சரிவு
'அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்' என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன்.
ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா 'விடுடி அவன' என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம் அம்மாவைப் பார்த்தது. அம்மா கையை விட்டுவிட்டாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. முன்பு போல இல்லாமல் அப்பாவுடன் வெளியே செல்லும் விருப்பம் எனக்கு குறைந்து கொண்டே வந்தது. எதிர்விகிதத்தில் அவருக்கு என்னை உடனழைத்துக் கொண்டு செல்லும் விருப்பம் கூடிக்கூடி வந்தது.
'எவனோ ரெண்டாம் பங்காளி மூணாம் பங்காளி கல்யாணம் எழவுக்கெல்லாம் கூட்டிட்டு போனிய...இப்ப கோர்ட் ஸ்டேஷன்னு கூட்டிப்போய் அவனக் கெடுக்கணுமாக்கும்' என்று வாதம் புரியும் தொனியில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே அம்மா கேட்டாள். அவளால் சீராக மடிக்கப்பட்டிருந்த மயில்கழுத்து நிறப் புடவையை பிரித்து அதன் மென்மையில் கையோட்டிக் கொண்டிருந்தேன்.
'ஆம்பளன்னா ஊர்ல என்ன நடக்குதுன்னெல்லாம் தெரியணும்டி... சும்மா வீட்லயே பொத்தி வச்சு மடப்பயலா போறதுக்கா' என்று சொன்னபடியே என் கையிலிருந்த புடவையை வாங்கி கட்டிலில் வீசினார். அது களைந்து விழுந்தது.
சிவப்பு ஓடுகள் புழுதியால் மூடப்பட்ட ஒரு ஓட்டுக் கட்டிடம்தான் காவல் நிலையம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. டிவிஎஸ் பிப்டியை வாசலில் நிறுத்திவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா உள்ளே நுழைந்தார்.
தன் முன்னே அழுது கொண்டிருந்த ஒரு கருநிறப் பெண்ணிடம் ஏதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் அப்பாவைப் பார்த்ததும் புன்னகையுடன் தலையை அசைத்து 'வாங்க சார்' என்று வரவேற்றார். திரும்பும் போது அவர் தலையிலிருந்த பெரிய கொண்டையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதைவிட பயம் அதிகமாக மனதைக் கவ்விப் பிடித்திருந்ததாலோ என்னவோ நான் சிரிக்கவில்லை.
அப்பா அந்த கருநிறப்பெண்ணை கடுமையாகப் பார்த்தபடியே உதவி ஆய்வாளருக்கு எதிரே அமர்ந்தார்.
'பையனா?' என்று என்னைப் பார்த்துவிட்டு அப்பாவை கேட்டார். அப்பா ஆமோதிப்பாக தலையசைத்தார்.
நான் அப்போதுதான் அந்தப் பெண்ணிடமிருந்து சற்று தூரம் தள்ளி தமிழ் மாமா நிற்பதை கவனித்தேன். அவர் முகத்தில் அழுத கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்ததை பார்க்க ஒருவித ஒவ்வாமை எழுந்தது. அழும் ஆண்கள் பலகீனமானவர்கள் என்று அந்த வயதில் நம்பியிருந்தேன். தமிழ் மாமாவுக்கு அருகிலேயே எனக்கு பெயர் தெரியாத என் ஊர்க்காரர்கள் சிலர் நின்றிருந்தனர். அவர்களுடைய உடல்மொழி மாமாவை அடிப்பது போல இருந்தது. நான் மேலும் பயந்து போனேன்.
'இப்ப என்னடா சொல்ற நீ?' என்று சட்டென எழுந்து மாமாவை நோக்கிச் சென்றார் அப்பா. மாமா பயந்து பின்வாங்கினார்.
'சார் வக்கீல் வர்ற டைம். இவள நான் இங்க கூட்டிட்டு வந்ததுக்கே அந்த ஆளு என்னைய கொடைவான். ஒழுங்கா கேட்டு வைங்க' என்று உதவி ஆய்வாளர் சலிப்புடன் சொன்னார்.
அப்பா மாமாவை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடைக்கு வந்தார்.
'உட்காரு' என நாற்காலியை மாமாவிடம் காட்டினார்.
அவர் அமர்ந்ததும் 'தமிளு இவெல்லாம் நமக்கு ஒத்துவரமாட்டா. ஒரே ஜாதிதான். அதுக்குன்னு வந்தாருகுடி அதுவும் அவ அப்பன் கூலி வேலைக்குப் போறவன். இவல்லாம் நமக்கு ஒத்து வருமா சொல்லு' என்று தணிவாகச் சொன்னார்.
என்னைப் பார்த்து 'நீ அங்க போயி நில்லு' என்றார்.
நான் என் காதுகளை அவர்களிடம் விட்டுவிட்டு சற்று தள்ளி நகர்ந்தேன்.
அப்பா மேலும் தணிந்த குரலில் சொன்னார்.
'வயசுல இப்படி கை நெனைக்குறது சகஜம்தான். அதுக்குன்னு கல்யாணம் வரைக்கும் போகமுடியுமா சொல்லு'
'இல்லண்ணே அவ என்ன நம்புறா' என்று மாமாவின் குரல் மேலும் தணிவாக ஒலித்தது. தமிழ் மாமா அப்பாவின் அத்தை மகன்தான் என்றாலும் அப்பாவை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். ஊரில் அவர் வயதை ஒத்த பலரும் அண்ணன் என்று மரியாதையாக அழைப்பவரை அத்தான் என்றோ மச்சான் என்றோ அழைக்க அவருக்கு கூச்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
'என்ன லவ் பண்றியாக்கும்' அப்பாவின் இளக்காரமான குரல் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தமிழ் மாமாவின் உடலில் ஒரு குன்றல் உருவானது. அந்தக் குன்றலால் அவரை மேலும் வெறுத்தேன்.
'இங்கபாரு. அவ ஏற்கனவே ரெண்டு தடவ புள்ள அழிச்சிருக்கா. அதுக்கு சாட்சியெல்லாம் ரெடி பண்ணியாச்சு. உன்னைய பின்னாடி ஏதாவது மெரட்டுவான்னு பயந்தேன்னா புள்ள அழிச்ச கேஸ்ல அவள உள்ளத்தூக்கி போட்றலாம். அவ மெரட்டலுக்கு எல்லாம் பயந்துறாத என்ன' என்று மாமாவின் தோளில் தட்டினார்.
அப்பா ஏதோ தவறாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் மாமாவின் முகம் அப்பா சொல்வதை ஏற்றுக் கொள்வது தெரிந்தது. அந்த ஏற்பினை உணர்ந்து கொண்டவராக அப்பா மேலும் சொன்னார். அவர் குரல் இன்னும் தணிந்தது.
'வயசுல இப்படித்தான் எவளோட நாத்தமாவது புடிக்கும். ஆனா காலத்துக்கும் அந்த நாத்தத்தோட வாழ முடியுமா சொல்லு. அவளப்பாரு கரிக்கட்ட மாதிரி இருக்கா. நடந்து போனான்னா பேண்டுட்டு இருக்கிறவன் கூட எந்திரிக்க மாட்டான். இவளோட காலம்பூரா ஓட்டப்போறியா'
அப்பா மெல்ல மெல்ல மாமாவை ஜெயித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாமாவின் முகம் சற்று தெளிந்திருந்தது.
'உள்ளபோறப்ப அவளும் அவ அம்மாவும் என்னென்னவோ மாய்மாலமெல்லாம் காட்டுவாளுங்க,கால்ல வந்து விழுவாளுங்க,நெஞ்சுல அடிச்சிகிட்டு அழுவுவாளுங்க,சாபங்கொடுப்பாளுக,மெரட்டுவாளுக...ஆனா நீ சொல்ல வேண்டியது 'எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல' இதையே திரும்பத் திரும்ப சொல்லு'
தமிழ் மாமா அப்போது அப்பா அவரிடம் ஒரு கத்தியை கொடுத்து அந்த கருநிறப் பெண்ணின் தலையை வெட்டச் சொல்லி இருந்தால்கூட செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவளைக் கைவிட அவர் சம்மதித்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மாமாவை வெளியில் நிறுத்திவிட்டு அப்பா என்னை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போனார். அப்பெண்ணின் அம்மாவும் - அவளும் அட்டைக் கருப்பு - வக்கீலும் வந்திருந்தனர்.
வக்கீல் அப்பாவைப் பார்த்து சிரித்தார்.
'என்ன சண்முகம் மச்சானுக்கு ஓத வேண்டியதெல்லாம் ஓதிட்டீங்களா' என சற்று கசப்பு தொனிக்க கேட்டார்.
'தேவல்லாத பேச்செல்லாம் எதுக்கு தம்பி. படிச்சு வக்கீலாகி நம்மாளுக கேஸெல்லாம் முடிச்சு வைப்பேன்னு பாத்தா நீ இப்படி ப்ரோக்கர் வேல பாத்துட்டு திரியுற. நான் ஏதும் உன்ன கேட்டனா'
வக்கீலின் முகத்தில் அந்த எதிர்பாராத அடி பதற்றத்தை உருவாக்குவது தெரிந்தது. அவர் குரலில் இணக்கம் குறைந்து மீண்டும் வக்கீலானார்.
'மேடம் நீங்க பையன உள்ள வரச்சொல்லுங்க. அவஞ்சொல்லட்டும் இந்தப் பொண்ண லவ் பண்ணினா இல்லையான்னு'
அப்பா சற்று கோபமாக இடைமறித்தார்.
'பையனெல்லாம் வரசொல்ல முடியாது'
எனக்கு அப்பா ஏன் அப்படிச் சொன்னார் எனப் புரியவில்லை. நான் அந்தக் கருநிறப்பெண்ணைப் பார்த்தேன். கழுத்து எலும்பின் மேல் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. குளத்தின் நடுவே கிடக்கும் பழுத்த இலை போல அவ்வளவு அழகாக இருந்தது அந்தச் சங்கிலி. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அழகியாகிக் கொண்டிருந்தாள். மாமாவின் அழகும் அவளிடம் சேர்ந்தது போலிருந்தது. சோகமே உருவென நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒருத்தி சற்று சலிப்புடன் இந்த அரசாங்க சூதுகளை கவனித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கதையால் நனைக்கப்பட்ட பெண் எப்படி இருந்தாலும் அழகியாகிவிடுகிறாள். இப்போது அவள் உடல் என் மனதில் பதிந்த கதையின் முக்கிய அங்கமாகி இருந்தது. அப்பா ஏன் பதறுகிறார் எனப் புரிந்தது.
வக்கீலுக்கும் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்து அவள் தமிழ் மாமாவை சம்மதிக்க வைக்கப் போகிறாள் என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடியவில்லை. அப்பா சொன்னது போல அவள் அழவோ காலில் விழவோ போவதில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது. அதை அப்பாவும் உணர்ந்தவராக வெளியே ஓடினார். விரைவாக நடப்பவரெனினும் அவரிடம் ஒரு நிதானம் எப்போதுமிருக்கும். அந்த நிதானத்தை அவர் இழந்திருந்தார்.
கடைவாசலிலேயே உட்கார்ந்திருந்த தமிழ் மாமாவிடம் விரைவாகச் சென்றார். அவர் எழுவதற்குள்ளாகவே 'அந்தத் தேவிடியா கண்ண மட்டும் பாத்திராத' என்று முகத்துக்கு நேரே விரலை நீட்டி எச்சரித்தார். மாமா உள்ளே வந்தபோது மொத்த காவல் நிலையமும் அமைதியாக இருந்தது. மாமா உதவி ஆய்வாளரைப் பார்த்து 'மேடம் இவள எனக்கு தெரியும்.ஊர்க்காரப் பொண்ணு. ஆனா அவசொல்ற மாதிரி நான் அவள லவ்வெல்லாம் பண்ணல. இனிமே இதுமாதிரி என்ன இவ டார்ச்சர் பண்ணாம நீங்கதான் கண்டிச்சு விடணும்' என தமிழ் மாமா திக்கித் திணறி சொன்னார்.
அனைவருக்கும் அது பொய்யென்று தெரிந்தது. அப்படி ஒரு வெளிப்படையான ஆனால் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒரு பொய் சொல்லப்படும்போது சூழலில் ஒரு மௌனம் உருவாவதை பலமுறை கவனித்து இருக்கிறேன். சமீபத்தில் கூட அதாவது நேற்று தமிழ் மாமா இறந்தவன்று நான் இரங்கல் கூட்டத்தில் என்ன பேசினேன்? வேதாரண்யத்தில் இரால் பண்ணையில் பங்குதாரராகி லட்ச லட்சமாக சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் பால்பூத் ஐஸ்க்ரீம் பார்லர் என ஏகப்பட்ட தொழில்கள் செய்து வளர்ச்சி அடைந்து ஊரெல்லாம் காசு கொடுத்து காதலிகளை உருவாக்கிக் கொண்டு அவர்கள் கொடுத்த சீக்கில் செத்துப்போனவர் தமிழ் மாமா. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவரைப்பற்றி உழைப்பால் உயர்ந்த உத்தமர் மனிதநேயம் மிக்கவர் என்றெல்லாம் நான் பேசியபோது அக்கூற்றுகளில் இருந்த பாதி பொய்மைக்கே கூட்டம் அமைதியானதே! ஆனால் அன்று காவல் நிலையத்தில் அந்த அமைதியை அக்கருநிறப்பெண் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டாள் என்று தோன்றுகிறது. ஒரு மெல்லிய மூக்குறிஞ்சல் கைகளை தழைத்துவிட்டதால் கண்ணாடி வளையல்கள் முட்டிக்கொள்ளும் ஒலி அவள் புடவையின் சரசரப்பு. இவற்றால் தாக்குண்டு தமிழ் மாமா முகத்தை நிமிர்த்திய போது அவள் கூந்தலில் இருந்து விழுந்த மஞ்சள் ரோஜா. தமிழ் மாமா அழுதுகொண்டே அவள் காலில் போய்விழ இவ்வளவு போதுமானதாக இருந்தது. அப்பா என் மணிக்கட்டு வலிக்கும்படி கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினார்.
அப்பா அதன்பிறகு சரிந்து கொண்டே இருந்தார். அவரிடமிருந்த மிடுக்கும் அலட்சிய பாவனையும் காணாமல் போனது. நானுமே அவருடன் சேர்ந்து சரிந்து கொண்டிருந்தேன் என்று எட்டு வருடங்கள் கழித்து ஒரு உதவாத பொறியியல் கல்லூரிச் சான்றிதழுடன் தமிழ் மாமாவிடம் ஏதாவது வேலை வாங்கித் தரும்படி அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு போய் நின்றபோதுதான் எனக்குத் தெரிந்தது.
அன்று நானும் அப்பாவும் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அம்மாவுக்கு அவளுக்கே உரித்தான பிரத்யேக வழிகளின் மூலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவை தெரிந்துவிட்டன. தனக்கே பதினோரு வயது மகள் இருக்கிறாள் எனினும் பொதுவாக காதலின் வெற்றி பெண்களுக்கு அளிக்கக்கூடிய உற்சாகத்துடன்,அந்த உற்சாகத்தை கவலையென மாற்றிக் கொண்ட தொனியில் 'என்ன அவ கால்ல போய் விழுந்துட்டானாமா' என்று கேட்டாள்.
இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருந்த அப்பா 'அறைஞ்சு பல்லப் பேத்துருவேன். நாடுமாறி முண்ட...என்ன கொழுப்பெடுத்து திரியுறா' என்று அம்மாவை ஓங்கி அறைந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இதுபோல அடிவாங்கும் சமயத்தில் எல்லாம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அநீதியும் இழைக்கப்பட்டவள் போல அம்மா என்னை பார்ப்பாள். நானும் கரைந்து அழுதுவிடுவேன். ஆனால் அன்று அம்மா அடிவாங்கியது எனக்கு திருப்தியாக இருந்தது. சாய்மானத்துக்கு என என் முகத்தை ஏறிட்டவள் அதிலிருந்து திருப்தியைக் கண்டு சற்று நடுங்கிப்போனாள்.
நான் நடுக்கத்தை கூட்டும் படி 'அவர்தான் கோவமா இருக்காருன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏம்மா வெவஸ்தகெட்டத்தனமா பேசுற?' என்று சொல்லி உள்ளே போனேன். அப்பா களைத்துப்போட்ட மயில்கழுத்து நிறச்சேலை மடித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சரியத் தொடங்கியது மிகச் சரியாக அந்த தருணத்தில் இருந்துதான்.
நன்று
ReplyDeleteஇதன் இரண்டாம் பாகம் வருமா?
ReplyDeleteபுரியவில்லைங்க.