Pages

Sunday 21 August 2016

வெண்முரசு - மறு வாசிப்பு (முதற்கனல் முதல் பிரயாகை வரை)






வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும்  மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர்  ஜெயமோகனின்  வெண்முரசை மறு வாசிப்பு  செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு  நாவல்  வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என   பத்து நாவல்களை  ஆசிரியர்  எழுதிவிட்டார். இப்போது  அடுத்தநாவலான சொல்வளர்காடு தினந்தோறும் jeyamohan.in  மற்றும்  venmurasu.in ஆகிய இரு இணைய தளங்களிலும்  வெளிவந்து கொண்டிருக்கிறது.


மகாபாரத மறு ஆக்கம் என்றவுடன் ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களாக இந்தியப் பெருநிலத்தின் பண்பாட்டுத் தளத்திலும் வரலாற்றுத் தளத்திலும் இலக்கியத்திலும் அப்படைப்பில் நடந்து வரும் ஆய்வுகளையும் மகாபாரதம் நம் மரபில் செலுத்தியுள்ள  தாக்கத்தையும் அறியாத ஒரு பொது வாசகன் தொலைக்காட்சிகளில் அவன் கண்டிருக்கக் கூடிய ஒரு சித்திரத்தை விரிவுபடுத்துவதாக இருக்கும் என்றே எண்ணுவான். ஆனால் வெண்முரசு நாவல் வரிசையை வாசிக்கத் தொடங்கிய சில அத்தியாங்களிலேயே மகாபாரதம் நம் பண்பாட்டில் நிகழ்த்திய உரையாடல்கள் வெளிப்படத் தொடங்கி விடும். மாமனிதர்கள் வரலாற்றில் விக்ரஹங்களாக மாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் குறித்து தொன்மங்களும் அத்தொன்மங்களுக்கு எதிர்வினைகளும் உருவாகி வந்தபடியே இருக்கும். பெரும்பாலும் இருவகை மனநிலையையே நாம் காண முடியும். அத்தொன்மங்களை முழுமையாக ஏற்று நம்பி மாமனிதர்களை கடவுளாக்கிவிடுவது அல்லது அவர்களை சராசரித்தன்மைக்குள் எளிமையான நியாங்களை சுமத்தி நீர்த்துப் போகச் செய்வது.  இன்றைய சூழலில் இந்தியாவின் மாபெரும் காவியமான மகாபாரத கதை மாந்தர்களுக்கு நடப்பதும் அதுவே. வெண்முரசு இந்த இருவேறு மனநிலைகளுக்கு இடையே ஒரு மையத்தைக் கொண்டுள்ளது. தொன்மங்கள் பொது மனநிலையின் பிரதிபலிப்பு. அவற்றை முற்றாக ஒதுக்குவதும் ஒரு படைப்பை குறுகிய குழுவுக்குள் கொண்டு சென்று நிறுத்தும். அதேநேரம் புறவயமான மைய ஓட்டம் கொண்ட நம்பகத் தன்மையுடைய கதை சொல்லலும் இருந்தாக வேண்டும். வெண்முரசு தொன்மங்களையும் நம்பிக்கைகளையும் அகவயமாகவும் நுண் தகவல்களையும் உணர்வுகளையும் புறவயமாகவும் கையாள்கிறது.
வெண்முரசு நாவல் வரிசையில் மகாபாரத்தின் மையக் கதையோட்டத்தின் தொடர்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு நாவலும் தன்னளவில் தனித்தது.கதை சொல்லலும் உட்பொருளும் வடிவமும் ஒவ்வொரு நாவலிலும் தனித்தே வெளிப்படும். முதல் நாவலான முதற்கனல் இந்தியாவின் தொன்மவெளியை அறிமுகம் செய்கிறது. மழைப்பாடல் அன்றைய அதிகார அமைப்பை அந்த அமைப்பை எதிர்த்தெழும் சக்திகளை விரிவாக விளக்குகிறது. மழைப்பாடல் இந்திய மெய்ஞான மரபுகளையும் அவற்றின் சமூக பங்களிப்பையும் சொல்லி நிற்கிறது. இப்படி ஒவ்வொரு நாவலுமே தனக்கென ஒரு வடிவத்தையும் உட்பொருளையும் கொண்டிருக்கும். முழுமையாக வாசிக்கத் தயங்குபவர்களுக்காக கர்ணனின் இளைமையைச் சொல்லும் செம்மணிக்கவசம் (வண்ணக்கடல்) துரோணரை அறிமுகம் செய்யும் புல்லின் தழல்(வண்ணக்கடல்) கார்த்தவீரியனின் கதை சொல்லும் ஆயிரம் கைகள்(வண்ணக்கடல்) அம்பையை உரைக்கும் எரிமலர்(முதற்கனல்) திருதராஷ்டிரரின் இளமையை உரைக்கும்  இருள்விழி( மழைப்பாடல்) ஆகிய குறுநாவல்கள் வாயிலாக அமையும்.
இந்த தொடர் கட்டுரைகள் வெண்முரசுடனான என் அனுபவங்கள் மட்டுமே. வெண்முரசின் சிறந்த வாசகர்கள் இனி தான் உருவாகி வரவேண்டும் என்பது என் எண்ணம். இக்கட்டுரைகளின் வழியாக நுண்மையான வாசிப்புத்திறனை வளர்த்தெடுக்கும் ஒரு படைப்பை நோக்கி தோழர்களை உந்தவே விழைகிறேன். இக்கட்டுரைகள் வெண்முரசின் வழியாக வாசிக்கத் தொடங்கிய ஒரு வாசகனின் வாசிப்பனுபவம். அதேநேரம் என் தோழர்களுக்கு தமிழின் மிகப்பெரிய நாவல் முயற்சியான வெண்முரசை அறிமுகம் செய்வது என் கடமை என்றும் கருதுகிறேன்.
வெண்முரசுடனான என் வாசிப்பனுபவம் பிரயாகை வரை. (சுட்டிகள் கீழே)
(வெண்முரசை நூலாக வாசிக்க விழைபவர்கள் கீழ்கண்ட தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்
http://www.nhm.in/shop/venmurasu/)

No comments:

Post a Comment