தந்தையரே கருணை வையுங்கள்
தந்தையரே
உங்கள் கண்ணீரும் தியாகங்களும் எங்களுக்குப் புரிகிறது
தந்தையரே
உங்கள் தனிமையும் துயருங்கூட
எங்கள் சிறிய இதயங்களுக்கு
புரியவே செய்கிறது
தந்தையரே
உங்கள் மைந்தர் என்பதாலேயே
உச்சியின் தகிப்பை உணரும்
நடு ஆற்றினைப் போல
உங்களை உணரவும் செய்கிறோம்
இருந்தும் என்ன செய்ய
உணர முடியுமே அன்றி
போக்கிவிட முடியவில்லையே எங்களால்
தந்தையரே
நாங்கள் உங்களை விலகுகிறோம்
நாங்கள் அறிந்தே இருந்தாலும்
உங்கள் துயர் பெரிதென
எங்களை நீங்கள் உணரச்செய்கையில்
தந்தையரே
நாங்கள் உங்களை அஞ்சுகிறோம்
எது எங்களை ஆற்றுப்படுத்தியதோ
அதன் ஆகிருதியை முழுதுணர்கையில்
தந்தையரே
அனைத்தையும் கடந்து உங்களிடம்
அப்பட்டமான சுயநலத்துடன்
மன்றாடுகிறோம்
உங்கள் துயர் பெரிதே எனினும்
இரக்கமற்றுப் போய் இன்னும் நாங்கள் உங்களிடம் கருணையை எதிர்பார்க்கிறோம்
உங்கள் துயரை தமையர்களிடம் காண்பியுங்கள்
மைந்தர்களிடம் வேண்டாம் எனக் கெஞ்சுகிறோம்
Thanks for the wonderful poem. I really don't know what's with me and Dad and what's with me and my son.
ReplyDelete