Wednesday 31 October 2018

வரையறுத்தல் - கடிதம்

அன்பின் சுரேஷ்

இன்று தேர்வறைப் பணியென்பதால் மதியமே வீடு வந்துவிட்டேன். எதிர்பார்த்திருந்தபடியே காலச்சுவடு காத்திருப்பதை தபால்பெட்டியின் இடைவெளிக்குள் காண முடிந்தது. உடன் உறையைப்பிரித்து  ’’வரையறுத்தல்’’ வாசித்தேன்.

எதிர்பாரா வேலையொன்றினால் இடையில்வாசிப்பு அறுந்துவிட்டதால், மீள முதலிலிருந்து வாசித்தேன். முடிந்ததும் ஒரு இடத்தில் எனக்கு சரியாகப்புரியாதது போல குழப்பமாக இருந்ததால் மீண்டும் அப்பகுதியை வாசித்தேன். // மீட்டிங் முடிஞ்சு எப்போ புறப்படுவீங்களாம் என்று உம்புள்ளகேட்கிறான்// இதில் எனக்கு சக்தீஸ்வரி, மாலதி- பெயர் மற்றும் உறவுக் குழப்பம் இன்னுமே இருக்கு.

கதைஅருமை. அன்று இன்று என இருகாலகட்டங்களை இணைக்கிறீர்கள். அன்று எண்ணெய் காணா பரட்டைத்தலையுடனிருந்த, சாதீய வரையறைகளால் விளிம்புக்கு தள்ளபட்ட குடும்பத்தைச்சேர்ந்த மாலதி இன்று மஞ்சள் நிறமும் செவ்வுதடுகளுமாய் அழகியாய் நீலப்புடவையில்!

பண்பாட்டு மானுடவியல் கருத்தரங்கில் உரையாற்றும் பேராசிரியை
தனசேகர் குடியானவப்பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போன நிகழ்வையும் அதன்பொருட்டு எரிக்கப்படவிருந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அவ்வீடுகளிலொன்றில் அன்று வாங்கிவந்த தொலைக்காட்சிப்பெட்டியையும் கதை , பல உரையாடல்களை  கண்ணிகளாய் இணைத்துச்சொல்கிறது

மாலதியின் உரை அபாரம். // உரசல்கள் நடைபெற்றிராத நேற்றோ,உரசல்களுக்கு வாய்ப்பற்ற நாளையோ கற்பனை, இன்றின் உரசல்களை எப்படி எதிர்கொள்வது,//  

// சாதியின் பாவனைகள் அழிந்த புத்தாயிரத்தில் அதன் பங்களிப்பு, பாலுறவுக் கண்காணிப்பு என்னும் எல்லையில் நிற்பது//  இப்பத்திதான், இதுதான் இக்கதை பேசும்பொருள். அந்த உரையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அந்த தொலைக்காட்சிப்பெட்டி ஆன்டெனாவுடன் இணைப்பது என்னும்போது அந்நிகழ்வு நடைபெறும் காலத்தை அறிய முடிகின்றது.சாணி மெழுகிய மண் தரையிலிருந்து கிண்டில் ரீடருக்கு கதை  எங்களைக்கூட்டி வருகின்றது.

சாதியை இறுதியாக மாலதி அதாவது சுரேஷ் // வரலாற்று அறிவும்,நவீனப்பெருமிதங்களும்,ஜனநாயக மாண்புமில்லாத மக்களால் ஒருவித பெருமிதத்துடன் எண்ணிக்கொள்ளப்படும்  மனப்புனைவு// என்று வரையறுப்பதும் அருமை.உண்மையில் இக்கதையில் மாலதியின் உரையில் மட்டுமே சுரேஷை அடையாளம் தெரிந்தது வேறெங்கும் உங்கள் பிரத்யேக நடை தெரியவே இல்லை. நிறைய துண்டு துண்டான  சின்ன சின்ன வாக்கியங்கள் இம்முறை இக்கதையில் இருக்கு, நாகப்பிரகாஷ் இப்படி எழுதுவார்னு நினைவு எனக்கு. இதற்கு முந்தைய உங்கள் கதையில் இப்படி இல்லை .

ரோட்டா என்பது லோட்டாவைத்தானே?

துவக்கத்தில் இரண்டாம்பத்தியில் சாமியிடம் சிறுமி மாலதி வேண்டிக்கொள்கையில் மாதேஸூக்கு ’ஜொரம்’ என்பதை நான் ’காச்சல்’ என்று மாற்றிப்படித்தபோது இன்னும் எனக்குப்பிடித்திருந்தது.

எல்லாக்கதைகளிலும் சில வரிகள் அப்படியே காட்சிகளாக மனதில் பதிஞ்சுருமில்லையா அப்படி எனக்கு இதில் // மின்சாரம் துண்டிக்கப்பட்ட அறையின் அலுமினிய விளக்கின் ஒளி பிரதிபலிக்கும் டிவித்திரையில் படுக்கச்செல்லும் அம்மாவும் அப்பாவும் தெரிவது//  I just loved this description.

எப்போதும் போல தவிர்க்கவே இயலாமல் இக்கதையிலும் நான் என்னை பொருத்திப்பார்த்துக்கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியைச்சேர்ந்தவரை காதல்மணம் புரியக்கூடாதென்று எங்கள் வீட்டுப்பெண்ணை தடுத்து,   பல வன்கொடுமைகளுக்குப்பின்னர், அவசரமாக  சுயஜாதியில் அகமணம் செய்வித்த என் அப்பா அதே சாதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை என் தம்பி காதல் மணம் செய்துகொள்ள மகிழ்வுடன் சம்மதித்ததை இக்கதை நினைவூட்டியது.

10 ல் படிக்கையில் முதன்முதலாக வாங்கிய  சாலிடேர் டிவியையும், இதே போன்றதொரு சம்பவம் நடந்து, 2010ல் எங்களூரில் அப்பாவின் உறவினர்கள் பல குடிசைகளை கொளுத்தி இந்த ஊரில் 144 போட்டிருந்தது. அதில் குறிப்பாக ஒரு இளைஞன் பலகுடிசைகளைக் கொளுத்தியவன் பல மாதங்கள் சிறையிலிருந்துவிட்டு திரும்பியபின்னர்  அந்த ஒடுக்கபட்ட சாதிமக்கள் வாழும் தெருவிலேயே வாகனத்தில் அடிபட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தது. அன்று வீட்டுக்கு தோட்ட வேலைக்கு வந்த லச்சுமி  என்னிடம் ‘’மாசாணியாத்தாளூக்கு மொளகரைச்சது வீணாப்போகலீங்க’’ என்று சொன்னது, அவன் இன்னும் கூட தேறாமலிருப்பது இப்படி பலதை நினத்துக்கொண்டேன்.

உள்ளிருந்து திமிறிக்கொண்டுவரும் நினைவுகளைக் கட்டுப்படுத்தியபின்னர் இக்கதைக்கு வெளியிலிருந்து மீண்டும் ஒருமுறை வாசிக்கனும் சுரேஷ்.
 
மிக்க அன்புடன்
தேவி

அன்புள்ள லோகமாதேவி அவர்களுக்கு

சக்தீஸ்வரி என்ற பெயர் தவறாக அச்சாகி இருக்கிறது. அந்த கதாப்பாத்திரத்துக்கு முதலில் சக்தீஸ்வரி என்று பெயரிட்டு பின்னர் மாற்றியதால் இந்த பிசகு நிகழ்ந்திருக்கிறது.

ரோட்டா என்றுதான் திருவாரூர் பக்கம் சொல்வது.

அன்புடன்

சுரேஷ்

No comments:

Post a Comment