லக்ஷ்மி ஒரு பதிவு
லக்ஷ்மி என்ற குறும்படம் பத்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
இரு வகையான எதிர்வினைகளை அத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது.
பெண் தன் உடலின் மலர்வினை கண்டு கொள்ளும் தருணத்தை சுட்டுவதாக அத்திரைப்படத்தை ஏற்பவர்கள் சொல்கின்றனர். மறுப்பவர்களில் கலாச்சார காரணம் சொல்பவர்கள் மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் தங்கள் வீட்டு அடுப்படியில் தமிழ் கலாச்சாரமும் தமிழ் பண்பாடும் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிற மூடர்கள். மறுப்பவர்களில் மற்றொரு தரப்பையே நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உருவாக்கப்பட்ட உறுத்தும் செயற்கைத்தனம் ஒன்று இத்திரைப்படத்தில் உள்ளது என பலர் அதை மறுக்கின்றனர். அந்த செயற்கைத்தனத்தின் உச்சம் பின்னணியில் ஒலிக்கும் பாரதியின் வரிகள்.
நான் இந்த இரண்டு தரப்புகளிடமிருந்தும் மெல்லிய வேறுபாட்டினை ஏற்படுத்திக் கொள்கிறேன். திரைப்படத்தின் நுணுக்கங்களை தொட்டெடுக்கும் அளவுக்கு ஆழமான சினிமா ரசிகனோ சினிமா குறித்து வாசித்தவனோ அல்ல நான். என் ஒரே தகுதி சிறு வயது முதல் படம் பார்க்கிறேன் என்பது மட்டுமே. அதனால் சமூகத்தின் பொது ரசனையில் சென்று சேர்க்கக்கூடிய சில ரசனைகள் எனக்கும் உருவாகியிருக்கும் அல்லவா? அந்த ரசனையை துணைக்கு வைத்துக் கொண்டு பொதுவாக கலையாக்கம் என நான் நம்புகிறவற்றை மனதில் கொண்டு இதை எழுதுகிறேன்.
எல்லாக் கலைகளையும் ஒரு பொதுவரையறைக்குள் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன். சமூக விழுமியங்கள்(நீதி சமத்துவம் வாய்மை போன்றவை) என்பவற்றை மனித குலம் பல்லாயிரம் வருடங்களாக திரட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைகளைக்கு கடத்திக் கொண்டே இருக்கிறது. சடங்காக மதமாக கல்வியாக ஆசாரங்களாக நம்மிடம் இந்த விழுமியங்கள் வந்து சேர்கின்றன. நாமும் நம் வாழ்வின் தொன்னூறு சதவீதத்தை இதற்குள் தான் வாழ்கிறோம். புரட்சி மாற்றம் போன்றவை எல்லாம் அவரவர்களுக்கு "கட்டுப்படியாவதை" பொறுத்தது. அவை பெரும்பாலும் கட்டுப்படியாவதில்லை. கலை (ஏறத்தாழ எல்லா கலைகளையும்) விழுமியங்களால் கட்டப்பட்ட இந்த வாழ்வின் மீதான விமர்சனமே. அதாவது முன்வைக்கப்படும் விழுமியத்தினும் மேலான அல்லது இணையான மாற்றாக கலை எழும் போது மட்டுமே அது அர்த்தமுடையதாகிறது. கலையின் நேர்மை அது தனக்குத்தானே உருவாக்கிக் கொள்வது. கலையில் தோய முடியாத யாரும் அதிகாரத்தைக் கொண்டு அதற்குள் அது வரக்கூடாது இது வரக்கூடாது என்று கட்டுப்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வதென்பது அச்சமூகத்தின் பண்பாட்டுக் கருவறையை அறுப்பதற்குச் சமம். ஆனால் கலையின் உள்ளாக ஒரு படைப்பு நேர்மை செயல்பட வேண்டும். இங்கு "நேர்மை" என நான் சொல்வது வழக்கமாக பயன்படுத்தப்படும் அர்த்தத்தில் அல்ல. ஒரு இலக்கியப் பிரதியில் இசையில் திரைப்படத்தில் தோய முடிகிறவர்களுக்கு நான் சொல்லும் நேர்மையின் அர்த்தம் விளங்கும் என எண்ணுகிறேன். வணிகத்
தன்மை கொண்டவற்றையும் அது இல்லாதவற்றையும் எளிதாக பிரித்துவிட முடியும். ஆனால் படைப்பு நேர்மை உடையவற்றையும் அது இல்லாதவற்றையும் பிரித்துப் பார்ப்பது கடினமானது. அவ்வகையில் இக்குறும்படத்தில் படைப்பு நேர்மை செயல்படவில்லை என்றே எண்ணுகிறேன்.
கலையூடகம் சமூகம் பேச அஞ்சும் விலகும் வெறுக்கும் விஷயங்களை பேசுவதில் தவறே கிடையாது. கலை அதற்கென உத்தேசிக்கப்பட்டதே. ஆனால் அப்படிப்பட்டவற்றை தங்கள் ஊடகத்தின் வாயிலாக பேச விரும்புகிறவர்கள் வெகுஜனத் தன்மை கொண்டவர்களைவிட நேர்மையானவர்களாக சப்பைகட்டு கட்டாதவர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இக்குறும்படத்தில் அதற்கான நிழல் கூட தெரியவில்லை.
பெண்ணியம் பண்பாட்டுக் காவல் என இரண்டு ஆயுதத்தை தூக்கிக் கொண்டு வருகிறவர்களை நான் தவிர்த்து விடுகிறேன். அந்தக் கண்ணாடிகளை அணியாதவர்கள் சிந்திக்க மட்டும் சில உண்டு.
இத்திரைப்படத்தின் காட்சிப்படுத்தல்கள் சுவாரஸ்யமானவை. இப்படத்தை பார்த்தவர்களில் தொன்னூறு சதவீதத்தினர் முதல் இருபது நொடிகளுக்கு உள்ளாகவே படத்துக்குள் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். அலுப்பேற்படுத்தும் சித்தரிப்புகள் ஏறக்குறைய இல்லை. நாயகியின் வாழ்வு ஒரே மாதிரியாகச் செல்வதாக சொல்லும் காட்சிகளில் கூட அந்த அலுப்பு தட்டவில்லை. மகன் அருகில் உறங்கும் போது புணர்வதெல்லாம் ஒரு சிறந்த ரசிகனுக்கு எந்த அதிர்ச்சியையும் உருவாக்காது. அவன் இவற்றையெல்லாம் கடந்தவனாகவே இருப்பான். வாழ்வின் சலிப்பில் அல்லது அபத்தத்தில் இருந்து மீள அவள் விரும்புகிறாள் என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாம். வாழ்வு அளிக்கும் சலிப்பு பெண்களுக்கான ஒன்று மட்டும் அல்ல.
அவள் இன்னொரு ஆணின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுக்கும் தருணம் தான் இத்திரைப்படத்தை போலியானதாக மாற்றுகிறது. அந்த ஆணின் பாத்திர வார்ப்பும் அப்படியே. அவள் தன் எல்லைகளை மௌனமாக உடைக்க விரும்புவதை ஒன்று அப்பட்டமாக செய்யலாம் அல்லது அது ஒரு விபத்தென நிகழலாம். இந்த இடத்தில் தெளிவினை ஏற்படுத்திக் கொள்ளாததே இத்திரைப்படத்தை வெகுஜனத் தளத்திற்குள்ளும் நிற்க விடாமல் "மீறிச்செல்லவும்" விடாமல் தடுத்துவிடுகிறது. வலிந்து உருவாக்கப்பட்ட போலித்தனத்தை திணிக்கிறது.
பெண் மீறுவதுதான் கதை என்றால் அந்த மீறலில் கள்ளத்தனத்தை பொதிய வேண்டுமா என்ன? இல்லை சலிப்பேற்படுத்தும் எதார்த்தத்தில் இருந்து எழுந்து பறப்பது தான் நோக்கமெனில் பறத்தல் எனும் செயல் மனித வாழ்வை காலுக்கு கீழே கொண்டுவரும் துணிச்சலை இப்படம் கொண்டிருந்திருக்க வேண்டும். இவையிரண்டும் இல்லாமல் ஒரு அரௌசல் காட்சியின் பின்னணியில் அபத்தமாக ஒலிக்கும் பாரதியின் வரிகள் இப்படத்திற்கு எந்த மதிப்பையும் அளிப்பதில் இருந்து தடுக்கிறது.
ஆண் பெண் கலைஞன் என அத்தனை உருவகங்களும் மெல்ல மெல்ல உருவாகி வந்தவை மட்டுமே. தன் வசதிக்கு ஏற்றார் போல இந்த உருவகங்கள் மீது விமர்சனம் வைக்க கலைஞனுக்கு உரிமை உண்டு. ஆனால் அப்படி வைக்கப்படும் விமர்சனம் தன்னளவில் நேர்மையானதா என்பதை ஒரு கலைஞன் கேட்டுக் கொள்வதே நல்லது.
சமீபத்தில் the wolf of wall street படம் பார்த்தேன். அப்படத்தில் என்னை வியக்க வைத்தது அதன் படைப்பு நேர்மையே. இயக்குநர் ஒரு திறன்வாய்ந்த பணக்காரன் "சீரழிவதை" சித்தரிக்க விரும்பவில்லை. மாறாக ஒரு தனிமனிதனின் ஊக்கம் அவனை எந்த இடத்திற்கு இழுத்துச் செல்லும் என்பதையும் அவன் வென்றெழுந்து தோற்று விழும் எல்லா தருணங்களிலும் அவனை விட்டுச் செல்லாதது எது என்பதை மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பார். அதில் வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சி கூட அநாவசியமாகத் தோன்றாது.
அதே கேள்வியை இக்குறும்படத்தின் மீதும் கேட்டுப் பார்ப்பது நலம் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தை நான் மறுப்பதற்கு காரணம் இப்படத்தின் படைப்பு நேர்மையின்மை தான்.
அருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி நண்பரே