என் படைப்புகள் குறித்த கருத்தரங்கு
கவிஞர் சமயவேல் என்னுடைய நூல்கள் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர் எழுத வந்து மூன்று ஆண்டுகள் கூட ஆகாத ஒரு இளம் எழுத்தாளனின் நூல்களுக்கு கூட்டம் நடத்த முன்வருவது (இந்த நிகழ்வுக்கு முன்புவரை நாங்கள் சந்தித்ததும் இல்லை) தமிழ்ச்சூழலில் அரிதாகவே நடக்கும் நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. நிகழ்வுக்கான அறிவிப்பு வெளியான சமயம் சுனில் கிருஷ்ணனும் இதுவொரு ஆரோக்கியமான சமிக்ஞை என்று தெரிவித்தார். ஞாயிறு காலை புறப்பட்டு காரைக்குடியில் இருக்கும் சுனில் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாங்கள் இருவருமாக மதுரைச் சென்றோம். வீட்டிற்கு வந்ததில் இருந்து மதுரை செல்லும்வரை ஏறக்குறைய ஐந்து மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். படைப்புச் செயல்பாடு அந்தரங்கத்தன்மை உடையது. ஆனால் எழுத எண்ணும் ஒரு படைப்பு குறித்த சாத்தியங்களை விவாதங்களின் வழி விரிவு செய்து கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை சுனிலுடனான இந்த உரையாடல் அளித்தது.
மதுரையில் சென்று இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே மழை பிடித்துக் கொண்டது. ஐந்தரைக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான்கைந்து நண்பர்கள் ஐந்தரைக்கே வந்துவிட்டிருந்தனர். ஆனால் மழையில் சிக்கிக் கொண்டவர்கள் ஒவ்வொருவராக வரத் தாமதமானது. விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த நண்பர் துரைமுருகன் முழுக்க நனைந்தவராக அரங்கினுள் நுழைந்தது சற்று திகைப்பினை அளித்தது. ஆறு மணிவாக்கில் நனைந்தவாறே பலர் அரங்குக்கு வரத்தொடங்கினர். சென்ற வருடம் நண்பர் ஸ்ரீநிவாஸ கோபாலன் ஒருங்கிணைத்த அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு பெற்ற ரஞ்சனி பாசு அவருடைய கணவருடன் வந்திருந்தார். என் புனைவுகளின் தீவிரமான வாசகரும் கூட. எழுத்தாளர் ஆத்மார்த்தி, முகநூல் வழியாக மட்டுமே அறிந்திருந்த நண்பர்களான கவிஞர் அதீதன் சுரேன், ரமேஷ் கண்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.
சூழலுக்கு ஏற்றது போல அனைவரும் தேநீர் அருந்திவிட்டு நிகழ்வைத் தொடங்கினோம். முதலாவதாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் என்னுடைய நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பில் உள்ள நான்கு கதைகளை முன்வைத்து என் புனைவுலகில் பயின்றுவரும் நுட்பங்கள் குறித்து பேசினார். வாசகன் உள்நுழைந்து நிரப்பிக்கொள்ள வேண்டிய ஒரு தன்மை என் கதைகளில் விரவிக்கிடப்பதாக குறிப்பிட்டது எனக்கு புதிய அவதானிப்பாகப்பட்டது.
நிகழ்வில் ந.ஜெயபாஸ்கரன் மற்றும் ஸ்டாலின் ராஜாங்கம் இருவரையும் சந்தித்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. ஸ்டாலினின் அயோத்திதாசர் வாழும் பௌத்தம் என்ற நூலினை பேருந்தில் வாசிப்பதற்கென எடுத்துச் சென்றிருந்தேன். அந்நூலில் கையெழுத்திட்டுத் தரச் சொன்னேன். கூச்சப்பட்டுக் கொண்டு மறத்துவிட்டார். அக்டோபரில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கில் வாங்கிவிட வேண்டும் :)
ந.ஜெயபாஸ்கரன் நாயகிகள் நாயகர்கள் குறித்து சில நிமிடங்கள் பேச விழைவதாக சொன்னது முதலில் ஆச்சரியமாக இருந்தது. அத்தொகுப்பில் உள்ள கதைகளின் ஊடாக விரவிச் செயல்படும் "வதை" என்ற அம்சத்தினை மையப்படுத்தி பேசினார். எமிலி டிக்கன்சனின் ஒரு கவிதையுடன் என்னுடைய என் கதையுலகை இணைத்துப் பேசியது எனக்கு சில புதிய திறப்புகளாக அமைந்தது.
அடுத்ததாக சமயவேல் ஒளிர்நிழல் நாவல் குறித்து பேசினார். ஏறக்குறைய முப்பது பக்கங்கள் நீளும் ஒரு கட்டுரையில் இருந்து தனித்துப் பிரிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு நாவலின் நிகழ்களத்தினை குறித்த ஒரு கோட்டுச்சித்திரத்தை முதலில் தெரிவித்தார். நாவலினுள் இரண்டு குடும்பங்களின் மூன்று தலைமுறை வரலாறு யதார்த்தபாணியில் அல்லாமல் அக வரலாறாகவே எழுதப்பட்டிருப்பது புதுமையாக இருப்பதாக கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். கூர்மையான மொழிப்பயன்பாடு இந்த நாவலை தமிழில் முக்கியமான நாவல்களில் ஒன்றாக மாற்றியிருப்பதாகச் சொல்லி முடித்தார்.
சுனில் சில மாதங்களுக்கு முன்பே எஞ்சும் சொற்கள் வாசித்திருந்தார். இந்த நிகழ்வுக்கென மீண்டும் வாசித்து மிக விரிவானதொரு கட்டுரையை எழுதி முதல்நாளே எனக்கு அனுப்பி இருந்தார். என் சிறுகதை தொகுப்பு ஒன்றினைக் குறித்து எழுதப்பட்ட முதல் விரிவான கட்டுரை இதுவென்றே நினைக்கிறேன். (நாயகிகள் நாயகர்கள் மற்றும் எஞ்சும் சொற்கள் குறித்து ஏற்கெனவே கட்டுரைகள் வந்திருந்தாலும் விரிவானது என்ற வகையில் இது முதலாவது) என் கதைகளில் பலங்களாக தென்படக்கூடிய அம்சங்களை முதலில் குறிப்பிட்டு பின்னர் பலகீனங்களை பட்டியலிட்டார். பெரும்பாலும் ஒரு வாசகனாக நானும் உணரக்கூடிய குறைகளாகவே அவை இருந்தன. ஆகவே மாற்றுக்கருத்து என்று குறிப்பிடும்படி ஏதுமில்லை. எஞ்சும் சொற்கள் தொகுப்பின் சிறந்த கதையாக "பாரம்" என்ற கதையை குறிப்பிட்டு விரிவாகப் பேசினார். வீதிகள், எஞ்சும் சொற்கள், பரிசுப்பொருள், மறைந்திருப்பவை ஆகிய கதைகள் குறித்தும் ஒரு விரிவான சித்திரத்தை அளித்தார்.
ஏற்புரையாக எதைச் சொல்வது என்ற குழப்பம் எனக்கு முன்தினம் முதலே இருந்து வந்தது. இந்த நிகழ்வு என் எழுத்துச் செயல்பாட்டினை தொகுத்துப் பார்த்துக் கொள்ளும் ஒன்றாக அமையும் என்று எண்ணியிருந்தேன். அதுபோலவே வெவ்வேறு வகையான பார்வைகள் நான்கு எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டன. உடனடியாக அப்பார்வைகளுக்கான எதிர்வினையை என்னால் நிகழ்வில் வைக்க இயலவில்லை. சுருக்கமாக என் ஏற்புரையை முடித்துக் கொண்டேன்.
இலக்கிய வடிவம் சார்ந்த என் பார்வையை கட்டமைத்ததில் ஜெயமோகனின் நாவல் கோட்பாடு என்ற நூலுக்கு முக்கிய பங்குண்டு. அவரது மற்றொரு நூலான நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் ஒரு நூற்றாண்டை கடந்துவிட்ட தமிழ் இலக்கியம் குறித்த ஒரு பெரும்போக்கான புரிதலை எனக்கு அளித்தது. இதைக்குறிப்பிட வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கிறேன். எழுத்தின் மீது ஜனரஞ்சகத் தேவைகளின் அழுத்தம் இருந்தபோது இலக்கியம் அதற்கு எதிரானதாக நிலைகொண்டது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் இன்று எழுத்து முதன்மையான கேளிக்கை ஊடகம் கிடையாது. இன்றைய வாழ்வின் வேகத்துடன் தங்களை பொருத்திக்கொள்ள முடியாதவர்களே கற்பனையான மெல்லுணர்வுக்கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை கணிசமானது எனினும் தீவிர இலக்கிய ரசனையின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய அளவு ஒரு தரப்பாக அவர்கள் உருவெடுக்கவில்லை. இன்றைய நிலையில் ஒரு இலக்கிய வாசகன் "மரபான" ஒரு வழிமுறையின் வழியாகத்தான் இலக்கியத்துக்குள் வருவான் என்று எதிர்பார்க்க இயலாது. அவன் செயல்படும் துறையின் தீவிரத்தின் காரணமாகவே எந்த "இலக்கியச்சூழலின்" தொடர்பும் இல்லாமல் நேரடியாக இலக்கியம் வாசிக்க வருகிறவர்கள் உண்டு. (இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருந்தபோது கணிதத்துடன் விஷ்ணுபுரத்தை என்னால் அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது என்று ஒரு நண்பர் என்னிடம் சொல்லி இருக்கிறார்.) ஏறக்குறைய நானும் அப்படி நேரடியாக எழுத வந்தவனே. குழு அரசியல்,கோட்பாட்டு சிக்கல்கள் போன்றவற்றை இரண்டாம்பட்சமாக்கி நூலினை முதன்மைப்படுத்தி வாசிக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மேற்சொன்ன இவ்விரு நூல்களும் எனக்கு உதவின. என்னுடைய ஆதர்சனங்களான டால்ஸ்டாய்,புதுமைப்பித்தன் போன்றோரை எந்த "வழிகாட்டலும்" இல்லாமல் புரிந்து கொள்ள நாவல் கோட்பாடு பெருமளவு உதவியது.
இவ்வளவு நீளமாக இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தை சற்று பேசிவிட்டு என் புனைவுகள் சார்ந்த என் அவதானிப்பினை சொன்னேன்.
இந்த நிகழ்வுக்காக என் புனைவுகளை சற்று விலகி நின்று பார்க்கும்போது இக்கதைகளில் இருந்து மூன்று விஷயங்களை என்னால் அவதானிக்க இயன்றது.
ஒன்று இக்கதைகளில் அமைப்புகளின் மீதான நம்பிக்கை இழப்பு ஒரு பொதுத்தன்மையாக ஊடுருவியிருக்கிறது. வாழ்க்கை ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளாலும் கருத்துகளாலும் செயல்படுகிறது என்ற கருத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக கதாமாந்தர்கள் இருக்கின்றனர். இரண்டாவதை முதல் அவதானிப்பின் தொடர்ச்சியாகவே கொள்ளலாம். அமைப்புகளால் அளிக்கப்படும் உணர்வுநிலைகள் வலுவானவை. குழப்பங்களும் சிக்கல்களும் அற்றவை. ஆனால் அமைப்புரீதியான உணர்வுநிலைகள் மீது நம்பிக்கையிழப்பினை அடைந்தவர்கள் ஒவ்வொன்றையும் தங்களுக்கு ஏற்றவாறு நீட்டியும் சுருக்கியும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தங்களுக்குள் நிகழும் உரையாடல்கள் வழியாகவே பிறருடன் பொருத்திக் கொள்வதற்கான சமநிலையை அடைய வேண்டியிருக்கிறது. என் கதைகளில் இடம்பெறும் மிக நீண்ட அக உரையாடல்களுக்கு இதுவொரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
மூன்றாவதும் முதல் இரண்டுடனும் தொடர்புடையதே. அடையாளச் சிக்கல். தன் சுயத்தை என்னவாகவும் கற்பனை செய்து கொள்வதற்கான சுதந்திரத்தை இன்றைய காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. ஆயினும் எதையும் உறுதியாக தேர்ந்தெடுக்க தயக்கம் கொண்டவர்களாகவே இருக்கிறோம். பிற மனிதருடன் உறவு நிலைகளை அமைத்துக் கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய பாவனைகள் நம்மை நம்மிடமிருந்தே மேலும் மேலும் அந்நியப்படுத்துகின்றன. அதற்கு அஞ்சியே நாம் சாதாரண உறவுநிலைகளைக்கூட மிகுந்த உணர்ச்சிகரமானதாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொரு மனிதர் (காதல்,நட்பு,மணவுறவு) தனக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு முக்கியானவரென்றும் நாம் சார்ந்திருக்கும் அமைப்பு (குடும்பம்,சாதி,தேசம்) நம்முடைய இருப்புக்கு அத்தியாவசியமென்றும் அவ்வமைப்புக்கும் நம்மேல் பரஸ்பர அன்பும் மரியாதையும் உண்டு என்றும் நம்பியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். என் கதைகளில் இந்த அடையாளச் சிக்கல் வெளிப்படுவதாக நினைக்கிறேன்.
கடந்த சில மாதங்களாக நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வு நடந்தவன்று எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் என்னிடம் பகிர்ந்து கொண்ட என் சிறுகதைகள் குறித்த குறிப்புகள், எழுத்தாளர் அகில்குமார் நாயகிகள் நாயகர்கள் குறித்து முன்வைத்திருந்த அவதானிப்புகள் என அனைத்தும் சேர்ந்து என் எதிர்கால செயல்பாடுகள் குறித்த ஒரு தெளிவினை அளித்திருக்கின்றன. சுனில் கிருஷ்ணன் ஒளிர்நிழல் வந்தது முதலே என்னை கவனப்படுத்தி வந்துள்ளார். சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை இவ்வாண்டு பிப்ரவரியில் சந்தித்தபோதே என் சிறுகதை தொகுப்பினை வாசித்திருந்தார். இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியது ஊக்கமளிப்பதாக இருந்தது.
கவிஞர் சமயவேல் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததோடு ஒளிர்நிழல் குறித்து மிக விரிவாகப் பேசியது நிறைவும் நம்பிக்கையும் அளிப்பதாக இருந்தது.
அரங்கினைவிட்டு வந்தபோது மழை விட்டிருந்தாலும் சாலையில் நீர் தேங்கிக் கிடந்தது. உணவருந்துவிட்டு சுனில் மற்றும் கவியரசு நேசன் இருவருடன் காரைக்குடி வந்து சேர்ந்தேன். காரைக்குடியில் சுனில் விடைபெற்றார். உறக்கமோ சோர்வோ வீடுவந்து சேரும்வரை மனதில் இல்லை என்பது இந்த நிகழ்வு எனக்கு அளித்திருக்கும் உற்சாகத்தை உறுதி செய்வதாக இருந்தது.
புகைப்பட உதவி :விசாகன்

Comments
Post a Comment