நாயகிகள் நாயகர்கள் குறித்து அகில்குமார்
சுரேஷ் பிரதீப்பின் நாயகிகள் நாயகர்கள்:
மனித மனதின் பாவனைகளும், போலித்தனங்களும் வெளிப்படும் கணங்களை கண்டுணரும் சுரேஷ் பிரதீப்பின் கதைகள், வென்றெடுப்பது அல்லது வெல்லக் கொடுப்பது என்பதாக உறவுகளை வரையறை செய்கிறது. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என்பதையெல்லாம் தாண்டி ஆதிக்கமற்ற உறவுகளுக்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உள்ளது என கேள்வி எழுப்புகிறது. ஆதிக்கம் என்பதுமேகூட எல்லா வேளைகளிலும் தீர்க்கமாக முன்முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இல்லாமல், மனம் சூழலுக்கேற்ப எடுக்கும் முடிவாகத்தான் இருக்கிறது. காதல் அல்லது காம உறவு என்பது மாறி மாறி செய்துகொள்ளும் ஆதிக்கத்தினால்தான் காப்பாற்றப்படுகிறது.
நாம் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கும்போது வேறு ஒருவர் மீது ஏற்படும் அன்பு நம்மை அச்சுறுத்துகிறது. அந்த வேளையில் நாமே நம்மீது சந்தேகம் கொள்கிறோம், குற்றவுணர்வு கொள்கிறொம். ஆனால் அந்த உணர்வு தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் மட்டுமே என்கிற பொய்மை அங்கே உடைந்து போகிறது. நாம் நேசிக்கும் அத்தனை பேரிலும் நிரம்ப நேசிக்கும் ஒருவரோடு அதிக நேரம் செலவிட நாம் விரும்புகிறோம், அவர்களை காதலிப்பதாக சொல்கிறோம், ஆனால் அவர்களை மட்டுமே நாம் காதலிக்கவில்லை, மீச்சிறு அளவில் வேறு சிலரையும் காதலிக்கிறோம் என்பதான ஒரு புரிதல் எனக்கு இருக்கிறது. மாசிலன் கதையில் வரும் லெனின் போல. அவன் மனைவி அகல்யா மீது அவனுக்கு அன்பு இல்லாமல் இல்லை, ஆனால் அனிதா மீதும் அவனுக்கு காதல் இருக்கிறது. அனிதாவை கொஞ்சம் காதலித்தால், அகல்யாவை நிரம்பக் காதலிப்பான். இதை அகல்யா எப்படி எடுத்துக்கொள்வாள் என்பது ஒரு விஷயம் என்றால், அகல்யாவுக்கும் இருக்க வாய்ப்புள்ள இத்தகைய உள் மன இச்சைகளை லெனின் எப்படி எடுத்துக்கொள்வான் என்பது இன்னொரு விஷயம். நூறு சத சுய வெளிப்பாடு என்பது எந்த உறவிலும் இருக்கமுடியாது.
இந்த தொகுப்பில் நாயகர்களைவிட நாயகிகள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அம்மாக்கள் பெரும்பாலான கதைகளில் வந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் மகனைத் தோற்கடித்து அதிகாரம் செலுத்த நினைக்கிறார்கள், மகன்கள் அம்மாவை தோற்கடிக்கிறார்கள், அம்மா இறந்தபின் அதிகாரம் செலுத்த ஆளில்லாமல் தவிக்கும் கணவனை மனைவிகள் தோற்கடிக்கிறார்கள் (குற்றுளம்), இல்லையேல் மகனைப் பயன்படுத்தி அம்மாக்கள் அப்பாவைத் தோற்கடிக்கிறார்கள் (அலுங்கலின் நடுக்கம்), உறவினர்களைத் தோற்கடிக்கிறார்கள் (ஆலரசுக்குளம்). அம்மாக்களை வீழ்த்தி அதிகாரம் செலுத்த மருமகள்கள் முயல்கிறார்கள். இறுதியாக தங்கள் அம்மாக்களை மகள்களும் தோற்கடிக்கிறார்கள் (சொட்டுகள்). எல்லா இடங்களும் ஆதிக்கத்தாலும், அதிகாரத்தாலும் சூழப்படுகிறது. ஆதிக்கம் செலுத்த ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள்.
கதை நாயகர்கள் பெரும்பாலும் பால்யத்தில் இருக்கிறார்கள் அல்லது பால்ய நினைவுகளை சுமந்தலையும் இளமையில் இருக்கிறார்கள். மகனின் வெறுப்புக்கு ஆளான அப்பா அவ்வப்போது வந்து போகிறார். பாவனைகளற்ற, ஆதிக்கமற்ற உறவுகள் சாத்தியமில்லை என்பதையே இந்தக் கதைகள் திரும்ப திரும்ப சொல்கின்றன. பல உட்கதைகளுக்குள் புகுந்து செல்லும் சில கதைகள் நாவல்களுக்கான சொல்லல் முறையைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது
வெல்தல், வெல்லப்படுதல் என்பதுதான் வாழ்வென்பது அவ நம்பிக்கை ஏற்படுத்துமென்றாலும், உன் இருப்பு முக்கியமற்றதென்றாலும் நீ வெறுமனே வாழ்ந்துகொண்டு இரு, இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு ஊருக்கேற்ப நீயும் ஆடு, உன்னால் செய்ய முடிந்தது அவ்வளவே, உனக்கு விதிக்கப்பட்டது அதுதான் என்பதுதான் இந்தக் கதைகளில் ஊடாடி வரும் மையமெனத் தோன்றுகிறது.
கிழக்கு பதிப்பக வெளியீடு.
Comments
Post a Comment