Sunday, 4 March 2018

காதல்,ஒப்பந்தம்,போலிக்காதல்

ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆணவக் கொலைகளின் காலம் என்ற நூலின் இறுதி அத்தியாயத்துக்கு அடுத்ததாக நான்கு பக்கங்கள் நீளும் ஒரு அட்டவணை இருக்கும். 2008-ல் இருந்து 2015 வரை ஜாதி மாறி திருமணம் செய்ததால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் அது. நீதி மன்றத்தில் பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே 47. தமிழக கிராமங்களின் உண்மையான முகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும் கொலை வழக்குகள் எப்படி "முடித்து" வைக்கப்படும் என்று. சில வருடங்களுக்கு முன் பகிரங்கமாக அதை ஒரு திரைப்படத்தில் மிகப்பெருமையாக முன்வைத்தும் இருந்தார்கள்.

காதலின் மீது மிகப்பெரிய வெறுப்பினை கொண்டது தமிழ்ச் சமூகம் என்ற எண்ணம் மிக இளவயதில் இருந்து ஒரு நோய்க்கூறு போல என்னிடம் இருந்து வருகிறது. திருமணத்தை மிக உணர்ச்சிகரமாக நம்முடைய வணிகக் கலைகள் சித்தரிப்பதற்கும் திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே என்ற உண்மை இங்கு மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவதற்கும் அதைவொரு பெரும் கலாச்சார நிகழ்வாக தூக்கி நிறுத்த முனைவதற்கும் உண்மையான காரணம் நம்முடைய ஆழமான இறுகிப்போன ஜாதிய உணர்வே. என்னுடைய தோழர்கள் தோழிகள் சிலரது கதைகள் எனக்குத் தெரியும். ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் (கிறிஸ்துவத்திலும்) அவர்களை தன் நச்சுப்பல்லால் தினம் இந்த சமூகம் எப்படி கடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் தெரியும். காதலித்தபின் காதலனின் அல்லது காதலியின் ஜாதி தெரிந்து பிரிய நேர்ந்த அந்த காயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களையும் நான் அறிவேன். அந்த அளவுக்கு காதல் இங்கு பயப்பட வேண்டிய விஷயம். கல்வி,பொருளாதாரம் என எந்தக் காரணியும் பெண்ணுடல் மீதான முற்றுரிமையை ஜாதிகளிடம் இருந்து நீக்கிவிடவில்லை.

ஆனால் நம்மிடையே ஒரு பிரபலமான ஒரு "கற்பனை" உண்டு. "படித்த" இளைஞர்கள் ஜாதியை விட்டு வெளியேறிவிட்டனர் என்று. அது எவ்வளவு பெரிய பொய்யென கடந்து இரண்டு வருடங்களாக உணர்ந்து வருகிறேன்.

லட்சியம் நடைமுறை போலித்தனம்

இலக்கியத்தில் வணிக இலக்கியம் என்ற ஒரு பிரிவு உண்டு. அவை வாசிக்கிறவர்களை மகிழ்விப்பவை. பெரும்பாலானவர்களை திருப்தியடைய வைக்கிறவை. அவற்றின் அடிப்படை நோக்கம் புத்தக விற்பனை மட்டுமே. "பெஸ்ட் செல்லர்" என்று சொல்லப்படுகிற புத்தகங்கள் பெரும்பாலும் இந்த வகையிலேயே அடங்கும். சமீப காலமாக எளிமையான ஆன்மீக விளக்க புத்தகங்களும்,தன்னம்பிக்கை புத்தகங்களும் இப்படிப்பட்ட வணிக நோக்கத்துடன் எழுதப்பட்டு நிறைய விற்கவும் செய்கின்றன. இவற்றை வாசிக்கிறவர்கள் உண்மையான "ஆன்மீக அனுபவத்தையோ" , "தன்னம்பிக்கையையோ" அடைந்துவிடுவதில்லை. அவை ஒரு நம்பிக்கையை இளைப்பாறுதலை மட்டுமே தருகின்றன. ஆனால் தீவிர இலக்கிய நூல்களோ ஆய்வு நூல்களோ வாழ்க்கைப் பற்றிய நம்முடைய கோணத்தை குலைத்துப் போடுகிறவை மாற்றுகிறவை. போரும் வாழ்வும் நாவலை முழுமையாக வாசிக்க முடிந்த ஒருவன் தன்னுள் ஒன்று நிரந்தரமாக மாறியிருப்பதை உணர்வான். இவை "அசல்" நூல்களின் தன்மை. வணிக நூல்களுக்கும் அசல் நூல்களுக்குமான வேறுபாடு தெளிவானது. ஆனால் போலியானவை என்ற ஒரு வகைமை உண்டு. இவை அசல் இலக்கியத்தைப் "போல" எழுத முயல்கிறவர்களால் உருவாக்கப்படுவது. உண்மையான மன எழுச்சியும் கனவும் இல்லாமல் படிக்கிறவனை மகிழ்வித்து "சம்பாதிக்கும்" நோக்கம் மட்டுமே கொண்ட எழுத்து இது. ஆனால் அதன் மொழியும் வடிவமும் நவீன இலக்கிய பாவனையை மேற்கொள்ளும். ஜெயமோகன் ஒரு உரையில் இதை "fake literature" என்று குறிப்பிடுகிறார். இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. இவற்றையும் உண்மையான இலக்கியத்தையும் பிரித்தறிவது கடினம்.

இந்த சிக்கலை நம் வாழ்விலும் தினம் தினம் ஒரு வகையில் உணர்ந்து கொண்டுதான் இருப்போம். முழுக்க முழுக்க நடைமுறைப் பார்வை கொண்ட மனிதர்களை சந்தித்திருப்போம். அவர்கள் உயர்வான லட்சியங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை சிந்திப்பதில்லை. தன்னிடம் இருக்கும் ஒரு "நடைமுறை விவேகத்தை" மட்டுமே நம்பி வாழக்கூடியவர்களாக பயப்படுகிறவர்களாக சமரசம் செய்து கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.  நான் என்னை இவர்களில் ஒருவனாகவே உணர்கிறேன். மற்றொரு புறம் தன் கொள்கையில் இருந்து ஒரு படி கீழிறங்காத பிடிவாதக்காரர்கள். பெரும்பாலும் நம்மை எரிச்சல் அடையச் செய்கிறவர்கள். ஆனால் நேர்மையும் நம்பகத்தன்மையும் துளியும் குறையாதவர்கள். இவர்கள் இருவரையும் நாம் எளிதே பிரித்து அறிந்து விடலாம். இதற்கிடையில் இருக்கும் போலிகளை அடையாளம் காண்பது தான் இன்றைய நாளில் சிக்கலாகி இருக்கிறது. தங்களை பண்பாணவர்களாக லட்சியம் கொண்டவர்களாக பக்தி நிறைந்தவர்களாக காட்டிக் கொள்கிறவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. சிக்கல் என்னவெனில் வெளிப்பாட்டு ஊடகங்களால் இந்த போலித்தனம் முகத்தை சுளிக்கும் அளவுக்கு பெருகி இருக்கிறது என்பதே.

ஜாதியும் சமத்காரமும்

ஒரு சோர்வுறுத்தும் கேள்வியை மீண்டும் இங்கே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. காதல் என்றால் என்ன? கற்பனாவாத ரீதியிலான "மனதை மீட்டிச்" சொல்லப்படும் பதில்களுக்கு வெளியே ஒரு பொதுப்புரிதலை கொடுக்க முயலலாம். ஒரு எல்லையில் மனிதர்களின் மன மற்றும் உடல் உருவாகி வந்ததன் அடிப்படையில் ஒரு மனித உயிருக்கு எதிர்பாலினத்தின் மீது தோன்றும் விளக்க முடியாத ஈர்ப்பு (தன் பாலினமாகவும் இருக்கலாம்). மற்றொரு எல்லையில் "அர்த்தங்கள்" கற்பிக்க முடியாத தூய ஆன்மீக நிலை. மிக கீழான எல்லையில் இருந்து மேலான எல்லைக்கு நகர்ந்தாலும் காதல் என்பதை "மண ஒப்பந்தத்துடன்" இணைக்கும் பிசிறினை காதலுக்கான விளக்கத்தில் காண முடியாது. அது தனி அனுபவம். அந்த அனுபவத்தின் காரணமாக காதலர்கள் மண ஒப்பந்தத்தில் இணையலாம் இணையாமல் போகலாம். அது அவர்களது அந்தரங்கம் சார்ந்தது. எப்படிப் பார்த்தாலும் காதல் மாசற்ற பிறிதொன்றிலாத தூய விழைவு. அதனாலேயே அது மதிக்கப்பட வேண்டியது. ஒரு நாகரிகமான சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டியதும் பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பை போல ஒரு உயர்ந்த லட்சிய மனிதனைப் போல. மற்றொரு புறத்தில் நடைமுறைப் பார்வை வருகிறது. மண ஒப்பந்தம் என்ற சொல் இங்குதான் வருகிறது. திருமணங்களில் கணக்குகளும் திட்டமிடல்களும் உண்டு. உறவுக்கூட்டுகளும் பெரும்பணக் கைமாற்றல்களும் சொத்துப் பரிமாறல்களும் நிகழும் ஒரு பண்பாட்டு ஒப்பந்தம் திருமணம். மரபானவர்கள் இதற்கென கொந்தளிக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் நம்முடைய திருமண முறை அப்படித்தான் இருந்தது. கோவலனும் கண்ணகியும் இரு பெரும் வணிகர்களின் பிள்ளைகள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து கிடையாது இல்லையா!

இவற்றுக்கு இடையில் தான் இன்றைய இளைஞர்களின் சமத்காரம் வருகிறது. அந்த சமத்காரத்தின் வெளிப்பாடாக ஒரு இருபது இளைஞர்கள் நீயாநானாவில் வந்து உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களின் தரப்பு என்னவெனில் "ஜாதி அந்தஸ்த்து போன்றவற்றை பார்த்து பின்னர் திருமணம் செய்து கொள்வது நல்லதுதான் தானே. அதில் என்ன தவறு இருக்க முடியும்?". இது அடிப்படையில் நடைமுறைத்தன்மை கொண்ட திருமண ஒப்பந்தமன்றி வேறல்ல. ஆனால் இதில் இவர்கள் மிகத் தந்திரமாக "காதல்" என்ற சொல்லை ஏன் நுழைக்கிறார்கள்? சில வருடங்களுக்கு முன்பு நாட்டுப்புற பாடல்கள் பாடுகிறவரான பரவை முனியம்மா சன் டி.வியில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தமிழர்களின் "கிராம ஏக்கம்" உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அந்த நிகழ்ச்சியில் அவர் சமைக்கும் களனைப் பார்த்தால் ஒரு மண் அடுப்பு போல இருக்கும். ஆனால் அது ஒரு ஒப்பனை தான். உள்ளே "கேஸ் அடுப்பு" தான் எரிந்து கொண்டிருக்கும். அதுபோல இவர்கள் "காதல்" என்ற உணர்வை மண ஒப்பந்தம் எனும் நடைமுறை செயலுக்கு சூட்டுவதன் போலித்தனத்தை இங்கு சுட்ட வேண்டியிருக்கிறது.இவர்கள் நம் சமூகம் சூடிக்கொண்டிருக்கும் நவீனப் போலித்தனத்தின் விளைவுகள். அதில் ஒரு இளைஞர் "நான் ஜாதிக்குள் மட்டும் தான் இருப்பேன். நான் ஜாதி பார்ப்பேன்" என்கிறார். இவரை நேரடியாக நம்மில் புரிந்து கொள்ள முடியும். மற்றொருவர் "நவீனக் கல்வி" கற்றவர். இப்படிச்சொல்கிறார். "நீங்கள் ஏன் ஜாதியை எதிர்தன்மை உடையதாகவே பார்க்கிறீர்கள். அது நம்முடைய கலாச்சாரமும் தனித்தன்மையும் இல்லையா". இதுதான் மிக மிக ஆபத்தான வாதம். கலாச்சாரம் தனித்தன்மை என்பதை எல்லாம் நாம் எவ்விதத்தில் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறோம். இங்கு எத்தனை ஜாதிகளைப் பற்றிய புறவயமான ஆய்வு நூல்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களின் நோக்கம் காலச்சார தொடர்ச்சியை பேணுவதல்ல. நாம் அத்தகைய மன அமைப்பு அடையவர்களும் அல்ல. "ஜாதிப்பாசம்" எனும் இன்றுக்கு பொருந்தாத சடல உணர்வுக்கு நறுமண திரவியம் பூசுவது மட்டுமே அத்தகைய பேச்சுகள்.

கலந்து அமர்ந்து பேசும் மேடையையும் விவாதிப்பதற்கான களங்களையும் நமக்கு நவீன காலம் வழங்கி இருக்கிறது. ஆனால் அதில் அமர்ந்து கொண்டு "ஜாதித்தூய்மை" பேசுவது என்ன வகையான அறம். ஜாதி நடைமுறையில் இங்கு இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு அதற்குள் வாழ்கிறவர்கள் கொஞ்சமாவது அதைத்தாண்டி போய்விட முடியாத என்ற ஏக்கம் கொண்டவர்கள் தான் நடைமுறையில் உண்மயானவர்கள். ஆனால் வீங்கிய புண் போன்ற ஜாதி உணர்வை அதற்கு முழுமையாக எதிராக நிற்கும் "காதலுணர்வுடன்" இணைப்பது எல்லா வகையிலும் எதிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில் ஜாதி கடந்த காதலை இச்சமூகம் எவ்வளவு மூர்க்கத்துடன் எதிர்கொள்ளும் அவர்களை எப்படிக்கொன்று போடும் தனிமைப்படுத்தும் என்பதையெல்லாம் நாம் அறிவோம். தன் காதலின் வெம்மையாலேயே இக்கீழ்மைகளை நெருங்கவிடாமல் எதிர்க்கும் சில தம்பதிகளை நான் அறிவேன். அதிலும் அவர்களில் பெண்களுக்கு இருக்கும் உறுதி பிரம்மிக்கவைப்பது. அச்சுறுத்தக்கூடியது (அப்படி ஒருவரை தலை வணங்கி இப்போது எண்ணிக் கொள்கிறேன்). அத்தகைய உணர்வுடன் தங்களுடைய நடைமுறைக் "கணக்குகளை" போட்டுக்கொண்டு தந்திரமாக தங்களை "காதலுக்கு" ஆதரவானவர்களாக பிரகடனப்படுத்துகிறவர்களை அதையே பரிந்துரைப்பவர்களை எதிர்க்கத்தான் வேண்டியிருக்கிறது. ஏனெனில் காதல் என்ற உயிருணர்வுக்கு இவர்கள் எதிரானவர்கள். அதை கல்லெடுத்து அடுக்கிக் கட்டப்படும் கட்டிடமாக எண்ணுகிறவர்கள். சொந்த ஜாதியில் காதலித்தாலும் திருமணமே செய்யக்கூடாது என்கிறாயா எனக்கேட்கலாம். நிச்சயம் இல்லை. என் நண்பர் ஒருவரின் மனைவியும் அவர் ஜாதிதான் என்பது அவரைப் பெண்பார்க்கச் செல்லும் வரை இவருக்குத் தெரியாது. ஆகவே சீண்டப்பட்ட அவர் தன் ஜாதிப்பெண்ணை காதலிக்கும் ஒரு இஸ்லாமிய இளைஞனுக்கு தங்கள் "ஆட்களை" எப்படி சரிகட்டுவது என ஆலோசனை வழங்கியிருக்கிறார். அத்தகையவர்களும் உண்டு. ஆனால் ஜாதிக்குள் கணக்காக காதலியுங்கள் என ஒரு மாயையை உருவாக்கி அது பரப்புரை செய்யப்படுவதை ஒரு நவீன மனிதனாக எவ்வகையிலும் என்னால் ஏற்க முடியாது.

காதல் திருமணமோ ஒப்பந்த திருமணமோ அவற்றின் எல்லைகள் சரியாக வகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம்.

No comments:

Post a Comment