கரமசோவ் சகோதரர்கள் - எதிரீடுகளின் சதுரங்கம்
பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன் வழியாக பருவடிவு கொள்ளாத துயரொன்று மனதை அலைகழித்தது. ஜெயமோகனை வாசிக்கையில் மனதில் கட்டுமானமொன்று சரிந்து விழுந்த அதிர்வை ஆழம் உணர்ந்தது. அவ்விடத்தில் ஒரு தளிர் இலை மட்டும் கொண்ட சிறு செடியை அவர் புனைவுகள் நடுகின்றன என்பது மட்டும் ஒரு ஆறுதல். அப்படியெனில் நவீன இலக்கிய ஆசிரியர்கள் என நாம் முன்னிறுத்தும் வரிசை நமக்களிப்பது எரிச்சலையும் சீண்டலையும் துயரையும் சரிவையும் மட்டும் தானா? ஆம். ஒரு வகையில் அது உண்மையே. நவீன இலக்கியம் அல்ல பொதுவாக இலக்கியம் என அறியப்படும் எதுவும் ஏன் கலையென உணரப்படும் எதுவும் மனிதனை மகிழ்விப்பதற்காக வளர்க்கப்பட்டவை அல்ல. மனிதனுக்குள் "அறிதலின் பரவசத்தை" கலை நிறைக்கலாம். ஆனால் நிச்சயம் அது மகிழ்விப்பதில்லை.
ஏன் இந்த முரண்? அடிப்படையில் வாழ்க்கை என நாம் வகுத்து வைத்திருப்பதற்கு(வேலை குடும்பம் சோறு போன்றவை)வெளியே சென்று நாம் தேடி அடைவது அத்தனையும் நம்மை மகிழ்விக்க வேண்டும் பரவசத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒரு "சராசரி" மனதில் இருப்பது இயல்பே. அந்த சராசரி மனம் "உயர்கலை" என நம்புவது அறியாத ஒரு உலகை சித்தரிப்பதையோ தன் உணர்வுநிலைகளுக்கு எதிர்திசையில் நகர்ந்து "பதற்றப்படுத்தும்" எழுத்தையோ தான். இது ஒரு பழைய மன அமைப்பின் தொடர்ச்சி தான். நம்முடைய இளமையில் கூட நாம் கேட்ட கதைகள் எதுவும் "இங்கு இப்போது" நடப்பதில்லை. சமகாலத்தன்மை கொண்ட கதைகள் கூட ஏதோவொரு அறியா நிலத்தில் நடக்கின்றன அல்லது அடையாளங்கள் ஏதுமற்ற கற்பனை மனிதர்களை அக்கதைகள் கொண்டிருக்கின்றன. ஆனால் இலக்கியம் தன் வாசகனிடத்தில் ஒரு "நிகழும்" மனநிலையைக் கோருகிறது. சங்கக் கவிதைகளோ குறளோ கம்ப ராமாயணமோ இன்றெழுதப்படும் ஒரு சிறுகதையோ இந்த நிகழ் மனநிலை கொண்ட வாசகனால் வாசிக்கப்படும் போது மட்டுமே அது நவீன வாசிப்பை பெறுகிறது. ஒரு நவீன வாசகன் இலக்கிய வாசிப்பின் வழி தேடுவது மகிழ்ச்சியை அல்ல அறிதலையே. அவனது நோக்கம் தன்னுள் நிகழ்ந்திருக்கும் அறிதல் மட்டுமே. அதனால் தான் அவன் ஒரு இலக்கிய படைப்பை தன் அத்தனை ஆயுதங்களுடனும் தீவிரமாக எதிர்கொள்கிறான். அவனுடைய வாழ்வனுபவங்கள் வரலாற்று வாசிப்பு பிற அறிதல்கள் என அத்தனையையும் கொண்டு ஒரு இலக்கிய படைப்பை புரிந்து கொள்ள முயல்கிறான். இத்தகைய தேடலில் இருக்கும் ஒருவன் எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் காலத்தை மட்டுமே கொண்டு "பழையது புதியது" என எளிதாக புரிந்து கொள்வதில்லை. நவீன இலக்கியம் என வரையறுக்கப்படும் கடந்த இரண்டிலிருந்து மூன்று நூற்றாண்டு காலத்துக்குள் எழுதப்பட்ட படைப்புகள் எவ்வளவு தீவிரமான வாசகர்களை கடந்து "இன்றை" வந்து அடைந்திருக்கும். அவை எத்தனை கோணங்களில் விவாதிக்கப்பட்டிருக்கும் விமர்சிக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் கடந்து இன்றும் மனித மனத்திற்கு அளிக்க ஏதோவொன்றை தன்னுள் கொண்டிருப்பவற்றையே நாம் பேரிலக்கியங்கள் எனச் சொல்கிறோம்.
டி.எஸ்.எலியட் தன்னுடைய "செவ்வியல் என்றால் என்ன?" (What is a classic) என்ற உரையில் செவ்வியலின் அடிப்படை குணமாக முதிர்ச்சியை சொல்கிறார். (முதுமை அல்ல. முதிர்ச்சி (maturity) ). மன முதிர்ச்சி(maturity of mind),மொழியைக் கையாள்வதில் முதிர்ச்சி(maturity of language), பார்வைக்கோணத்தில் முதிர்ச்சி (maturity of manners) மற்றும் பொதுமொழியில் முழுமையடைதல்(perfection of common style) என்ற இந்த நான்கு காரணிகளையும் ஒரு செவ்வியல் படைப்பு கொண்டிருக்கும் எனச் சொல்கிறார். அதோடு ஒரு செவ்விலக்கிய ஆசிரியன் தொடர்ச்சியான தேடலின் வழியாகவே உருவாக முடியும் என்றும் அதற்கான சூழலும் நிலவ வேண்டும் என்றும் சொல்கிறார்.
ரஷ்யாவின் மாபெரும் இலக்கிய ஆசிரியர்கள் அனைவரும் ஏறத்தாழ சமகாலத்தவர்களாக இருப்பதைக் காண்கிறோம். போரும் வாழ்வும், குற்றமும் தண்டனையும் என மாபெரும் நாவல்கள் குறைந்த கால இடைவெளியில் அம்மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவில் தொடர்ச்சியாக ஆங்கிலம் பிரஞ்சு என அயல் இலக்கிய வாசிப்பு நிகழ்ந்தது. புஷ்கின் துர்கனேவ் என ஒரு வலுவான முன்னோடி படைப்பாளிகளை அம்மொழி ஏற்கனவே கொண்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் எலியட் குறிப்பிடும் "முதிர்ச்சிகள்" நிகழ முடியும். அவ்வகை முதிர்ச்சியடைந்த ஒரு சூழலில் இருந்தே டால்ஸ்டாயும் தஸ்தாவெய்ஸ்கியும் எழுகின்றனர். தஸ்தாவெய்ஸ்கி குற்றமும் தண்டனையும் நாவலில் நடத்தியிருக்கும் தேடலின் தொடர்ச்சியையே நாம் கரமசோவ் சகோதர்களில் காண்கிறோம். இன்னும் தீவிரமாக இன்னும் உக்கிரமாக அத்தேடல் நடைபெறுகிறது. எலியட் அக்கட்டுரையில் செவ்விலக்கியம் சமூகத்தின் ஒட்டுமொத்த ஏற்பையும் பெறும் படைப்பாகவே இருக்க இயலும் என்கிறார் (கம்பராமாயணமோ குற்றமும் தண்டனையோ மொத்த சமூகத்தாலும் வாசிக்கப்பட்டிருக்காது. ஆனால் அவை உருவாக்கிய விளைவுகளை சமூகத்தில் காண முடியும்.) ஏனெனில் அவை மிக ஆதாரமான நிரந்தரமான கேள்விகளுக்கு பதில் தேடுவதையே தங்கள் "உடலின்" வழியாக முயல்கின்றன. இந்த நாவலும் அப்படியான அடிப்படை கேள்விகளை மனநிலைகளை நோக்கியே பேசுகிறது.
உலகின் எந்த முதிர்ச்சியடைந்த சமூகத்தை ஆராய்ந்தாலும் குடும்பம் அதன் அடிப்படை அமைப்பாக இருப்பதைக் காணலாம். அதிலிருந்து பின்னப்படும் உறவு வலை தான் ஒரு சமூகமாக பரிணமிக்கிறது. அந்த வலைகளுக்கு அல்லது குழுக்களுக்கு இடையேயான உரையாடல் தான் பெருஞ்சமூகங்களை அமைக்கிறது. வணிகம் மதம் லட்சியம் என எத்தனையோ காரணிகள் இந்த அமைப்பை வலுப்படுத்துவதாக அமைகின்றன. இந்த அமைப்பு விரியுந்தோறும் அவற்றில் உள்ள கூறுகளுக்கு இடையேயான தொடர்பு நெகிழ்வானதாக மாறுகிறது. சுருங்கும்போது இறுக்கம் உடையதாக மாறுகிறது. விரிவு என இரு ஊழியர்களுக்கு அல்லது ஒரு ஊழியருக்கும் பணியமர்த்தியவருக்குமான உறவைச் சொல்லலாம். சுருங்குதல் என குடும்ப அமைப்பைச் சொல்லலாம். (விரிவு சுருக்கம் போன்ற சொற்களை வசதிக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன்).ஏனெனில் குடும்பம் என்ற அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக "பரு வடிவில்" தொடர்பில் இருப்பவர்கள். அவர்களின் உடல் ரீதியான தொடர்பு வகுக்கப்பட்டதாக தெளிவானதாக இருந்தாக வேண்டும். தங்கை முறை வரும் பெண்ணை பத்து வயது தாண்டியவுடன் அண்ணனின் அருகில் படுக்க வைப்பதை இப்போதும் கூட நம்மால் ஏற்க முடியாதல்லவா?
தாய் தந்தை மகன் மகள் என இவ்வுறவுகளுக்கு இடையேயான தொடர்பு ஒரு குறிப்பிட்ட சமூகம் முழுவதிலும் ஒரு வகையானதாக இருக்கிறது. சிற்சில வேற்றுமைகளுடனும் பெரும்பாலான சமூகங்களின் நிலையும் இதுதான். (தாய் மகன் உடலுறவை கூட அனுமதிக்கும் அதிதீவிர மதக்குழுக்களை விட்டுவிடலாம்). நம்முடைய ஒற்றுமை குறித்த கனவுகள் அத்தனையும் குடும்பம் என்ற அமைப்பை இலக்காக்குவதை காணலாம். வசுதைவ குடும்பகம்,யாவரும் கேளிர் என உலகை ஒரு குடும்பமாக்கவே கற்பனையும் எழுச்சியும் கொண்ட மனம் விழைகிறது. இன்றுவரை பெண்ணை தாயாகவும் ஆணை தந்தையாகவும் உணர்வதே காதலின் கனிவின் உச்சமென பெரும்பாலும் நம்பப்படுகிறது. இதற்கான அடிப்படை நியாயங்கள் என்ன? இவ்வுறவுகள் மட்டுமே அடிப்படை நம்பகத்தன்மையுடன் இருக்கின்றன. மனைவியிடம் அதிகமான வன்முறையை பிரயோகிப்பவன் கூட மகளிடத்தில் கனிவதை கண்டிருப்போம். இதுதான் உலகின் நடைமுறை என இதற்குள் தான் உலகம் தங்கி வாழ்கிறது என்ற நம்பிக்கை உடையவர்களை ஒரு நூற்றாண்டுக்கு முன் கரமசோவ் சகோதர்கள் எப்படி அசைத்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். ஏனெனில் குடும்பம் என்ற அடிப்படை அலகின் மீதுகூட நம்பிக்கையற்ற ஒரு தகப்பனிடமிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. முதல் மனைவியை பணத்திற்கென மணம்புரிந்து கொள்கிறார் ஃபியோதர் பாவ்லோவிட்ச் கரமசோவ். திமித்ரி என்ற மகனை ஈன்ற பிறகு முதல் மனைவி இறக்க அழகாக இருக்கிறாள் என இன்னொரு பெண்ணை மணம்புரிந்து கொள்கிறார். அவளும் இவான் ,அலெக்ஸி என்ற இரண்டு பிள்ளைகளை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள். இந்த மூன்று மகன்களும் தந்தையை அறியாமல் வளர்கின்றனர். ஒரு புத்தி பேதலித்த பெண்ணுக்கு பிறக்கும் ஸ்மெர்தியாகோவ் என்ற இளைஞன் பியோதரின் மகனாக இருப்பதற்கான வாய்ப்பும் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.தந்தையும் மகன்களைப் பற்றிய எந்த அக்கறையும் அற்றவராக தன் மாளிகையில் இலக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்து களிக்கிறார்.
நவீன இலக்கியம் வாழ்வில் நிகழ்த்திய அல்லது வாழ்வென நம்பப்பட்டதன் மீது நிகழ்த்திய சிதைவு இது. இவ்வகையான ஒரு தகப்பனை அவனது பல்வேறு சாத்தியங்களுடன் நேரில் அறிந்திருப்போம் அல்லது சொல்லப்பட்ட கதையாக கேட்டிருப்போம். ஆனால் கரமசோவ் போன்றதொரு ஒரு தகப்பனை இலக்கியம் அதற்கு முன் கண்டிருப்பது சந்தேகமே. கரமசோவ் என்ற அப்பாவையும் திமித்ரி,இவான்,அலெக்ஸி என்ற மூன்று மகன்களையும் மையப்பொருளாகக் கொண்டு மதம்,காதல்,காமம்,லட்சியம்,பேதைத்தனம்,தூய்மையான அன்பு என பல்வேறு சாத்தியங்களின் வழியாக அவர்களுக்கு இடையேயான உறவை மிக நீண்ட பின்புலத்தில் வைத்து விசாரிக்கிறது இப்படைப்பு.
கரமசோவ் சகோதர்களின் கதையை இங்கு அப்படியே திரும்பச்சொல்வது மிக எளிய இலகுவான செயல். ஆனால் அதை நான் செய்யப்போவதில்லை. மாறாக ஒரு பேரிலக்கியத்தை வாசிப்பதற்கான சில அடிப்படைகளை பேரிலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கிறவன் என்ற முறையில் சொல்லலாம் என நினைக்கிறேன்.
நாவல் என்ற வடிவத்திடன் எதிர்பார்க்கக்கூடாதா ஒரு குணம் சீரான கதையொழுக்கு. கரமசோவ் சகோதர்கள் இக்குணத்தை மிக வெற்றிகரமாக நிறுவுகிறது. கதையின் மையமென அப்பா மற்றும் மகன் கரமசோவ்களை சொல்லலாம். ஆனால் அவர்களையும் கடந்து விரிவதே இதனை பேரிலக்கியமாக நிறுத்துகிறது. முதலில் தஸ்தாவெய்ஸ்கி தன் கதாப்பாத்திரங்கள் யாரிடமும் வெறுப்பும் விலக்கமும் கொள்வதில்லை. எலியட் குறிப்பிடும் maturity of manners என இதை நான் குறிப்பிடுவேன். அவர் தன் பாத்திரங்களை ஒரு வகையான குணம் மேலோங்கியவர்களாக சித்தரிக்கிறார். உதாரணமாக திமித்ரி இச்சையின் வடிவம். தன் காமத்தை நிறைவு செய்து கொண்டு களித்திருக்க விழையும் ஒரு மேட்டுக்குடி ஆண். அவனது கருணை கோபம் அனைத்திற்கும் அவன் தன்னைக் குறித்து கொண்டிருக்கும் அப்பட்டமான ஆணவமே காரணமாக அமைகிறது. ஆனால் அதை ஒரு தீய குணமாக தஸ்தாவெய்ஸ்கி காட்ட விழையவில்லை. அது அவன் குணம். அது போல அலெக்ஸி நிலைதடுமாறாதவனாகவே இறுதி வரை வருகிறான். இந்த நாவலில் நம்மை அதிகமாக நிலையழியச்செய்யும் பகுதிகள் அலெக்ஸியின் முன்னிலையில் தான் நிகழ்கின்றன.
காத்ரீனா திமித்ரியை காதலிக்கிறாள். அந்த காதலுக்கான காரணம் இன்றுவரை எதுவும் விளக்கி விட முடியாத தீராத மர்மங்களில் ஒன்று. திமித்ரி அவள் காதலை ஏற்கத் தயங்குகிறான். மாறாக அவன் க்ருஷென்காவை காதலிக்கிறான். க்ருஷென்கா அறியா இளமையில் ஒருவனால் ஏமாற்றப்பட்டு ஒரு வயதான அடகுக்கடைக்காரனின் மனைவி போல வாழ்ந்து வருகிறவள். அவளும் அடகுக்கடை நடத்துகிறவளே. அவளது அழகில் மனமிழந்தவனாக அவளை அடைந்துவிடும் மூர்க்கத்துடன் திமித்ரி இருக்கிறான். அலெக்ஸி முதன்முறையாக காத்ரீனாவை சந்திக்கச் செல்லும் போது அங்கு க்ருஷென்காவை பார்க்கிறான். தீயவளாக அதுவரை மனதில் உருவாகியிருக்கும் சித்திரம் அழிந்து போகிறது. ஒரு குழந்தை போல அவள் கேத்ரீனாவிடம் நடந்து கொள்கிறாள். ஆனால் அவளது தீமை (அல்லது அப்படி வகுத்துவிட முடியாத ஒன்று) வெளிப்படும் இடத்தில் காத்ரீனாவுடன் சேர்ந்து அலெக்ஸியும் நிலையழிகிறான். அதைத்தொடர்ந்து பல இடங்களில் மனிதர்களின் இருளை தரிசிப்பவனாக அலெக்ஸி இருக்கிறான். பாதிரியார் பயிற்சியில் இருப்பவன் அலெக்ஸி. அவனது ஆசிரியரான ஜோஸிமாவின் வழியாக தந்தை கரமசோவுக்கும் மூன்று மகன்களுக்கும் நிகழும் பேச்சு வார்த்தையில் தான் நாவல் தொடங்குகிறது.
இங்கு இன்னொரு சிக்கல் முளைக்கிறது. க்ருஷென்காவை அடைந்துவிடும் துடிப்பு ஃபியோதர் பாவ்லோவிட்ச் கரமசோவிடமும் உள்ளது. ஒரு பாரம்பரிய மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் இடம் அது. உண்மையில் இந்த நாவலில் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் என ஃபியோதர்,க்ருஷென்கா,இவான்,காத்ரீனா நால்வரையும் சொல்லலாம். மிகமிக சிக்கலான மன அமைப்பினை பெற்ற இப்பாத்திரங்களால் நாவல் மேலும் சிக்கலாக ஆகிறது. ஜோஸிமா போன்ற அற்புதமான ஒரு பாத்திரமும் அவர் தன்னை தேடிவருபவர்களிடம் காட்டும் பரிவுமென ஒருபுறமும் பியோதர், திமித்ரி, இவான் என வெறுப்பின் வேட்கையின் தந்திரத்தின் மானுட வடிவங்கள் அடுத்த அத்தியாயம் மறுபுறமும் என நகரும் இந்த நாவலை உள்வாங்குவது நிச்சயம் சிரமம் தருவதே. புனைவினை interplay of characters என்று வரையறுத்தால் இந்த நாவல் அதில் ஒரு சிகரம் எனலாம். ஜோஸிமாவின் அத்தியாயங்கள் அன்பின் தியாகத்தின் வழியேயான மீட்பினை பேசுகின்றன. மகனை இழந்த ஒரு அன்னையிடமும்,மகன் இறந்து விட்டானோ என சந்தேகம் கொள்ளும் ஒரு அன்னையிடமும் அவர் சொற்கள் நம்பிக்கையை விதைக்க அறுபது கோபெக்குகளை ஜோஸிமாவிடம் கொடுத்து தன்னினும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவருக்கு அதை கொடுக்கும்படி சொல்லி ஜோஸிமாவிற்கு ஆசியளித்துவிட்டுச் செல்லும் பெண் நம்முள் நம்பிக்கையை விதைக்கிறாள். மறுபுறம் மகன் விரும்பும் பெண்ணின் மீது வேட்கை கொள்ளும் தகப்பன் தகப்பனின் பணத்தையும் அதிகாரத்தையும் கண்டு பொறாமை கொள்ளும் மகன் என நம்பிக்கையிழப்பை அளிக்கும் கணக்குகள்.
மரணப்படுக்கையில் ஜோஸிமா நிகழ்த்தும் உரையும் அதற்கு பிந்தைய அத்தியாயங்களில் இவான் அலெக்ஸியிடம் சொல்லும் "The grand inquisitor" என்ற கதையும் ஒன்றுக்கொன்று முழுமையான எதிர்த்தன்மை கொண்டவை. இரண்டும் கதைகள் என்பதைதத்தாண்டி சொல்கிறவர்களின் குணத்தை பிரதிபலிப்பவையாக அமைகின்றன. ஜோஸிமாவின் உரையில் சகோதரனின் மரணத்தால் பாதிக்கப்பட்டு கிறிஸ்துவை நெருங்கி தன் உடல் வலிமையாலும் ஆணவத்தாலும் அவரை விலகி அதை உணரும் கணம் மீண்டும் அவரைப் பற்றுகிறவை நாம் காண்கிறோம். இவானின் கதையில் கடவுளை விசாரணை செய்யும் தந்திரமிக்க ஒரு பாதிரியாரை. இந்த எதிரீடுகள் தான் இன்றுவரை இந்த நாவலை ஈர்ப்புமிக்கதாக நிறுத்துகின்றன. ஜோஸிமாவின் நம்பிக்கையையும் கருணையையும் நிறைக்கும் பேருருரையை கேட்கும் அலெக்ஸி அடுத்த அத்தியாயத்தில் கவர்ச்சிமிக்கவளான க்ருஷென்காவை தேடிச்செல்கிறான். அவனை அவள் முத்தமிடுகிறாள் ஈர்க்க முயல்கிறாள். அலெக்ஸியின் நம்பகத்தன்மையை கள்ளமின்மையை தஸ்தாவெய்ஸ்கி சோதிக்கும் இடமாக இதை வாசிக்கலாம். அவன் மீண்டு விடுகிறான். அதோடு அவள் தன்னை இளவயதில் ஏமாற்றியவனிடம் திரும்பச் செல்கிறாள். அதே இரவில் ஃபியோதர் பாவ்லோவிட்ச் கொல்லப்படுகிறார்.
தன் இளமையில் தன்னை ஏமாற்றியவனை க்ருஷென்காவால் விரும்ப முடியவில்லை. க்ருஷென்கா தன் காதலை திமித்ரியிடம் கண்டு கொள்ளும் அதேநேரம் இக்கொலைப்பழி அவன் மீது வந்து விழுகிறது. க்ருஷென்கா தன் காதலை உணர்ந்த பிறகு ஒரே மாதிரியானவளாக மாறிவிடுகிறாள். தன் நிலையழிவும் வன்மும் நீங்கி திமித்ரியின் காதலியாக மட்டுமே தன்னை உணர்கிறாள். அதேநேரம் மற்றொரு சிக்கலான பாத்திரமான ஃபியோதர் கொல்லப்பட்டிருக்கிறார். நிலையழிவு கொண்டவர்களாக எஞ்சுவது இவானும் காத்ரீனாவுமே.
ஃபியோதரை திமித்ரி கொலை செய்யவில்லை என்றாலும் அவனே தான் கொலை செய்தான் என்று எண்ணும்படி எல்லா ஆதாரங்களும் கிடைக்கின்றன. ஃபியோதர் பாவ்லோவிட்சின் கொலை நடந்தபிறகு அதுவரை மனிதர்களின் அக நாடகமாக நடந்து கொண்டிருந்தவை புறத்தில் அள்ளி வைக்கப்படுகின்றன. இது தஸ்தாவெய்ஸ்கியின் புனைவுகளின் முக்கியமான பண்பு. அகத்தில் ஒரு மனிதராக நாம் நம்மை புனைந்து கொண்டிருக்கிறோம் அல்லது அதை நம்பி வாழ்ந்து வருகிறோம். நம் அகத்துக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படும் நாம் அல்ல ஒரு சமூக மனிதனாக வெளிப்படும் நாம். அகம் சமூகக் கட்டுப்பாடுகளை அறியாதது. அது மேன்மைகளும் கீழ்மைகளும் அறியாதது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் இதை நாம் காணலாம். பள்ளிக்கூடம் ஒரு குழந்தையை எப்படித் திமிற வைக்கிறது. ஆனால் அது மெல்ல மெல்ல தன் அகத்தையும் புறத்தையும் பிரித்துக் கொள்கிறது. ஒன்று மற்றொன்றில் பிரதிபலிக்காதவாறு வளர்கிறது. ஆனால் அகம் ஒரு சமூக நிறுவனத்தால் (நீதிமன்றம் குற்றவிசாரணை) கேள்விக்குள்ளாக்கப்படும் போது மனம் கொள்ளும் சஞ்சலங்கள் மிகமிக நுட்பமானவை. தஸ்தாவெய்ஸ்கி அதை மிகுந்த நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கிறார். நம்முடைய அகத்தை ஒரு நாடகத்தன்மையுடன் தான் பொதுவில் வைக்கிறோம். அந்த நாடகத்தன்மையை மிக நேர்த்தியாக நெருங்கிச் செல்கிறது இப்படைப்பு. ஒருவகையில் தஸ்தாவெய்ஸ்கியின் பாத்திரங்கள் அனைவரும் கொந்தளிப்பானவர்களாக இருப்பதற்கு அவர்கள் அகம் பொதுவில் வைத்து கேள்விகேட்கப்படுவதே என்று தோன்றுகிறது.
நாவலில் அதுவரை பேசப்பட்டவை வேறொரு பரிணாமத்தில் உயிர்கொண்டு வருகின்றன. ஃபென்யா,ஃபெட்ரோச்சின்,மேடம் ஹோலகாவ் என சிறுசிறு பாத்திரங்கள் கூட முக்கியமானவையாக எழுந்து வருகின்றன. ஃபியோதர் பாவ்லோவிட்சை யார் கொன்றது என்ற கேள்வி ஒரு கட்டத்தில் அவரை "எது" கொன்றது என்ற எல்லையில் கொண்டு சென்று நம்மை நிறுத்துகிறது. திமித்ரி அக்கொலையை செய்யவில்லை என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரிகிறது. உள்ளூர ஒருவர் கூட அவன் கொலை செய்ததாக நம்பவில்லை. ஆனால் எல்லா சாட்சியங்களும் அவனுக்கு எதிராக நிற்கின்றன. இவானையும் தந்தையின் மரணம் நிலையழியச் செய்கிறது. அவனும் நோயில் விழுகிறான். இறுதியாக நீதிமன்றத்தில் திமித்ரி தான் கொலை செய்தான் என்ற அரசுத்தரப்பு வழக்கறிஞரின் வாதம் மற்றும் அவன் கொலை செய்யவில்லை என்ற எதிர்தரப்பு வழக்கறிஞரின் வாதத்தின் வழியாக நாவல் உச்சத்தை நோக்கி நகர்கிறது. அரசுத் தரப்பு மரபின் தரப்பாக உடைந்துவரும் மதிப்பீடுகளைக் கண்டு பதற்றப்படுவதாக தன் வாதத்தை முன் வைக்க எதிர்தரப்பு நவீனத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் மனிதாபிமானம் மிக்க்தரப்பாக தன்னை முன் வைக்கிறது. அந்த நேரத்தில் இவானும் காத்ரீனாவும் நிகழ்த்தும் செயல்கள் தீர்ப்பில் வலுவான பாதிப்பை செலுத்துகின்றன. ஒரு பெரும் துயரைத் தருவதோடு நாவல் முடிவடைகிறது.
இந்த நாவல் நம்முள் எழுப்பும் கேள்வி என்றென்றைக்குமான ஒன்று. குற்றம் முழுக்க முழுக்க புறவயமானது. அதை விளக்க உளவியல் கூறுகள் , வாழ்க்கைச்சூழல் போன்றவை உதவலாம். ஆனால் பாவ உணர்வு முழுவதும் அகவயமானது. குற்றமும் தண்டனையும் நாவலின் ராஸ்கோல்னிகாவ் தான் இழைத்த குற்றத்தை பாவமாக உணர்ந்து அதற்கான தண்டனையை அனுபவிக்கச் செல்கிறான். குற்றத்தை தர்க்கப்பூர்வமாக விளக்க முடியும். ரஸ்கோல்னிகாவ் அந்த நாவல் முழுவதும் செய்து கொண்டிருப்பது அதையே. ஆனால் பாவ உணர்வை அப்படி விளக்க முடியாது. அது உணர்வு மட்டுமே. அந்த உணர்வின் அடிப்படையில் தான் சமூகம் கட்டப்பட்டுள்ளது. ஃபியோதர் பாவ்லோவிட்சை நாம் அவ்வளவு வெறுப்பதற்கு காரணம் அவருக்குள் அந்த பாவ உணர்வு இல்லையென்பதால் தான். நாவல் முழுக்க இவானும் இந்த பாவ உணர்வு இல்லாமல் தான் வருகிறான். ஆனால் இறுதியில் அவ்வுணர்வு அவனை வலுவாக தாக்கும் போது வீழ்கிறான். குற்றமும் தண்டனையும் நாவலின் மர்மலாதோ குடும்பத்தை நினைவுறுத்தும் வகையில் இந்த நாவலில் இலுஷா என்ற சிறுவனின் குடும்பம் வருகிறது. அச்சிறுவனும் ஒரு நாயைக் கொன்றுவிட்டோம் என்ற பாவ உணர்ச்சியால் நோயில் விழுகிறான். அது இறக்கவில்லை என்பதை அறிந்த நிறைவுடன் அவன் இறந்து போகிறான். இன்னும் முன் சென்று ஜோஸிமாவைப் பார்த்தால் அவரையும் அவ்வுணர்வு தாக்கியிருப்பதை காண முடிகிறது. அதன் நிழலே படாமல் வருகிறவன் அலெக்ஸி மட்டுமே. தனிமனிதனின் அகம் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இக்காலத்தில் தஸ்தாவெய்ஸ்கி முன் வைக்கும் இந்த தரிசனம் இன்றியமையாதது. ஏனெனில் இன்று நம்முடைய மனச்சாய்வினால் எவ்வளவு பெரிய தீங்கையும் தர்க்கப்பூர்வமாக நியாயப்படுத்திவிடத் தயாராகி இருக்கிறோம். அப்படிப்பட்ட மனமுடையவர்களை நோக்கி இடைவிடாது இரைஞ்சுவதாக இருக்கின்றன இப்புனைவுகள். அதை வெறும் இரைஞ்சலாக அல்லாமல் அதே தர்க்க நியாயங்கள் கொண்ட பாத்திரங்களையும் நாவலுக்குள்ளே அமைத்து அவர்களின் புத்திக்கூர்மையுடன் நம்மை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்கின்றன தஸ்தாவெய்ஸ்கியின் படைப்புகள். தர்க்கங்கள் தோற்று மனதின் நீதியுணர்ச்சி வெல்லும் புள்ளிகளை இந்த நாவலில் கண்டாலும் அதுவும் பயனற்றுப் போவதையும் சொல்லிவிட்டுத்தான் நகர்கிறது. அப்படியெனில் இந்த நீதியுணர்ச்சியும் குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் நடைமுறையில் மனிதனுக்கு அளிப்பது எதை? அதற்கான பதிலை இந்த நாவலை வாசிக்கிறவர்கள் அடைய முடியும் என நம்புகிறேன்.
Comments
Post a Comment