நறுமணம் - கதை
குளிக்கச் சென்றிருக்கிறாள் போல. மெத்தையில் வீடு திரும்பியபோது அணிந்திருந்த அதே சுடிதாருடன் தூங்கியிருக்கிறாள் என்பது மெத்தைக்கு கீழே கிடக்கும் காலணிகளால் தெரிகிறது. அவளது காலணிகள் ஓரிடத்தில் நின்று கழற்ற வேண்டியவை. அவளுக்கு நான் தான் அதை வாங்கிக் கொடுத்திருந்தேன்.
"என்ன இம்ச பண்றதுல உனக்கு என்னடா அப்படி சந்தோஷம்" என குறுஞ்செய்தியிட்டு அந்த செருப்பையும் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தாள். நேரில் பேசுவதை விட அனுவின் எழுத்து மொழி அபாரமான வாஞ்சையும் பரிவும் உடையது.
"அப்புனு சாரிடா உன் ரிங்க அட்டெண்ட் பண்ண முடில. நா பதினஞ்சு நிமிஷத்துல ரெடியாய்டுவேண்டா குட்டிப்புள்ள நீ வந்துடு என்ன?" என காலை எழுந்ததும் அலைபேசி மென் சத்தமிட்டது. விடிகாலையில் பரிசுத்தமான மௌனத்தில் தென்னை ஓலைகளிலிருந்து மரத்தரையில் உதிரும் மழைத்துளிகளின் ஒலியைக் கேட்டுப் படுத்திருந்தேன். துணி கிழிபடும் ஒலியில் ஒரு அழுகையைக் கேட்டேன். நான் தான் அழுகிறேன் என்பதை சற்று நேரம் கழித்தே ஒரு திடுக்கிடலாக உணர்ந்தேன். நெஞ்சு நடுங்கியதால் அழுகை மேலும் பெருகியது. செருமல்களை கட்டுப்படுத்தியவாறு அலைபேசியுடன் ஓடி அந்த ஒலியை பதிந்து கொண்டேன்.
"ஹரி நீ ரொம்ப போலட் அண்ட் ஸ்டபர்னு நெனச்சேன்" என அனு முதன்முறையாக எனக்கு செய்தி அனுப்பியிருந்தாள். அவள் என்னை ஒருமையில் அழைப்பது ஒரு மாதம் கூட பார்க்காத ஒரு நிமிடம் கூட தொடர்ச்சியாக உரையாடாத ஒருத்தி என் குணத்தை கணிப்பது அதுவும் சரியாக கணிப்பது எல்லாம் சேர்த்து என்னை கோபமுறச் செய்தது. நான் பதில் அனுப்பவில்லை. மறுநாள் என்னைக் கண்டு அவள் நடுக்குற வேண்டும் என விழைந்தேன். எதிர்தரப்பில் இருப்பவர்கள் எம்பித் தொடக்கூடிய எல்லை ஒன்று நம்மில் உண்டு. அதற்கப்பால் சென்றுவிட்டால் எத்தகைய உறுதி உடையவரும் ஆடித்தான் போவார்கள். அப்படி அப்பால் போய் நிற்பது எனக்கு எளிதானதாகவே இருந்திருக்கிறது. ஏற்புணர்ச்சியே இல்லாத முகத்துடன் ஒரு வறண்ட புன்னகையை அவளுக்கு அளித்தேன்.
விழிகள் விரிய முகம் புன்னகையில் மலர என்னைக் கடந்தபடியே "ஷேரிட்ல சாங் அனுப்ப சொன்னா ரெக்காடிங்ஸ் எல்லாம் சேத்து அனுப்புறதா?" என்று சொன்னாள். பின்னர் பலமுறை அதை யோசித்திருக்கிறேன். அந்த முகமன்றி அவ்வார்த்தைகளன்றி கடந்து சென்றபடியே சொல்லும் பாவனையன்றி அனு அதை வேறெப்படி சொல்லி இருந்தாலும் நான் அவளை வெறுத்திருப்பேன். வேறெப்படியுமாக அந்த தருணத்தை மாற்றாதது எது? மழைத்துளிகள் சொட்டியதை பதிந்த போது என் குரலின் மென் விசும்பலும் பதிவாகி இருந்திருக்கிறது. நான் புன்னகைத்தேன். ஒருவேளை சத்தமில்லாமல் சிரிக்கப் பழகியபின் நான் உதிர்த்த உண்மையான முதல் புன்னகையாக அது இருந்திருக்கக்கூடும். இல்லையெனில் புன்னகை என்ற சொல்லை அதன் அர்த்தங்களுடன் நான் அறிந்த பிறகு என்னில் எழுந்த முதலும் கடைசியுமான ஒரேயொரு புன்னகையாக அது இருந்திருக்கக்கூடும்.
அனுவும் புன்னகைத்தாள். எந்த இரண்டாவது அப்படி மாற்றிலாமல் பொருந்த முடியுமா? ஒன்றென்றாகி ஒன்றுமில்லாமலாக முடியுமா? அப்படி பொருந்திப் போகும் கணம் காலத்திற்கு எப்படி பொருள்படும்? காலமும் இருந்திருக்குமா அக்கணத்தில்? அக்கணத்தினை அள்ளிப் பிடிக்கத்தான் இத்தனை ஓட்டமா? அந்த கணத்திலும் எங்களைச் சூழ்ந்து சில வெற்று நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும் தானே. சிலவா? அக்கணத்தில் அதைத்தவிர பொருளுள்ள வேறென்ன நிகழ்ந்திருக்கும் இவ்வுலகில்? எங்கோ எவனோ யாரையோ சுட்டிருப்பான். ஏதாவது ஒரு விஞ்ஞானி எதையாவது கண்டுபிடித்திருப்பான். ஒரு கவிஞன் தன்னுடைய சிறந்த வரியை எழுதியிருப்பான். யாரோ யாரையோ முத்தமிட்டிருப்பார்கள். இவையெல்லாம் முக்கியமா என்ன? பொருந்திப் போதலை விட பெருநிகழ்வு வேறென்ன இருக்க முடியும் இங்கு? உடல்களால் முயங்கிப் பொருந்த முடியுமா? எண்ணங்களால்? புன்னகையால் முடிந்திருந்திருக்கிறது.
அதன்பின் அவள் என்னிடம் வேறெப்படியும் பேசவில்லை. கடந்த காலம் என எனக்கு ஒன்று இருந்திருக்கும் என்று அவள் எண்ணியதாகவே நினைவில் இல்லை. அப்புன்னகையின் வழியே என் இறந்த காலங்களை துடைத்து எறிந்துவிட்டவளாகவே அவள் என்னை நெருங்கினாள்.
"அப்பும்மா எந்திரிடா" என மறுநாளே அவள் செய்தி அனுப்புவாள் என நான் எண்ணியிருக்கவில்லை. ஒரு மாதிரி வயிற்றைப் பிசைவது போல இருந்தது. அழுகை வேறு வந்துவிட்டது. புறங்கையை பற்களால் கடித்துக் கொண்டேன்.
"ம்" என்று மட்டும் பதில் அனுப்பினேன்.
"அழாதடா கண்ணா" என்று பதில்.
அப்படியே அலைபேசித்திரையை முத்தமிட்டேன். ஆனால் அச்சொற்களை அனுவை எண்ணிக் கொள்ள மனம் தயங்கியது. என்னிடம் எதுவுமே சரியாக இல்லை எனப் புலம்பியது. பற்பசையை எடுக்கக்கூட கை பதற்றம் கொண்டு நடுங்கியது. முகத்தில் உரைக்கும் அளவுக்கு வெயிலடித்தும் உடல் வெடவெடத்தது.
"அழாதடா கண்ணா".
குளியறையில் மீண்டும் குறுகி அமர்ந்துவிட்டேன். வெகுநேரம் வாய்பொத்தி அழுதேன். ஏனென்று கேள்விகளற்ற அழுகை. அனுவின் கேசமும் விழிகளும் சிறு உதடுகளும் நினைவில் தோன்றிய போது மேலும் அழுகை பெருகியது. அழுகை ஓய்ந்த போது இன்னும் அழ வேண்டும் என்ற உந்துதல். அழ முடியாததன் ஆற்றாமை. அழுததை நினைத்து வெட்கவுணர்வு. அன்று உடை தரிக்கப் பிடிக்கவில்லை. அவ்வுடையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவ்வறையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. என் வேலை குடும்பம் எதையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை. கோபம் வந்தது. பக்கத்தில் இருக்கும் துணிக்கடைக்கு ஓடிப்போய் புது உடைகள் வாங்கி வந்தேன். அதை அணிந்த போது மீண்டும் ஆங்காரம் பொங்கியது. அதை கிழித்து வீசினேன். மீண்டும் பழைய உடைகளை அணிந்து கொண்டு பழைய நானாகிப் போனேன்.
"செல்லம்" என மீண்டுமொரு செய்தி.
"அனு ஏன் இப்படி என்ட்ட பேசுற"
"எப்படி?"
"உனக்கே தெரியும்"
"வேற எப்படி பேசுறதாம்?"
நான் யோசித்தேன்.
"வேறெப்படி பேசுறது என் தங்கத்துகிட்ட. என்னோட குட்டிப்பூனக்குட்டி. என் ராஜா. அப்புகுட்டி"
நான் சிலைத்துவிட்டேன். மீண்டும் கைகள் நடுங்கின.
"டேய் அப்பு என்ன உனக்கு பிடிக்காதா?"
நான் எச்சில் விழுங்கினேன்.
"சொல்லுடா"
"பிடிக்கும்"
"பின்ன என்ன?"
"பின்ன என்னன்னா?"
"சரிடா நானே சொல்லித் தொலைக்கிறேன். நீ யோக்கியமாவே இருந்துக்கோ. ஐ நீட் யூ"
"அனு"
"ம்ம்ம்ம்?"
"எனக்கு ஒரு முத்தம் தருவியா?"
"அய்யோ என் செல்லத்துக்கு உடம்பு பூரா முத்தா"
அலைபேசியில் இவ்வளவு பேசிய பின்னும் அதே புன்னகையுடன் தான் அனு என்னிடம் நேரில் பேசினாள். நான் அவளுக்கு உரிமையானவன் அவளை மீற முடியாதவன் என்ற பிம்பத்தை எங்கும் உருவாக்கினாள். தூரத்தில் இருக்கும் போது விரல் சுண்டியோ பெயர் சொல்லியோ என்னை அழைப்பாள். நானும் அவள் உருவாக்கும் உலகில் சந்தோஷமாக வலம்வரத் தொடங்கினேன். ஆனால் நான் சில நாட்களிலேயே விலகிவிட்டேன் என்பதை "அப்பும்மா இந்த வாரம் நம்ம ஊருக்குப் போறோம்" என்று அவள் அழைத்தபோது மனம் எரிச்சல் அடைந்த போது உணர்ந்தேன். அவள் வீடு கிராமத்தின் திட்டவட்டமோ நகரின் தெளிவோ இல்லாமல் இருந்தது. என்னை எங்கு நிறுத்த வேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. மகள் ஒரு ஆணை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதை அவர்களின் சூழல் எப்படி எதிர்கொள்ளும் என்ற பயம் அவர்களிடம் தெரிந்தது. அனுவின் அப்பா என்னிடம் அறிவுப்பூர்வமாக பேச முனைந்து தன் அறிவின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
மீண்டும் அலுவலகம் திரும்பியபோது அனுவுக்கு மாற்றலாகி இருந்தது. அதிகமாக அழுதாள். அதன்பிறகே அவளை அடிக்கடி சந்திக்கும்படியானது.
அடிக்கடி முத்தமிட்டாள். அந்த முத்தங்கள் மட்டுமே அவளை சகித்துக் கொள்ளச் செய்தன. எவ்வளவு அழகானப் பெண். வனப்பான உடல். எங்குமே சதை கூடவோ குறையவோ இல்லாத உடல். தூய்மையான முகம். ஆனால் மனதளவில் நான் அவளை விலகினேன் உடலால் நெருங்க நெருங்க.
முதலில் "அனு இனிமே வீட்டுக்கெல்லாம் கூப்பிடாத" என்று சற்று காட்டமாகவே சொன்னேன்.
பெரிய தவறிழைத்துவிட்டவள் போல அவள் முகம் கருத்தது. நான் கனிந்துவிட்டேன்.
"சாரி அனு. ஐ டோன்ட் மீனிட்" என ஏதோ நான் உளறத் தொடங்கியபோது அவள் அழத் தொடங்கிவிட்டாள்.
"எங்கள உனக்கு பிடிக்கலையா?" என அழுகையினூடே கேட்டாள்.
"ஏய் என்ன சொல்ற" என தோளை தொட்டபோது பாய்ந்து அணைத்துக் கொண்டு என்னை முத்தமிடத் தொடங்கினாள். கண்ணீரில் நனைந்த அவள் முகம் உப்புச்சுவையுடன் இருந்தது. உதடுகள் கூடுதலாக கரித்தன.
அனு தாங்கிக் கொள்ள முடியாதவளாக மாறிக் கொண்டிருந்தாள். அவளை ஏதேதோ பேசி அழச்செய்து முத்தங்கள் நோக்கியே கொண்டு சென்றேன். கண்ணீரும் முத்தங்களும் அற்ற விடைபெறல் போலியானது என அவள் நம்பும் அளவு அவளை இன்னொருத்தியாக மாற்றியே எடுத்துக் கொண்டேன். அன்பு தேயத்தேய நாங்கள் ஓயாமல் பேசினோம். சுற்றினோம். கண்ணீர் மல்கினோம். முத்தமிட்டுக் கொண்டோம். அவள் உடல் உடை இவற்றை மட்டுமே கவனிப்பவனாக நான் மாறிப்போயிருந்தேன்.
அனு என்னிடம் நெருங்கியே இருந்தாள். விழிகள் தொட்டிருக்கும் கணம் முழுக்க விரல்களும் தொட்டிருக்க வேண்டுமென விரும்பினாள்.
ஆனால் எனக்கு வேறொரு அனு வேண்டியிருந்தது."அழாதடா கண்ணா" என்று சொல்லிய அனு.
நான் அவள் மெத்தையில் உட்கார்ந்திருந்தேன். அவள் குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. அவள் நேற்றிரவு அணிந்திருந்த சுடிதாரில் அவள் உடல் மணத்தை வியர்வை வாசம் காத்து வைத்திருக்கிறது. அந்தச் சுடிதாரில் இரவில் அவள் கண்ட கனவுகளின் சில துளிகள் எஞ்சி இருக்கலாம். என்னைக் கொஞ்சியவள் கூட அதில் இருந்திருக்கலாம். அவள் புன்னகை கூட அதில் உறைந்திருக்கலாம். முகத்தோடு சேர்த்து அவளை இறுக்கிக் கொண்டேன். உடல் எனும் தடையற்ற மனம். தூய மணம். ஏதோவொரு கணத்தில் என் சட்டையை கிழித்தெறிந்து அந்த சுடிதாரை உடுத்திக் கொண்டேன்.
அனு வெளியே வந்தாள்.
"இத நான் எடுத்துக்கவா?"
அதன்பின் அனு உட்பட பிற பெண்கள் என்னிடம் பேசுவதில்லை. ஆண்களும் தான்.
Comments
Post a Comment