Pages

Monday 11 June 2018

நதிக்கரை நிகழ்வு நான்கு

பேசும் பூனை இணைப்பு

சகோதரிகள் முதல் பகுதி

சகோதரிகள் இரண்டாம் பகுதி

இலக்கிய வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடியவருக்கு தான் வாசித்த படைப்புகள் குறித்து பேசுவதில் ஒரு தயக்கமும் கூச்சமும் இருப்பது இயல்பு. ஒரு வகையில் அத்தகைய கூச்சம் உடையவர்களில் பெரும்பாலானவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட அவதானிக்கக்கூடியவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதோடு அதிகமாக "பேச்சில் இன்பம்" கண்டவர்களால் வாசிக்கவும் முடியாது. அதேநேரம் வாசிக்கும் புனைவுகளைக் குறித்து பேசாமலேயே இருப்பதும் ஏதோவொரு வகையில் வாசகனை தேங்கச் செய்துவிடும். ஒரு எல்லையில் அத்தகைய வாசகர்கள் "நானும் முன்னெல்லாம் ரொம்ப படிப்பேன் தம்பி. இப்ப படிக்கவெல்லாம் எங்க நேரமிருக்கு" என்று சொல்லும் முதியவர்களாக முன் வந்து நிற்பார்கள்.  அத்தகையவர்கள் புனைவுகளிலிருந்து எதையுமே "அடைய" முடியாததாலேயே அவர்கள் வெளியேறினார்கள் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றொரு வகையினர் உண்டு. மிகக்குறைவாக வாசித்துவிட்டு மிக அதிகமாக பேசுகிறவர்கள். நோக்கமற்றதாக பேச்சின்பத்துக்காக மட்டுமே பேசிக்கொண்டே போவார்கள். இத்தகையவர்களும் இலக்கிய வாசிப்பிலிருந்து விரைந்து வெளியேறி விடுகிறார்கள். இத்தகைய அபாயங்களைப் பார்க்கும் போது இலக்கிய விவாதங்களை குறைந்தபட்சம் வாசித்ததை நினைவுகூர முடிந்தவர்களுடன் கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே நலம் என்று படுகிறது.

உரையாடலை முடிந்தவரை நோக்கத்திலிருந்து விலகாமல் கொண்டு செல்ல வேண்டுமெனில் பங்கேற்பாளர்கள் அனைவருமே விவாதிக்கப்படும் புனைவினை வாசித்து ஒரு பார்வையை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வகையில் சகோதரிகள் மற்றும் பேசும்பூனை குறித்து நிகழந்த இன்றைய கலந்துரையாடல் ஆச்சரியம் கொள்ளும் வகையில் புனைவுகள் குறித்த விவாதமாக தொடங்கி எந்த விலகலுமின்றிப் பயணித்து முடிந்தது மன நிறைவை அளித்தது.

கதிரேசன் மற்றும் ரமேஷ் இருவரும் நாகையில் இருந்து வந்திருந்தனர். நரேன் சென்னையில் இருந்தும் மகேஷ் பெங்களூருவிலிருந்தும் தொலைபேசி வழியே நிகழ்வு முழுவதும் இணைப்பில் இருந்தனர்.

முதலில் சகோதரிகள் குறுநாவல் குறித்த விவாதத்தை நரேன் தொடங்கினார். ஒரு ஆரம்ப நிலை வாசகனாக எனக்கு இந்த குறுநாவல் வாசிப்பதற்கு சவால் அளிப்பதாக இருந்தது என்றார்.பெண்கள் மிக உள்ளொடுங்கியவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் அவர்களுக்கு நிகழும் வன்கொடுமைகள் அனைத்தையும் மௌனமாக ஏற்கிறவர்களாக இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது என்று சொன்னார். அதுபோல சகோதரிகளைப் பற்றி நான் உட்பட எல்லா வாசகர்களும் முன் வைக்கும் விமர்சனத்தை நரேன் சொன்னார். குறுநாவலின் முதலிரண்டு அத்தியாயங்களிலேயே நிறைய கதாப்பாத்திரங்கள் பெயருடன் அறிமுகமாவது சற்றே அயர்ச்சி அளிப்பதாக இருந்தது என்பதே அது. கைலாசம் திருமணத்துக்குப் பிறகு அத்தனை மூர்க்கம் நிறைந்தவனாக மாறிப்போவதற்கான நியாயம் புனைவில் இல்லை என்பது நரேனின் தரப்பு.

மகேஷ் கே.என்.செந்திலின் நிலை சிறுகதையையும் ஏற்கனவே வாசித்திருந்ததால் இரண்டு கதைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். தந்தை என்ற ஆளுமை சிதையும் போது ஒரு குடும்பம் எப்படி வீழ்ந்து போகிறது என்பதைச் சொல்வதாக இரண்டு கதைகளும் இருப்பதாகச் சொன்னார். வாசிப்புக்கு சவால் அளிக்கக்கூடியதாக குறுநாவலின் வடிவம் இருந்தது தனக்கு உவப்பானதாக இருந்ததாக மகேஷ் சொன்னார்.

கதிரேசனும் நிலை சிறுகதையை முன்பே வாசித்திருந்தார். அடித்தட்டு மக்களின் உள்ளத்தில் கொதிக்கும் வன்மத்தை அது வெளிப்படும் விதத்தை செந்தில் மிக நேர்த்தியாக புனைவாக்கம் செய்கிறார் என்று கதிரேசன் சொன்னது முக்கியமானதாக எனக்குப்பட்டது. அதற்கு எதிர்வினையாக நரேன் இத்தகைய வன்மங்கள் விளிம்பு நிலையினரிடம் இருக்கிறது என்றாலும் அதை நேரடியாக புனைவில் கொண்டு வருவது அத்தகைய வன்மத்தை "புனிதப்படுத்துவது" ஆகாதா அதற்கு பதிலாக அத்தகைய சூழலில் இருந்து நேர்மறையான ஆற்றலுடன் மேலேறி வருகிறவர்களைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்ற தன்னுடைய ஆதங்கத்தை முன் வைத்தார். நான் செந்திலின் புனைவுலகு எதார்த்த தளத்தில் இயங்கக்கூடியது என்பதையும் எதார்த்த போதம் கொண்ட படைப்பாளி பெரும்பாலும் "லட்சிய அதீதங்களை" அல்ல நேரில் காணக்கூடிய எதார்த்தத்துக்கு பின்னிருக்கும் சமூக உளவியலையே கணக்கில் கொள்வார் என்றும் சொன்னேன். உதாரணமாக சாதி மறுப்பு திருமணம் போன்ற லட்சிய அதீதங்கள் நம்மிடம் உடனடியாக வந்து சேர்கின்றன. ஆனால் நடைமுறையில் அப்படி மணம் புரிந்து கொண்டவர்களை சமூகம் எப்படி விலக்கி நிறுத்துகிறது அவர்களுக்கு எவையெல்லாம் மறுக்கப்படுகின்றன என்பதை நோக்கியே படைப்பாளியின் மனம் எழும் என்று நான் சொன்னேன்.

சகோதரிகள் கதையில் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் இந்திராணியின் மகப்பேறு தான். நானும் அக்கதையின் மிக முக்கியமான புள்ளியாக கருதுவது அதைத்தான். அங்கிருந்து கதை காலத்தை கலைத்து கலைத்து பயணித்து இறுதியில் இரு சகோதரிகளின் மௌன உரையாடலாக முற்று பெறுகிறது. அதேநேரம் முழுக்க எதார்த்த தளத்தில் இயங்கக்கூடிய புனைவுகளின் சிக்கல் அவற்றால் முழுமை நோக்கை அளிக்க முடிவதில்லை என்பது தான். எதார்த்தவாத எழுத்தின் நோக்கம் முழுமை நோக்கை அளிப்பது இல்லை எனினும் புனைவின் முடிவில் அவை நமக்குள் ஏதோவொன்றை நீடிக்கச் செய்துவிடுமென்றால் அவை முக்கியமான படைப்புகளாகின்றன. அவ்வகையில் சகோதரிகளை ஒரு தேர்ந்த வாசகனுக்கு முக்கியமான புனைவாக மாற்றுவது இறுதியில் ஏற்படும் அந்த மௌனமே.

அடுத்ததாக சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை குறித்த உரையாடலை கதிர் தொடங்கினார். பேசும் பூனையில் இழையோடும் மாய எதார்த்த தன்மை அனைவரையுமே உற்சாகமாக வாசிக்க வைத்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.

கதிர் வழக்கம் போல புனைவினை முழு வாழ்வின் துண்டாகக் கண்டு அத்துண்டின் வழியாக வாழ்வை புரிந்து கொள்ள முனையும் பேராவலுடன் பேசும் பூனை குறித்துச் சொன்னார். உலகமயமாக்கலுக்கு பிறகான எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏற்பட்டுவிட்ட அகத்தின் தனிமை குறித்த கதையாக கதிர் பேசும் பூனையை வாசித்திருக்கிறார். அவரது வாசிப்பு தோழரான நண்பர் ரமேஷ் கதிருக்கு எதிரான வாசிப்பு மனநிலை உடையவர்.  வீடுகள் அதிகமில்லாத பொட்டலில் வாழ நேரம் ஒரு பெண்ணின் அகத்தை இக்கதை மிகுந்த சிரத்தையுடன் சித்தரித்திருக்கிறது என்று ரமேஷ் பேசினார். தனியே வாழ நேர்வதால் தேன்மொழிக்குள் முளைக்கும் எண்ணங்களுக்கான வடிகாலாக எப்படி அந்த பேசும் பூனை என்ற அலைபேசிச் செயலி மாறிப்போகிறது என்பது குறித்துச் சொன்னார். ஒரு எல்லையில் அந்த செயலியில் இருக்கும் பூனைக்கென பரிந்து கொண்டு தன் மகளையே அறைந்த பிறகே தேன்மொழிக்கு தன்னை தெரிய வருகிறது. அவள் கையைக் கிழித்துக் கொள்வது கூட அந்த மாய உலகிலிருந்து தப்பி தன்னை எதார்த்தத்துடன் பொருத்திக் கொள்வதற்குத்தான் என்று ரமேஷ் சொன்னார். தேன்மொழி ஒரு விளையாட்டிலேயே சிக்கிக் கொள்ள அவள் மகள் ஹர்ஷிதா ஒவ்வொரு விளையாட்டாக மாறிக் கொண்டிருப்பது கதையின் சிறந்த எதிர்வு என்று ரமேஷ் சொன்னார்.

மகேஷ் இக்கதையை தான் வாழும் பெருநகரச் சூழலுடன் நன்றாகப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்றார். வாங்கிக் குவிக்கும் நிறைவற்ற மனம் எதிலும் நிறைவை இன்பத்தை காண முடியாத சக மனிதர்கள் என தான் எதிர்கொள்ள நேர்கிறவர்களை இக்கதை பிரதிபலிப்பது ஆர்வமூட்டுவதாக சொன்னார்.

நரேனும் ஏறக்குறைய மகேஷின் கருத்தை பிரதிபலித்தார். அதோடு கணேசனுக்கும் தேன்மொழிக்கும் நடைபெறும் உரையாடல் பேச்சு மொழியில் சாதாரணமாகவும் எழுத்து மொழியில் நேசம் மிகுந்ததாகவும் இருப்பது முரணாகத் தெரிந்ததாகச் சொன்னார். இது மிக முக்கியமான அவதானிப்பாக எனக்குப்பட்டது. பேசும் பூனையில் ஓரிடத்தில் பூனையால் மனம் மலர்ந்தவளாக தன் கணவனுக்கு அன்பான ஒரு செய்தியை தேன்மொழி அனுப்புவாள். அவன் மேல் அந்த சமயம் எந்த ஆசையும் அவளுக்குத் தோன்றியிருக்காது. ஆனால் அவள் எழுத்து மொழி அவ்வளவு பிரியமானதாக வெளிப்படும். தமிழில் எழுதப்பட வேண்டிய சிக்கல்களில் ஒன்றாகவே நான் இதைக்கருதுகிறேன். முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு "அன்பு முத்தங்கள்" என நம்மால் செய்தி அனுப்ப முடிகிறது. கணவனையோ சகோதரனையோ ஒரு கூட்டத்தில் பெயர் சொல்லி அழைக்கவே தயங்கும் பெண்கள் பலர் அலைபேசியில் "லவ் யூ அண்ணா", "கிஸ் யூ புருஷா" என்று "மை ஸ்டேட்டஸ்" வைப்பதைக் காண்கிறோம். பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த வேறுபாடு விவாதிக்கப்பட வேண்டிய புள்ளியே. அறிந்தோ அறியாமலோ பேசும் பூனை அச்சிக்கலை சரியாகத் தொட்டிருக்கிறது.

பேசும் பூனை ஒரு அச்சம் தரும் படிமமாகவே மாறியதாக நான் சொன்னேன். பூனை எடுக்கும் நேர்காணல் அவளிடம் வாஞ்சையுடனும் அதிகாரத்துடனும் நடந்து கொள்ளும் அதன் தோரணை என அந்தப்பூனை யார் அல்லது எது என்ற கேள்வியை மனதில் நிலைக்கவிட்டிருப்பது இக்கதையின் வெற்றி என்று நான் சொன்னேன்.

இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டு போனது. இந்த உரையாடலில் இருவர் "பரு வடிவில்" அருகில் இல்லையென்ற உணர்வே ஏற்படவில்லை. மேலும் இருவர் அலைபேசி வழியே இணைந்திருந்ததால் ஒருவர் பேச்சை மற்றவர் இடைமறிப்பது நிகழவேயில்லை. ஒருவர் பேசும் போது நான்கு பேரும் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தை உரையாடல் இயல்பாக ஏற்படுத்தித் தந்தது. அலைபேசியில் இணைபவர்களின் பேச்சை தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக அடுத்த நிகழ்வுக்கு ஒரு ஸ்பீக்கரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். ஜீவா என்ற நதிக்கரை நண்பர் எங்கள் உரையாடலை கவனித்துக் கொண்டு மட்டும் அமர்ந்திருந்தார். அடுத்தமுறை விவாதங்களில் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இந்த நிகழ்வு அமைந்தது.

No comments:

Post a Comment