காலூன்றுதலின் கசப்புகள் - கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை முன்வைத்து

நவீனத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்தல் குறித்த வலுவான பிரக்ஞை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழ்ந்து விடுகிறது. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கென இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. ந.பிச்சமூர்த்தி சி.சு.செல்லப்பா ஆகியோரின் சில கதைகளில்  வடக்கில் இருந்து  தொழில் செய்ய வரும் நாடோடிகள்  பற்றிய குறிப்புகள் வந்துபோகும். அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் இந்திய தேசிய ராணுவம் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய சித்திரங்களை மலேசியா ஜப்பான் இந்தோனேஷியா பர்மா ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வழியே  ப.சிங்காரம் தனது நாவல்களில் காண்பிக்கிறார். மலேசியா தோட்டத் தொழிலாளர்கள் குறித்த பதிவுகளை சீ.முத்துசாமி எழுத்துக்களில் காண்கிறோம். தமிழின் இத்தகைய புலம்பெயர் எழுத்துக்களில் உள்ள ஒற்றுமை "பொருள்வயின் பிரிதலே". அதீத வறுமை அல்லது தொழில் வாய்ப்புகளைத் தேடிச் சென்ற தமிழர்கள் குறித்த சித்திரமாகவே இவை இருக்கின்றன. அதிலும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது தமிழில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள் சொற்பமானவை. அப்பதிவுகளும் பெரும்பாலும் வறுமை வாழ்வியல் இடர்கள் அடையாளச் சிக்கல்கள் போன்றவற்றை பேசும் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

கலாமோகனின் நிஷ்டை தொகுப்பு போரினால் வலுக்கட்டாயமாக புலப்பெயர்வை நிகழ்த்திக் கொண்ட ஒரு தன்னிலையைத் தன்னுள் கொண்ட தொகுப்பு. இத்தொகுப்பில் தொடர்பே இல்லாததாகத் தென்படும் கதைகளை ஒரு புள்ளியில் நிறுத்தி புரிந்து கொள்ள கதை சொல்லியின் தன்னிலை குறித்த அவதானிப்பு அவசியமாகிறது. இத்தொகுப்பின் தனித்துவமும் இந்த போரினால் சிதறுண்ட தன்னிலை தான் என்பது என் அவதானிப்பு. இந்த பிரத்யேக தன்னிலை குறித்து பேசுவதற்கு முன் புலம்பெயர் இலக்கியத்தின் தேவை என்ன என்று நம்மை கேட்டுக் கொள்ளலாம். நம்முடைய உடல், புறச்சூழலை அவதானித்து அதற்கேற்றார் போல தன்னை தகவமைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலம் குறைவானது. அக்காலத்தை ஒப்பிட நினைவுச்சேகரங்களை படிமங்களை தன்னுள் சுமந்தலையும் மனம் தொடர்பற்ற ஒரு பண்பாட்டுச் சூழலில் தன்னை பொறுத்திக் கொள்வது அவ்வளவு எளிதாக நடந்தேறி விடுவதல்ல. பொருள்வயின் பிரிதல் என்று வரும்போது நம் நினைவுச் சேகரத்துக்கும் நமக்கும் ஒரு உணர்ச்சிகரமான பிணைப்பை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அதன் தொடர்ச்சியை நம்மால் நினைவுப் பகிர்தலாக புகைப்படங்களாக கதை சொல்லலாக தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. தக்கவைத்தல் தொடர்ச்சியை அளித்தல் என்பவை தான் புலம்பெயர் இலக்கியத்தின் முதன்மையான தேவைகள். தக்கவைக்கவும் தொடர்ச்சியை அளிக்கவும் ஒரு மனிதன் அஞ்சுகிறான் அதனைச் செய்ய விலக்கம் கொள்கிறான் எனில் என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டால் அக்கேள்வியின் முன் கலாமோகனின் இச்சிறுகதை தொகுப்பை கொண்டு வந்து நிறுத்தலாம்.போரினால் புலம்பெயர நேர்ந்த படைப்பாளி கலாமோகன். பொருள்வயின் பிரிதலுக்கும் போரினால் பிரிவதற்குமான இடைவெளியே கலாமோகனின் இத்தொகுப்பை முக்கியமானதாக மாற்றுகிறது. பொருள்தேடுவதற்கென்று பிரியும் போது நினைவுகள் துயரை மட்டுமே அளிக்கின்றன. ஆனால் போரினால் புலம்பெயர நேர்கிறவன் துயரை விட அச்சத்தையும் மன விலக்கத்தையுமே மிகுதியாகக் கொண்டுள்ளான். அந்த அச்சமும் விலக்கமும் கசப்பாக புனைவில் வெளிப்படுகிறது. தேசங்கள் அற்றவனாக சரியான உறவு நிலைகள் அமையாதவனாக கதை சொல்லி தன்னை தகவமைத்துக் கொள்கிறான். அதனால் உண்டான கசப்புகள் பல கதைகளில் தெறிக்கின்றன.

/"சுத்தங்கள் சொற்பமாகவும் அசுத்தங்கள் அதிகமாகவும் உள்ள இந்த உலகிலே, கண்கள் சந்தேகங்களை மட்டுமே வலைவீசி அள்ளப் படைக்கப்பட்டுள்ளன. இந்த உலகில் தேசமும், தேசங்களும் அற்ற ஒருவனாக நான். தேசமற்ற இந்த உலகிலிலே எனது ஆத்மாவிலிருந்து கசியும் நறுமணம் ஒரு சிலரது நாசித்துவாரங்களிலாவது அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கின்றனவே. இதனால்லவா தேசங்கள் அற்றவனாகவும், நாஷனலிற்றிகள் இல்லாதவனாகவும் இருப்பதையிட்டு எனக்குள் ஓர் அகந்தை அவ்வப்போது தலை நீட்டுகின்றது" /என்று ஓரிடத்தில் வெளிப்படும் கதை சொல்லியின் வார்த்தைகளை இத்தொகுப்பு நமக்கு அளிக்கும் தரிசனமாகவே கொள்ள முடியும்.

மழை என்ற ஒரு கதை நீங்கலாக மற்ற அனைத்துக் கதைகளும் பிரான்ஸில் தான் நிகழ்கின்றன. கலாமோகனுடைய மொழி ஒரு வகையான அகவய உரையாடல் தன்மை கொண்டது. மொழியில் ஒரு மெல்லிய இழையாக ஓடும் கவித்துவம் உரையாடல்களில் அபாரமாக வெளிப்படுகிறது. இரா நிஷ்டை போன்ற கதைகளில் வெளிப்படும் கசப்பான அங்கதத்தை கலாமோகனின் மொழி ரசிக்கும்படியாக மாற்றியிருக்கிறது. பைபிள் வசனங்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கனி என்ற அங்கதக் கதை இவ்வகையில் இத்தொகுப்பின் சிறந்த கதை எனலாம்.

கதை சொல்லிக்கும் அவன் தோழிக்கும் நடைபெறும் உரையாடலாக பல கதைகள் இருக்கின்றன. அவ்வுரையாடலை நேரடியாக அகத்தைப் பேசுவதாக அமைத்திருக்கிறார் கலாமோகன். கனி என்ற கதை நீங்கலாக இத்தொகுப்பின் மற்ற எந்தக் கதையிலும் கதை சொல்லிக்கு மணவாழ்வு அமையவில்லை. அவன் எழுத்தை சிலாகிக்கும் தோழிகளாகவும் (நிழல்,ஈரம்) அவன் மனதை ஆற்றுப்படுத்தும் விபச்சாரிகளாகவும்(கோடை) பெண்கள் இக்கதைகளில் வந்து செல்கின்றன. தொகுப்பின் பல கதைகள் இத்தகைய அகவயத் தன்மை கொண்டவையே. ஆனால் அவற்றை வெறும் பாலுணர்வுத் தன்மை கொண்டவையாக இல்லாமல் கதை சொல்லியின் சிதறுண்ட மனதை வெளிப்படுத்துகிறவையாக அமைத்திருப்பது இவ்வகைக் கதைகளின் சிறப்பு எனலாம்.  அவ்வகை கதைகளில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிழல் என்ற சிறுகதை ஒரு உச்சம். தான் எழுதியதை யாரும் படிக்கும் முன்பே கிழித்து எரித்து விடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் கதை சொல்லியை அறைக்கு உள்ளேயும் அவனிடம் கதைகளை பெற்றுச் செல்வதற்காக வந்திருக்கும் அவனது தோழியை அறைக்கு வெளியேயும் நிறுத்திக் கொண்டு அவர்களுக்கு இடையேயான உரையாடல்களை இக்கதையில் ஆசிரியர் அமைத்திருக்கிறார். ஆண் பெண் உறவில் இடையே முளைத்து நிற்கும் பல்வேறு நிழல்களை முன் வைக்கும் கதையாக இதை வாசிக்கலாம்.

/“நீ எனக்காக எழுதியவைகளைக் கிழித்துச் சாம்பலாக்கியிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். எழுத்தைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. உன்னோடு பேசுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். நீ உள்ளேதானியிருக்கிறாய் தயவு செய்து கதவைத்திற நான் உன்னைக் கோபிக்க மாட்டேன்.”

சிகரட் தட்டில் கருகிச் சாம்பலாகிக் கிடந்த தாள்களை மேசையில் கொட்டி விட்டு “நான் உள்ளேயில்லை” என்று மெதுமையான குரலில் சிரமப்பட்டுப் பதிலளிக்கிறேன்.

"நீ உள்ளேயில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். கதவை மட்டும் திற"

“நான் உள்ளேயில்லை கதவைத்திறக்க என்னிடம் திறப்பும் இல்லை. நான் எவ்வாறு உள்ளேயில்லையோ நீயும் அதுபோல வெளியேயில்லை. இதனை ஒத்துக் கொண்டு போய் விடு"/

இப்படித் தொடங்கும் உரையாடல்

/“நீ கனவு காண்கிறாய்”

"என்ன நீ மட்டுமில்லையா? உனது கனவுகள் தம்மை வாழட்டும் என்ற புனித நோக்குடன் தான் நான் இங்கு வந்துள்ளேன்"

“வேண்டாம். எனது கனவுகளையும் எரிப்பதாக முடிவெடுத்துள்ளேன்”

"கனவுகளை எரித்து விடாதே! அவைகள் மட்டும்தான் எஞ்சியுள்ளன"

"எனது கனவுகள் மிகவும் கொடூரமானவை. எனவேதான் அவைகளை எரிக்கத் துணிந்தேன்”/ என்கிற இடத்தை உரையாடலின் வழியே அடைந்திருப்பதுதான் இக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது.

தன்னிலை சிதைந்தவனின் உறவுநிலைகளை உருவாக்கிக் கொள்வதற்கான எத்தனங்களை சித்தரிக்கும் கதைகள் என்று இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளை வகுத்துவிட முடியும். அதனைத் தாண்டிய சில கதைகளும் இத்தொகுப்பில் இருக்கவே செய்கின்றன. உருக்கம் அத்தகைய கதைகளில் ஒன்று. தனக்கு பாத்திரங்கள் கழுவும் வேலையைத் தந்து தன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்ளும் பத்திரோனை (முதலாளி) சிலாகித்துக் கொண்டே இருக்கும் ஒரு கள்ளமற்ற கதை சொல்லியை இக்கதையில் ஆசிரியர் உருவாக்குகிறார். அவனுக்கு நடைபெறும் அநீதிகளைக் கூட உணர முடியாத கதை சொல்லியாக முதல் பார்வையில் அவன் நமக்குத் தெரிகிறான். ஆனால் மறுவாசிப்பின் போது கதை சொல்லிக்கும் கதை சொல்லியால் அடையான்கள்(அல்ஜீரியர்கள்) என்று அழைக்கப்படும் கறுப்பு ஊழியர்களுக்குமான வேறுபாட்டை சிந்திக்கும் போது இக்கதை வேறு தளத்தில் திறந்து கொள்கிறது. கதை சொல்லி விசுவாசமாக மட்டுமே இருக்கத் தெரிந்தவன். ஊரிலிருக்கும் குடும்பத்துக்கு ஒழுங்காக பணம் அனுப்புகிறவன். ஆனால் அவன் வேலை செய்யும் உணவகத்தில் செஃப் ஆக இருக்கும் அல்ஜீரியனும் இவனுடன் வேலை செய்யும் பிரஞ்சுகாரன் பத்ரிக்கும் அத்தகையவர்கள் அல்ல. அவர்கள் முதலாளியை எதிர்க்கக் துணிந்தவர்கள். பத்ரிக்கை வேலையை விட்டு நிறுத்தியதால் தொழிற்சங்கம் தொடங்கி வேலை நிறுத்தம் செய்து மீண்டும் அவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். சம்பள உயர்வும் பெறுகிறார்கள். ஆனால் இறுதிவரை கதை சொல்லியால் முதலாளி ஏன் அல்ஜீரியர்களுக்கு பணிந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தவொரு ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடும் எடுக்காமல் வெறுமனே குடும்பத்தை காப்பாற்ற எண்ணும் எளிமையான கதை சொல்லியின் பார்வையில் சொல்லி இருப்பது இக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது. இக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேச்சு வழக்குத் தமிழ் கதைக்கு அபாரமான உண்மைத் தன்மையை அளிக்கிறது.

மூன்று நகரங்களின் கதையும் போரினால் புலம்பெயர்ந்து வாழ்வதால் ஏற்படக்கூடிய சிக்கல்களை புறவயமாக பேச முயல்கிறது.

கண்ணாடிப் பெட்டியிலிருந்து தன்னையே விற்றுக் கொள்ளும் விபச்சாரிகளும் "உயிருடன் இருந்திருந்தால் என் மகனுக்கு உன் வயதிருக்கும்" என்று சொல்லும் விபச்சாரிகளும் இவர் கதைகளில் விரவிக் கிடக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது போரினால் தலைகீழாக மாறிப்போன சூழலால் தாக்குண்ட மனிதனின் கதைகளை இவை இருக்கின்றன. அத்தகையவனின் கசப்புகளும் விலக்கங்களும் சில இடங்களில் கவித்துவமாகவும் சில இடங்களில் அங்கதமாகவும் சில இடங்களில் எதார்த்தமாகவும் வெளிப்படுகின்றன. அதேநேரம் கதை சொல்லி மெல்ல மெல்ல மாற்றம் கண்டுவிட்ட வாழ்க்கைக்குள் தன்னை பொறுத்திக் கொண்டதையும் தனக்கே உரிய வகையில் ஒரு எதார்த்தத்தை உருவாக்கி அதற்குள் வாழப் பழகிக் கொண்டதையும் இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

தமிழில் தனித்துவம் கொண்ட ஒரு சில சிறுகதை தொகுப்புகளில் ஒன்றென நிஷ்டையை நிச்சயம் சொல்லலாம்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024