான அவற்றின் சமநிலையை மறுக்கிறார்கள் என்றே பொருள்.

தாதனூர் மதுரையை காவல் காக்கும் கிராமம். இரவின் வழிகளை அறிந்தவர்களாக தாதனூர்காரர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் "செய் நேர்த்தி" என ஒன்றிருக்கும். மிக நுண்ணிய தகவல்கள் வழியே களவின் நேர்த்தியும் காவலின் நேர்த்தியும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. ரெட்டிய கெடுத்த வெள்ளி சாட்டைக்கம்பு வெள்ளி முழுநிலவு அம்மாவாசை வளசை போகும் பறவைகள் ஆந்தைகள் என இரவின் அத்தனை அசைவுகளும் அவர்களுக்கு சமிக்ஞைகளாகிறது. இருளில் இறங்கியதும் களவுக்கு போகிற அத்தனை பேரும் "கருப்பன்" ஆகி விடுகின்றனர்.

காவலுக்கு வரும் கருப்பன்களில் நினைவு ராமாயணச் சாவடியில் சுற்றித் திரிகிறது. காவல்கூலி கொடுக்கப்படாத தெருக்களில் வீடுகளில் அவர்களே களவுக்கும் இறங்குகின்றனர். காவலும் களவும் இருபுறமும் கட்டப்பட்ட சரடாக மதுரையின் இரவுகள் நீள்கின்றன. டெனில்சன் ப்ளாக்பர்ன் பென்னிங்டன் என ஆங்கில ஆட்சியாளர்களுக்கு இணையாக மாயாண்டி வீரணன் ஒச்சு என தாதனூர் பெரியாம்பிளைகளும் எழுந்து வருகின்றனர்.குடிக்காவல் முறையை ஒழிக்க விரும்புகிறது ஆங்கில அரசு. தேனி கம்பம் திருநெல்வேலி என மதுரைச் சூழ்ந்து பரவியிருக்கிறது குடிக்காவல் முறை. வெளியூர்களுக்கு காவலுக்கும் நாட்டாண்மைக்கும் செல்லும் குடும்பங்களின் சித்திரமும் ஊடே புகுகிறது. கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகளும் முல்லை-பெரியாறு அணை அமைப்பதற்கான தொடக்க கால பணிகளும் துரிதம் பெறுகின்றன.

குடிக்காவலர்கள் நகருக்குள் நுழையக்கூடாதென மதுரை நிர்வாகம் சட்டம் பிறப்பிக்கிறது. ஏட்டளவிலேயே இறந்து போகிறது சட்டம். சட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பவர்கள் களவு கொடுக்கிறார்கள். மீட்டு வர மீண்டும் தாதனூரையே நாடுகிறார்கள். தாதனூரின் வழியே விரிந்து பரவிய கள்ளர்களின் பழக்க வழக்கங்கள் உணவு முறைகளையும் உறவு முறைகளும் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்றன. சற்றே "தாராளமான" திருமண உறவுகள் காது வளர்த்தல் இஸ்லாமியர்களிடமிருந்து வந்த பழக்கமான கவரடப்பு என தாதனூர்காரர்களின் வாழ்க்கை வழியே ஒரு இனக்குழு வரலாறும் விரிகிறது.

களவுக் குற்றத்திற்கென மாயாண்டி பெரியாம்பிள கைது செய்யப்படுகிறார். தாதனூரின் பிடி காவலில் மெல்ல நழுவுகிறது. முல்லை-பெரியாறு அணைக்கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு கைவிடப்படுகிறது. காவல் முறையை ஒழிக்க முடியாமல் திணறுகிறது பிரிட்டிஷ் நிர்வாகம்.

தாதுவருடப் பஞ்சத்தை வெள்ளையானை எரியும் பனிக்காடு போன்ற நாவல்கள் விரிவாக பதிவு செய்திருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்திய பஞ்சங்களை பதிவு செய்த  தமிழின் முன்னோடி படைப்பு என புதுமைபித்தனின் துன்பக்கேணியைச் சொல்லலாம். காவல் கோட்டம் பஞ்சம் நெருங்குவதை மெல்ல மெல்ல சூழ்ந்து கொள்வதைச் சொல்லி பஞ்சகாலத்தை தாண்டிச் செல்கிறது. எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு காலகட்டமாகவே தாது வருடப் பஞ்சம் நெஞ்சடைக்க வைக்கிறது. பஞ்சத்தில் களவும் பெருகுகிறது. காவலும் வலுப்படுகிறது. செட்டியார் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் தானியங்களைக் காத்து தாதனூர் தப்பிக்கிறது. ஒருவேளை பெரியாறு அணை அப்பஞ்ச காலத்திற்கு முன்னரே கட்டப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் என்ற இயலா எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டு அத்தியாயங்கள் நகர்ந்து விடுகின்றன. மதுரை நகரம் மெல்ல மெல்ல பிரிட்டிஷின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

காவல்துறையின் பரிணாம வளர்ச்சியின் வழியே ஒரு நிர்வாகம் வடிவம் பெறுவதை அதன் பிடிகள் இறுகுவதை காண முடிகிறது. கால்சட்டைப் போட வெட்கப்படும் போலீஸ்காரர்கள் காவல் நிலையத்திற்கே காவக்கூலி கொடுக்கும் காவலர்களின் தோற்றம் மெல்ல மெல்ல மாறுகிறது. பெரியாறு அணையின் நீர் மதுரை நிர்வாகத்தை குளுமையடையச் செய்கிறது. மீண்டும் குடிக்காவல் முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடங்குகின்றன. வில்லியம் காரே தொடங்கி வைத்ததை பென்னிங்டன் தொடர்கிறார்.

களவிற்கான பயிற்சி அதன் மீதான நம்பிக்கை இருளில் நிகழ்த்தப்படும் பழி வாங்கல்கள் என சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது தாதனூர். முந்தைய நிர்வாகத்தின் உரிமையை இன்றைய நிர்வாகத்திடம் விட்டுக் கொடுக்க மறுக்கிறது. தாதனூரில் பிறந்து கிறிஸ்துவராக மாறிய டேவிட் சாம்ராஜைக் கொண்டே தகவல்களைத் திரட்டுகிறது பிரிட்டிஷ் நிர்வாகம். மக்கள் மெல்ல மெல்ல பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தினசரிகளில் அமிழ்ந்து போகின்றனர். கொலைகள் பழிவாங்கல்கள் என நீளும் படலத்தின் வழியே தாதனூரின் வீழ்ச்சி தொடங்குகிறது. தாதனூர் வரை சாலை அமைக்கப்படுகிறது. அதன்பிறகு காவல் நிலையம். அதிலேயே தாதனூர்காரர்கள் அடைக்கப்படுகிறார்கள். குற்றப் பரம்பரையினராக சித்தரிக்கப்படும் தாதனூர்காரர்களின் நினைவில் மாயாண்டிப் பெருசு பட்டசாமியாக எஞ்சுவதோடு நாவல் முடிகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு நூலில் ராமச்சந்திரா குஹா வரலாறு சமகாலத்தை நெருங்குந்தோறும் மேலு‌ம் நம்பகத் தன்மை கொள்ள வேண்டி இருக்கிறது என்று கூறியிருப்பார். காவல் கோட்டத்தின் சிறப்பென இதனையே நான் எண்ணுகிறேன். அதன் தொடக்கம் இஸ்லாமிய அரசுகள் விஜயநகர அரசு மதுரை நாயக்கர்கள் என இருந்தாலும் பக்கங்கள் நகர நகர அது மக்களை நோக்கி வருகிறது. மக்களை நெருங்க நெருங்க பெருங்கனவுகளுக்கான சாயங்களை அழித்துக் கொண்டு யதார்த்த தளத்தில் வந்து முடிகிறது.

நாவல் முழுக்க அடர்த்தியான மௌனங்கள் நிரம்பி வழிகின்றன. இருளின் மைந்தர்கள் மதுரையில் இருள் கிழிபடும் போதெல்லாம் இருள் துல்லியம் இழக்கும் போதெல்லாம் நிலையழிகின்றனர். வாழ்விற்கான ஓட்டத்தில் இறுதி ஆற்றல் வரை செலவழிக்கின்றனர். நகருக்குள் இருந்து வெளியேறி மூன்று திசைகளிலும் காவல் காப்பது "கருது கசக்குவதன்" வழியாக கிராமக் காவல்களைப் பிடிப்பது ரயிலில் களவாடுவது என மெல்ல மெல்ல தாதனூரின் பிடி தளரும் போதும் அவர்களின் நம்பிக்கைத் தளரவில்லை. இரண்டு "ஆஜர்களுக்கு" நடுவில் ஆட்டைத் தூக்கி வரும் திறமை இறுதி வரை அவர்களுக்கு கை கொடுக்கிறது. அந்த நினைவின் துயர்களையும் பெருமிதங்களையும் "பட்டசாமி"க்கு கொடுத்தப்படி தன்னை அழிவின்மைக்கு கொடுத்து விடுகிறது தாதனூர்.

கருமையான அங்கதங்கள் செங்கன் என்பவனிடம் தாதனூரே களவு கொடுத்தல் அதன் வழியே அது மதுரை மன்னனிடம் தன் ஊர் பெண் களவு கொடுத்ததை நினைவு மீட்பது பெண் எடுத்து வரச் செல்வது கல்லெறியக் கற்றுக் கொள்வதில் இருந்து காவல்காரனாக களவுக் கொத்துடன் செல்பவனாக நிலையாளாக பெரியாம்பிளையாக ஒருவன் உயர்வது என அந்த சூழலியே வாழ்ந்து எழுந்து வந்த அனுபவத்தை காவல் கோட்டம் அளிக்கிறது.

ஒரு வரலாற்றுப் புனைவாகத் தொடங்கி கால மாற்றத்தால் ஒழுக்க மதிப்பீடுகளின் மாற்றத்தால் வீழ்ந்து போகிறவர்களை சித்தரித்து முடிகிறது காவல் கோட்டம்.

சமூக மாற்றங்களும் முன்னேற்றங்களும் பல்வேறு வரலாற்று விசைகளால் இறுகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்தே வளர்கிறது அல்லது வீழ்கிறது. இந்நாவலை முழுமையாக எடுத்துக் கொள்ளும் போது அந்த மாற்றங்களின் வழியே ஒரு பொதுத்தன்மையை நோக்கிச் செல்லும் போக்கு தெரிகிறது. குடிக்காவல் என ஒன்றைச் சொல்ல முயல்கையில் அது மொத்த மதுரையின் வரலாற்றை அதன் வழியே இந்திய வரலாற்றை அதன் வழியே உலகம் முழுக்க உருவாகியிருந்த காலணியாதிக்கத்தை கண்டு விட முடிகிறது. இந்த பெருந்தரிசனத்திற்கென ஒரு பெருநாவலை வாசிக்கலாம்.

Comments

  1. அன்பு சுரேஷ், ரெட்டிய கெடுத்த வெள்ளி, சாட்டைக்கம்பு வெள்ளி - இவற்றுக்கு விளக்கம் கூற முடியுமா?

    ReplyDelete
  2. காவல் கோட்டத்தின் கதைக்களம் பெரும்பாலும் இரவுகள் தான். நாம் இன்று பயன்படுத்தும் "எண்களால்" ஆன நேரக்கணக்கீடு தாதனூர் கள்ளர்களிடம் கிடையாது. ஆகவே இரவின் விண்மீன் தொகையைக் கொண்டு நேரத்தை கணக்கிடுகின்றனர். சாட்டைக் கம்பு வெள்ளி என்பது அத்தகைய நட்சத்திர தொகையே. ரெட்டிய கெடுத்த வெள்ளி என்பதும் நாட்டாரியலில் பயன்படுத்தப்படும் வழக்காறு தான். விடிவெள்ளிக்கு முன் தோன்றும் விடியலைப் போன்ற தோற்றம் தருவது.

    ReplyDelete
    Replies
    1. விண்மீன் சார்ந்தவை என ஊகிக்க முடிந்தாலும், அவற்றின் முழு விளக்கம் இணையத்தில் தேடி கிடைக்கவில்லை. உங்கள் பதிவில் உள்ள குறிப்பு மட்டுமே கிடைத்தது. விளக்கத்திற்கு நன்றி சுரேஷ். மேலும் பல வட்டார வழக்காறுகள் மற்றும் நுண் தகவல்களை காவல் கோட்டம் வாசிப்பில் தாண்டிச் சென்றுவிட்டாமோ என்று ஒரு ஐயம் இப்போது ஏற்படுகிறது.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024