வெண்முரசை என்ன செய்வது?








சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார்.


வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவுச்சூழலில் ஒரு மெல்லிய சலனம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சலனத்தை கவனிக்கும் போது அதனுள் இந்த நாவல் வரத்தொடங்கிய ஜனவரி 1, 2014 முதல் நாம் அதை எவ்வளவு தோல்விகரமாக எதிர்கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தைக் காண முடிகிறது.


முதலில் வெண்முரசு நாவல் வரிசைக்கு நவீன இலக்கியத்தில் என்ன இடம் கொடுப்பது என்ற குழப்பமும் பதற்றமும் ஏற்படுகிறது. இதுவரை தமிழில் வெளியான பல நல்ல நாவல்களை இந்த நாவல் உருவ அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் சிறுத்துப் போகச் செய்வதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழின் விமரிசன மரபை பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டு விவாதித்து தனக்கென ஒரு நாவல் வரிசையை ஒவ்வொரு வாசகரும் தன் மனதில் உருவாக்கி இருப்பார். அந்த வரிசையின் மீது வெண்முரசு நாவல் வரிசை ஒரு பெரும் மோதலை நிகழ்த்துகிறது. குறைந்தது வெண்முரசின் ஆறு நாவல்களை 'சிறந்த நாவல்கள்' என்று நான் நம்பும் பட்டியலுக்குள் நுழைக்க வேண்டியிருக்கிறது. (வெண்முரசின் இருபத்தைந்து நாவல்களையும் முழுமையாக வாசித்து இருக்கிறேன்) நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தப் பட்டியல் மாறுபாடும். ஆனால் இந்தப் பட்டியலுக்கு ஒரு இயைந்து போகும் தன்மை உண்டு. என் ரசனையை கட்டமைத்ததில் முன்னோடிகளின் ரசனைக்கும் அழகியல் தேர்வுக்கும் முக்கிய பங்கு உண்டு. போலவே தமிழ் இலக்கியத்தை விமர்சனப்பூர்வமாக அணுகும் பார்வையை கட்டமைத்ததிலும் முன்னோடிகளின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அத்தகைய விமர்சகர்களால் ஒரு வரிசை உருவாக்கப்படும் போது வெண்முரசு அவ்வரிசையில் பெரியதொரு இடத்தை எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.


மேற்சொன்ன அவதானிப்பு என் ரசனை சார்ந்த மிகை நம்பிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம். படைப்பு நிலைத்திருப்பதும் அழிவதும் காலத்தால் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று வெண்முரசு எவ்வாறு அணுகப்படுகிறது? இரண்டு விதங்களில் பார்க்கலாம். வாசகர்கள் மத்தியில் வெண்முரசு தற்போதே புகழ்பெற்ற நாவல் வரிசையாகத்தான் விளங்குகிறது. வெண்முரசு நாவல் வரிசைக்கென வரும் கடிதங்கள் தனியொரு வலைப்பூவில் தொகுக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான கடிதங்கள் கொண்ட வலைப்பூ அது. நானும் குறைந்தது இருபது கடிதங்கள் எழுதி இருப்பேன். ஒரு வாசகனாக வெண்முரசின் செல்வாக்கை மறுப்பதற்கில்லை. ஆனால் அடுத்த படிநிலைகளில் வெண்முரசு எப்படி பார்க்கப்படுகிறது எனும்போதுதான் ஒரு குழப்பம் வருகிறது. எழுத்தாளர்கள், விமர்சகர்கள் வட்டத்தில் வெண்முரசு பெரும்பாலும் மௌனத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த கனத்த மௌனத்தைத்தான் நான் சந்தேகம் கொள்கிறேன். பிரம்மாண்டமான ஆக்கங்களை எதிர்கொள்ளும் பயிற்சி நம் பண்பாட்டுச்சூழலுக்கு இல்லையோ என்று ஐயுறுகிறேன்.


முகநூல் போன்ற கருத்து சொல்லும் ஊடகங்களின் பெருக்கத்தால் வெண்முரசு குறித்து நிறைய கருத்துகள் சொல்லப்பட்டுவிட்டன. அந்த கருத்துக்களில் பெரும்பாலானவை பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை. காரணம் பெரும்பாலான கருத்துகள் இப்படியொரு முயற்சி உருவாக்கும் ஒரு ஆழமான அதிர்ச்சியை சிரமப்பட்டு விழுங்கிய பிறகு நூலினை வாசிக்காமலேயே சொல்லப்படும் கருத்துகள். வெண்முரசு குறித்த இத்தகைய பொருட்படுத்த அவசியமில்லாத கருத்துதிர்ப்புகளை திரட்டினால் அது வெண்முரசு நாவல் வரிசையை விட இரு மடங்கு பெரிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 


இத்தகைய கருத்துகளின் ஊற்றுக்கண் எது? நான் அதிர்ச்சி என்றுதான் கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய செயல் நாம் வாழும் காலத்தில் நிகழும்போது ஏற்படும் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி தான் காழ்ப்பாகவும், அரசியல் சரிநிலை சார்ந்த எதிர்ப்பாகவும் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். 


பொது ஊடகப் பெருக்கம் விளைவித்த இன்னொரு தீங்கு எல்லோரையும் அரசியல் நிலைப்பாடு எடுக்கச் சொல்வது. முன்பு நாமெல்லாம் ஜாதி பார்த்து பழகிக் கொண்டோம். இன்று ஜாதியின் இடத்தை அரசியல் நிலைப்பாடு எடுத்துக் கொண்டது என நினைக்கிறேன்.


'நீங்க திராவிடமா, தமிழ்தேசியமா, இந்துத்துவமா, இந்தியதேசியமா?' என்று கேட்டு நாம் பேசிக்கொள்ள நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்கள் தொடர்ச்சியாக வெண்முரசின் மீது வீசப்படுகிறது. அதிர்ச்சிக் கூச்சல்களுக்கு அடுத்ததாக இந்த அரசியல் கூச்சல்களை வைக்கலாம். இதற்கிடையே வெண்முரசு நாவல் வரிசைக்கு எழுதப்படும் போதே நல்ல வாசிப்புகளும் விமர்சனங்களும் வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் படைப்புகளின் அளவையும் தரத்தையைம் வீச்சையும் ஒப்பிடும்போது விமர்சனங்கள் போதாமை நிறைந்தவைகளாகவே தெரிகின்றன.


அதிர்ச்சி மற்றும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்களுக்கு அடுத்ததாக வெண்முரசு சார்ந்து நிலவும் மௌனம் வருகிறது. இந்த மௌனத்துடன் புழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கடந்த ஐந்து வருடங்களில் கிட்டியிருக்கிறது.


ஒரு வகையில் அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததுமேகூட வெண்முரசு என்றுதான் சொல்ல வேண்டும். நான் வாசித்த ஜெயமோகனின் முதல் ஆக்கம் வெண்முரசின் முதல் நூலான முதற்கனல் தான். தீவிர இலக்கியம் சார்ந்த புரிதல் இல்லாமல் அனைத்தையும் 'கொத்தாக' வாசித்துக் கொண்டிருந்த என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்துவிட்டது முதற்கனல்தான். அதன் பிறகான தொடர்ச்சியான வாசிப்பு, என் எழுத்து என அனைத்திற்குமான முதல் புள்ளி என அந்த நாவலைச் சொல்லலாம்.


அதன் வழியாக தமிழிலக்கிய உலகப் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் மேற்சொன்ன இலக்கியம் குறித்து ஏதும் அறியாத கூச்சல்காரர்கள் சத்தம் போடுகிறார்கள் என்றால் இலக்கியவாதிகள் மௌனம் சாதிக்கின்றனர் என்று கண்டு கொண்டேன். இந்த மௌனத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? முதலில் அந்த நாவலின் பிரம்மாண்டம். எந்தவொரு இலக்கியவாதியும் சமகாலத்தை சற்று சந்தேகத்துடனேயே அணுகுவார். ஒரு சமகால நூலின் மீதான தன்னுடைய வாசிப்பு சரியாக இருக்கிறதா தான் எதையும் தவற விடுகிறோமா அல்லது பிறரால் சுமாரான ஆக்கம் என்று சொல்லப்படும் ஒன்று தன் பார்வைக்குச் சிறந்ததாகத் தெரிகிறதா என்ற வகையான ஊசலாட்டம் ஒரு இலக்கியவாதியிடம் நிரந்தரமாக இருக்கும். வெண்முரசு சார்ந்தும் அத்தகைய ஊசலாட்டம் இருக்குமானால் அது புரிந்து கொள்ளக்கூடியதே. 


ஆனால் இத்தகையதொரு நிகழ்வே இங்கு நடக்கவில்லை என்ற வகையிலான பாவனைகள் ஆபத்தானவை. ஏதோவொரு வகையில் தமிழ் இலக்கிய உலகம் வெண்முரசை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதை எவ்வளவு விரைவாகவும் தெளிவாகவும் செய்யவிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே தமிழ் இலக்கியத்தில் வெண்முரசின் தாக்கம் என்ன என்பது தமிழ்ச் சூழலுக்குத் தெரியவரும்.


நான் உணரும் ஒன்று உண்டு. என்னுடன் எழுதிக் கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் வெண்முரசால் உந்ததுலும் உற்சாகமும் பெற்றவர்கள் பலர். சூழலில் இப்படி ஒரு பெருநிகழ்வு நடைபெறும்போது இயல்பாகவே அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உப நிகழ்வுகளை உருவாக்கி விடுகிறது. வெண்முரசு அப்படி நிகழ்த்தி இருப்பது என்ன என்பதை அறிவதற்கும் தமிழ் அறிவுச்சூழல் இந்த நாவல் வரிசையை நேர்மையுடன் எதிர்கொண்டாக வேண்டும். வெண்முரசு ஒரு பெரும் நூலாக தன்னுடைய நிறைவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த மாதம் முடிவடையும். அதன்பிறகாவது வெண்முரசு சார்ந்த உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் எழ வேண்டும். அயோத்திதாசர் போல சங்க இலக்கியம் போல வெண்முரசும் அது என்ன என்று புரிந்து கொள்ளப்படாமலேயே நம்முடைய கலைச்செல்வ கருவூலத்திற்கு அனுப்பப்பட்டுவிடக்கூடாது.

புகைப்பட உதவி: http://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_5.html?m=1

Comments

  1. காழ்ப்புகளும், கசப்புகளும் கொண்ட நுனிப்புல் மேயும் கசடுகள் நிறைந்த இந்த தலைமுறையை மறந்துவிடுவோம். ஒரு பத்து வருடம் கழித்து, தமிழ் இலக்கிய உலகில் 'வெண்முரசு' தனக்கான ராஜபீடத்தை தானே நிறுவிக்கொள்ளும்.

    ReplyDelete
  2. வெண்முரசு குறித்து இலக்கியவாதிகள் கொள்ளும் மௌனம் காலவெளியில் இல்லாமலாகி, வெண்முரசு தனது வாசகர்களை கொண்டு அதன் இடத்தை தானே நிறுவிக் கொள்ளும். ஆசிரியர் சொல்வது போல இது சமகால பொறாமை கொண்ட இலக்கிய உலகிற்கு அல்ல. முடிவிலி வரை வெண்முரசு இருக்கும்.

    ReplyDelete
  3. இலக்கியம் மூலம் தங்களை தானே கண்டடையும் வாசக மனது இருக்கும் வரை , வெண்முரசு இருக்கும். எந்நாளும் ஒரு வேற்றுமொழி இலக்கியவாதி இதை மொழிபெயர்ப்பு செய்துவிட முடியாது. ஒருவேளை ஜெயமோகன் வேண்டுமானால் இதை மலையாளத்தில் எழுதலாம் அல்லது தமிழ் இலக்கியவாதி எவரேனும் வேற்றுமொழி ஒன்றை கற்று வெண்முரசை அம்மொழியில் மொழிபெயர்க்கலாம் . அதுவரை வெண்முரசு தமிழ் இலக்கியத்தின் "தங்கப்புத்தகம்" என்பதை மறுக்க முடியாது. தமிழின் எழுத்துக்களை படிக்க முடியாமல் , தமிழின் ஓசைகளை கணனியில் செயற்கை நுண்ணறிவு மூலம் படிக்கும் வாசகன் கூட வெண்முரசை மனதில் ஏற்றிக்கொள்ள வந்துவிட்டனர்.. எல்லாம் அழியும் பொது மட்டுமே இதுவும் அழியும்.

    ReplyDelete
  4. வெண்முரசிநைப் பற்றிக் கள்ள மௌனம் சாதிப்பவர்களை இப்படிப் பார்க்கலாம். பெரிய சாதனை இது. இதைப் பற்றி நாம் என்ன சொல்ல இயலும் என்றிருப்பவர்கள். அடுத்து படித்திருப்பார்கள். ஆனால் ஒன்றும் சொல்லத்தெரியாதவர்கள். நம்மால் முடியவில்லையே இவர் செய்துவிட்டாரே இதைக் கண்டும் காணாமலும் காய் நகர்த்திவிடலாம் என்றிருப்பவர்கள். ஆனால் வெண்முரசு என்னும் பெரு மலை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் காலமாக வாழும்

    ReplyDelete
  5. வெண்முரசிநைப் பற்றிக் கள்ள மௌனம் சாதிப்பவர்களை இப்படிப் பார்க்கலாம். பெரிய சாதனை இது. இதைப் பற்றி நாம் என்ன சொல்ல இயலும் என்றிருப்பவர்கள். அடுத்து படித்திருப்பார்கள். ஆனால் ஒன்றும் சொல்லத்தெரியாதவர்கள். நம்மால் முடியவில்லையே இவர் செய்துவிட்டாரே இதைக் கண்டும் காணாமலும் காய் நகர்த்திவிடலாம் என்றிருப்பவர்கள். ஆனால் வெண்முரசு என்னும் பெரு மலை எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் காலமாக வாழும்

    ReplyDelete
  6. இந்த நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர் ஜெயமோகன் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் .மாபெரும் படைப்பான வெண்முரசை முழுமையாக வாசித்தோம் என்பதே பெருமை தருகிறது .நீங்கள் சொல்லும் அந்த மௌனம் அவர்களால் பொறுக்கஇயலாமல் (பொறமை) தான்.நானும் முதல் கனலை வாசித்தபின்தான் இலக்கியத்திற்குள் வந்தேன்.கொஞ்சமாக எழுதவும் பயிற்சி தந்தது ஜெயமோகன் தளம் தான். நீங்கள் சொல்லும் அந்த கூச்சல்கள் பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிய மாபெரும் படைப்பாளியின் பத்து வரிகளை கூட வாசிக்கதவர்களின் கூச்சல்(இயலாமையின் கூச்சல்.வெண்முரசு இப்போதே அதன் இடத்தை அடைந்து விட்டது என்று தான் தோன்றுகிறது .இது மலையாளத்தில் மொழி பெயர்க்கபடும்போது உலகமே திரும்பி பார்க்கும்.பொறுத்திருப்போம் .
    ஷாகுல் ஹமீது .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024