நதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று

2016-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா தான் நான் கலந்து கொண்ட முதல் பெரும் இலக்கிய நிகழ்வு. அங்கு பல நண்பர்கள் அறிமுகமாயினர். சம்பிரதாய அறிமுகங்களைத் தாண்டி இன்றும் நெருக்கமாகத் தொடரக்கூடிய பல நண்பர்களை அந்நிகழ்வின் வழியாகப் பெற்றேன். ஒளிர்நிழல் வெளியான பிறகு முகநூல் வெளியிலும் பலர் நண்பர்களாயினர். ஆச்சரியம் கொள்ளும் வகையில் இலங்கை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் முகநூலில் நட்பழைப்புகள் வந்தன. பலர் நண்பர்களாகத் தொடரவும் செய்கின்றனர். அவ்வகையில் இலக்கிய உலகம் குறித்த புரிதல் எனக்கு உருவாகத் தொடங்கிய காலகட்டமாக சென்ற வருடத்தைச் சொல்வேன். அதில் நிகழ்ந்த ஒரு பிழை புரிதல் எனக்கு நண்பர்களாக இருக்கிற இலக்கிய வாசகர்கள் நவீன தமிழ் இலக்கிய வாசகப் பரப்பின் "சிறு பகுதி" என்ற கற்பனை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லவே இலக்கிய வாசகர்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மொழிச்சூழலில் "சிறு பகுதி" என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு நண்பராக இருக்கும் ஒரு நண்பர் ஏறக்குறைய நவீன தமிழ் இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளையும் அறிந்திருப்பார். அந்த நண்பரை இலக்கியம் வாசிக்கும் எல்லா நண்பர்களும் அறிந்து வைத்திருப்பார்கள். குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட ஒரு "இனக்குழு" போலத்தான் தமிழ் இலக்கிய வாசகப் பரப்பு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இங்கு நிகழும் உக்கிரமான பூசல்கள் குழுச்சண்டைகள் அணி பிரிதல்கள் என இவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இவற்றால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் தமிழ்ச் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குறுகிய வாசகப் பரப்பிலும் இலக்கிய வாசிப்பு ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடைந்த தமிழகப் பெருநகரங்களிலேயே ஓரளவாவது நிகழ்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரித் தண்ணீரை நம்பி நடைபெறும் விவசாயத்தில் நம்பிக்கை இழக்கத் தொடங்கிய பிறகு இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்வதும் கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களைத் தேடிச்செல்வதும் பெருகத் தொடங்கியது. இன்று டெல்டா பகுதியின் பெரும்பான்மையான உட்கிராமங்களில் முதியவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் தான் அதிகம் காண முடியும். ஆகவே நவீன கல்வி கற்றவர்களுக்கு இப்பகுதி உகந்ததாகத் தென்படுவதில்லை. அமைதியான முதுமைக் காலத்தை கழிப்பதற்கு ஏற்ற ஒன்றாகவே டெல்டா பகுதி எண்ணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை நிலவும் ஒரு பகுதியில் இலக்கிய வாசிப்பு தமிழகத்தின் மற்ற எந்த மண்டலத்தையும் விட குறைவாக நடைபெறுவது புரிந்து கொள்ளத்தக்கதே.

தஞ்சையில் எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் தஞ்சைக்கூடல் என்ற இலக்கிய கூடல் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார். ஒவ்வொரு மாதமும் இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து விவாதிக்கும் ஒரு களமாக இந்த கூடுகை செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேசும் புதிய சக்தி என்ற மாதாந்திர இதழை திருவாரூரில் இருந்து நடத்தி வருகிறார். இவற்றைக் கடந்து வேறெந்த இலக்கியம் சார்ந்த முன்னெடுப்படுகளும் சந்திப்புகளும் டெல்டா பகுதியில் நடைபெறுவதாத எனக்குத் தெரியவில்லை. ஆகவே திருவாரூரில் குறிப்பிட்ட இடமொன்றில் இலக்கியச் சந்திப்புகளை ஒருக்கும் எண்ணம் சில மாதங்களாக இருந்து வந்தது. திருவாரூர் மாவட்ட மையத்தின் நூலகர் ஆசைத்தம்பி அவர்களிடம் நூலகத்தில் கூடுகை நிகழ்த்த இடம் தர முடியுமா என்று கேட்டதுமே அவர் சம்மதித்தார். திருவாரூர் மைய நூலகம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படும் நூலகங்களுள் ஒன்று. ஆசைத்தம்பி ஆண்டாள் போன்ற ஆர்வம்மிக்க நூலகர்களால் தொடர்ச்சியாக "செயல்பட்டுக்" கொண்டிருக்கும் ஒரு அரசு நிறுவனம் திருவாரூர் நூலகம். நூலகத்திற்கே உரிய சலிப்பான தோற்றத்துடன் இருப்பவர்களை திருவாரூர் மைய நூலகத்தில் காண முடியாது.

உண்மையில் கூடுகைக்கு இடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே இலக்கிய வட்டம் தொடங்கும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

ஜெயமோகனின் வாசகரான விஜய்கிருஷ்ணன் அவரது நண்பரும் திருவாரூரில் வசிக்கிறவருமான சம்பத் அவர்களிடம் நதிக்கரை இலக்கிய வட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இன்று காலை பத்து மணிக்கு முதல் கூடுகை திட்டமிடப்பட்டிருந்தது. எனக்கு முன்னரே சம்பத் வந்துவிட்டிருந்தார். மாநில அரசுத் துறையில் பணிபுரிகிறவர். ஒன்பதே முக்காலுக்கு நான் மைய நூலகம் வந்தேன். என் நண்பரான கதிரேசனும் அவருடைய நண்பரும் தமிழாசிரியருமான ரமேஷும் நாகையில் இருந்து வந்திருந்தனர்.

நூலகத்தின் முதல் தளத்தில் ஒரு அறையை எங்களுக்கு ஒதுக்கித் தந்திருந்தனர். சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பிறகு இலக்கிய வட்டம் தொடங்கியதற்கான நோக்கம் குறித்துச் சொன்னேன். மற்ற இடங்களில் அதிக கூச்ச சுபாவம் உடையவனாக உணரும் என்னிடம் இலக்கியம் சார்ந்த சந்திப்புகளில் என்னிடம் தயக்கங்கள் இருப்பதில்லை என்பதை உணர்கிறேன். அந்த தயக்கமின்மை பிறரையும் இயல்பாக உரையாட வைத்தது.

மூவருமே தங்களுடைய வாசிப்பு இலக்கிய வாசிப்பு நோக்கி நகர்ந்ததன் பரிணாமத்தைக் கூறினர். சம்பத் வாசிப்பு சார்ந்து விவாதிப்பது குறித்த தன் ஐயங்களை முன் வைத்தார். ஒரு படைப்பு ஏன் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசினோம். கதிரேசன் தரமான நாவல்களிலேயே சில மனதுக்கு அணுக்கமாக இருப்பதற்கும் சில அவ்வளவு ஈர்க்காமல் போவதற்கும் காரணம் என்ன என்று கேட்ட கேள்வியின் வழியாக விவாதம் நாவல்களின் வகைமைகளுக்குள் சென்றது. பொதுவாக யதார்த்தவாத படைப்புகள் வாசிப்புத்தன்மை மிக்கவையாக இருக்கும் என்று சொன்னேன். இயல்புவாதப் படைப்புகளுக்குள் அவற்றின் மொழி செயல்படும் விதத்தை உணர்ந்து உள் நுழைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னேன். மேலும் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் ஒரு சாதாரண வாசகனுக்கு அளிக்க கூடிய அயர்வையும் சோவியத் ரஷ்யாவின் உடைவு என்ற பின்னணியில் பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவல் அளிக்கக்கூடிய திறப்புகளையும் பற்றி சொன்னேன். அதுபோல தனிமையின் நூறாண்டுகள் நாவலில் வரும் மகோந்தாவை ஸ்பெயினின் அரசியல் சூழலோடு பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவலை மேலும் அணுகி அறிய முடிவதையும் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை கம்யூனிஸ்ட் புரட்சியின் மீதான விமர்சனமாக அமைவதையும் கதிரேசன் சொன்னார்.

நாவலின் வகைமைகள் பற்றிய பேச்சு நீண்டபோது இயல்பாகவே மீபுனைவு பற்றிய பேச்சு எழுந்தது. புனைவுக்குள் மற்றொரு புனைவினை கொண்டுள்ள வடிவத்தை மீபுனைவு என்கிறோம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு மீபுனைவு. அந்த நாவலுக்குள் வரும் சங்கர்ஷணன் என்ற கதாப்பாத்திரத்தால் "விஷ்ணுபுரம்" என்ற காவியம் நாவலுக்குள்ளேயே எழுதப்படுகிறது. அவ்வகையில் மகாபாரமும் ஒரு மீபுனைவு தானே என்று ரமேஷ் கேட்டார். மகாபாரதத்தை எழுதிய வியாசர் மகாபாரத்திலேயே ஒரு பாத்திரம் என்ற வகையில் அதுவும் ஒரு மீபுனைவே.

நான் விமோசனம்,அறம் மற்றும் வணங்கான் ஆகிய மூன்று சிறுகதைகள் குறித்து பேசலாம் என எண்ணியிருந்தேன். மணி அப்போது பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. ஆகவே விமோசனம் குறித்து மட்டும் பேசலாம் என முடிவு செய்து கொண்டேன். சிறுகதை என்ற வடிவம் குறித்த ஒரு பொதுப்புரிதலை வழங்குவதற்காக சுஜாதா எழுதிய ஒரு "மர்மக்கதையை" சொன்னேன். அதன் முடிவு அவர்களின் ஊகத்துக்கு எதிரானதாக இருந்தது. சுஜாதா அது போன்ற கச்சிதமான முடிவைக் கொண்ட பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நகரம்,குதிரை போன்ற ஒரு சில படைப்புகளே "இலக்கியத்தகுதியை" பெறுகின்றன என்று சொன்னபோது மாற்றுக்கருத்து வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் மூவருமே சுஜாதாவை வாசித்திருந்ததால் அதை ஆமோதிக்கவே செய்தனர்.

அசோகமித்திரனின் விமோசனம் கதையை சொன்னேன். (சொல்லும் போதே அடுத்தமுறை இப்படி "கதை சொல்வது" கூடாது என முடிவு செய்து கொண்டேன்). அக்கதையில் அசோகமித்திரன் விமோசனம் என்று குறிப்பிடுவது எதை என்பது குறித்து ஒரு சிறு விவாதம் நிகழ்ந்தது. ஒரு கணவன் மனைவியின் உறவில் ஏற்படும் முறிவை மிகத்துல்லியமாக சித்தரிக்கக்கூடிய கதை அது. அப்படியே அந்தப்பேச்சு எல்லா உறவுகளிலும் இருக்கக்கூடிய அதிகார-அடிபணிவு பாவனையின் அவசியம் குறித்ததாக மாறியது. அலுவலகத்தில் குடும்பத்தில் நட்பில் என எல்லா தளத்திலும் இந்த பாவனை செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதையொட்டி கதிரேசன் தஸ்தாவெய்ஸ்கியின் அழையா விருந்தாளி என்ற குறுநாவல் குறித்துச் சொன்னார். தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு ஊழியனின் திருமணத்திற்கு தன்னுடைய "கருணையை" நிறுவுவதற்காக செல்லும் ஒரு முதலாளியைப் பற்றிய கதை அது. அழையா விருந்தாளியான அவரால் அந்த திருமணத்தில் நிகழக்கூடிய குழப்பங்களையும் அந்த நாளினைத் தொடர்ந்து முதலாளிக்கும் ஊழியனுக்குமான உறவில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தையும் கதிரேசன் சொன்னார்.  அக்குறுநாவலை வாசிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

முதல் நிகழ்வு என்பதால் எந்த "திட்டமிடலும்" இன்றி நிகழ்ந்தது. எனினும் நண்பர்களாக சிலர் சந்தித்துக் கொள்ள முடிந்தது நிறைவளித்தது. அடுத்த நிகழ்வில் குறிப்பிட்ட படைப்பினைப் பற்றிய உரையோ அல்லது கட்டுரையோ தயார் செய்து கொண்டு உரையாடலாம் என்ற திட்டமுள்ளது. அடுத்த வாரம் வரவிருக்கும் நண்பர்களைப் பொறுத்து அதை முடிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.

ரமேஷ் நாஞ்சில் நாடனின் தீவிர வாசகர் என்று அறிந்தேன். அதுபோல சம்பத் ஜெயமோகனின் வாசகர். மின் நூல்களை விட தனக்கு புத்தகத்தில் படிப்பதே எளிமையானதாக இருப்பதாக சம்பத் சொன்னார். ஒரு மணிக்கு நிகழ்வினை முடித்துக் கொண்டு நூலகத்தில் இருந்து கிளம்பினோம். கதிரேசன் திருவாரூர் நூலகத்தில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.  திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு ஒன்றரை மணிக்கு புறப்பட்டோம்.

இன்றைய நிகழ்வு இலக்கிய கூடுகையை தொடர்ச்சியாக நடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்தடுத்த வார நிகழ்வுகள் குறித்த பதிவுகள் மேலும் துல்லியமானவையாக இருக்கும் என்பதை இப்போது உணர முடிகிறது.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024