Tuesday, 8 August 2017

மையல் - சிறுகதை

"ச்சூப்ரைச்சர்" என்று மெல்ல மாலினி சொல்வது கனவுக்குள் கேட்டது. உடல் மெல்ல உசுப்பப்பட்ட போது மீண்டும் அதே குரல் "ச்சூப்ரைச்சர்". இம்முறை மேலு‌ம் நெருக்கமாக. திறந்து கிடந்த அறைக்கதவில் கால் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த என் கனுக்கால்களை மாலினியின் கைகள் அசைத்துக் கொண்டிருந்தன. திடுக்கிட்டுப் போய் எழுந்தமர்ந்தேன். உடல் இந்த உலகத்துக்கு வர சற்று நேரம் பிடித்தது.

விடியும் போது அவ்வளவு அழகான பெண்ணை நெருக்கத்தில் பார்ப்பது அபாயமானதே. மாலினி சிரித்துக் கொண்டிருந்தாள். புலன்கள் மேல் எண்ணங்கள் படிந்து மெல்ல மெல்ல மணிகண்டனாக அதனினும் மெல்ல ஒரு நிறுவன ஊழியனாக மாறிக் கொண்டிருந்தேன். நிறுவனங்கள் கொடுக்கும் அறைகளில் தங்குவது எந்நேரமும் அவ்விடத்தோடு தொடர்புடையவன் என்ற எண்ணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மாலினியையும் அப்படி தொடர்புபடுத்தித் தான் புரிந்து கொண்டிருக்கிறேனா? அவள் விளையாட்டாக அழைக்கும் "ச்சூப்ரைச்சரில்" கூட ஏதோ நினைவூட்டல் உள்ளதா? அவள் என்னுடன் பழகுவதே அந்த நினைவூட்டலுக்கான சலுகைகளைப் பெறத்தானா? மாலினியின் முகம் சலிப்படைந்தது. அச்சலிப்பினை போக்க கேட்கப்பட வேண்டிய கேள்விகள் என் வாயில் வர நான் இன்னும் தோய வேண்டும். குழிபறித்துக் கொண்டு கீழிறங்க வேண்டும். அவள் நெருக்கத்துக்கென அதைச் செய்யலாம் தவறே கிடையாது.

முகத்தில் ஆச்சரியத்தைக் கொண்டு வந்த பிறகு "ஏய்...என்ன..." என குழப்பமாக நிறுத்தி "நீ...." என இழுத்து பின்னர் முகம் மலர்ந்து "இங்க ஏம்ப்பா வந்த" என குழைந்து இழுத்தேன். மாலினி மேலும் பிரகாசம் கொண்டுவிட்டாள். குளித்தவுடன் உடை மாற்றி அப்படியே வந்திருக்கிறாள். தோள்களின் ஈரத்தை சுடிதார் காட்டியது. என் அறை ஜன்னலின் வழியே அடித்த இளவெயில் அவள் உதட்டுக்கும் நாசிக்கும் இடையேயும் கழுத்திலும் இலைநுனிச் சொட்டுகள் போல வியர்க்க வைத்திருந்தது.

"ஓய் இன்னா..." என அவள் அதட்டிய போது மீண்டு வந்தேன்.

"இன்னிக்கு எனக்கு ஆஂப்" என்றாள்.

"அதுக்கு" என்றேன் மெலிதாக சிரித்தபடி.

"ஒன்னும் இல்ல" என்றபடியே வெட்டித்திரும்ப முனைந்தாள். அவள் கைகளை பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

"மாலி" என்றேன். திரும்பி மட்டும் நின்றாள்.

"சரி எங்க போகலாம்" என்றேன்.

சட்டென கண்ணில் மின்னிய ஆர்வத்தை அணைத்துக் கொண்டு "நா அத கேக்க ஒன்னும் வரல" என்றாள் குழந்தைத்தனமாக. மனதில் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டேன்.

தன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து "நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது" சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள்.

"பின்ன எதுக்கு வந்தியாம்" என்றேன்.

"சும்மா வந்தேன்" என்றாள் இப்போது இளம் பெண் போல.

மாலினி தயவுசெய்து நிதர்சனத்தை புரிந்து கொள். நீ முப்பதை நெருங்கிக் கொண்டிருப்பவள். ஏற்கனவே ஒருவனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவள். இப்போது உன் குடும்பத்துக்கு சோறு போடவே இங்கு வந்துள்ளாய். இந்த அதீத நாடகங்களை எதற்காக யாருக்காக புனைந்து நடிக்கிறாய் என்று இம்முறையும் என் மனதிடமே அவளிடம் கேட்பது போல் கேட்டுக் கொண்டேன்.

"சும்மா பைக்ல அவுட்டிங் போலாம்" என்றேன்.

ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு வெளியேறினாள். மாலினி இரண்டு வருடங்களாக அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்கிறாள். நான் ஒரு வருடத்துக்கு முன் அந்த நகரில் இருக்கும் ஸ்டோர்களுக்கு மேற்பார்வையாளனாக நியமிக்கப்பட்டேன். ஒரே ஊர் என்பதால் மாலினியிடம் இயல்பாகவே நன்றாக பழகிவிட்டேன்.

பள்ளி நாட்களில் நீல நிற தாவணி அணிந்தபடி எங்கள் வீட்டை கடந்து செல்லும் போது அவளைப் பார்த்திருக்கிறேன். அவளுடைய அப்பா கடை நடத்தி வந்தார். நான் கல்லூரிக்கென விடுதியில் தங்கியிருந்த போது விடுமுறைக்கு வரும் போது அம்மா ஊரில் நடந்தவற்றை சொல்லும். மாலினி பிரசன்னாவை காதலித்ததும் எனக்கு அப்போது தான் தெரிந்தது. பிரசன்னா ஏதோவொரு வகையில் எங்களுக்கு தூரத்து உறவு. அந்த ஊர் முழுக்கவே எங்களுக்கு சொந்தக்காரர்கள் தான். மாலினியின் தாத்தாவிடம் பிரசன்னாவின் அப்பா வெகுநாட்களாக வேலை பார்த்திருக்கிறார். ஆனால் மகன்கள் யாரையும் அவர் வேலை செய்யும் பக்கம் வரவிட்டதில்லை. பிரசன்னாவையும் பார்த்திருக்கிறேன். ஒரு வித தாழ்வான பாவனை அவனிடம் எப்போதுமே இருக்கும். என்னினும் மூத்தவன் என்றாலும் அப்படி பேசமாட்டான்.ஆனால் அவன் தொழிற்பயிற்சி முடித்ததும் என்ன நடந்ததோ ஆளே மாறிவிட்டான் என அம்மா அங்கலாய்த்தது.

அவன் குறித்து அம்மா சொன்ன அனைத்தும் எனக்குள் ஒவ்வாமையை உருவாக்கியது. நேரில் ஒருமுறை பார்த்த போது அவனில் வெளிப்படும் பணிவு முற்றிலும் மறைந்திருந்தது.

"என்னடா பண்ற இப்போ" என்றான்.

அவனுக்கு நான் உடனடியாக அளிக்கும் பதில் என்னை தாழ்த்தி நிறுத்தும் என்ற நிதானம் கோபப்படுவதற்கு முன்பே வந்துவிட்டதால் அமைதியாக இருந்தேன். அவனை எப்படியேனும் தாழ்த்திவிட வேண்டுமென மனம் பரபரத்தது. அந்த எண்ணமே முகத்தில் ஒரு செயற்கையான மிடுக்கை வரவழைத்தது. குரலை தாழ்த்திக் கொண்டு "ம்?" என்றேன்.

அவன் மொத்த தன்னம்பிக்கையும் தளர்ந்து போய் ஒரு நொடி தன்வயம் இழப்பதைக் கண்டேன். மீண்டும் அதே கேள்வியை அவன் கேட்கக்கூடாது என எண்ணினேன்.

"அப்பாம்மால்லாம் நல்லாருக்காங்களா" என்றான்.

"ம்ம்" என்றேன் சற்றே பல் தெரியாதவாறு உதட்டை விரித்தபடி. ஒரு நொடி கூட நிற்காமல் நகர்ந்து சென்றான். மாலினியை அவன் காதலித்து கைவிட்டதாக அம்மா சொன்னது அவளை பார்த்த நொடி எப்படி ஞாபகம் வந்தது என வியந்தேன். மிக ஆழத்தில் அந்த தகவல் என்னுள் இருந்து கொண்டிருந்ததா? அதன்பிறகே அவள் என்னுடன் நெருங்கிப் பழகுவதற்கு இந்த தகவல் தெரிந்ததால் என்னுள் உருவாகியிருந்த நெகிழ்வு அல்லது எதிர்பார்ப்பே காரணம்  என உணர்ந்து கொண்டேன். மாலினி அதைத்தவிர அனைத்தையும் என்னிடம் சொன்னாள். தன்னை இன்னொருத்தியாக என்னிடம் கட்டமைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதை மறைக்க முயன்றதே இயல்பாக அதைச் சொல்ல வைத்தது.

"உனக்குத் தெரியுந்தான மணி?" என்றுதான் முதலில் கேட்டாள்.

"என்ன தெரியுமா?" என்றேன்.

"பிரசன்னா" என்றாள். முதல் முறையாக ஒரு காதல் தோல்வி கதையை கேட்கும் மகிழ்ச்சி என்னுள் படர்ந்தது.

"அவனுக்கு என்ன" என்றேன். அந்த உணவு விடுதியில் பெரும்பாலும் ஆட்கள் இல்லை.

"அவந்தான் என்ட்ட சொன்னான் என் மேல ஆசயாயிருக்குன்னு" என்று அவள் சொன்னபோது சங்கடமான ஒரு உணர்வு மனதில் துளிர்த்தது. அதைச் சொல்லும் போது அவள் கண்களில் வந்து சென்ற ஒளி அச்சுறுத்துவதாய் இருந்தது.

"நா முடியாதுன்னு தான் சொன்னேன். அவந்தான் என்னென்னமோ சொல்லி என்ன குழப்பினான். எனக்கும் அவன பிடிச்சு தான் இருந்தது" என்று மாலினி சொல்லிய போது சட்டென ஒரு தனிமையுணர்வு தாக்கியது. என்னை நிமிர்ந்து பார்த்ததும் அவள் விழிகள் கூர்மை கொண்டன. மிக நிதானமாக சொல்லெடுக்கத் தொடங்கிவிட்டாள். நான் ஒரு ஆங்காரத்தை என்னுள் உணர்ந்தேன். என்னிடம் அவள் சொல்லாமல் தவிர்க்க நினைப்பது எது? இந்த தோல்விக்குப் பின்னும் அவள் எதை பூட்டி வைத்துக் கொள்ள விழைகிறாள்? இல்லை என்னை துன்புறுத்தும் என எண்ணுகிறாளா? எது என்னை துன்புறுத்தும்?

"கொஞ்ச கொஞ்சமா என்னைய அவாய்ட் பண்ண ஆரம்பிச்சான்" என அவள் சொன்னபோதே அக்கதைக்கு நான் மீண்டு வந்தேன்.

"அவனோட ஸ்டேட்டஸ் எங்கையோ போயிட்டு" என்று அவள் சொன்னது என்னை அவமானப்படுத்துவது போல் இருந்தது. அதன்பிறகு அக்கதையில் நான் ஆர்வம் கொள்ளவில்லை. தன் அந்தரங்கம் தெரிந்த ஒருவன் அருகில் இருப்பது அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அவளுடன் வெளியே சுற்றத் தொடங்கியது அதன்பிறகு தான். அவளுடைய "பெண்மைக்கு" அவ்வப்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து சொல்வாள். எனக்கு அது ஒவ்வாமையையே கொடுக்கும்.

மாலினி நன்றாகவே தயாராகி விட்டிருந்தாள். இருபுறமும் பொட்டல் விரியும் தூரம் வரை ஊரை விட்டு வந்திருந்தோம். இப்போதெல்லாம் அவள் பிரசன்னா குறித்து பேசுவதே இல்லை. அவன் குறித்த அவளது எண்ணங்கள் மட்டுமே நான் உள்நுழைவதற்கான இடைவெளி.

ஒரு ரோட்டோர கடையில் வண்டியை நிறுத்தியபின் "அதுக்கப்புறம் நீ என்ன பண்ணினே?" என ஏதோ அப்போது விட்ட பேச்சு போல கேட்டேன்.

அவளும் எதார்த்தமாக சொல்லத் தொடங்கினாள்.

"அவனோட க்ளோஸா இருக்க ட்ரை பண்ணினேன் மணி. ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. அவன் வெலக ஆரம்பிச்சுட்டான்" என்றாள்.

"ஒன்னுமே வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்த பெறகு தான் நேரா அவங்க வீட்டுக்கே போயிட்டேன்" என்றாள். அதை ஒரு டீயில் பிஸ்கட் நனைத்தபடி அவள் சொன்னது என் மனதை அதிரச் செய்தது.

"அவன் ஏதோ ப்ராஜக்ட் விஷயமா பூனே போயிருந்தான். அவங்க அம்மா அப்பாட்ட விஷயத்தை சொன்னேன். அவங்க திருச்சில இருந்தாங்க. பிரசன்னா வர்ற வரைக்கும் இங்க தான் இருப்பேன்னு சொல்லிட்டேன். அவன்ட்டயும் பேச முடியல. அந்த ஒரு வாரம் உண்மையிலேயே நரகம் தான் மணி. போலீஸ் கேஸ்னு போக பயப்பட்ற பேமிலி. என்ன அசிங்க அசிங்கமா திட்டினாங்க. பிரசன்னாவோட அப்பா ஒரு நாள் நைட் என் பக்கத்துல வந்து படுத்து ப்ரெஸ்ட்ட தடவினாரு. அதையும் வெளில சொல்ல முடியல. பிரசன்னா ஊர்லேர்ந்து வந்ததுமே என்ன ஓங்கி அறஞ்சான். நான் ஒன்னுமே பேசல வந்துட்டேன்" என்றாள்.

நான் எச்சில் கூட்டி விழுங்கினேன். அவள் இவற்றை இவ்வளவு சாதாரணமாக சொல்வாள் என நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு சாதாரணமாக சொல்லக்கூடியது உண்மையாகவே இருக்க இயலும். பிரசன்னாவின் மீது எனக்கு வந்தது கோபமா பொறாமையா என்று தெரியவில்லை. மாலினி அதன்பிறகு என்னிடம் விளையாட்டுத்தனமாக பேசுவதில்லை. அவளை காதலிக்கிறோமோ என்று கூட தோன்றியது.

அடுத்தவாரம் ஊருக்கு வந்த போது ரயிலில் பிரசன்னாவைப் பார்த்தேன்.

"தம்பி நல்லாருக்கியாப்பா" என்று என் தோளை தொட்டான். அவன் முகத்தில் எதிர்ப்புணர்வோ பதற்றமோ வெறுப்போ இல்லை. மிகுந்த நிதானத்துடன் இருந்தான்.

"வீட்ல எல்லாம் நல்லாருக்காங்களா" என்றான்.

புன்னகைத்தபடியே தலையசைத்தேன். தூரத்தில் பட்டுப்புடவை அணிந்திருந்த ஒரு அழகான பெண்ணை சுட்டிக்காட்டி அவள் தன் மனைவியென்றும் துணை ஆட்சியரின் மகள் என்றும் சொல்லிவிட்டு அவளை நோக்கிச் சென்றான்.

நான் மாலினியை அழைத்து அவளை தீவிரமாக காதலிப்பதாகச் சொன்னேன்.

No comments:

Post a Comment