Monday 21 March 2022

வினோதம்

தாழப்பறந்த காகம் தன் கையிலிருந்த குச்சி ஐஸை பிடுங்கிச் சென்றதை நம்பவே முடியாமல் நின்றிருந்தான். எப்போதும் ஒன்றுக்கு மூன்றுமுறை எண்ணி சீடை கொடுக்கும் ரோட்டு ஆத்தா அன்று 'வெச்சுக்கய்யா' என்று ஒரு காரச்சீடை அதிகமாகக் கொடுத்தது. எல்லா திங்கட்கிழமையிலும் நீண்ட நேரமாக நிற்க வைத்து பேசியறுக்கும் தலைமையாசிரியர் அன்று ஏனோ சீக்கிரமாக தன் உரையை முடித்துக் கொண்டார். சிரிப்பு களையாமல் பாடமெடுக்கும் மைதிலி டீச்சர் சிடுசிடுப்போடு வந்து போனார். பதினோறு மணிக்கு அடித்த 'இன்ரோல் பெல்' பதினொன்னேகாலை கடந்தும் மீண்டும் அடிக்கப்படாமல் இருந்தது. கணக்குப் பாடமெடுக்கும் சிவசங்கரன் அன்று வகுப்பில் நடனமாடிக் காட்டினார்‌. அமீர்ஜான் சார் அவர் மகளையும் அவன் படிக்கும் நான்காம் வகுப்பில் சேர்க்க அழைத்து வந்திருந்தார். மதிய உணவில் அன்று இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. அதன்பிறகான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்தன. டியூப்லைட்டை ஒருத்தர் கடித்துத் தின்றார். குச்சியை ஒருத்தர் பூங்கொத்தாக்கினார். அதிலிருந்து ஒரு புறாவை பறக்க வைத்தார். சீராக வெட்டப்பட்ட தலை ஒன்று மேசையில் அமர்ந்து பேசியது. அது அவன் பெயரை சரியாகச் சொல்லி அழைத்தது. 'காக்காய் ஐஸை பிடிங்கிப் போனதற்காக அழுகிறாயா அருண்' என்று நாடகத்தனமாக அக்குரல் கேட்டது‌. அது புவனேஸ்வரி அக்காவுடைய குரல் போலிருந்ததால் அவனுக்கு நிஜமாகவே அழுகை வந்தது. மதியம் எங்கோ சென்றிருந்த கண்டிப்பான தலைமை ஆசிரியர் - அஞ்சாவது சார் - மூன்றரை மணி போல் வெள்ளைச்சட்டை முழுக்க ரத்தம் நனைத்திருக்க பள்ளிக்கு தூக்கி வரப்பட்டார். கொஞ்ச நேரத்திலேயே ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி நான்கரை மணிக்கு பள்ளியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் கேபிள் டிவியில் அருணுக்குப் பிடித்த அப்போது வெளியான விஜயகாந்த் நடித்த நரசிம்மா போட்டிருந்தார்கள். அன்று குடித்துவிட்டிருந்த அப்பா சீக்கிரமே உறங்கிப்போனார். இவற்றுக்கு எல்லாம் அடுத்து நடந்ததாலோ என்னவோ அவனுக்கு முன் பிறந்து ஒரு‌ வயதில் இறந்து போன அவனுடைய அக்கா காலச்சுழற்சியில் எங்கெங்கு எல்லாமோ அலைகழிந்து அன்று அவனருகில் வந்து நின்றதும் அவனருகிலேயே படுத்துக் கொண்டதும் விடிவதற்குள் எழுந்து சென்றதும் அவனுக்கு வினோதமாகத் தெரியவில்லை. ஆனாலும் அவன் அக்காவோடு புதைக்கப்பட்ட ஒரு தங்க அரைஞாண் கயிறை இன்றும் அவன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

No comments:

Post a Comment