Sunday 31 December 2017

மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்



எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரது முதல் நூல் இது. திருவாரூரில் பேசும் புதிய சக்தி என்ற மாத இதழின் ஆசிரியராக இருக்கிறார். நானும் திருவாரூர்காரனே எனினும் அவரது ஆக்கங்களை வாசிக்காததால் சென்று சந்திக்கவில்லை. திருவாரூரில் நடைபெறும் சிறிய அளவிலான புத்தக கண்காட்சியில் இந்த நூலினை வாங்கினேன்.

நெடுங்கதைகள் என்ற வகையிலான வடிவத்தில் நான் வாசிக்கும் முதல் நூல் இதுதான். குறுநாவல்கள் நிறைய வாசித்திருந்தாலும் குறுநாவலுக்கும் நெடுங்கதை என்ற வடிவத்துக்குமான வேறுபாட்டினை இந்த நூலினை வாசித்தபோது நன்றாகவே உணர முடிந்தது. இக்கதைகளை நூலில் இருக்கும் கால வரிசையில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் வடிவ நேர்த்தி ஒவ்வொரு படைப்பிலும் ஏறுவரிசையில் கைகூடி வந்திருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு கதைகளும் நிலம் சார்ந்து தேனி போடி பகுதிகளில் நிகழ்ந்தாலும் வேறுவேறு வகையான வாழ்க்கைகளை உணர்வுகளை கையாள்வது இந்த நூலின் முக்கியமான பலம்.




முதல் கதையான நெடுஞ்சாலை ஆகாயத்தின் நிறம் சாலையோரம் உணவகம் நடத்தும் ஒரு பெண்ணை சித்தரிக்கிறது. புருஷோத்தமன் துரைராஜ் சுந்தரம் சிலம்பு சூரியன் என சுற்றி ஆண்களின் பார்வையின் வழியாக காஞ்சனா கட்டமைக்கப்படுவதன் சித்திரம் இக்கதையில் துலங்கி வருகிறது. வெவ்வேறு வகையிலான ஆண்களை வெற்றிகரமாகக் கடந்து வருகிறாள். அவளை ரொம்பவும் நேர்மையாகச் சித்தரிக்காததும் இக்கதையின் சிறப்பு. இறுதியில் அவள் முட்டி நிற்கும் வெறுமையை சித்தரிக்கும் இடம்வரை வாசகனை வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையின் வழியே பயணிக்க வைக்கிறது இப்படைப்பு.

பெயர் நீக்கச் சான்றிதழ் அதிகம் அறியப்பட்டிராத ஆனால் அன்றாடத்தில் பெரிதும் விலகி நிற்காத ஒரு வாழ்வை சித்தரிக்கிறது. ரேஷன் பொருட்களை பெறுவதற்கென ஊர்க்காரர்களும் சம்பத்தும் அனுபவிக்கும் துன்பங்கள் மிக நேர்த்தியாக கதையில் பின்னப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க வறண்ட ஆண் மனங்களின் கதையாக இது உள்ளது. பூங்கொடிக்கும் தங்கத்துக்கும் இடையிலான உறவு வெளிப்படும் இடம் யதார்த்தமாக சொல்லப்பட்டாலும் மன அதிர்வை உண்டு பண்ணுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பவை தரகனாக செயல்படும் சம்பத் இதெல்லாம் அனைவரும் அறிந்ததே எனினும் அரிசிக் கடத்தல் ரேஷன் அட்டை பெறுவதற்கான முயற்சிகள் இவற்றுடன் இணையும் போது அழுத்தமான மனப்பதிவினை உருவாக்குகின்றன. வறுமையும் அன்பின்மையும் ஊர்க்காரர்களை வன்முறையில் தள்ளுவது துரைசாமியின் இறப்பு சம்பத்தும் அவன் அப்பாவும் கைது செய்யப்படுவது இறுதியில் இரு பெண்களும் சேர்ந்து குடும்பத்தை தாங்குவது என இக்கதையும் ஒரு நாவலுக்கான விரிவுடன் சம்பவங்களை விவரித்து வந்து சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் முடிவடைகிறது. காத்தமுத்துவுக்கும் சம்பத்துக்குமான பகையின் காரணங்களை சொல்லாமல் விட்டிருப்பதும் இக்கதையின் கலையம்சத்தை கூட்டுகிறது.

இத்தொகுப்பில் தனிப்பட்ட முறையில் என்னை மிகக்கவர்ந்த கதை மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டிதான். மிக அகவயமாக நகரும் கதையும் கூட. பருவ மாற்றங்கள் ஆறு ரயில் என மூன்றையும் குறியீடாகக் கொண்டு இக்கதை வெகுதூரம் பயணிக்க வைக்கிறது. மகள் இறப்புக்கு காரணமென நினைக்கும் நாயை வெறுக்கும் தகப்பன். மகன் இறந்ததும் நாயை தூக்கி வளர்க்கத் தொடங்குவது கணவனை இழந்தவளை அவன் தம்பிக்கே திருமணம் முடித்து வைப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என பலவற்றை மழை ரயில் ஆறு என பல குறியீடுகளின் வழியே இக்கதை மிகுந்த நேர்த்தியுடன்  சித்தரிக்கிறது.  அண்ணனின் மனைவி என்பதால் ஏற்படும் விலக்கம் அண்ணனின் மகள் மீது இருக்கும் பாசம் என கதை சொல்லியான வெங்கடேஷ் தத்தளித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் மிகக்குரூரமாக அவன் கைவிடப்படுகிறான். அவன் அந்த கைவிடப்படலை ஏற்றுக் கொள்வதை மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறது இக்கதை. வெங்கடேஷ் ராமையாவுடன் கிணறு தோண்டச் செல்வது அவன் வாழ்க்கையைப் போன்ற ராமையாவின் வாழ்க்கையுடன் தன்னை இணைத்துக் கொள்வது என ரஞ்சனி என்ற பெண்ணின் அகம் அவளது சொற்களில் அல்லாமலேயே இக்கதையில் மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் காட்சி விவரணைகள் உச்சத்தை தொடுவது சீனி ஆசாரி வீட்டுப்பிள்ளைகள் என்ற இக்கதையிலேயே. நான்கு கதைகளிலுமே "இரண்டாம் தாரமாக" மணமுடித்து வைக்கப்படும் பெண்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். இக்கதையில் அப்படி மணமுடித்து வைக்கப்படும் பெண்களே மையப்பாத்திரங்களாக உள்ளனர். சீனி ஆசாரியின் மனைவி காமுத்தாய் அவருக்கு இரண்டாவது மனைவி தான். இரண்டு பெண் குழந்தைகளை ஈனும் முதல் மனைவி இறந்துவிட காமுத்தாய் இரண்டு பெண்களையும் வளர்க்கிறாள். கதை தொடக்கத்தில் மூத்த மகளான ஈஸ்வரி அவளது தோழிகள் லட்சுமி மற்றும் வீருசின்னுவுடன் கிராமத்தில் மகிழ்வுடன் பால்யத்தை கழிப்பது மிகுந்த உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தோழிகளை காண முடியாத துயர் அவளது மணம் என நகர்ந்து கதை சீனி ஆசாரியை மீண்டும் வந்தடைகிறது. முதல் மகள் ஏற்கனவே இரண்டாம் தாரமாக சென்றுவிட இரண்டாவது மகளான விஜயாவும் இரண்டாம் தாரமாக செல்வதில் மனம் வருந்தி ஆசாரி இறப்பதில் கதை முடிகிறது. அவருக்கும் வண்ணார் சாதியைச் சேர்ந்த மாரிமுத்துவுக்குமான நட்பு கிராமத்தில் வேற்று சாதி மனிதர்களுக்கு இடையே ஏற்படும் நட்பின் சிக்கல்களை நன்றாகவே பிரதிபலிக்கிறது. நுணுக்கமான சூழல் விவரணைகள் வழியாக நகரும் இக்கதையை வாசித்து முடிக்கும் போது ஒரு நாவலுக்கான கதைக்களத்தை இது கொண்டிருப்பதை உணர முடிகிறது.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இக்கதைகள் எவையும் நாம் அறியாத ஒரு வாழ்வை சொல்லவில்லை. ஆனால் அவற்றில் இருக்கும் முரண்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் வாயிலாக புதிய கோணங்களில் திறந்து கொள்கின்றன இக்கதைகள். மிக நிதானமான கதை சொல்லல் நடை ஆசிரியருடையது. பல்வேறு சம்பவங்களின் வழியாக சுற்றி கதையின் மையத்தை நோக்கி நகர்த்தும் உத்தி ஒவ்வொரு படைப்பிலும் பக்கங்கள் நகர நகர ஆர்வத்தைத் தூண்டுவதாக கதைகளை மாற்றுகிறது. அதேநேரம் ஒரு பொறுமையற்ற வாசகன் பாதியிலேயே வாசிப்பதை நிறுத்திவிடும் அபாயமும் இக்கதைகளில் உள்ளது. ஏனெனில் சிறுகதையில் பெரும்பாலும் முதல் வரியிலேயே கதை தொடங்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நெடுங்கதைகளிலும் தேவையற்ற சொற் கட்டுமானங்களை அடுக்காமல் முதல் வரியிலேயே கதை தொடங்கினாலும் அவை வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து நகர்வது கதை தன் போக்கிலிருந்து விலகுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. எப்படியாயினும் தேர்ந்தெடுக்கும் வடிவத்தில் உண்டாகும் சிக்கலை ஆசிரியனே எழுதி எழுதித்தான் கலைந்தாக வேண்டும். அவ்வகையில் மழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி இந்த சிக்கலை வடிவ ரீதியாக  வெற்றிகரமாக எதிர்கொள்கிறது.

வடிவம் மற்றும் மொழி சார்ந்து இக்கதைகள் மிக நேர்த்தியானவையாக தென்படுகின்றன. ஆனால் தரிசனம் சார்ந்து சற்று சறுக்குவதே இக்கதைகளில் நான் குறையாக உணரும் ஒரு அம்சம். உதாரணமாக எல்லா கதைகளிலும் ஆண்களின் தனிமை பெண்களின் கையறு நிலை மறுதாரத்தால் ஏற்படும் சிக்கல்கள் பொருளாதார நிலை வாழ்வினை முன்வந்து மறிப்பது போன்றவை நம்பகத் தன்மையுடனும் நிலத்தின் உண்மையாக சிக்கல்களை கையாள வேண்டிய பொறுப்புடனும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இங்கு குறைவது இவற்றின் வழியாக ஆசிரியர் சென்று நிற்கும் இடம் சார்ந்து இப்படைப்புகள் தயங்குகின்றன என்பதே. வாழ்வின் அன்றாடங்களுடன் ஒரு மோதலை நிகழ்த்தி அப்படியே நிலைத்துவிடுகின்றன இக்கதைகள் எனலாம். அங்கிருந்து கற்பனித்து முன்செல்வது வாசகனின் வேலை என்றாலும் அவன் கற்பனை செய்ய இன்னும் விரிந்ததொரு களத்தை வழங்கி இருக்கலாம். அப்படி வழங்குவதற்கான சாத்தியங்களைக் கொண்ட வலுவான படைப்புகள் இவை என்பதே இதைச் சொல்ல வைக்கிறது.

ஜெயமோகன் அவருக்கு அடுத்த தலைமுறையில் மிக முக்கியமான எழுத்தாளர்களாக குறிப்பாக சிறுகதை வடிவத்தில் புதிய சாத்தியங்களை அடைய வாய்ப்பு இருப்பவர்களாக கணிப்பது கே.என்.செந்தில் மற்றும் எஸ்.செந்தில்குமார் ஆகிய இருவரையுமே. உண்மையில் இன்று சிறுகதையின் வடிவம் மாறியிருக்கிறது. குறுநாவல் சிறுகதை நெடுங்கதை போன்ற வடிவங்கள் முயங்கி வருவதை இவர்களது எழுத்துக்களில் பார்க்க முடிகிறது. இக்கதைகள் ஒரு புதிய சாத்தியத்தை உருவாக்குவதற்கான தேடலில் எழுதப்பட்டவை. நெடுங்கதைகள் என குறிப்பிடப்பட்டாலும் உருவாகிவரும் புதிய சிறுகதை வடிவத்துக்கான அவதானிப்புகள் இப்படைப்புகளில் உள்ளன. கே.என்.செந்தில் அவர்களின் அரூபநெருப்பு (இத்தொகுப்பு குறித்து தனியே எழுத வேண்டும்) என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள கதைகளும் நாவலாக எழுதப்படுவதற்கான சாத்தியங்களையும் அதேநேரம் சிறுகதையின் வடிவ நேர்த்தியையும் ஒருங்கே கொண்டுள்ளன.

அவ்வகையில் இது வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நூல்.

********************

No comments:

Post a Comment