Friday 19 October 2018

ஒளிர்நிழல் கடிதம்

இது ஒரு எளிய வாசிப்பில் இருந்து எழும் விவரிப்பு.. ஒளிர்நிழல் என்ற பெயரை ஜெயமோகன் இணையதளத்தில் அறிந்திருந்தேன். சிரத்தை எடுத்து அது குறித்து தெரிந்து கொள்ளவில்லை. அழிசி கட்டுரைப்போட்டி, நடுவர்களின் பெயரை தெரிந்து கொண்ட போது, இப்பெயரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைவின் அடுக்குகளில் தேடி, திரும்ப ஜெயமோகனிடம் சரணடைந்தேன்.. அப்பொழுது தான் ஈர்ப்பு பற்றிய பதிவுகள் வந்தன. அதுவே நான் வாசித்த உங்களுடைய முதல் படைப்பாகவும் அமைந்தது. ஒரு வேளை ஒளிர்நிழல் வாசித்த பின், ஈர்ப்புக்கு வந்திருந்தால், இத்தனை அதிர்ச்சியும், ஆச்சரியமும் இருந்திருக்காது. உங்களிடமும் பகிர்ந்து கொண்ட பின், ஜெயமோகன் தளத்தில் தேடிய போது, நிறையப் பதிவுகள் கிடைத்தன. குறிப்பாக, எம்.ஏ.சுசிலா அவர்கள் விழாவில், பேசிய அனைவரின் உரையையும் அப்பொழுது கேட்டிருந்தேன்.அதை திரும்பவும் சமீபத்தில் கேட்ட போது, ஆழமான புரிதலும், தெளிவான கருத்தமைவும் அதில் வெளிப்பட்டதை உணர்ந்தேன்.
ஒளிர்நிழல் முதல் அத்தியாயத்திலேயே ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. புதிய வீரரின், ஃப்ர்ஸ்ட் பால் சிக்ஸர் ஏற்படுத்தும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். இன்னும் இன்னும் அடுத்த பக்கங்களை வேகமாகப் புரட்டும் உத்வேகம் வந்தது. ஆனால், வடிவம் அத்தனை வேகத்தை ஏற்கவில்லை.நிதானமான வாசிப்பை வேண்டியது. புதிய வடிவம். சட்டென்று காட்சிகள் மாறி, கவனத்தை தலைகீழாய் மாற்றும் போது திணறுகிறது. புதிய புதிய நபர்கள் வந்து போகிறார்கள்.சுரேஷ் சொல்லும் கதையை பின் தொடர்கையில், கதை சொல்லியாக ரகு மாறுகிறார். ஒரு நாவலில் இருக்கும் இடைவெளிகள் வாசகர் நிரப்பிக் கொள்ள வேண்டியவை என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், இத்தனை பெரிய இடைவெளிகளை எல்லா வாசகராலும் நிரப்பிக் கொள்ள முடியுமா தெரியவில்லை. என்னால், சில இடைவெளிகளை நிரப்ப முடியவில்லை. அத்தியாயம் 11 க்கு அப்புறம் 21, அப்புறம் 18 என்பது என் போன்ற மறதிக்கார வாசகருக்கு ரொம்ப சிரமம்.. வாசித்து முடித்த பின், திரும்ப அத்தியாய வரிசைப்படி ஒரு முறை வாசித்த பின்னரே எனக்கு ஒரு சித்திரம் முழுமையானது. ஜெயமோகன் “ஒளிர்நிழல்” பற்றி எழுதிய பதிவை மட்டும் வாசித்தேன்.
அருணா-சக்தி யின் உறவு அப்பட்டமாக, மரபு மீறிய மனித உறவுகளின் எல்லா பரிமாணங்களையும் காட்டியது. குணா-மீனா வேறொரு தளத்தின் உறவுநிலை. சிறுவன் செல்வராஜ் பற்றிய குறிப்பு 12ம் அத்தியாயத்தில், ஒளிர்நிழல் 21 என்று வருகிறது. 15ம் அத்தியாயத்தில், ஒளிர்நிழல் 20  என்று செல்வராஜின் திருமணம் வருகிறதே.. அதற்குள்ளே ஃப்ளாஷ்பேக்கா? எனக்கு புரியவில்லை. திரும்ப 23ம் அத்தியாயத்தில், ஒளிர்நிழல் 20 என்று வருகிறதே.. அதில் செல்வராஜின் மணவாழ்க்கை. என்னால் கோர்க்க முடியவில்லை.

பின்னுரை சொல்வது போல், மனதில் எழும் நிம்மதி ஒன்று தான் போல என்பது சத்தியம். இளைய தலைமுறையின் மனசாட்சி பேசுகிறது.ஒளிர்நிழல் 6, அழகாய் கவிதை. “ முழுமை முழுமையென ஏங்குகிறதடி நெஞ்சு” அருமை…  தனித்து ஒலிக்கிறது. “எதிர் சாத்தியங்கள்” மாற்று சிந்தனை, தெளிவாய் முன்வைக்கிற கருத்துகள் ஆழமானவை. சக்தியின் உரை சொல்லும் சாதி நிலைபாடுகள் கவனிக்க வைக்கின்றன. ஆறு கிலோமீட்டர் – உச்சம் தொட்ட இடம்.
உங்களுடைய நடை என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எனக்கு அது பழகவில்லை. தாவி தாவி செல்லும் போக்கு இருக்கிறது. சில இடங்களில் அழுத்தமான விவரிப்பு, தீர்க்கமான உணர்வுநிலை, சில இடங்களில் மேலோட்டமாய் கடக்கிறது. உங்கள் உதாரணங்கள் மிக துல்லியமானவையாகவும், வேறு எங்கும் எப்பொழுதும் கேட்டறியாததாகவும் இருப்பது தனிச்சிறப்பு. பாம்பு மாத்திரைகளைக் கொளுத்தியது போன்ற பனைமரங்கள், நிறைந்த கருமையில் எச்சில் துப்பியது போல,பன்றி முலைக்கொத்துகள் என விழுதுகள் தொங்கும் ஆலமரம்,பாண்டவையின் முகம் கிழவியினுடையது போல மாறி விட்டது என சொல்லிக் கொண்டே போகலாம்..
குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, நீங்கள் சில முக்கியமான காட்சிகளை, ஒளித்து வைக்கிறீர்கள். பொதுவாக கவனிக்கப்படவேண்டியவை என்று பட்டுரிப்பன் கட்டி வைக்கப்படும் காட்சிகள் அவை..  “அம்சவள்ளி ஏற்கனவே ஒரு இரும்புத்துண்டை அடுப்பில் வைத்தாள் என்பதும், அம்சவள்ளி நெருங்கிய போது சிரித்துக் கொண்டிருந்த அவனிடம் “யப்போ, யப்போ” என வீறிடல் எழுந்தது,” இது ஒன்று போதும். குணா –மீனா பேசியபடி நடக்கையில், சதுப்பில் மிதந்த மீனாவின் உடல் தெரியும் காட்சி அத்தகையதே.
சுயமைதுனம் செய்துவிட்டு கழிவறையில் இருந்து வெளியே வருகையில், செல்பேசியில் வரும் குறுஞ்செய்தி ஒருவனை என்ன உணரச்செய்யும் என்பது வரை நுணுக்கமாக கூறியிருக்கிறீர்கள். “மது அருந்துவதற்கு முந்தைய உத்வேகம் அது” யதார்த்தம்..சிரித்துவிட்டேன்..

என் வாசிப்பளவில், புதிய வடிவம். புத்தம்புதிய வாசிப்பனுபவம்.. நல்ல துவக்கம் உங்களுக்கு.. எத்தனையோ முன்னோடிகள் தடம் பதித்த பாதை.. உங்களுக்காய் பூவிரித்து காத்திருக்கிறது..தொடர்ந்து பயணியுங்கள்…
மனம் கனிந்த, நிறைந்த நல்வாழ்த்துகள்..

- ரஞ்சனி பாசு.
- 18.10.2018

No comments:

Post a Comment