தர்மபுரியில் இரு தினங்கள் - வாசிப்பும் பண்பாடும்
அவதார் படத்தில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் இருக்கும் நாயகனை வேற்றுகிரக வாசியான அவதாரின் உடலில் செலுத்துவார்கள்(பல அறிவியல் விளக்கங்கள் தரப்படும் இந்த "செலுத்துதலை" கூடுவிட்டு கூடுபாய்தல் என்று வைத்துக் கொள்ளலாம). அவதாரின் உடலுக்குள் நம் நாயகன் சென்றதும் முதலில் தன் கால்களைத் தான் கவனிப்பான். கால்களை அசைக்க முடிவதும் நடக்க முடிவதும் அவனுக்கு பெரும் பரவசத்தை அளிக்கும். தட்டுத்தடுமாறி நின்று நடந்து உத்வேகத்துடன் ஓடவும் தொடங்கிவிடுவான். அவதாரின் உடலுக்குள் இருக்கும் அவன் உயிர் மீண்டும் மனித உடலுக்கு மாற்றப்படும் போது மறுபடியும் கால்கள் அற்றவனாக சோர்ந்து அமர்ந்திருப்பான்.
இணையவெளி இலக்கிய வாசகர்ளிடம் அல்லது இலக்கியம் வாசிக்க முயல்கிறவர்களிடம் உருவாக்கி இருப்பது இத்தகைய இரட்டை வாழ்க்கையைத்தான். இணையவெளியில் உலகமே தன்னை ஊன்றி கவனிப்பதாக எண்ணி அழுந்தக் காலூன்றி தன்னம்பிக்கையுடன் பாய்ந்து கொண்டிருக்கும் பலரைக் காண முடிகிறது. சமூக வலைதளங்களில் பழகக்கூடிய மனிதர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஏதோவொரு வகையில் சாரு, ஜெமோ, எஸ்.ரா, சுரா,அமி என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறவர்களை இலக்கிய வாசகர்களாக எண்ணி மின் நண்பர்களாக்கிக் (e-friends?) கொள்கிறோம். இதன் வழியாக தீவிரமாக வாசிக்கும் ஒரு பெரிய குழுவில் இருப்பவராக நம்மை கற்பனையில் உணர்ந்து கொள்ள முடிகிறது.
கொஞ்சம் மொபைல் டேட்டாவை அணைத்துவிட்டு பேருந்தில் அருகில் அமர்ந்து வருகிறவரையோ அலுவலகத்தில் உடன் பணிபுரிகிறவர்களையோ காண நேரும் போது அவர்களுடன் பேச நேரும் போது நம்முடைய மின் நண்பர்கள் நம்முடைய உருவெளித்தோற்றம் தானோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அவர்களது நடத்தைகள் நமக்கு பீதியூட்டுகின்றன. அசைவற்றவர்களாக அமர நேர்கிறது. ஏதோவொரு வகையில் தமிழில் இலக்கியம் வாசிக்கும் அனைவரையும் சற்று முயன்று தேடினால் ஓராண்டுக்குள் கண்டுபிடித்துவிட முடியும். இன்னும் சில ஆண்டுகள் முயன்றால் ஒட்டுமொத்தமாக தமிழில் ஒரு நூறு பக்க புத்தகத்தை வாசிக்கும் அனைவரையுமே கண்டறிந்து விட முடியும். நம் பரு வடிவிலான சூழல் இப்படித்தான் இயங்குகிறது. புதிதாக இலக்கியம் வாசிக்க வருகிறவர்கள் இங்கு பேசப்படும் விஷயங்கள் தீவிரமானவையாக இருப்பதால் ஒட்டுமொத்த சமூகமும் இப்படித்தான் இருப்பதாகவும் தான் மட்டுமே இந்த "பரந்து விரிந்த" அறிவுலகோடு தொடர்பற்று வாழ்வதாகவும் எண்ணிப் பதற்றமடையும் வாய்ப்புள்ளது.
உண்மையில் தமிழ் மொழியின் அறிவுலகு மிகச்சிறியது தான். அதையும் தரப்படுத்தலுக்கு உள்ளாக்கினால் அதன் பரப்பளவு மேலும் சுருங்கும். ரசனை மாறுபாடுகள் குழுச்சண்டைகள் எல்லாமும் நடப்பதெல்லாம் இந்தக் குறுங்குழுவுக்குள் தான். இக்குழுவில் தரமான எழுத்து கூர்மையான வாசிப்பு போன்றவற்றைக் கண்டடைவதில் மேலும் சில சிக்கல்கள் உள்ளன. எழுதப்படும் எல்லாவற்றையும் அரசியல் கண்ணோடு மட்டுமே பார்க்கிறவர்கள்.எந்த எழுத்தாளர் எந்த இயக்கத்திடம் எவ்வளவு பணம் பெற்றிருப்பார் என்று கணக்குப் போடுகிறவர்கள். கோட்பாட்டுக் கண்ணாடிகளை எந்தப் படைப்பின் முன்பும் கழற்ற மனம் வராத கோட்பாட்டாளர்கள். ஏதாவதொரு மொழியைச் சொல்லி அங்குள்ளதைப் போலெல்லாம் இங்கெதுவும் எழுதப்படுவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள். இப்படி இலக்கியச் சூழலைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் மனிதர்கள் பலரைக் (பலர் என்பதும் சிலரே) கடந்து தான் படைப்பினைப் பற்றி தன் நினைவிலிருந்து பேசும் மனிதர்களை சந்திக்க நேர்கிறது. அப்படி உண்மையிலேயே இலக்கியம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வாய்ப்பிருக்கும் என் நண்பர்கள் ஒரு சிலரில் ஜெயவேலும் ஒருவர்.
ஜெயவேல் |
தருமபுரிக்காரரான ஜெயவேல் ஒளிர்நிழல் வாசித்து விட்டு அலைபேசியில் அழைத்திருந்தார். ஒரு சில உரையாடல்கள் வழியாகவே பல வருடங்களாக இலக்கியம் வாசிக்கக்கூடியவர் என்பது புலப்பட்டது. இந்திய அளவில் முக்கியமான பல நாவல்களை வாசித்திருக்கிறார். நேரில் சந்திப்பதற்கு முன்பே பல மணி நேரங்கள் அலைபேசி வழியாக இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவோம். அவரது அழைப்பின் பேரில் ஆகஸ்டு நான்கு மற்றும் ஐந்து தேதிகளில் தர்மபுரி சென்றிருந்தேன். தர்மபுரியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தகடூர் புத்தகப் பேரவை போன்ற இலக்கிய அமைப்புகள் ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வருவதை ஜெயவேல் அவர்கள் வழியாக அறிந்திருந்தேன். எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பரும் என் நண்பர் ஜெயவேலின் ஆசிரியருமான தங்கமணி அவர்கள் குறித்தும் அவர் முன்னெடுத்த இலக்கிய நிகழ்வுகள் ஜெயவேல் முன்பே சொல்லியிருந்தார்.
நண்பரும் ஆசிரியருமான ரமேஷ் அவர்களுடன் வெள்ளி இரவு திருவாரூரில் இருந்து புறப்பட்டு திருச்சி சேலம் வழியாக மூன்று பேருந்துகள் மாறி விடியும் போது தர்மபுரி சென்று சேர்ந்தோம். ஜெயவேல் வந்து அழைத்துச் சென்றார்.
முதன்முறை சந்திக்கும் உணர்வேயின்றி சாலையிலேயே பேசத் தொடங்கிவிட்டோம். அரசுக் கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட இடம் வீரப்பனின் உடல் கிடத்தப்பட்ட அரசு மருத்துவமனை என்று காட்டிக்கொண்டே வந்தவர் அந்த வரிசையில் ஜெயமோகன் பணிபுரிந்த அலுவலகத்தையும் காட்டியபோது நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
"எங்கள் ஊரில் அறிமுகம் செய்து வைக்க வேறு எதுவும் இல்லை சுரேஷ்" என்று அவர் சொன்னாலும் முதல் பார்வையிலேயே தர்மபுரியை அணுக்கமாக உணரத் தொடங்கிவிட்டேன். நாம் ஒட்டுமொத்தமாக ஒரு "சாலையோர நகரமாக" மாறி வருகிறோமோ என்று என்னை அலைகழிக்கும் சந்தேகத்தை தர்மபுரியும் உறுதிபடுத்தியது. அகலமான சாலைகள், இருபுறமும் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் புதிதாகக் கட்டப்பட்ட கோவில்கள் என தமிழகப் பெருஞ்சாலையோரங்கள் ஒரு பெருநகரத் தன்மையை பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஆடையை உரித்துத் தான் அந்த நிலத்தினை அடைய வேண்டியிருக்கிறது. தர்மபுரி வறட்சியான மாவட்டம் என்று சொல்லப்பட்டிருந்ததால் வறட்சியை இயல்பாகவே வெம்மையுடன் மனம் முடிச்சுப் போட்டுக் கொண்டது. ஆனால் நாங்கள் சென்றிறங்கிய அதிகாலை மெல்லிய குளிருடன் வரவேற்றது தர்மபுரியை அணுக்கமாக உணரச் செய்திருக்கும் என்று ஊகிக்கிறேன். சென்னை மனதுக்கு சற்று விலக்கமாகவும் கோவை நெருக்கத்துடன் இருப்பதற்கு இந்த குளிர்தான் காரணம் போல.
இரண்டு நாட்களுக்கும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தான் ஊரிலிருந்து புறப்பட்டிருந்தேன். ரமேஷ் இணைந்து கொண்டது மட்டும் எதிர்பாராத மகிழ்வான நிகழ்வு. ஏனெனில் தனியே இரவுகளில் பயணம் செய்யும் போது தூக்கமும் வராது. மனம் எதையெதையோ எண்ணி சலிப்படைந்து கசப்படைந்து உணர்வடைந்து கொண்டிருக்கும். இந்தச் சுழல் இந்தப் பயணத்தில் செல்லும் போதும் மீளும் போதும் இல்லையென்பது இரண்டு நாட்களை உற்சாகம் நிறைந்ததாக மாற்றியது.
ஜெயவேல் மறுநாள் என்னை முன்னிறுத்தி ஒரு இலக்கிய சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணியிருந்திருக்கிறார். ஆகவே சனிக்கிழமை பொழுதை பேசியபடியே கழிக்க வேணடாம் என்று காலை உணவருந்திவிட்டு ஒகேனக்கல் புறப்பட்டோம்.
ஒகேனக்கல் |
ஒகேனக்கல் மலை மேல் இருக்கிறது என்று ஏன் கற்பனை செய்து வைத்திருந்தேன் என்று புரியவில்லை. தர்மபுரி ஒரு மேட்டுநிலம்(பீடபூமி). ஆகவே மலையிறங்கியே ஒகேனக்கலை அடைந்தோம். கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி தமிழ் நிலத்தை சந்திக்கும் இடம் ஒகேனக்கல். ஒரு சுற்றுலா தளமாகவே மாற்றப்பட்டு நன்கு பேணப்படுகிறது. நீர்வரத்து அதிகமென்பதால் அருவியில் குளிக்க முடியவில்லை. இருந்தும் பரிசல் பயணம் சாத்தியமானது. நாங்கள் பரிசலில் பயணம் செய்த பகுதியில் பதினெட்டு வருடங்களாக நீர் வரவில்லை என்று பரிசலோட்டி சொன்னார். எடியூரப்பா ஒகேனக்கல் வந்து மணலில் அமர்ந்து போராட்டம் செய்த இடம் இப்போது நீருக்கு இருபதடி ஆழத்தில் இருப்பதாகச் சொன்னார். அள்ளிக் குடித்த உடனேயே இருமலை வரவழைத்தாலும் காவிரியின் குளிர்ந்த நீர் தனிச்சுவை கொண்டிருந்தது.
ஆடிப்பெருக்கை ஒட்டி ஒகேனக்கலில் தொடர்ச்சியான கலை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பரிசல் பயணம் முடித்து விட்டு புறப்படும் முன் சிறிது நேரம் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை அமர்ந்து பார்க்க வாய்த்தது. இதுவரை பரதத்தை நான் நேரில் கண்டதில்லை. அந்த நிகழ்வு இனி பரதத்தை நேரில் மட்டுமே காண வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. ஒகேனக்கலில் இருந்து மீண்டும் தர்மபுரி வந்து சேர நான்கு மணி ஆகிவிட்டது. புத்தக கண்டாட்சிக்கு சென்றோம். முதல் வருடம் என்று நம்ப முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என் நண்பர் ஜெயவேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர். அறுபது நூல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. புத்தக கண்காட்சி வளாகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கான பொது அரங்கில் ஐநூறு பேருக்கும் மேல் அமரலாம். சென்ற வருடம் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கைவிட விசாலமான அரங்கு.
பொதுவாக இத்தகைய நூற்காட்சிகளின் மேல் எனக்கொரு அவநம்பிக்கை உண்டு. நூற்காட்சிகள் பொது வாசகர்களிடம் எல்லா வகையான நூல்களையும் கொண்டு சென்று சேர்த்தாலும் வாசிப்பினை ஒரு விழா மனநிலையுடன் இத்தகைய நூற்காட்சிகள் முடிச்சிட்டு விடுகின்றன என்பது என் எண்ணம். விழா மனநிலையான தளர்வுக்கும் ஜனநாயகப் பண்புக்கும் எதிரான இறுக்கமும் தீவிரமும் கொண்டதாகவே வாசிப்பு மனநிலை இருக்க இயலும். ஆனால் தகடூர் புத்தகப் பேரவை என்ற இலக்கிய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த நூற்காட்சியின் பண்பாட்டுத் தேவையை சூழலில் நன்கு உணர முடிந்தது. நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் காவிரி தமிழகத்தில் நுழையும் மாவட்டம் என்றாலும் தர்மபுரிக்கு காவிரியால் எந்தவிதப் பயனும் இல்லை. தொழில் வளங்களும் பெரிதாக தர்மபுரியில் இல்லை. ஆனால் இந்த மாவட்டத்தில் ஒரு வலுவான அரசுத்துறை சமூகம் உருவாகி வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் அரசுத்துறை போட்டித் தேர்வுகள் அனைத்திலும் தர்மபுரியினர் கணிசமான அளவில் வெல்கின்றனர். தங்கள் மாவட்டம் குறித்து தமிழகத்தில் உருவாகி இருக்கும் பார்வையை இவர்கள் மாற்றத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு தேர்வில் ஒரே கிராமத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெறும் நிகழ்வுகளெல்லாம் நடந்தேறி வருகின்றன. இயல்பாகவே கல்வியிலும் பொருளாதாரச் சூழலிலும் அடுத்தப்படிநிலைக்கு நகரும் ஒரு சமூகத்தின் அடுத்தகட்ட நிகழ்வுகளாக பண்பாட்டுச் செயல்பாடுகள் அமைகின்றன.
தர்மபுரி தன்னுடைய பண்பாட்டு முகத்தை முன்வைக்கும் நிகழ்வாக இந்த நூற்காட்சியை தயக்கமின்றி சொல்ல முடியும். கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் என்று ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக் குறியீடுகள் சார்ந்த பட்டியல் போட்டால் கடைசி பத்து இடங்களில் ஒன்றை தர்மபுரியும் திருவாரூர் நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களும் பிடித்திருக்கும். அவ்வகையில் தர்மபுரிக்கு "அணுக்கமான" திருவாரூர்காரனாக ஒன்றை உறுதியாகச் சொல்ல முடிகிறது. அடுத்த பத்தாண்டுகளில் தர்மபுரி பல மடங்கு முன் சென்றிருக்கும். ஏனெனில் அங்கு பண்பாட்டு பிரக்ஞையுடைய ஒரு தனிச்சமூகம் உருவாகிவிட்டது. கடுமையான விவாதங்களும் பூசல்களும் கூட அங்கு நடைபெறுவதாக ஜெயவேல் சொல்லி இருக்கிறார். தன்னைக் கண்காணிக்கக்கூடிய இந்த பிரக்ஞையே சமூக முன்னேற்றத்திற்கான முக்கியமான காரணி. அவ்வகையில் திருவாரூர் நாகை மாவட்டங்கள் எவ்வகையிலும் தேரப்போவதில்லை என்று நன்றாகவே தெரிகிறது. லயன்ஸ் ரோட்டரி போன்ற சங்கங்களின் "சமூகநலச்" செயல்களைத் தாண்டி உண்மையான பண்பாட்டுச் செயல்பாடுகள் எதையுமே இவ்விரு மாவட்டங்களிலும் காண முடிவதில்லை. சிறிய அளவில் நூற்காட்சிகள் இங்கும் நடைபெற்றாலும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து டெல்டாவாசிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். நூற்காட்சி நடைபெறும் அனைத்து தினங்களிலும் மாலை நிகழ்வில் ஒரு பிரபலமும் ஒரு எழுத்தாளரும் கலந்து கொண்டு உரையாற்றும்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கின்றனர். எஸ்.ராமகிருஷ்ணன் பெருமாள் முருகன் ஆகியோர் அடுத்தடுத்த தினங்களில் பேசவிருக்கின்றனர் என்று அறிந்தேன். சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு எட்டு மணி சுமாருக்கு வீட்டுக்குத் திரும்பினோம். இது போல இலக்கியத்துக்குள் இருக்கும் தினங்களில் பயணக்களைப்பு துளியும் தெரிவதில்லை. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு பதினொன்று முப்பதுக்கு உறங்கச் சென்றோம்.
மறுநாள் காலை தீர்த்தமலை செல்வதாகத் திட்டம். ஆனால் அங்கு சென்று மீள்வதற்கு நாங்கள் விரைவாகவே எழுந்து கொண்டிருக்க வேண்டும். ஐந்து மணிக்கு மேலாகிவிட்டதால் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருந்தோம். ஜெயவேல் தஸ்தாவெய்ஸ்கியின் தீவிரமான வாசகர். மேலும் தஸ்தாவெய்ஸ்கியிலிருந்து காந்தியைப் பார்ப்பவர். பல எழுத்தாளர்களுடன் உரையாடலில் இருப்பவரும் கூட. ஒரு எழுத்தாளனுக்கான இடத்தை எந்நிலையிலும் மறுக்காத தன்மை உடையவர் என்பதாலேயே எழுத்தாளன் மீதான விமர்சனங்களையும் தயங்காமல் முன்வைக்கக்கூடியவர். மேலும் அவரது இந்திய இலக்கிய வாசிப்பும் சூழியல் இசை போன்ற பிற துறைகளின் வாசிப்பும் நாட்டமும் தொடர்ச்சியாக ஈடுபடும் பயணங்கள் குறித்து அவர் சொல்லும் தகவல்களும் ஒரு நொடியைக்கூட வீணடிக்காமல் விவாதிக்கக்கூடிய ஒருவராக அவரை உணர வைப்பவை. ஆகவே நேரில் சந்திப்பதற்கு முன் தொலைபேசியில் பேசிக்கொண்ட பல உரையாடல்களின் நீட்சியை நேர் விவாத்திலும் தொடர்ந்தோம். காலை உரையாடல் இலக்கியத்தில் இருந்து விலகி திராவிட அரசியல் ஜாதி திருமாவளவனின் ஆரம்பகால அரசியல் செயல்பாடுகள் ராமதாஸ் என்று நீண்டது. அவர் தர்மபுரி என்பதால் அங்கு ஜாதி சார்ந்து மக்களின் மனநிலை என்பது குறித்து ஒரு கூர்மையான அவதானிப்பு இருக்கிறது.
மதியம் இரண்டு மணிக்கு புத்தக கண்காட்சி அரங்கில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை ஜெயவேல் ஏற்பாடு செய்திருந்தார். யாருமே வரப்போவதில்லை என்ற அவநம்பிக்கை எனக்கிருந்தது என்றாலும் பத்துக்கும் அதிகமானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜெயவேல் மற்றும் உமேஷ் இருவரும் என் படைப்புகள் குறித்து கேள்விகள் கேட்டனர். மற்றும் சிலரிடமிருந்து இலக்கியம் சார்ந்த பொதுவான கேள்விகள் வந்தன. இரண்டு மணி நேரம் நீடித்த கலந்துரையாடல் நிகழ்வு நான்கு மணிக்கு முடிடைந்தது.
ஜெயவேல் அவரது அணுக்கமான நண்பரான இளஞ்செழியன் அவர்களை அறிமுகம் செய்தார். மிக்குறைவாக பேசக்கூடியவர். மிக்குறைவாக பேசுகிறவர்களுக்கே உரிய அவதானிப்புத் திறனும் படாடோபம் இல்லாமல் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் பண்பும் கொண்டவர். எனக்கு சிவராம காரந்தின் மண்ணும் மனிதரும் நூலை பரிசளித்தார். முதல் நாள் ஜெயவேல் அவரது மற்றொரு நண்பரான வேலு மற்றும் அவரது ஆசிரியர் தங்கமணி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். பூவிதழ் உமேஷ் அடுத்தமுறை புத்தக கண்காட்சிக்கு வரவேண்டுமென இரண்டு முறை கூறினார்.
ஞாயிறு நிகழ்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரையாற்றுவதாக இருந்தது. அவர் மற்றொரு நிகழ்வுக்கு செல்ல நேர்ந்ததால் என்னை பேசும்படி ஜெயவேல் சொன்னார். உண்மையில் இத்தகைய பொது மேடைகள் எனக்கு அறிமுகமில்லாதவை. இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே இலக்கியக் கூட்டங்களில் மைக் முன் நின்று பேசியிருக்கிறேன். எனினும் ஏதோவொரு நம்பிக்கையில் தயங்காமல் ஒத்துக் கொண்டேன். அன்றைய மாலை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஊடகவியலாளர் குணசேகரன் கலந்து கொண்டார். நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் வெகுநேரம் பேசிக் காலம் கடத்தியதால் பேச்சாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்த எனக்கு நேரம் குறைவாகவே வழங்கப்பட்டது. தொடர்ந்து வாசிப்பது அகமொழியை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று பேசினேன். நேரமின்மையின் காரணமாக சில விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. இருந்தும் இந்த மேடை சில விஷயங்களை எனக்கு உணர்த்தியது.
மேடைப் பேச்சுகளை ஒரு வகையான சம்பிரதாயங்கள் உழைப்பு வீணடிப்புகள் என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால் மேடையில் இருந்து பார்க்கும் போது இது போன்ற நிகழ்வுகளும் உரைகளும் ஒரு சூழலில் உருவாக்கும் அர்த்தவெளியை தெளிவாக உணர முடிகிறது.
மேடைப் பேச்சு சலிப்பூட்டுவதற்கு முக்கிய காரணம் அங்கு பெரும்பாலும் புதிதாக எதுவுமே சொல்லப்படுவதில்லை என்பது தான். ஒரு குழந்தையின் முன் உதடு குவித்து கைதட்டி சத்தமிட்டால் அதை சிரிக்க வைத்துவிட முடிவது போல ஒரு வகையான "தோரணையுடன்" பேசினால் பேச்சின் சாரத்தில் எந்தவித கவனமும் இன்றி அமர்ந்திருக்கும் பார்வையாளரை எளிமையாக உணர்ச்சிவசப்பட வைத்துவிடலாம் என்று மேலிருந்து பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே தமிழகத்தின் பெரும்பான்மையான பேச்சாளர்கள் நிகழ்த்துக்கலை வல்லுநர்களே. திராவிட இயக்கப் பேச்சாளர்களுக்கு இத்தகைய நிகழ்த்துக் கலைகள் நன்றாகவே கைகூடி வருகின்றன. ஆனால் என் பேச்சு உரையாடல் தொனியிலானது. அருகில் நின்று கொண்டிருக்கும் உற்ற நண்பனின் குரலுக்கு கொடுக்க வேண்டிய கவனிப்பை கொடுக்கும் மனநிலை உடையவர்களே என் பேச்சை தொடர முடியும் என்ற எண்ணத்தை இந்த உரையின் போது அடைந்தேன். மேலும் தீவிரமான விஷயங்களை இந்தத் தொனியில் பேசும் போது கவனிக்கிறவர்களுக்கு சிரமம் இருப்பதில்லை என்கிற விஷயத்தை எதிரே இருக்கிறவர்களின் முகங்களில் இருந்து ஊகிக்க முடிந்தது.
இளந்தலைமுறையினரின் மேடைப்பேச்சின் மீதான ஒவ்வாமைக்கு முக்கியகாரணம் பேச்சு ஒரு நிகழ்த்துக் கலையாக மாறுவதே. சொற்கள் பயனுள்ளவையாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இன்றைய இளைஞனிடம் பெருகியிருக்கிறது. அவன் தன்னை உணர்ச்சியால் கொந்தளிக்க வைக்கிற அல்லாமல் தனக்கு பயன்தரக்கூடியவற்றை விரும்புகிறவனாக மாறியிருக்கிறான். தமிழ் மேடைப்பேச்சின் முகம் இத்தகைய அறிவார்ந்த ஒரு தரப்பையும் கவனத்தில் கொள்வதாக மாறும் என்று தான் எண்ணுகிறேன்.
நிகழ்வு முடிந்ததும் சாப்பிட்டுப் புறப்படவே நேரமிருந்தது. தற்செயலாக அமைந்த இரண்டு நாள் விழா மனநிலையும் ஒரு உற்சாகத்தையும் நிறைவையும் மனம் முழுக்க நிறைத்திருந்தது. மறுநாள் தஞ்சை தாண்டி வரும் போது குலதெய்வம் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரு குடும்பம் அதிகாலையில் வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியது. அக்குடும்பத்தின் மிக அழகான பெண் என் அருகில் வந்து அமர்ந்தாள். ஒப்பனைகளற்ற அவள் முகத்தில் மனதில் மெல்லிய துயரை நிரப்பும் ஒரு அழகு நிறைந்திருந்தது. தர்மபுரி பெண்களின் சருமம் மென்மையானதாக தோன்றுகிறது என்று ஜெயவேலிடம் சொன்னதை எண்ணிப் புன்னகைத்தபடியே மன்னார்குடியில் இறங்கினேன்.
கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. வாசிக்கும்பாேது தர்மபுரி மாவட்ட நிலங்களும் மாந்தர்களும் மனக்கண்முன் வருகிறார்கள்.வர்ணனைகள் சிறப்பு. இக்கட்டுரையை வாசிப்பவர்கள் நிச்சயமாய் இலக்கிய செயல்பாடுகளில் இன்னமும் அதிகமாய் ஊக்கம் பெறுவார்கள். மேலதிகமாய் உள்ளுக்குள் சிரித்துக் காெண்டபாேதும் ஜெயவேலிடம் சாெல்லிக் காெண்டதை நினைத்துக் காெண்டபாேதும் வெளிப்பட்ட எழுத்தாளரின் மெல்லிய குறும்புத்தனம் புன்னகையை வரவழைத்தது. கட்டுரையாசிரியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!
ReplyDelete