Monday 18 June 2018

சகோதரிகள் , பேசும் பூனை - கதிரேசன்

நதிக்கரை நிகழ்வு நான்கு

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் நேற்று (10.06.2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமகால  எழுத்தாளர்களாகிய K N செந்தில்( சகோதரிகள் ) சுனீல் கிருஷ்ணன்( பேசும் பூனை ) ஆகியோருடைய கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சகோதரிகள்
குடித்து குடித்து தனக்கு வரும்  பொருளாதார வாய்ப்புகளைக் கூட மறுத்து .இறுதியில் தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் (சிற்பம் செதுக்குதல்) கையில் நகம் பிய்ந்து  தன் இயலாமைக்காக அழும் விஸ்வம் குடியால் ரோட்டில் படுத்துகிடக்க வேண்டி வரும்போது .. பள்ளிக்கு போய் கொண்டிருந்த திலகா தாயால் அடித்து பலவந்தமாக  வேலைக்கு அனுப்பப்படுகிறாள். பின் அவளின் தங்கையும்

கணவனுடன் எதிர்பார கூடல் ஒன்றின் போது உருவான கருவை .தன் கஸ்டங்களை போக்க வந்த ஆண் மகன் என நினைத்து அத்தனை பழிச்சொற்களுக்கும் மத்தியில் அக்கருவினூடே  தன் கனவை சுமக்கிறாள் .தாய் இந்திராணி. அவள் கனவு  அவளை கேலி செய்வது போல  மீண்டும் ஒரு மகள் தீபா...

தாயின் காலம் கடந்த கருவை  அறிந்து மகளுக்கு  வரும் திருமண பந்தம் அனைத்தும் நின்று போகிறது. வீட்டில் தாயின் அதிகாரம் மெல்ல குறைகிறது.ஒரு கட்டத்தில் அழுது புலம்பும் தாயை திலகாதான் தேற்றுகிறாள்.பின்னர் திலகா தன்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கைலாசத்திடம் வேறு வழியின்றி சரணடைகிறாள். பின் அவனால் ஏமாற்றப்பட்டு மீண்டும்  தாயிடம்  திரும்புகிறாள்

தன் கம்பெனியில் வேலை செய்யும் முத்துகுமாரை விரும்புகிறாள் வசந்தி . தன் பின் தொடரும் செல்வத்தை அவள் கண்டு கொள்வதேயில்லை . ஒரு கட்டத்தில் கம்பெனி முதலாளியின் பெண்னை முத்துகுமார் திருமணம் செய்யப் போவதை அறிகிறாள் . அத்திருமணத்திற்கு செல்வதற்கான   வண்டியில் விழுந்துவிடலாமா என யோசித்தவள் ஒரு கணம் சுதாரித்து வீடு திரும்புகிறாள் .திரும்பும் வழியில் செல்வம் வண்டியில் வருகிறான் .என்றும் காணதது போல கடந்து சென்று விடும் வசந்தி அவனை பார்த்து ஒரு புன் சிரிப்போடு கடந்து போகிறாள் .....முன்பு கம்பெனி வாசலில்   ‘பாக்கு போட்டவர்கள் உள்ள வரக்கூடாது என கைலாசத்திடம் சொல்லிச் செல்லும் திலாகாவை ஞாபகப்படுத்துகிறாள் ;

இம்மூன்று பெண்களின் வழியாக மூன்று விதமான ஆண்களின் முகத்தை கதை காட்டுகிறது . ஒன்று கூடவே இருக்கும் கணவன் குடியால் தன்னை சீரழித்து குடும்பத்தை சீரழிப்பவன் . இரண்டு திருமணமான சில மாதங்களில் பாலியல் இச்சை தீர்ந்ததும் அவளை துன்புறுத்துவன் வேறு பெண்ணை வேசியை மனைவி இருக்கும் போதே வீட்டுக்கு அழைத்து வருபவன் .மூன்று தான் காதலித்த பெண்ணை பணத்தின் பொருட்டு கைவிடுபவன் என  கதையில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் அனைத்தும் எதிர் மறையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது..

தாய் கருவை தன் இத்தனை பழிப்பேச்சிற்கும் பிறகும் அக்கருவை சுமப்பது  பெற்ற பிள்ளையிடம் தாய் கருவை சுமந்து கொண்டு அழும் தருணம் நெகிழ வைக்கும் இடம் . தாய் மகள் தங்கள் கதா பாத்திரங்ககளை இடம் மாற்றிக் கொள்கின்றனர்

திலகாவை கைலாசத்துடன் அனுப்பி விட்டு உள்ளே புத்தகங்கள் அடுக்கிக் கொண்டிருக்கும் தீபாவை அடிப்பதின் வழியே கதை எதைச் சித்தரிக்க முயலுகிறது?

சகோதரிகள் கதையில் வரும் பெண்கள்  அனைவரும்  தங்களின்  வாழ்வின் அடிப்படை  சந்தோசங்களான எதையும் பெறவில்லை  .  ஒவ்வொறுவரும் உள்ளுக்குள் தீராத உடல் இச்சைக்காக  ஏங்குகிறார்கள்  அது கிடைக்காத தருணத்தில் தங்களை உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் .அதன் புற வெளிப்பாடு தானோ ஒருவர் மேல் மற்றொருவர் காட்டும் வன்மம் தீபாவை தவிர கதையில் வரும் பெண்கள் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாகவே இருக்கின்றனர் . (தீபா இன்னும் வயதுக்கு வராத சிறு பெண் )

K N செந்திலின் இரு கதைகளை படித்துள்ளேன் (நிலை மற்றும் சகோதரிகள்).இவ்விறு கதைகள் பேசும் கரு மிகப்பழமையானது தான் அவற்றின்  சிடுக்கான அல்லது கறாரான மொழிநடை   இக்கதைகளை நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கின்றன .

சகோதரிகள் கதையில்  வரும் அம்மா ஒரு ஆண் குழந்தை பிறந்தால் தன் துன்பம் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறாள் . நிலை கதையில் அப்பாவிடமிருந்து பிரிந்து  தன் சொந்த கால்களில் நின்றால் நித்யா தனக்கு கிடைப்பாள் என்று நம்புகிறான் மாதேஸ்வரன் .  இரண்டும் ஈடேறாமல் போகிறது.

வறுமை ஒருவனுக்கு நிலையின்மையும் தவிப்பையும் கொடுக்கிறாதா?

பாத்திரக்கடையில், துணிக்கடையில் ,ஆலைமில்களில் ,பேருந்து பயணங்களில் என தினம் நாம் வாழும் உலகின் மற்றொரு பாகத்தில் தங்களுக்கான கனவுகளைச் சுமந்து கொண்டு போய்கொண்டு தானிரு
க்கிறார்கள் . திலகாவும் ,சுந்தரியும், வசந்தியும் கூடவே தீபாவும் ..

துளிர்த்து நின்றநீரைக் கடந்து ஒரு கணம் இருவரது கண்களும் தொட்டு அறிந்து மீண்டன. சட்டெனவசந்தி வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள். அதற்குள்ளாகவேஅக்கண்களில் இருந்ததை திலகா படித்து விட்டிருந்தாள். தாமதிக்காமல் எழுந்துபோய் வசந்தியின் அருகில் அமர்ந்து எதுவும் பேசாமல் அவள் கைகளை எடுத்து தன்கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். 

மலர்ந்த சிரிப்பும் பிரியமுமாக “உக்காரு கண்ணு . . .” என்றார். அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்தவைகளனைத்தும் பீறிட்டுக் கிளம்ப அந்த வெற்றுவெளியில் என் குரல் உடைந்து சிதற அவர் முன் முழந்தாழிட்டு அமர்ந்து அவர் கையைப் பற்றியபடி கதறி அழத்தொடங்கினேன்.

முதல் பத்தி சகோதரிகள் கதை முடியும் இடம். இரண்டாம் பத்தி  நிலை கதை முடியும் இடம்.  இவ்விறு கதைகளும் நமக்கு உணர்த்துவது ஒன்று தான் ...ஆம் வாழ்க்கை இன்னும் இருக்கிறது

பேசும் பூனை;
நீண்ட நாட்களாக  பேசும் பூனை போன்ற ஒரு கதையை அல்லது நாவலை படிக்க மனம் ஏங்கிக்கொண்டிருந்திருக்கிறது என்பதை அக்கதையின் முதல் வாசிப்பிலேயே உணர்ந்துகொண்டேன் .ஒரு வருடத்திற்கு முன் தீவிரமான காந்தி போபியாவில் இருந்த போது காந்தியைப் பற்றி எழுத துவங்கிய கதை இன்னும்  நான்கு வரிகளை தாண்டாமல் நொண்டி அடிக்கிறது.

நுகர்வுகலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக சூழலியலையும் விட மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிற ஒன்று....மனித குல வரலாற்றில் முன் எப்போதும் மனிதன் இந்த அளவிற்கான பொருட்களை நுகர்ந்ததில்லை .இன்று பொருட்கள் மனிதனின் உளவியலை மாற்றுபவையாக இருக்கின்றன . அதிகப்படியான உழைப்பும் அதிகப்படியான நுகர்வும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.மனிதன் இயற்கையிலிருந்து விலகி மனிதர்களிடமிருந்து விலகி தன்னையே அறியாமல் மீளா தனிமையில் சிக்கியிருக்கிறான் .

பொருட்கள் அவனை அத்தனிமையிலிருந்து மீட்டெடுக்கும் என நம்புகிறான். அவற்றை நேசிக்கத்துவங்குகிறான் ஒரு கட்டத்தில் எல்லை மீறிய எதிர்பார்ப்பின் விழைவாக தீவிர மன அழுத்ததிற்குள்ளாகி தன்னையே மாய்த்துக்கொள்கிறான் . அல்லது பிறரை கொலை செய்கிறான் உதாரணம் (அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம்)
இதற்கான மாற்று இயற்கையோடு இணைந்து சிக்கனத்தோடு வாழ்தல் இங்குதான் நமக்கு காந்தி தேவைப்படுகிறார் .சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இயந்திரங்களை குறித்து அவர் எழுப்பிய சந்தேகம் எவ்வளவு தீர்க்கமானது என்பதை இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது .

காந்தியச்சிந்தனை என்ற மாபெறும் தரிசனத்தைப் பற்றி நிறையை எழுதப்பட்டிருந்தாலும் .ஒரு புனைவில் சொல்லுபோது அது வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல வாசகன் மனதில் நேராகச் சென்று தைக்கிறது .அவ்வகையில் பேசும் பூனை கதை எடுத்துக் கொண்ட கரு உலகளாவிய தன்மை கொண்டதும் மிக முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன் .

கத்தாரில் இருக்கும் கணவன் . காரைக்குடியில் இருக்கும் மனைவி மகள், முன்னர் சாதாரண தொலைபேசியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பேசிக்கொண்டவர்கள் புதிய தொலைபேசி மூலம் அடிக்கடி உரையாடிகின்றனர் .புகைப்பட பறிமாற்றம் ,குரல் அஞ்சல் என புதிய தகவல் தொடர்புகள் ,புதிய தொலைபேசியில் புதிய நிரலி ஒன்று ஏற்றப்படுகிறது அதன் பெயர் பேசும் பூனை.

மகளுக்கு பிடித்தமான பூனை விரைவில் அவளை விட அம்மாவிற்கு புதிய தோழமையாக மாறுகிறது . தன் பேச்சின் மூலம் செயல்கள் மூலம் அம்மாவை ஈர்ப்பதோடு அவளுக்கு தேவையான தேவையில்லாத அனைத்தையும் அவ்வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது (அவளுடைய பணத்தில்).ஒவ்வொரு வேலை செய்வதற்கும் இயந்திரம் வாங்க ப்பட்டு கடைசியில் உடல் வேலைசெய்வதற்கும் வாங்கப்படுகிரது ஒரு இயந்திரம் ....அது இரவில் மகளின் தலையணைக்கு பதிலாக பயன்படுகிறது

ஒரு கட்டத்தில் பூனையால் மகளுக்கும் தாய்க்கும் சண்டை வருகிறது .பூனை மகளைப் பற்றி அம்மாவிடம் கோல் மூட்டுகிறது .பூனையை விட முடியாமலும் தொடரமுடியாமலும் தவிக்கும் தாய் இருதியில் .பிளேடால் கையைக் கிழித்துக் கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் போது அவளுக்கு பிடித்தமான ஸ்வர்ணலதா பாடிய பாடல் கேட்கிறது பூனையின் குரலில் ....அத்துடன் கதை முடிகிறது

கணேசனுக்கும் தேன் மொழிக்குமான பாலியல் இச்சை ஒருபோதும் நிறைவுறுவதில்லை .ஏதோ ஒரு தேவையின் பொருட்டே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள் .கணேசன் தன் மனைவியை ஒரு நுகரப்படும் பொருளாகவே பார்க்கிறான்.இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இருமாதங்கள் அவளை முழுமையாக உறிஞ்சுவிட்டு திரும்ப சென்றுவிடுகிறான்.

அவர்களுக்கிடையேயன பேச்சுக்களில் காமம் தவிர்து பிற பேச்சுக்கள் குறைவு.

பூனையின் கேள்விகளும் பதில்களும் கதையில் தேன்மொழியைப் போலவே வாசகனையும் திடுக்கிடச்செய்கின்றன.தொழில் நுட்பயுகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் மாபெறும் சாவலை விடுக்கிறது இந்த பேசும் பூனை என்றே எண்ணத்தோண்றுகிறது...

SUNEEL KRISHNAN HAS WRITTEN HIS STORY

கதிரேசன்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete