சில கவிதைகள் - 5

வழியனுப்பல்

எத்தனையோ பேர்

ஏற்கனவே எழுதி சலித்துவிட்டனர்

முழு நிலவு குறித்து

சுழற்சிக்கு ஏற்ற வகையில்

விரிந்து சுருங்கும் அதன் வடிவம்

காதல் ரசமோ சாம்பாரோ

ஒழுகும் வரிகள்

காமத்தின் தவிப்பும்

காத்திருத்தலின் துடிப்பும்

தனிமையின் துயரும்

தன்னொளி கொள்ளா முழுமையும்

என எண்ண எண்ண

எழுந்து வருகின்றன

முழுநிலவின் முகங்கள்

அத்தனைக்கும் மேல் அதுவொரு

துணைக்கோள்

எனும் விளையாட்டுப் பிள்ளைகள்

எத்தனை எழுதியும் இன்னும்

தொடப்படாததாய்

தள்ளி நிற்கிறது ஒரு மூதாதையின் எழுச்சி

ஊறும் அத்தனை சொற்களும்

சென்று விழுகின்றன

அவன் மனத்தில்

அவன் கண்டதென்ன

மண்டையோடா

தேங்காய் சில்லா

புதுப்பாலா

விந்தா

எது எது எது

எதைக் கண்டான் அவன்

எண்ணித் தீரவில்லை நிலவின் ஒளியை

எத்தனை இருந்தும் என்ன

என் நிலவே

உன்னிடம் சொல்ல ஒன்று தான் இருக்கிறது

என்னிடம்

அவசங்கள் நிறைந்து அடைத்துக்கிடந்த மனதை

மெல்ல வருடி நீவி சிக்கெடுத்த

அன்னை வடிவினள் அவள்

அளித்ததை பெற்றுக் கொண்ட பிறகு

மருகி நின்றேன் கொடுக்க ஏதுமற்று

உன்னை காண்பித்து அவளை மலர வைத்தேன்

அது போதும் முழுநிலவே

அவளின் மலர்ந்த முகத்துக்கென

உன்னை துதிக்கிறேன்

அந்நேரம் எழுந்த நிறைவுக்கென

அவள் கண்கள் இவ்வரிகளை காணும்

பேறுக்கென

உன்னை ஏத்துகிறேன்

உன்னொளியில் அவள் முகம் கண்ட

வரத்திற்கென

உன்னை வாழ்த்துகிறேன்

உன்னை அவளென எண்ண வைத்த

நாளுக்கென உன்னை வணங்குகிறேன்

அவளும் உன் வடிவினளே

அவள் போதும்

நீ தேவையில்லை

போய் வா நிலவே

------

ஒற்றை

ஒன்றும் மூன்றும்

ஒற்றைப்படை எண்களே

இரண்டில் நின்று

ஒற்றை என கேலி செய்பவர்

அறிவதில்லை

ஒற்றை தான்

ஆனால் நான்

ஒன்றல்ல

மூன்றென

-------

பெருவெறுப்பு

ஏதோவொரு நினைப்பில் எடுத்துப் பார்க்கிறேன்

என்னுள் திரண்டிருந்தது தொப்புள் அழுக்கு போல

ஒரு பெரிய வெறுப்பு

சொல்லாமல் விடப்பட்ட சினங்கள்

கொள்ளாமல் விடப்பட்ட அன்புகள்

அடக்கப்பட்ட அழகுணர்வு

பகிரப்படாத காமம்

தவறவிட்ட காலங்கள்

தவறாய் எழுந்த காதல்கள்

தனிமையில் எழும் ஆங்காரம்

என்னைவிட்டு இயங்குகிறது இவ்வுலகென்ற பயம்

எழுதுகையில் அருகமர்ந்து ஓரவிழியால் நோக்குபவனின் மீதெழும் வன்மம்

நோக்காதவனின் மீதும் எழும் வன்மம்

முதுமையின் மீதான வெறுப்பு

எளிமையாய் வாழ விழையும் ஏக்கம்

அற்பத்தனங்களின் மீதான கோபம்

நானும் அற்பனோ என்றெண்ணும் போதெழும்

ஆழமறியா பயம்

இத்தனையும் திரண்டு

அவ்வெறுப்பு ஊறியதென எண்ணலாம்

அல்லது

உருளைக்கிழங்கு வறுவலில் உப்பில்லாததே

காரணமென கடந்து செல்லலாம்

தேர்வு நம் விருப்பு தானே

--------
பிள்ளை விழி

நீண்டசாலையொன்றின்

நுனியில் அமர்ந்திருக்கும் மயில்

விழுந்து விடப் போகிறதென

ஒரு குழந்தை தான் பதற்றப்பட வேண்டுமா

வயல்வெளிகளுக்கு சிறையிட்டு நிற்கும்

தொடுவான் மறைக்கும் மரங்கள்

நெருங்கிச் செல்லும் போது

ஒரு குழந்தைக்கு மட்டும் தான்

விலகி வழிவிடுமா

பொட்டல் நடுவில் அநாதையாய் நிற்கும்

ஒரு கிரிக்கெட் ஸ்டம்பிற்காக

நான் கண்ணீர் விட்டால்

என்ன குறைந்துவிடப் போகிறது

தலைகளை மட்டும் வெட்டி

தாளில் ஒட்டி அச்சுறுத்தும் நோக்கில்

சாலையோரங்களில் விரித்து நட்டால்

நானும் தான் மிரண்டு போவேன்

--------

உள்ளிருப்பது

என்னை அறிந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டால்

என்னுள் நிம்மதியே எழும் என்று எண்ணுவது

மனநோயா

ஒரு தட்டின் அன்பு

மறுதட்டின் அயோக்கியத்தனங்களால்

நிகர் செய்யப்படுகிறது என்பது

ஆடையற்ற எண்ணமா

நன்றி கெட்டவன் என்பதன் பொருளென்ன

அகங்காரத்தினால் தான்

அடுத்தவரை நாம் பொருட்படுத்துகிறோம்

என்றால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா

எல்லாவற்றிற்கும் மேல்

இன்றும் நான் தனித்தவனே

என்றெண்ணாதவன்

இவ்வுலகில் உண்டா

யாரும் எனக்கீடில்லை என்று தன்

கருங்கனவுகளில் கற்பனிக்காதவள்

யார் உண்டு

நான் விரும்புகிறேன்

வெறுப்பு என்னுள் உண்டென உணர்வதால்

நான் அன்பு கொள்கிறேன்

அப்படி ஒன்று அவசியமில்லை என்பதால்

உயிர்வெறி உன்னதப்படுத்தப்படும் வரை

நான் உயிர் வாழ ஒரு பொருள் இருக்கிறது

உன்னதத்தை உடைத்தெறியவேணும்

எனச் சொல்லி ஏமாற்றிக் கொள்கிறேன்

இன்னும் வாழ்கிறேன்

நீங்களும் வாழுங்கள்

வாழ்த்துக்கள்

மலர் கொத்துகள்

-------

திருகாணி மனிதர்கள்

சிலரின் திருகாணிகள்

கச்சிதமாய் பொருந்துகின்றன

சில திருகாணிகள் கேட்பது

சில செண்டிமீட்டர் சிரிப்பையோ

சில துளிகள் கண்ணீரோ

சில துளிகள் குருதியோ

சில நஞ்சுப் பொறுத்தல்களோ தானே

கொடுத்துவிட்டுப் போவோமே

என்ன குறைந்துவிடும்

ஒரு மணி

என் மாலையில் கூடியது என்பதன் முன்

கண்ணீரும் குருதியும் நஞ்சும்

பெரிதல்லவன்றேபடுகிறது

உங்களுக்கு?

-------

பெருந்தன்மை

உள்ளூறி நிறையும் நஞ்சை

உமிழ்ந்தறியக் காத்திருக்கின்றன உறவுகள்

மோதியறிய முண்டியடிக்கின்றன நட்புகள்

ஊடியும் கூடியும் அறிய நினைக்கிறது காதல்

எத்தனை வழிகளில் வழிகிறது இந்நஞ்சு

என்னை வென்று நீ அடைவதென்ன

என் முகச்சுருக்கமா

என் உளக்குலைவா

என் கண்ணீரா

நான் அடிபணிவதா

உன் பாதங்களை நக்குவதா

உயர்ந்தவன் நீ என ஒத்துக்கொள்வதா

எது உன்னை நிம்மதி கொள்ளச் செய்கிறது

சொல்

அச்சிரமத்தையும் உனக்கு வைக்காமல்

நீ விரும்புவதைச் செய்கிறேன்

ஏனெனில் நீ நினைப்பதை என்னில் ஆற்ற

என் அனுமதி இல்லாமல் உன்னால் முடியாது

உன் கலக்கத்தைக் காண என்னால் முடியாது

பிழைத்துப் போ

பெருந்தகையே

------

மற்றொருவர்

ஒரு புதிய இளையவள் திரும்பிச் சிரித்த போது

தயங்கிக் குழம்பும் நண்பன்

நினைவில் எழுகிறான்

மற்றொருத்தி சட்டென திரும்பியதும்

அக்காவை பார்க்க வேண்டுமென

அன்று முழுவதும் தோன்றியது

பின்னர் எனக்குத் தெரியும்

எல்லா பெண் முகங்களிலும்

அக்கா கொஞ்சமாக கலந்திருந்தாள்

கனத்த கரமுடைய நண்பனில் உயரமான மாமா

தலையில் முடியற்ற பேருடலரிடம் தாத்தா

சிறிய உதடுடைய தோழியில் அம்மா

ஆனால் நீங்கள் நம்பமாட்டீர்கள்

இவர்களில் நீங்களும் உண்டென

அப்பாவை மட்டும்  காண முடியவில்லை

கண்ணாடி தவிர்த்த பிற இடங்களில்

------

கொல்லப்பட்டவன்

சிறந்த மனிதர் ஒருவரைக் கொல்லும் வாய்ப்பு

உனக்கு கிடைக்கிறதெனில்

நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய்

நண்பன் கேட்கிறான்

நானே கேட்டுக் கொண்டேன் என்பது

அவ்வளவு நாசூக்கல்லவே

அதனால் அவன் மேலு‌ம் கேட்கிறான்

ஏனென்று காரணமும் சொல் என

நான் காந்தி என்றேன்

உன் வாய்ப்பினை

ஒருவன் பறித்துவிட்டான் என்கிறான்

ஏசு என்கிறேன்

பலர் சேர்ந்து பறித்துவிட்டனர்

என பதில் வருகிறது

அப்பா என்கிறேன்

அந்த ஆசை இல்லாதவன்

இங்கு உண்டா என்கிறான்

சலித்து நீயே சொல் என்றேன்

சிறந்தவன் யார் என்றான்

புரிந்ததும் தூரத்தில் இருப்பவன் என்றேன்

அங்கு ஏற்கனவே அவன்

கொல்லப்பட்டிருப்பானே என்றான்

என் பெயரன் காலத்தில்

என் இலக்கை தேர்ந்தெடுக்கிறேன்

அவன் ஏற்கனவே

கொல்லப்பட்டிருப்பான் எனினும் என்றேன்

------

தீராப்பெருநகை

சலனமற்றோடும் நதி ஒன்றை

ஓங்கி அறைகிறது ஒரு குழந்தை

தெறிக்கும் துளிகளென்றான வாழ்வில்

ஒற்றைத் துளி நானென உணர்ந்து

ததும்பிக் குழம்புகிறேன்

நில்லாப் பெருங்கடலில்

எம்பிக் குதிக்கும் மீனென

இங்கு வந்து குதித்தேனா

கோரைகளின் குத்திக் கிழிக்கும் நுனிகளென

தன்னையே தான் கிழித்துத் துடிக்கிறது மனது

எதன் மறுதுண்டு நான்

எங்கு காண்பேன் என் இணைத்துண்டை

இணையும் ஒவ்வொரு துண்டிலும்

இதுவல்ல இதுவல்ல என

துடித்தழுவதே என் அன்றாடமா

தனியா விடாய ஒன்று

துளைகாணா எண்ணம் ஒன்று

துணை தேடா துயர் ஒன்று

-----

Comments

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024