முடிவின்மையின் ருசி
கண்கொடுத்தவனிதம் அரசினர் தொடக்கப்பள்ளியில் இருந்து தக்களூரின் எல்லையில் இருக்கும் என் வீடு அரை கிலோமீட்டருக்கு சற்று அதிகமான தூரம். நரம்பு பை அல்லது ஒயர் கூடையை தோளில் மாட்டிக்கொண்டு நடந்தபடியே பள்ளி முடிந்து திரும்புபோது நண்பர்களிடம் கதைகளைச் சொன்ன நினைவிருக்கிறது. டைம்மிஷினில் சக்திமானோடு பயணித்ததும் பறக்கும் பாயில் படுத்துறங்கி மொழி தெரியாத தேசத்தில் கண் விழித்ததும் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.
கதைகளில் நான் எதிர்பார்ப்பதும் அளிக்க நினைப்பதும் முடிவின்மையைத்தான். கதைகள் முடிவுறுவதில் இருக்கும் விருப்பமின்மையே என்னை எழுதத்தூண்டுகிறது. ஒரு மனிதனின் ஒரு வீட்டின் கதையை கேட்பதிலும் சொல்வதிலும் ஆர்வமில்லாதவனாகவே இருந்து வந்திருக்கிறேன். நாடுகள் அரசுகள் நிறைய மக்கள் அவர்களின் வாழ்க்கை என எப்போதும் மனம் நீண்டு கிடப்பதை விரிந்து பெருகுவதையே கற்பனை செய்து கொண்டிருந்தது. அதனாலோ என்னவோ மகாபாரதம் போன்ற வம்ச வரலாறுகளைச் சொல்லும் , ஒரு கதையை மற்றொரு கதையைக்கொண்டு ஊடறுக்கும் விதமாக சொல்லப்படும் எழுதப்படும் புனைவுகளை விரும்பினேன்.
புனைவு வாசிப்பில் என் நோக்கம் முடிவின்மையாகவே இருந்தது. புனைவெழுத்தை சமூக மாற்றத்திற்கான கருவியாகவோ தனி மனித ஈடேற்றத்திற்கான செயல்பாடாகவோ என்னால் எண்ணிக் கொள்ள முடியவில்லை. அது இங்கு எப்போதும் நிலவும் முடிவின்மையைக் காட்டும் ஒரு தகழியாகவே எனக்கிருந்தது. அடைத்து வைக்கப்பட்ட புட்டிகளில் அல்ல கூட்டிலிருந்து சொட்டிய தேன்துளியின் ரகசிய மணத்தைக் கொண்டிருக்கும் புனைவுகளையே நான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். எழுதும் கணத்தில் தன்னை முடிவின்மைக்கு ஒப்புக்கொடுத்துவிடும் தன்னுள்ளிருந்து பெருகுவதை தடுக்காத படைப்பாளியை என்னால் மிக மிக அந்தரங்கமாக உணர முடிந்தது. அவ்வகைப் படைப்புகளின் ஒவ்வொரு வரியிலும் முடிவின்மை பளிச்சிடுகிறது. தஸ்தாவெய்ஸ்கியையும் ஜெயமோகனையும் அப்படி உணர்ந்த கணங்கள் பல இருக்கின்றன. அப்படி ஒப்புக் கொடுப்பதற்கான தைரியம் எனக்கு இருக்கிறதா என்ற கேள்வியின் விளைவுகளே என் புனைவுகள்.
எனக்கானதாக எழுதி வைத்துக் கொண்டவற்றைத் தாண்டி பிறருடன் பகிர்ந்து கொள்ள என்னிடம் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்தபோது அவற்றுக்கான பதிலாக என்னைத் தாக்கிய மரணங்களே இருந்தன. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வாட்ச்மேன் ஒருவரின் முகமும் உடையும் எனக்கு மறக்கவே இல்லை என்பதையும் மரணம் உண்மையில் மனித மனங்களில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கிவிடுவதில்லை என்பதையும் ஆச்சரியத்துடன் உணர்ந்தேன்.
இறக்க விரும்பும் ஒருவனின் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை ஊகிக்கவே ஒளிர்நிழலின் தொடக்கத்தில் அதன் ஆசிரியனான சுரேஷ் பிரதீப்பை தற்கொலை புரியச் செய்தேன். இறப்பிற்கு முன் ஒருவன் எதையெல்லாம் கவனித்திருப்பான் என்பதை எழுதப்போய் அதுவே இறந்தவன் எழுதிய ஒரு நாவலாக விரிந்துவிட்டது. மரணத்தின் சாயலற்ற அத்தியாயங்கள் ஒளிர்நிழலில் குறைவு. மனித உறவுகளில் வெளிப்படும் அகபாவனைகள் அரசியல் சமூகம் மற்றும் கருத்தியல் தளங்களில் நாம் மேற்கொள்ளும் புற பாவனைகள் என அனைத்தும் இந்த மரணங்களின் பின்னணியிலேயே அந்த நாவலில் வெளிப்படுகின்றன. எந்தவித திட்டமிட்டலும் இல்லாமல் தொடங்கிய நாவல் தானாகவே ஒரு ஒழுங்கை உருவாக்கிக் கொண்டு வளர்ந்ததை மரணம் குறித்தும் வாழ்வு குறித்தும் எனக்கிருந்த கேள்விகளின் மீது ஒளிபாய்ச்சியதோடு முடிவடைந்ததை ஆச்சரியத்துடன் உணர்கிறேன்.
எந்த சூழ்நிலையிலும் தன்னலத்தை மட்டும் கருதுகிறவர்கள் மீது எனக்கு ஆழ்ந்த விலக்கம் உண்டு. ஆனால் அத்தகையவனான சக்தியே இந்த நாவலில் நாயகனாக ஆகியிருக்கிறான். கள்ளமின்மை கொண்ட என் சுபாவத்தோடு ஒத்துப் போகும் குணா அவன் முன் தோற்று நிற்கிறான். நான் கண்ட பழகிய பெண்களின் சாயல் கூட என் புனைவுகளில் வரும் பெண்களிடம் இல்லை.அருணா உட்பட என் புனைவுகளில் உலவும் பெண்கள் எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கின்றனர். நான் எதை கவனிக்கிறேன் எவற்றை ரசிக்கிறேன் எவற்றையெல்லாம் ஏற்கிறேன் என்று சொல்லத் தயங்கும் அளவுக்கு என் புனைவில் நான் விரும்பாதவையும் விலக்கி வைத்திருப்பவையும் நிறைந்திருக்கின்றன. வீட்டினை சுத்தம் செய்யும் போது ரொம்ப நாட்களாக ஒரே இடத்தில் இருந்த பொருளை இடம் மாற்றி வைத்தால் அப்பொருள் நமக்குள் சிறு திகைப்பினை உருவாக்கும். அதன் தூசுபடாத பகுதிகள் துலக்கம் பெறுகின்றன. அது வைக்கப்பட்டிருக்கும் புது இடத்தில் வேறொரு வகையான அர்த்தத்தை அப்பொருள் உருவாக்குகிறது. அதுபோல எனக்குள் இருக்கும் உணர்வுகளின் வெவ்வேறு பக்கங்களை அறிவதற்காகவே மீண்டும் மீண்டும் புனைவிலக்கியத்திற்குள் செல்கிறேன். எழுதும் கணத்தில் ஒரு புனைவு எனக்குள் உருவாக்கும் அர்த்தவெளி எனக்கு அவசியமாகிறது.
சிறுகதைகளைப் பொறுத்தவரை அவற்றின் இறுக்கமான வடிவத்துக்கு பழகுவதற்கு எனக்கு சற்று நாட்கள் பிடித்தன என்பதே உண்மை. இயல்பிலேயே பெரிய காலத்தை கற்பனை செய்யும் மனம் கொண்டிருந்ததால் சிறுகதையின் அடர்த்தியை என்னால் அடைய முடியாமல் இருந்தது. கனமான வெகுநாட்களாக நம்மை தொந்தரவு செய்து கொண்டிருக்கும் சம்பவங்களை எழுத சிறுகதை சிறந்த வடிவம் என உணர்ந்து கொண்ட பிறகு சிறுகதைக்கான வடிவத்தை கைப்பற்ற முடிந்தது. நாயகிகள் நாயகர்கள் தொகுதியின் பல கதைகள் ஒளிர்நிழல் எழுதிக் கொண்டிருந்தபோது எழுதியவை. பெரியம்மா வீடு,அம்மா வீட்டில் இல்லாதபோது போன்ற பால்யத்தின் கதைகள் ஒருபுறமும் மாசிலன்,பார்கவி போன்ற மரணத்தைச் சொல்லும் கதைகளை மறுபுறமும் எழுதியிருக்கிறேன். ஆனால் எந்தக் கேள்வியும் இன்றி தன்னிச்சையாக வளர்ந்த சொட்டுகள்,சில்ற போன்ற கதைகளின் வழியாகவே எனக்கான வடிவத்தையும் மொழியையும் கண்டு கொண்டேன்.
மனதில் தோன்றும் கண நேர உணர்வுப்படிமங்களை வார்த்தைகளாக்கிய பின்பு கிடைக்கும் விடுதலைக்காகவே சிறுகதைகள் எழுதுகிறேன். அத்தகைய படிமங்கள் தோன்றும் வரை காத்திருப்பதைத் தவிர சிறுகதை எழுதுவதற்கு வேறு வழியில்லை. 446 A கதையில் வரும் பேருந்து அத்தகைய படிமம். பரிசுப்பொருள் கதையில் வரும் கருப்பையும் எஞ்சும் சொற்களில் வரும் ஆட்சியர் அலுவலகமும் என்னை தொந்தரவு செய்த படிமங்களே. அவற்றை வளர்த்தெடுக்க முனையும் போது அவை தீவிர கவனத்தைக் கோருகின்றன. சிதைவற்ற வெளிப்பாடுகளுக்கான மெனக்கெடல்களை கேட்கின்றன. அவற்றை கொடுத்து அக்கதைகளை உருவாக்கியபின் அப்படிமங்கள் தரும் தொந்தரவு குறைகிறது.
ஒட்டுமொத்தமாக சொல்வதெனில் எழுத்து ஒரு வகையான தப்பித்தலாகவே இருக்கிறது. அன்றாட வாழ்விலிருந்தோ பிரச்சினைகளிலிருந்தோ தப்பித்து புனைவில் நான் உருவாக்கிய உலகில் வாழ வழிசெய்யும் வகையிலான தப்பித்தல் அல்ல அது என்று தெளிவாகவே உணர்கிறேன். ஏனெனில் மனதுக்கு நெருக்கமான ஒரு கதையை எழுதி முடித்தபின் மேலும் தன்னம்பிக்கையுடன் உலகியலில் என்னை பிணைத்துக் கொள்கிறேன். இருந்தும் எழுத்து எதிலிருந்தோ என்னை தப்பிச் செல்ல வைக்கிறது.
அது என்னவென்று கண்டறியும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்காமல் புனைவெழுத்தின் வழியே என்னைத் தோண்டும் அல்லது திறந்து பார்க்கும் வேலையில் தான் ஈடுபடுகிறேன். என் வழியாக இந்த சமூகத்தையும் இங்கு நிலவும் வாழ்க்கையையும். முடியுமெனில் இந்த வாழ்வைக் கடந்தவற்றையும்.
சுரேஷ் பிரதீப்
கணையாழி மாத இதழில் ஏன் எழுதினேன் பகுதியில் இடம்பெற்ற கட்டுரை.
நன்றி - கணையாழி
Comments
Post a Comment