ஏன் இலக்கியம்?

ஏன் இலக்கியம் வாசிக்கிறீங்க?இலக்கியம் இல்லாமல் மக்கள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாரகள்.அரசு நடந்து கொண்டுதானே்இருக்கறது. அறிவியல் அறிஞர்கள் கண்டுபடிப்புகளை நிகழ்த்தி கொண்டுதானே இருக்கிறார்கள்.போர் நடந்து கொண்டுதானே இருக்கிறது.வண்புணர்வு நடந்து கொண்டு தானே இருக்கறது.அணு ஆயுத பதட்டம் இருந்து கொண்டதானே இருக்கறது.மக்கள் பசியில் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.இவற்றுக்கெல்லாம் இலக்கியம் எந்த வகையில் தேவை.உலகம் இருக்க இருக்க பண்பாட்டு ரீதியாக,உறவு ரீதியாக,சுற்றுசூழல் மனித நேயம் ரீதியாக மோசமான இடத்திற்கு தானே நகர்ந்து கொண்டு இருக்கறது?

நவீன்

அன்புள்ள நவீன்

இலக்கியம் என்பது மாற்றத்துக்கான கருவி என்று நான் எண்ணவில்லை. ஒரு வயலினிஸ்ட் வாசிக்கும் போது நாம் அந்த இசைத்துணுக்கை ரசிக்கிறோம். நம் நினைவுச் சேகரத்தில் எங்கோ சென்று அவ்விசை தங்குகிறது. நம் வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் அந்த இசைத்துணுக்கை நினைவு மீட்டுகிறோம் அல்லது ஒரேயடியாக மறந்து விடுகிறோம். இதனால் ஏற்பட்ட பயன் என்ன? அந்த இசையைக் கேட்கும் போது நம்முள் இருக்கும் எது அவ்விசையுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டது? பிடித்த  உணவு ஏன் நம் நாவில் எச்சில் ஊறச்செய்கிறது? எவ்வளவு அழகான பெண்களை நாம் தினமும் பார்த்தும் ஏன் ஒரு வகையான உடல் அமைப்பும் முக அமைப்பும் கொண்ட சில பெண்களால் ஏடாகூடமாக ஈர்க்கப்படுகிறோம். (பெண்களுக்கும் இது பொருந்தும்)

இக்கேள்விகளுக்கு நீங்கள் யதார்த்த தளத்தில் பதில் தேடலாம். உணவின் ருசிக்கும் தரத்துக்குமான அளவுகோலை எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்புக்கும் சந்ததி உருவாக்கத்துக்குமான தொடர்பை நீங்கள் முயன்று தேடி அடையலாம். எந்தவொரு ரசனையையும் மேன்மையான உணர்வையும் கறாரான யதார்த்த தளத்தில் வைத்து புரிந்து கொள்ள முடியும். மார்க்ஸிய சட்டக ஆய்வுகளை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் இது விளங்கும். மார்க்ஸியம் கலை இலக்கியத்தை சமூகத்தின் "மேற்கட்டுமானம்" என்கிறது. அதாவது பொருளாதார தன்னிறைவு கொண்ட முதலாளிகளுக்காக கலை உருவாக்கப்பட்டது என்பது மார்க்ஸியத்தின் நம்பிக்கை. அத்தகைய முதலாளித்துவ கட்டுமானத்தை வீழ்த்துவதற்காகவே நவீனக்கலை பயன்பட வேண்டும் என்ற நம்பிக்கையை மார்க்ஸியம் ஆழமாக சூழலில் விதைத்து விட்டது. அதாவது மார்க்ஸியம் கலையையே முதலாளிகளுக்கு விலை போகும் கலை முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கும் கலை என்று பிரித்து கொண்டது. அவ்வகையில் சமூக அக்கறை இல்லாமல் எழுதப்படும் எதையும் மார்க்ஸியம் கலையாக ஏற்காது. நீங்கள் இலக்கியத்தால் உலகை மாற்றிவிட முடியுமா என்று கேட்பது கூட அதனால் தான். இலக்கியம் சமூக மாற்றக் கருவியாக இருந்தே ஆக வேண்டும் என்பது மார்க்ஸிய சித்தாந்தத்தின் எதிர்பார்ப்பு மட்டுமே.

நான் எழுதியும் வாசித்தும் அறிந்த ஒன்று இருக்கிறது. எந்தவொரு கோட்பாட்டின் மானுடம் பற்றிய கனவை விட ஒரு எழுத்தாளனுக்கு இருக்கும் சமூகம் பற்றிய கனவு சமூகத்தின் செல்திசையை தீர்மானிக்கும் கனவு பெரிது. சாதி அமைப்பு மிக இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சமுதாயத்தில் எழுதப்பட்ட கதை புதுமைப்பித்தனின் "நாசகார கும்பல்". இன்று அக்கதை சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு பின் வந்த சி.சு.செல்லப்பா ஒரு பிராமணருக்கும் நாயக்கருக்குமான தோன்றிய ஆழமான நட்பை தன்னுடைய "பெண்டிழந்தான்" கதையில் சித்தரிக்கிறார். அக்கதையில் அந்த பிராமணர் நண்பரின் வீட்டில் சாப்பிடாமல் அதே ஊரில் இருக்கும் இன்னொரு பிராமணரின் வீட்டில் சாப்பிடுகிறார். இன்று உற்ற நண்பனாகிவிட்ட ஒருவன் சாதி காரணமாக நம் வீட்டில் சாப்பிட முடியாது என்று சொன்னால் நம்மால் அதை ஏற்க முடியுமா சொல்லுங்கள்?

இதை ஏன் சொல்கிறேன் என்றால்  பெண்டிழந்தான் நாசகார கும்பலுக்கு பிந்தி எழுதப்பட்ட கதை. ஆனால் புதுமைப்பித்தனால் சாதி அமைப்பை அன்றே இயல்பானதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்ப அமைப்பை என்னால் இயல்பானதாக ஏற்க முடியவில்லை என்று சொல்கிறவர்கள் இன்று அதிகரித்து இருக்கிறார்கள். இலக்கியம் சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றம் அகவயமானதே. இன்று நாம் மூடத்தனங்கள் என்று வெறுத்து ஒதுக்கும் பல விஷயங்களின் அநீதியை உலகிற்கு எடுத்துக் காண்பிப்பதாக இலக்கியம் இருந்திருக்கிறது.

இன்று திருநங்கைகள்  ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்றவர்கள் மீதான அருவருப்பு குறைந்திருக்கிறது. என்னிடம் அப்படி ஓரினச்சேர்க்கையில் இருக்கும் ஒரு நபர் தன் எண்ணங்களை அலைபேசியில் இப்போது பகிர்ந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார். இலக்கியம் வாசிக்கிறவன் தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையை அவருக்குள் விதைத்தது எது? முகம் தெரியாத ஒருவனிடம் தன் அந்தரங்கத்தை தன் அடையாளத்தைக் கூட மறைத்துக் கொள்ளாமல் ஏன் அவர் பகிர்ந்து கொள்கிறார்? அது என் மீதான நம்பிக்கை இல்லை. இலக்கியம் சார்ந்த ஒருவன் தன் அகவெளிக்கான மரியாதையை வழங்குவான் என்ற நம்பிக்கை அது.  சமூகத்தின் பொது புத்தியில் இருந்து இவன் சற்று விலகியிருப்பான் நம்மை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை. இலக்கியம் மீண்டும் மீண்டும் இந்த நம்பிக்கையைத்தான் சமூகத்தில் விதைக்கிறது.

ஒரு வகையில் சமூகத்தை உரையாடச் செய்கிறது. படைப்புகள் எதிர்வினைகள் விமர்சனங்கள் குழுச்சண்டைகள் வாக்குவாதங்கள் என்று இவற்றின் வழியாகவே சமூகமாக நாம் பேசிக்கொள்கிறோம். உரையாடல் அற்ற சமூகம் ஆபத்தானதும் கூட. ஒரு அரசாங்கம் இறுக்கமடையும் போது அங்கு முதலில் அமைதியாக்கப்படுவது கலைஞன் தான். ஏனெனில் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் அரசாங்கமே மக்களை அமைதியாக இருக்கச் சொல்லும். தனிமனிதர்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் சமூகமாக அமைதியாக இருப்பது விளைவிக்கும் ஊறுகளை ஏற்கனவே வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஒரு வகையில் இலக்கியம் சமூகத்தை சத்தம் போட வைக்கிறது.

இலக்கியம் உருவாக்கும் சொல்லக்கூடிய மாற்றங்களே இவை.அனைத்திற்கும் மேலாக மற்றொன்று உண்டு. இவற்றைத்தாண்டி தேடலுடைய மனிதர்களுடன் மிக அந்தரங்கமாக உரையாட இலக்கியத்தால் முடியும்.  வார்த்தைகளாக மாற்றிக் கொள்ளாத பல கேள்விகள் நம்மிடம் இருக்கும். அக்கேள்விகள் மீது இலக்கியம் ஒளிபாய்ச்சுகிறது. நம்முடைய மன அந்தரங்கத்தை சமூக மனதின் அந்தரங்கத்துடன் இணைக்கிறது. நம்முடைய வாழ்வில் எதிர்படும் சிக்கல்களை ஒரு பெரிய பரப்பில் நிறுத்தி ஆராய வைக்கிறது. ஏனெனில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களாக நாம் இலக்கியத்தில் வாழ்கிறோம். நான் வாசிப்பதும் எழுதுவதும் இப்படி வேறுவேறு மனிதர்களாக வாழ்ந்து பார்க்கவே.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024