பிம்பச்சிறை - சில குறிப்புகள்

எம் எஸ் எஸ் பாண்டியனின் பிம்பச்சிறை என்கிற நூலை வாசித்தேன். எம் ஜி ஆர் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்ட இந்த நூல் எம் ஜி ஆர் என்ற 'பிம்பம்' எப்படி மக்கள் மனதை வெற்றிக் கொண்டு எம் ஜி ராமச்சந்திரனை பதினோரு ஆண்டுகள் வெல்ல முடியாதவராக ஆட்சியில் அமர்த்தியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறது. எம் ஜி ராமச்சந்திரன் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்டதாலோ என்னவோ இந்த நூலில் சில உற்சாகமான முன்முடிவுகள் தென்படுகின்றன. முப்பத்தோரு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் தொடக்க அத்தியாயங்கள் சில எம் ஜி ராமச்சந்திரனின் பதினோரு ஆண்டுகால ஆட்சி ஏன் தமிழகத்தின் 'இருண்ட காலம்' என்பதை சில தரவுகளின் அடிப்படையில் சொல்கின்றன. அந்த இருண்ட காலம் அடித்தட்டு மக்களுக்கு தீமை விளைவித்திருக்கிறது. ஆனாலும் அடித்தட்டு மக்கள் ஏன் எம்ஜிஆருக்கு அவர் இறக்கும் வரை - இறந்த பிறகும் கூட - ஏன் விசுவாசமாக இருந்தனர் என்பதை விளக்க முயல்கிறது.

எம்ஜிஆர் என்ற பிம்பம் மக்கள் மனதில் எப்படி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை விளக்குவதில் எடுத்துக்கொண்ட சிரத்தையை ஆசிரியர் எம்ஜிஆர் ஆட்சியின் பாதகங்களை(?) சுட்டுவதில் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. ஒருவேளை எம் எஸ் எஸ் பாண்டியன் இந்த நூலில் கரிசனத்துடன் நோக்கியிருக்கும் 'அடித்தட்டு' மக்களை இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து புரிந்து கொண்டிருந்தால் எம்ஜிஆர் இறந்த பிறகும் அஇஅதிமுக எப்படி பதினைந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கிறது - இன்னும் இருக்கிறது - என்பதை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.


முன்முடிவு என்று நான் சொன்னதை இரண்டாக பகுத்துக் கொள்கிறேன். எம்ஜிஆர் ஆண்ட பதினோரு ஆண்டுகள் இருண்ட காலம் என்ற சந்தேகத்து அப்பாற்பட்ட முன்முடிவு ஒருபுறம். மற்றொருபுறம் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் எளிதாக மயங்கக்கூடியவர்கள். (நடுத்தட்டோ உயர்தட்டோ இப்படி மயங்காது என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை). இந்த முன்முடிவுகளுடன் எம்ஜிஆரை என்ற பிம்பத்தை மட்டுமே கூர்ந்து கிழித்துச் செல்லும் இந்த நூல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருந்தால் ரஜினியையும் இருபது வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருந்தால் விஜயையும் கூட இப்படி பகுப்பாய்வு செய்திருக்கும். உலகம் முழுக்க வணிக சினிமாவின் வழி புகழ்பெற்ற கதாநாயகர்கள் அனைவருக்குமே இந்த பகுப்பாய்வை பொருத்திப் பார்க்க முடியும். அடித்தட்டு மக்களிடம் எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கு திரைபிம்பம் மற்றும் போலி வரலாறுகளால் மட்டுமே ஆனது என்று நிறுவும் இந்த நூலை முப்பது வருடங்களில் அடித்தட்டினரின் எண்ணிக்கை குறைந்து போலி வரலாறுகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்த காலத்தில் இருந்து பார்க்கும்போது மிகை உற்சாகத்தில் எழுதப்பட்ட நூல் என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது 'திமுகவுக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் படித்தவன் அதிமுகவுக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் எம்ஜிஆர் ரசிகன்' என்ற கூற்று ஊரில் நிலவும். இதுபோன்றதொரு மேம்போக்கான ஒரு கூற்றாக மட்டுமே பிம்பச்சிறை என்ற இந்த நூலை பார்க்கலாம்.

இதுபோன்ற கூற்றுகள் எப்படி உருவாகின்றன?

இவை ஒரு வகையான அறிவுஜீவி பாவனை என்று எனக்குத் தோன்றுகிறது. வெகுஜனத்தின் ரசனைகள் மீதும் அபிலாஷைகள் மீதும் ஒரு அறிவுஜீவிக்கு ஒவ்வாமை இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. அறிவுஜீவியின் செயற்களம் 'வெகுஜனமாக' இருக்கும் வரை அறிவுஜீவி அந்த ஒவ்வாமையை பேணிக் கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் வெகுஜனத்தை புரிந்து கொள்ள முயலும்போது அறிவுஜீவி தன் ஒவ்வாமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் வெகுஜனத்தை அணுக வேண்டும். அப்படி அணுகும்போது மட்டுமே அதன் செல்திசையை ஓரளவு நெருங்கி ஊகிக்க முடியும். பாண்டியனின் இந்த நூல் தன் பீடத்தை விட்டு ஒரு படியும் இறங்காமல் வெகுஜனத்தின் மீது தீர்ப்பெழுதுகிறது. நுண்ணுணர்வு கொண்ட ஒரு அறிவுஜீவி பிம்பக் கட்டமைப்பு என்ற செயலில் யார் பிம்பமாகிறாரோ(இங்கு எம்ஜிஆர்) அவர் மட்டுமின்றி யாருக்காக (அடித்தட்டு) அந்த பிம்பம் உருவாகிறதோ அவர்களும் பங்கேற்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்வார். இந்த கவனம் ஒரு வகையில் பின்நவீனத்துவத்துடன் தொடர்புடையது.

இன்றும் நம்முடைய அறிவுஜீவிகளில் பலர் இந்த பின்நவீனத்துவ சிந்தனை போக்குக்கு வந்து சேரவில்லை என்பதை அவர்கள் ஒரு அசைவியக்கத்தை அணுகும் விதத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த புரிதலின்மைக்கான உதாரணமாக பாண்டியனின் இந்த நூலைச் சொல்லலாம். பாண்டியன் எம்ஜிஆர் என்ற பிம்பத்தை ஒரு இடைச்செருகலாக சதிக்கோட்பாடாக மட்டுமே காண்கிறார். இவற்றைக் கடந்து பிம்பங்களும் கடவுள்களும் மதங்களும் தீர்க்கதரிசிகளும் லட்சியவாதிகளும் எதிரிகளும் லட்சியங்களும் மக்களுக்கு ஏன் தேவைப்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முயல்வதில் இருந்தே உண்மையான சமூக அவதானங்கள் தொடங்க இயலும்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024