கூண்டிலிருக்கும் குற்றங்கள்

வெகுதூரத்தில் கேட்கிறது
குற்றத்தின் காலடிச்சத்தம்
பூழியை எழுப்பாமல் மெல்லப் பதிகிறது
குற்றத்தின் பாதம்
சத்தமில்லாமல் ஆதுரத்துடன் கவ்வி
துளி ரத்தமும் மண்சிந்தாமலுண்ணும்
புலிபோல
அத்தனை பரிவுடன்
என்னை எடுத்துக் கொள்கிறது குற்றம்
குற்றத்தின் தியான நிலையை
அஞ்சுகிறேன் என்று சொல்லி
அழுகிறார் கடவுள்
குற்றத்தின் வேர்மணத்தை தவிர
மற்றதனைத்தையும் வெறுப்பதாய்
விலக்கம் காட்டுகிறாள் இறைவி
குற்றங்களை குழந்தைகள் அஞ்சுவதில்லை என்கிறார் ஞானி
குற்றமே இல்லையென்கிறான் யோகி
குற்றம் கூண்டுக்குள் இருக்கும் வரை
என் எழுத்தில் இயற்றுகிறேன்
எல்லா குற்றங்களையும் என்கிறான்
கவி

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024