சொட்டுகள் - சிறுகதை
பக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டு குளிக்க வேண்டும் போலிருந்தது. ஷவர் குளியலை வெறுக்கத் தொடங்கிப் பல நாட்கள் ஆகின்றன. இருந்தும் பக்கெட்டில் தண்ணீர் திறந்துவிட்டால் அது சத்தம் எழுப்பும் என்பதற்குப் பயந்தே ஷவரில் குளித்துக் கொள்வேன். நான் ஆற்றில் குளித்தது கிடையாது. அருவிகளை நேரில்கூடப் பார்த்தது கிடையாது. கொல்லைப்புறத்தில் தன் மகளுக்காக அம்மா அளந்து வைக்கும் தண்ணீர்தான் குளிப்பதற்கு. சில நாட்களில் குளிக்கும் இன்பத்தில் சோப்பு போடுவதற்கு முன்பே மொத்தத் தண்ணீரையும் காலி
செய்து விடுவேன். சோப்பு போடாமல் உடலைத் துவட்டிக்கொண்டு உள்ளே சென்றால் அம்மா திட்டத் தொடங்கி விடுவாள்.
‘அப்படி எந்த தடிப்பயல நினைச்சுட்டு நீ குளிக்கிற’ என்பாள் பெரும்பாலும்.
அவள் யாரை நினைத்துக்கொண்டு குளிக்கிறாள் என்று கேட்க வேண்டுமெனத் தோன்றும். கேட்டதில்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் நான் கேட்டிருந்தால் அவள் ஆணவம் சீண்டப்பட்டிருக்கும். எப்படியும் என்னை மேலே படிக்க விடாமல் செய்து அவள் கணவனைப் போன்ற ஒருவனுக்குக் கட்டிக் கொடுத்திருப்பாள். அவளுடைய வீழ்ச்சிகளால் அவள் மனதில் எழும் மொத்த ஆற்றாமையையும் என்னைத் திட்டுவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறாள் என எண்ணிக் கொள்வேன். அவளுக்காக என்னால் பரிதாபப்படவும் முடியவில்லை. புனேவிற்கு வேலையில் சேர்வதற்கான பணியாணையுடன் அவளிடம் வந்தபோது அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. என்னை நோக்கிச் செலுத்துவதற்கான எல்லா ஆயுதங்களையும் இழந்திருந்தாள். என்னைப் பிரிய முடியாமல் தவிப்பதாய், என் அருகாமை தனக்கு வேண்டும் என விரும்புவதாய், என்னுடைய குறித்தூய்மை பாதிக்கப்படும் எனப் பதறுவதாய் என அவள் போட்ட அத்தனை நாடகங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டேன். வெற்றியின் அர்த்தம் என்னவென்று அன்றுதான் உணர்ந்தேன். அதன்பிறகு அடைந்த அத்தனை வெற்றிகளிலும் அந்தக் குரூரத் திருப்தியும் ஒரு வித களிப்பேற்படுத்தும் வக்கிரமும் கலந்தே இருந்தன. திருமணம் உட்பட. விக்னேஷைக் காணும்போதெல்லாம் உள்ளெழும் எண்ணம் இவன் என்னால் வெல்லப்பட்டவன் என்பதே. ஒருவேளை சில வருடங்களுக்குமுன் விக்னேஷிடம் யாரேனும் கேட்டிருந்தால் அவர் மீது எல்லையற்ற அன்புடனும் குழந்தை மீது மிகுந்த அக்கறையுடனும் நான் நடந்து கொள்வதாக அவன் சொல்லியிருக்கக்கூடும். ஏன் எங்கள் உறவு அலுவலகத்திலும் உறவுகளிலும் ஒரு பொறாமையை உண்டு பண்ணியிருப்பதாகக்கூட அவன் எண்ணியிருக்கக்கூடும். பரிதாபத்துக்குரிய மனிதன். அத்தகைய என் தோற்றங்கள் எதுவுமே பொய்யல்ல. ஆனால் அந்தக் கருணையும் உழைப்பும் ஊற்றெடுப்பது என்னால் வெல்லப்பட்ட ஒருவன் என்ற அடிப்படை எண்ணத்தாலே.
புனேவில்தான் முதன்முறையாக ஷவரில் குளித்தேன். அந்நகரம் என்னை இன்றிருக்கும் நானாக மாற்றியது. முதல்முறை குளிக்கையில் அந்த ஷவரில் எந்நேரமும் தண்ணீர் தீர்ந்துவிடும் என்ற பயத்துடன்தான் குளித்தேன். ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நான் அதுவரை குளித்தது கிடையாது. முலைகளுக்கு மேல் துண்டைக் கட்டிக்கொண்டு, சோப்பு போடும் ஒவ்வொரு முறையும் கவனமாக ஷவரைத் திருகி மூடிவிட்டுக் குளிப்பது சிரமமாகவே இருந்தது. உடலில் சோப்பு வாடையும் குறைந்தது போல் இல்லை. என் இடுப்பிற்குச் சற்றே உயரம் குறைந்த ஒரேயொரு குழாய் இருந்தது. அந்தக் குளியலறையில் பக்கெட்டும் இல்லை. என் உயரத்துக்கு அந்தக் குழாய்க்குக் கீழாகக் குனிந்து அமர்வது முதுகு வலி தரக்கூடியது. குழாய்க்குக் கீழே படுத்துக்கொண்டு தண்ணீரைத் திறந்து விட்டுக்கொண்டு முன்னும் பின்னுமாக நெளிந்தேன். தரையில் ஒட்டியிருந்த பிசுக்குகள் என் உடலிலும் துண்டிலுமாகக் கறைப்படுத்தின. அன்று முழுக்க குளித்தது போன்ற உணர்வே ஏற்படவில்லை. பின்னர் மெல்ல மெல்ல என்னை ஷவருக்குப் பழக்கிக்கொண்டேன். மின் புள்ளிகள் போல் மேலே வந்து விழுந்து சில்லிட வைக்கும் துளிகளை ஒவ்வொரு முறையும் அச்சத்துடனே எதிர்கொண்டேன். ஒவ்வொரு நாளும் அப்புள்ளிகள் ஒவ்வொரு விதமாய் என்னை வதைத்தன. அந்தக் குளியலறை எனக்கு ஒரு அறைகூவலானது. அறைகூவல் அத்தனையுமே ஆணிடமிருந்தே வரவிரும்பிய நாட்கள் அவை. ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு குளிக்கத் தொடங்கினேன்.
எந்நேரமும் வெளிச்சம் பரவியிருக்கும் அந்த அறை ஒரு சமயத்தில் என்னுள் காமத்தை எழுப்பியது. எப்படி நடந்ததெனத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை குளிப்பதற்கு அந்த அறைக்குள் நுழையும்போதும் என் உடலுக்காக மட்டுமே காத்திருக்கும் ஒரு ஆண் உள்ளே இருக்கிறான் என்ற எண்ணம் எழும். என்னுடைய மும்முரமான அத்தனை பாவனைகளும் குளிக்கப்பதற்கான என் பரவசத்தை மறைப்பதற்கே. வெகுநேரம் புள்ளி புள்ளியாகத் துளைகள் உடைய அந்த ஷவர் நாசிலைப் பார்த்து நிற்பேன்.
என்னைப் புணர்வதற்கென்று எழுந்த ஆண்குறிகள் என்று ஒருமுறை என்னை மீறி ஒரு எண்ணம் எழுந்தது. அன்று முழுக்க என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது.
பின்னர் அக்குளியலை வெறுக்கத் தொடங்கினேன். வெறுப்பினூடாக மேலும் மேலும் குளியலின் நேரத்தை நீட்டித்துக் கொள்வேன். ஒவ்வொருவரின் அசைவிலும் சொல்லப்படாமல் எஞ்சுபவற்றை அந்த அறை எனக்கு நன்கு வெளிப்படுத்தியது. ஒளிச்சில்லாக உடலில் தெறிக்கும் நீருக்கடியில் அமர்ந்தபடி யோசிக்கும்போது, என்னிடம் சொல்லப்படும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும் சொல்லப்படாதவற்றுக்கான வார்த்தைகளையும் என்னால் உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
என் விழிகள் தீர்க்கம் கொண்டன. அடைக்கப்பட்ட இரும்பு அறைக்குள் நுழைந்தது போன்ற அமைதியின்மையுடன் மட்டுமே பிறரால் என்னுடன் உரையாட முடிந்தது. டெல்லிக்கு மாற்றலானபோது நல்ல குளிர்காலம். வெகுநேரம் புனேயின் குளியல் அறையில் அமர்ந்து அழுதேன். நிர்வாணமாக, அந்த அறையை அப்படியே அள்ளி என்னுள் செலுத்திக் கொள்ள நினைப்பது போல, கைகளை விரித்து குப்புறக் கிடந்தேன். டைல்ஸ் தரையை முத்தமிட்டேன். சுவர்களில் கன்னங்களை உரசிக்கொண்டேன். அந்த அறையுடன் உலகம் முடிந்து விடாதா என்றிருந்தது எனக்கு. குளியலறைக்கு வெளியே கால் வைத்தபோது கால்கள் பாறைபோல இறுகியிருந்தன. அதிகாலையில் உறங்கிய தோழியை முத்தமிட்டு கிளம்பியபோது புனேவின் அந்தக் குளியலறையை முற்றிலும் விலகியிருந்தேன்.
விக்னேஷைச் சந்தித்தது டெல்லியில்தான். அதிகாலைகளில் நீர் சூடாகவே இருக்கும். பெரும்பாலும் நான் அப்போது குளிப்பதில்லை. குளிர் உச்சம் தொடும்
குறிப்பிட்ட ஒரு நேரமே என் குளியல் நேரம். அடர்பனி நாட்களில் பெரும்பாலும் குளிராது. அப்போது வீசும் காற்றே குளிரைக் கலைத்து விடும். மூச்சுவிடவே முடியாமல் திணறும் அளவிற்கு குளிர் நீரில் மூழ்கித் திளைப்பேன். பாத் டப் பெரும்பாலான நாட்களில் உறைந்திருக்கும். அந்தப் பனிக்கட்டியில் என்னை புதைத்துக் கொள்வது ஒரு உக்கிரமான அனுபவம். அப்போது கூட கன்னம் வழியாகப் பின்கழுத்தினைத் தொடும் வெய்ய நீரின் கதகதப்பை உணர முடியும். ஒரு ஆணை எல்லாப் பக்கங்களிலும் சூழ்வது ஒரு பெண்ணுக்கு மிகச்சிறிய செயல் என்பதை காதலிக்கும்போது ஆண்கள் அறிவதேயில்லை. விக்னேஷும் ஒரு நொடி விடாமல் அவனை நான் நினைத்துக் கொண்டிருப்பதாக நம்பினான். அவனைச் சீண்டி விளையாடுவது எனக்குப் பிடித்த விளையாட்டு என்பதை இன்றுவரை விக்னேஷ் அறியவில்லை. அவனை விட்டு முழுமையாக விலகியது
முதற்புணர்விற்குப் பிறகுதான்.
பெண்ணுடல் அவனுக்குப் புதிதல்ல என்று எப்படியோ அன்றிரவு அறிந்தேன். எவ்வளவு கட்டுப்படுத்தியும் ஒரு பொறாமை சட்டென மனதைத் தாக்கியது. முதன்முறையாக அவனை என் வசப்படுத்த எண்ணினேன். அந்த வெறுப்பே அப்புணர்வை இனிய அனுபவமாக்கியது. அன்றிரவு மிக ஆழத்தில் யாரோ சிரிப்பது போலத் தோன்றியபோது உடலை உலுக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தேன். அருகில் அவன் உடல் கிடந்தது. சற்று நேரத்திற்குமுன் என்னோடு இயங்கிய உடல் அது என்பதே குமட்டல் ஏற்படுத்தும் எண்ணமாக இருந்தது. மயிரடர்ந்த தொடைகளும் மார்புகளும் திறந்த வாயும் கன்னத்தில் ஒழுகியிருந்த எச்சிலும் என அவன் தனித்தனியே அருவருப்பூட்டினான். குளியலறைக்கு எழுந்து ஓடினேன். ஷவரின் குழாயில் மெல்லிய துரு. தரையில் டைல்ஸ் ஒரு சென்டிமீட்டர் அளவிற்குப் பெயர்ந்திருந்தது. சுவரில் புள்ளிக் கறைகள். எனக்கு அந்த அறை அப்போது அழுக்கும் துர்நாற்றமும் நிறைந்ததாக இருந்தது. குளியலறைக் கதவைத் தாழிட்டபின் நள்ளிரவு தாண்டும் வரை அங்கேயே அமர்ந்திருந்தேன். அம்மாவின் நினைவு எழுந்தது. விக்னேஷை மணம் புரிவதற்கு முன்னரே அவள் இறந்திருந்தாள். அவளிடம் தோற்றுவிட்டதாகத் தோன்றியது. மீண்டும் படுக்கை அறைக்கு எழுந்து சென்று அவனை எழுப்பினேன்.
ரேகா பிறந்த பிறகு அனைத்தும் மாறத் தொடங்கியது. சில நேரங்களில் அவளைக் கொன்றுவிடும் அளவிற்கு வெறுப்பு எழும். இருபத்தைந்து வயதைத் தொடும் முன்னரே என்னை அவள் வீழ்த்திவிட்டதாக எண்ணிக் கொள்வேன். குழந்தை பிறக்கும் வரைதான் பெண் ஆண்களின் உலகில் வாழ முடியும். தாய் என்பதால் ஒரு ஆண் பெண்ணிற்குக் கொடுக்கும் மரியாதை மரியாதையைவிட மிகப்பெரிய அவமானம் வேறேதும் இருக்க இயலாது.
சென்னைக்கு வந்த பிறகு விக்னேஷ் தன்னுடைய சிவில் இன்ஜினியரிங் துறையில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினான். அவனுடைய மூர்க்கமான ஆர்வமே அவன் என்னையும் ரேகாவையும் எந்த அளவிற்கு விலகிச் செல்ல நினைக்கிறான் என்பதை எனக்கு உணர்த்தியது. அவனை வதைப்பதற்கெனவே ரேகாவிடம் உயிரையே வைத்திருப்பது போன்ற பாவனைகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். லாரி பேக்கரின் வழித்தோன்றல் ஒருவரிடம் விக்னேஷ் பயிலத் தொடங்கினான். மிகக் குறைவான இடத்தில் தனித்தனியே வசிப்பதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட குடியிருப்புகளை உருவாக்குவதில் தனித்திறனுடன் செயல்பட்டான். முதலில் அப்படி அவன் உருவாக்கியது நாங்கள் வசிக்கும் குடியிருப்பே. விக்னேஷ் எனக்களித்த மிகச்
சிறந்த பரிசு என் அறை. ஒருநாள் முழுக்க ஒரே வீட்டில் இருக்க நேர்ந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட ஏற்படாதவாறு அமைக்கப்பட்ட வீடு அது. அந்த அறைக்காகவே அத்தனை நாள் நான் பயணித்ததாக எண்ணிக் கொள்வேன். வேலை நிமித்தமான வெளிநாட்டுப் பயணங்களின்போதுகூட அந்த அறை மட்டுமே என் நினைவில் இருக்கும். என் அகம் விரிவினை எதிர்கொள்ளப் பயந்தது. சுற்றி ஓடி விளையாட இளவயதில் விரிந்த பொட்டல் வெளிகள் இருந்தும் வீட்டிற்குள் அடைந்து கிடந்து படிப்பது மட்டுமே என் உலகமாக இருந்தது. சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில் என் அறை எனும் பொந்துதான் எனக்கு ஆறுதலளிக்கும். அந்தப் பொந்தை அனைத்து வசதிகளும் உடையதாக விக்னேஷ் மாற்றிக் கொடுத்துவிட்டான்.
ரேகாவும் மெல்ல மெல்ல என்னை விலகினாள். அவளுக்கென ஒரு தனி
உலகம் உருவாகியிருந்தது.
உணவருந்தும்போது மட்டும் ‘விக்கி, ஐ நீட்...’ என்பது போன்று ஏதேனும் கேட்பாள். பெரும்பாலும் ‘ஐ நீட்...’ எனத் தொடங்காமல் அவள் எங்களிடம் பேசுவது கிடையாது.
பன்னிரண்டு வயதிருக்கும்போது ‘மா, யூ டோன்ட் ஹாவ் டு ஸ்கேர் அபௌட் மை வாண்ட்ரிங்ஸ். ஐ நோ வாட் ஐ ஹாவ் டு பி’ என்றாள். நான் என்னைப் பணயம் வைத்து அடைந்த இடத்திற்கு எந்த இழப்பும் இல்லாமல் வந்து சேர்ந்திருப்பவள். அவளுடைய நியாயங்களை என்னால் எதிர்க்க முடியவில்லை. ரேகா சத்தத்தை முழுமையாக வெறுப்பவள். தனித்திருந்து பழகியதால் வேகமாக அழைப்பது கூட அவளை எரிச்சல் படுத்தும்.
‘போத் ஆப் யு. திஸ் இஸ் தி லிமிட். யு வான்ன கண்டினியு திஸ் ஷௌட்டிங் யு ஹாவ் டு சீ மீ டெட்’ என்றாள். விக்னேஷ் நடுங்கிவிட்டான். அன்றிலிருந்து அவன் வீட்டிற்கு வருவது குறைந்து விட்டது. லேடி காகா பிரிட்னி ஸ்பியர்ஸ் என்று தொடங்கியவள் இளையராஜா ரஹ்மான் என மாறி முழு நாளும் இசை கேட்ட வண்ணமே இருப்பாள். ஒழுங்குகூடிய அந்தச் சத்தங்களை மட்டுமே அவள் செவிப்பறை ஏற்றுக் கொண்டது. காரில் செல்லும்போது சிறிது நேரம்கூட கார் கண்ணாடி திறந்திருக்க அனுமதிக்கமாட்டாள்.
சில தினங்களுக்குமுன் மளிகைப் பொருட்களுக்குக் கொடுக்கப்பட்ட இலவசம் என வேலைக்காரி ஒரு பக்கெட்டும் மக்கும் வாங்கி வந்திருந்தாள். அதைப் பார்த்தது முதலே என் மனம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. ஒருமுறை ஒரு மதிய வேளையில் அந்த பக்கெட்டில் லேசாகத் தண்ணீர் திறந்து விட்டுப் பார்த்தேன். ஒரு சொட்டு விழுந்ததுமே என் மனம் அதிரத் தொடங்கி விட்டது. அப்படியே எடுத்து வைத்துவிட்டேன்.
இன்று அந்த எண்ணம் அடக்க முடியாததாக மனதை நிறைக்கிறது. என் குளியலறையில் மூச்சு விடும் சத்தம்கூட ரேகாவின் அறையில் கேட்கும். நான் குளிக்கும் நேரத்தில் அவள் தியானத்தில் மூழ்கி இருப்பாள். கண்ணை மூடிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க என்னால் முடியவே முடியாது. விக்னேஷிடம் அவள் கற்றுக் கொண்டது இது மட்டுமே. அவளை வதைக்க வேண்டும் என நினைத்தேன். பின்னர் பயம் எழுந்தது. இனி தாங்கவே முடியாது என்ற நிலை வந்தபோது லேசாகத் தண்ணீர் திறந்துவிட்டேன். அழுத்தமான ப்ளாஸ்டிக்கில் தண்ணீர் விழுந்ததும் அந்த அறை முழுதும் மௌனத்தைக் கடந்து வந்து உறுமும் மிருகங்களால் சூழப்பட்டது போல் உணர்ந்தேன். பின்னர் விரைந்து காரில் செல்லும்போது அடிபட்டு அடங்கும் நாயின் இறுதி ஒலியாக அந்தச் சத்தம் எனக்குக் கேட்டது. பின் உலகின் ஒலிகள் மொத்தமும் என் பக்கெட்டில் வந்து நிரம்பி மௌனம் நோக்கிச் செல்வதாகப்பட்டது. பரவசத்துடன் நீர் நிரம்பிக் கொண்டிருந்த அந்தச் சிகப்பு பக்கெட்டையே பார்த்து நின்றிருந்தேன்.
அரை நிர்வாணமாக இருந்த என்னை நோக்கி, ‘இடியட்’ என்ற உறுமலுடன், பாதி மூடியிருந்த என் குளியல் அறைக்கு வந்தாள் ரேகா.
அவளை நோக்கித் திரும்பியபோது என் கண்களில் என் அம்மா தெரிவதை அவள் முகம் எனக்குச் சொல்லியது.
Perfect
ReplyDelete