Tuesday 19 May 2020

ஸ்ரீராம ஜெயம்


தி.ஜானகிராமனின் சிறுகதைகள்(முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம்,பரதேசி வந்தான்,கோயம்புத்தூர் பவபூதி,பஞ்சத்து ஆண்டி,குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மற்றொரு வகையான கதைகளில் காமத்தின் அலைகழிப்புகள் பேசு பொருளாகி இருக்கின்றன. பெரும்பாலும் வாலிப்பான உடல் கொண்ட இளம் விதவைகள் மீதான பச்சாதாபம் இக்கதைகளில் வெளிப்படுகிறது.சண்பகப்பூ, பசி ஆறிற்று, தூரப்பிரயாணம்,தவம்,ஆரத்தி போன்றவை இவ்வகை கதைகள். ஆனால் தி.ஜாவின் ஆகிருதி முதல் வகைக் கதைகளிலேயே பூரணமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. 

எளியோரின் பசி கண்டு துயர் கண்டு இரங்கும் அவர்களின் கையறு நிலையை கனிவுடன் எடுத்துச் சொல்லும் முதல் வகைக் கதைகளே அவர் எழுதியவற்றில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் கதைகள் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஸ்ரீராமஜெயம் என்ற கதை அதன் மௌனத்தால் தொடர்புறுத்தும் தன்மையால் அபாரமான கலைப்பெறுமானம் பெறுகிறது. 



ஒரு அச்சகத்தில் மெய்ப்பு பார்க்கிறவராக இருபத்தாறு ஆண்டுகள் பணிபுரிகிறார் ராகவாச்சாரி. இருபதாண்டுகளாக அங்கு காவலராக இருக்கிறார் வேலுமாரார். வேலுமாராரின் பார்வையில் ராகவாச்சாரி மிகுந்த நேர்த்தியுடன் கட்டமைக்கப்படுகிறார். ஏழு குழந்தைகளின் தகப்பன் வறுமையில் உழல்கிறவர் யாரிடமும் பேச்சு கொடுக்காத கூச்ச சுபாவி என ராகவாச்சாரி ஒரு பரிதாபகரமான ஆளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார். எப்போதும் அலுவலகத்துக்கு தாமதமாகவே வருகிறவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சீக்கிரம் வருகிறார். ஐந்தாவது நாள் விடுப்பெடுக்கிறார். ஆனால் அன்று இன்னும் சீக்கிரமாகவே அலுவலகம் வருகிறார். முதலாளியின் அறையில் இருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை திருடுகிறார். அதை வேலுமாரார் பார்த்து விடுகிறார். 

இக்கதையின் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஒன்று கதை வேலுமாராரின் வழியாகவே சொல்லப்படுகிறது. வேலுமாரார் ராகவாச்சாரி அளிக்கும் நேர்மறை சித்திரம் மெல்ல மெல்ல உருமாறுவதும் இறுதியில் அவர் களவை வேலுமாராரை கண்டுபிடிப்பதும் கதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அம்சம் ராகவாச்சாரியின் மௌனம். எப்போதும் தாமதமாக வருகிறவர் ஏன் நான்கு நாட்கள் வழக்கமான நேரத்தைவிட சீக்கிரம் அலுவலகம் வந்தார் ஏன் ஒரு நோட்டுப்புத்தகத்தை திருடினார் என்று யோசித்தால் அந்த பாத்திரம் ஆழம் கொள்கிறது. இயல்பிலேயே யாரிடமும் எதையும் கேட்டுவிடாத மனிதர். தான் கவனிக்கப்பட வேண்டும் என நினைக்கிறார் கவனிக்கப்படுவதன் வழியாக தனக்கு நோட்டுப்புத்தகம் வேண்டும் என்பதை உணர்த்த விரும்புகிறார். அது கவனிக்கப்படாத போது தயங்கித் தயங்கி அதைத் திருடத் துணிகிறார். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத பொருளை ஒரு நிரந்தர ஊழியர் ஏன் திருட வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் கதை இன்னும் ஆழம் பெறுகிறது. அதற்கான பதிலாக கதைத் தலைப்பு வந்து நிற்கிறது. ஸ்ரீராமஜெயம். ஆம்! ராகவாச்சாரி ஸ்ரீராமஜெயம் எழுதவே நோட்டுப்புத்தகத்தை திருட நினைத்திருப்பார். அது திருட்டு கூட கிடையாது. எடுத்துச் செல்வது. ஆனால் அதைச் செய்யவும் அவருக்கு திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த எச்சரிக்கையே அவரை சிக்கவும் வைக்கிறது. ராகவாச்சாரி ஸ்ரீராமஜெயம் எழுதினால் கஷ்டங்கள் தீரும் என்று நம்பும் ஒரு காலத்தைச் சேர்ந்தவர். அவரது நியாயங்களை புரிந்து கொள்ளாத ஒரு சமூகம் உருவாகி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்கு அது புரிவதில்லை. அவர் தீர்வுகள் வேறெங்கோ இருப்பதாக நினைக்கிறார். 

காலம் ஒவ்வொரு முறையும் அதன் இயங்குதளத்தை புரிந்து கொள்ள முடியாத ராகவாச்சாரிகளை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கிறது. எக்காலத்திலும் அப்படியானவர்கள் உருவாகியபடியேதான் இருப்பார்கள். அவர்கள் அத்தனைபேரின் உளநிலையையும் பிரதிநிதித்துவம் செய்வதாக இக்கதை உள்ளது. அதேநேரம் வாசகன் கற்பனையில் நிரப்பிக் கொள்ளும் இடைவெளியையும் முழுக்க உள்ளடங்கிய ஒரு கூறல் முறையையும் கொண்டுள்ளது இக்கதை. நான் வாசித்த சிறந்த கதைகளில் ஒன்று.

No comments:

Post a Comment