Sunday 24 December 2017

வாசகசாலை விழா - 2017

விஷால் ராஜா தனது சிறுகதை தொகுப்பில் வாசகசாலை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருப்பார். அதன் வழியாகவே வாசகசாலையை அறிந்தேன். வாசகசாலையின் முகநூல் பக்கத்தை இரண்டு மாதங்களாக பின் தொடர்கிறேன். என்னுடைய சிறுகதையான பிரைமரி காம்ப்ளக்ஸ் குறித்து வாசகசாலையில் விவாதிக்கப்பட்டதை பின்னர் அறிந்தேன். தொடர்ந்து நாவல்கள் சிறுகதைகள் சினிமா என தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வாசகர்களையும் கலை ஆர்வர்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த அமைப்பு வாசகசாலை. மூன்றாவது ஆண்டினை எட்டும் வாசகசாலை அமைப்பு வருடாவருடம் சிறுகதை நாவல் கவிதை கட்டுரை அறிமுக எழுத்தாளர் என பல்வேறு தரப்பிலிருந்து நூல்களைப் பெற்று அவற்றை விவாதித்து விருதுகளை வழங்கி வருகிறது. அதோடு இவ்வருடம் மற்றொரு நிகழ்வாக வாசகசாலை நண்பர்கள் பதிப்பகமும் தொடங்கி நூல்களையும் வெளியிடுகின்றனர். மூன்று நூல்கள் இவ்வருட விழாவில் வெளியிடப்பட்டன.

சென்ற வருடம் தனது சாமத்தில் முனகும் சிறுகதைத் தொகுப்புக்காக சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருது பெற்ற எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி என்னுடைய நூல்களான ஒளிர்நிழல் மற்றும் நாயகிகள் நாயகர்கள் ஆகியவற்றை கிழக்குப் பதிப்பகத்தில் இருந்து அனுப்பச் சொல்லியிருந்தேன். வாசகசாலை முகநூல் பக்கத்தில் ஒவ்வொரு தலைப்பிலாக விருதுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டு வந்தன. விழா தினமான டிசம்பர் இருபத்துமூன்றாம் தேதிக்கு இருநாட்களுக்கு முன் வாசகசாலை நிர்வாகிகளில் ஒருவரான கார்த்திகேயன் என்னை அழைத்து சிறந்த அறிமுக எழுத்தாளருக்கான பிரிவில் என் நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில மணி நேரங்களில் முகநூலிலும் தகவல் பரவி நிறைய நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை இரவு நானும் அப்பாவும் திருவாரூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டோம். இரவு ஒன்றரை மணியளவில் நாங்கள் தங்குமிடத்திற்கான முகவரியை கார்த்திகேயன் அனுப்பினார். விழா மூன்று மணிக்கு என்பதால் ரங்கநாதன் தெருவைச் சுற்றி திரிந்தோம். உணவு மட்டும் விலையேறியதாக இருந்தது. காலையில் உணவுண்ட பிரபலமான முருகன் இட்லி கடை மற்றும் மதியம் உணவுண்ட சரவணபவன் இரண்டுமே செலவு மிகுந்தவை. தரம் சுவை போன்றவையெல்லாம் கொடுக்கும் பணத்திற்கு நிகரானது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் உட்காரக்கூட இடம் இல்லாத அளவிற்கு திருப்தியாக ஒருவர் ஒருவேளை சாப்பிட இருநூறு ரூபாய் செலவழிக்க வேண்டிய அவ்வுணவகங்களில் கூட்டம் மொய்க்கத்தான் செய்கிறது. ரோகினி விடுதியின் அறையில் இருந்து எங்களை அழைத்துச் செல்ல பாபு என்ற வாசகசாலை நண்பர் வந்திருந்தார். பொறியியல் படித்துவிட்டு இலக்கியம் நோக்கி நகர்ந்த என்னைப் போலவே அவரும் பொறியியல் படித்துவிட்டு திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் அவரிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவரும் என் வருடத்தில் பொறியியல் படித்தவர் என்பது என் அலுவலகத் தோழர் பிரபுவை நினைவுபடுத்தியது. நானும் அப்பாவும் ஒரு ஆட்டோவிலும் ரோகிணியில் தங்கியிருந்த எழுத்தாளர் கலைச்செல்வி மற்றும் கவிஞர் ஆனந்தன் ஆகியோர் ஒரு ஆட்டோவிலுமாக வந்தனர். கலைச்செல்வி அவர்களுடன் அவரது கணவரும் வந்திருந்தார். நாங்கள் அரங்குக்கு சென்றபோது ஏற்கனவே அது நிறைந்திருந்தது. பிரபு சாய் பிரசாந்த் மற்றும் காளி பிரசாத் ஆகியோர் ஏற்கனவே வந்திருந்தனர். அரங்குக்கு வெளியே விருது பெறும் எழுத்தாளர்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மூன்றரை மணிவாக்கில் விழா தொடங்கியது.

முதல் அமர்வில் வாசகசாலை பதிப்பகத்தின் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை உரை ஆற்றினார். சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாத மற்றும் கருப்பி என்ற இரண்டு சிறுகதை தொகுப்புகளும் மற்றும் சொக்கட்டான் தேசம் எனும் கட்டுரை தொகுப்பும் எழுத்தாளர் பிரபஞ்சனால் வெளியிடப்பட்டது. மூன்று நூல்களுக்கும் ஒவ்வொருவர் அறிமுகவைரை வழங்க நூல்களின் எழுத்தாளர்கள் ஏற்புரை வழங்கினர். அறிமுக உரை வழங்கியவர்கள் நூல்களை வாசித்த பிறகு அதைச் செய்திருப்பது நிறைவளித்தது. சொக்கட்டான் தேசத்திற்கு அறிமுக உரை வழங்கிய சூரிய மூர்த்தி என்பவர் நூலினை குறித்து விரிவாகவே பேசினார். ஆனால் நூல்கள் கருத்தியல் மற்றும் கதை சார்ந்த அம்சங்களை தொட்டுக்காட்டி பேசினார்களே தவிர நூலின் புதுமையான வாசிக்கத் தூண்டும் அம்சங்களை பேச்சாளர்கள் குறிப்பிடாதது ஒரு குறையெனத் தோன்றியது. இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். ஒரு நூலில் "உள்ளதை" அல்ல நாம் "பெற்றதை" மட்டுமே சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம். அப்படி சொல்லும் போதுதான் ஒரு நூலில் பிறர் பெற வாய்ப்பு இருப்பவையும் தெரியவரும் குறிப்பிட்ட நூல் மீதான ஆர்வமும் பெருகும். பிரபஞ்சன் தலைமையுரை ஆற்றினார். இன்றைய கவிதைகளின் போக்கு எழுத்தாளர்களின் நூல்கள் இன்றைய வாசிப்பு சூழல் என தொட்டு விரிந்த அவரது பேச்சு முதல் நிகழ்விற்கு ஒரு நல்ல இறுதியாக அமர்ந்தது. இடைவேளையின் போது மேலும் பல நண்பர்களை சந்தித்து உரையாட முடிந்தது. என் நூலுக்கு அறிமுக உரை வழங்க இருந்தவரான கிருஷ்ணமூர்த்தி தீனதயாளன் அரசன் என பலரை அறிமுகம் செய்து கொண்டேன். காளிபிரதாத் அப்போது விடைபெற்றுக் கொண்டார். தொடர்ந்த நிகழ்வில் கார்த்திகேயன் வாசகசாலை அமைப்பின் இவ்வாண்டு செயல்பாடுகள் குறித்துப் பேசினார். பிரம்மிப்பூட்டும் வகையிலான தொடர் செயல்பாடுகள். சிறுகதைக்கான அமர்வுகள் நாவல் குறித்த விவாதங்கள் நூலகங்களுடனான தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது என ஓய்வும் இடைவெளியும் இன்றி செயல்பட்டுக் கொண்டிருத்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக மிகப்பெரும் விழாவினை ஒருங்கமைத்து நடத்தியதற்கு மறுநாளே சற்றும் சலிக்காமல் கிறிஸ்துமஸ் வருவதால் அது குறித்த சிறுகதைகளை விவாதிக்க இருபத்து நான்காம் தேதியே ஒருங்கி இருக்கின்றனர்!

விருது விழா அமர்வில் ஐந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டோம். முகவுரையை அவள் பெயர் தமிழரசி மற்றும் விழித்திரு திரைப்படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவரை வாசித்திருந்த வாசகர்களே விருதளித்தது சிறப்பான விஷயமாக எனக்குப்பட்டது. சம்பிரதாயங்கள் கடந்த ஒரு துடுக்குத்தனமும் தீவிரமும் இச்செயலில் உள்ளது. வாசகர்கள் மட்டுமே நூல்கள் குறித்து அறிமுகம் செய்ய வேண்டும் என்ற செய்தியை இந்நிகழ்வு அழுத்தமாக நிறுவியது. முதலில் சிறந்த கவிஞருக்கான விருது பெற்ற ஆனந்தனின் நூல் குறித்து இலக்கியம் பயில்பவரான செலீனா ஹஸ்மா பேசினார். ஜலதோஷத்திற்கென மன்னிப்பு கேட்டுக் கொண்டபடியே தொடங்கிய அவரது உரை கச்சிதமாக அமர்ந்திருந்தது. அவரைத் தொடர்ந்து ஏற்புரை வழங்கிய ஆனந்தன் தன் கவிதைகளில் இவ்வளவு நுட்பங்கள் இருப்பது செலீனா சொல்லித்தான் தனக்குத் தெரிவதாகக் கூறினார். சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான விருது களந்தை பீர் முகம்மதுக்கு வழங்கப்பட்டது. அவருடன் உரையாட வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அவரால் வர முடியாததால் காலச்சுவடில் இருந்து அவ்விருதினை பெற்றுக் கொண்டனர். பாதுகாக்கப்பட்ட துயரம் என்ற அந்த கட்டுரை நூல் குறித்து சரண்யா அங்குராஜ் பேசினார். அவரும் சமூவியல் படிப்பு சார்ந்த மாணவி என்பதால் உலகமயம் நுகர்வு கலச்சாரம் பெண்ணியம் போன்றவற்றை இந்த நூல் இஸ்லாமிய சமூகத்துடன் இணைக்கும் தளங்களை தொட்டுப் பேசினார். சிறந்த நாவலுக்கான விருது கரன் கார்க்கியின் ஒற்றைப் பல் என்ற நாவலுக்கு செல்வா என்பவரால் வழங்கப்பட்டது. கருப்பர் நகரம் குறித்த நாவல் அது என அறிமுகம் செய்து செல்வா உணர்ச்சிகரமாக பேசினார்.தொடர்ந்து கரன் கார்க்கி நூல் வெளியீட்டில் இருக்கும் சிக்கல் அரசியல் போன்றவற்றை தொட்டுப் பேசினார். சிறந்த சிறுகதைத் தொகுப்பான கேசம் நூலுக்கான விருதினை எழுத்தாளர் நரன் அவர்களுக்கு லதா அருணாச்சாலம் வழங்கினார். நுண்மையான தளங்களை நரன் தன் படைப்புகளில் கையாள்வதையும் பைபிளின் மேரி மேண்டலீனின் பாத்திர உருவகம் அவர் கதையில் நுட்பமாக இணைக்கப்பட்டிருப்பதையும் குறித்துப் பேசினார். நரனின் கதைகளில் கவித்துவத்தின் சாயல் படராமல் இருப்பதும் கதைகளின் பலம் எனக் குறிப்பிட்டார். முந்தைய அமர்வில் பிரபஞ்சனும் நரனை முக்கியமான சிறுகதை ஆசிரியராக குறிப்பிட்டார். இறுதியாக எனக்கு விருதினை வழங்கி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவரும் எழுத்தாளர் என்பது சற்றே பயத்தை அளித்தது. ஆனால் விமர்சனப்பூர்வமாக அன்றி நம்பிக்கையூட்டும் விதமாக அவர் உரை அமைந்தது. விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்தார்.  சொட்டுகள் மற்றும் சில்ற என்ற இரண்டு கதைகளை எடுத்துக் கொண்டு என் படைப்புலகத்தை அவதானிக்கும் வகையில் பேசினார். நான் வழக்கம் போல பேச நினைத்ததை விட்டுவிட்டு மண்சார்ந்த நுண்ணுணர்வு சமகால படைப்பாளிகளுக்கு அவசியம் என்கிற ரீதியில் எதையோ பேசி அமர்ந்தேன். ஆனால் நான் நன்றாக பேசியிருக்கிறேன் என்பது அவையில் இருந்தவர்களின் முகத்தில் இருந்து தெரிந்தது. இயக்குநர் மீரா கதிரவன் என் நூலை வாசிப்பதாக தெரிவித்தார். கொற்றவை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் சொன்னது அவரை அணுக்கமாக உணரச் செய்தது. இறுதியாக பாரதி கிருஷ்ணகுமார் தலைமையுரை ஆற்றினார். மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான உரையாக அமைந்து அரங்கை நிறைவடையச் செய்தது.

விழா முடிந்து அனைவரும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  வாசிக்கும் எழுதும் பல நண்பர்களை அறிமுகம் செய்து கொண்டது நிறைவாக உணரச் செய்தது. பேசிக்கொண்டு இருந்துவிட்டு  ஆட்டோவில் நான் பிரபு அப்பா மற்றும் சித்தப்பா அவரது மகன் என தி.நகர் சென்றோம். அவர்கள் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொள்ள நானும் அப்பாவும் அறைக்குத் திரும்பினோம். இரவுணவினை ஒரு அசைவு உணவகத்தில் உண்டோம். ஆனால் சுற்றி கோழியும்  ஆடும் மணக்கும் போதும் இட்லியும் தோசையும் சாப்பிட வேண்டியதாயிற்று சனிக்கிழமை என்பதால். அறைக்குத் திரும்பியபோது வாசகசாலை நண்பர்களான கார்த்திகேயன், அருண் மற்றும் திலீபன் ஆகியோர் வந்திருந்தனர். வாசகசாலை தன்னுடைய இலக்கியச் செயல்பாடுகளை சென்னைக்கு வெளியேயும் விரிவுபடுத்த இருப்பதை கார்த்திகேயன் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். தஞ்சையில் வாசகசாலை கூட்டங்கள் நடைபெற்றால் நிச்சயம் என் பங்களிப்பும் இருக்குமென உறுதியளித்துவிட்டு அப்பாவுடன் புறப்பட்டேன். ஒரு நல்ல நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் திருப்தியே மனம்முழுதும் எஞ்சியிருந்தது.

வாசகசாலை நண்பர்களுக்கு மனப்பூர்வமான அன்பும் வாழ்த்துக்களும்.

No comments:

Post a Comment