திருவாரூர்,வாசகசாலை,நதிக்கரை,வாசிப்பு
நதிக்கரை இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஒரு நவீன இலக்கிய வாசகர் வட்டத்தை திருவாரூர் மைய நூலகத்தின் உதவியுடன் சில வாரங்களுக்கு முன் தொடங்கினோம். இரு வாரங்களுக்கு முன் இலக்கிய வட்டத்தின் முதல் கூடுகை நடைபெற்றது. மூன்று நண்பர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நவீன இலக்கிய வாசிப்பு ரொம்பவும் குறைவு என்ற என் அனுமானத்தை நதிக்கரை இலக்கிய வட்டத்திற்கு கிடைத்த "வரவேற்பினை" வைத்து உறுதிபடுத்திக் கொண்டேன். இலக்கியம் தனிமனித முயற்சிகளால் சமூகத்தின் உதிரி மனிதர்களால் தான் முன்னெடுக்கப்படுகிறது. அத்தகைய உதிரி மனிதர்கள் உருவாவதற்கான சூழலைத்தான் ஒரு நிலம் கொண்டிருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் அத்தகைய சூழல் இல்லவே இல்லை.
திருவாரூரில் பிறந்து தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வரும் நண்பரும் இலக்கிய வாசகருமான மகேஷ் நதிக்கரை இலக்கிய வட்டத்தின் கூடுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வாரம் ஊருக்கு வந்திருக்கிறார். இத்தகைய தீவிரமான மனிதர்களை நம்பி மட்டுமே இலக்கியம் இயங்குகிறது. திருவாரூர் போன்ற மிகப்பின் தங்கிய அசலான சுய அடையாளங்களை தொலைத்துவிட்ட ஒரு மாவட்டத்தில் இலக்கியச் செயல்பாடுகளையோ பண்பாட்டு செயல்பாடுகளையோ இன்றைய நிலையில் முன்னெடுப்பது சோர்வளிக்கக்கூடியது. கடுமையான சோர்வினைத் தரக்கூடியதாக இருக்கும் என்று தெரிந்தே நதிக்கரை இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. சம்பத்,கதிரேசன்,ரமேஷ் ஆகிய நண்பர்கள் முதல் கூடுகையில் கலந்து கொண்டனர். மூவருமே தீவிர இலக்கிய வாசிப்பில் இருப்பவர்கள் என்பது நம்பிக்கையும் ஆறுதலும் தந்தது. நேற்று காலை நடைபெற்ற நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இரண்டாவது கூடுகையில் சம்பத் மற்றும் மகேஷ் ஆகியோருடன் விவாதித்தேன்.
விஷ்ணுபுரம் நாவல் குறித்து பேச்சினை நகர்த்தி கொண்டு வருவதற்கு முன் ஒரு செவ்வியல் ஆக்கத்தின் பண்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தேன். அதுவரை சமூகத்தில் இருந்த குறியீடுகளை நம்பிக்கைகளை ஒரு செவ்வியல் ஆக்கம் தனக்கே உரிய முறையில் தொகுத்து கடத்துகிறது என்று சொன்னேன். ஆகவே ஒரு நிரந்தரமான அறிவியக்கத்தை எந்தத் துறையிலும் உருவாகும் செவ்வியல் படைப்புகளே கடத்த முடியும் என்று தொடர்ந்தேன். விஷ்ணுபுரம் ஏன் ஒரு செவ்வியல் ஆக்கம் என்பதையும் அது செயல்படும் களத்தையும் அதன் வடிவத்தை அணுகுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.
அறம் சிறுகதை தொகுப்பு குறித்து மாலை நடைபெறவிருந்த நிகழ்விற்காக மூன்றாவது முறையாக அறம் சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். இறுதியாக மூன்று சிறுகதைகளை மறு வாசிப்பு செய்யாமல் இருந்தேன். மதிய உணவுக்கும் மாலை நிகழ்வுக்குமான இடைவெளியில் அச்சிறுகதைகளை வாசித்து பேசுவதற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டேன்.
மாலை நிகழ்வினை நூலகர் ஆசைத்தம்பி மற்றும் நண்பர் மகேஷ் ஆகிய இருவருமே ஆர்வத்துடன் ஒருங்கிணைத்தனர். முன்பு மகேஷ் குறித்து சொன்னது போலவே நூலகர் ஆசைத்தம்பியும் வாசிப்பின் பேரில் தன்னிச்சையான ஈடுபாடும் வாசிப்பால் நிகழும் அறிவியக்கத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவர். மாணவர்களை நூலகத்திற்கு வரவைப்பதிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் அவர்களை தொடர்ந்து வாசிக்க வைப்பதிலும் பெரும் முயற்சி எடுத்து வருபவர். ஒருவரோடு பேசும் போது அவர்களை பேசிவிட்டு சற்று நேரம் அவதானித்தாலே அவர்களது ஆர்வங்களை தேர்வுகளை நம்மால் அறிந்து கொண்டுவிட முடியும். நூலகர் ஆசைத்தம்பி எப்போதும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதைப் பற்றியே அதிகம் பேசுகிறவர். இன்றும் மதிய நேரத்திலும் அது குறித்தே பேசிக் கொண்டிருந்தார்.
மாலை நெருங்கிய போது எனக்குள் ஒரு மெல்லிய நம்பிக்கையிழப்பு ஏற்படத் தொடங்கியது. மகேஷ் வீட்டுக்கு சென்றுவிட்டு ஐந்து மணிக்கெல்லாம் வந்து விட்டார். ஐந்தரைக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வு சில வருகையாளர்களுக்காக காத்திருந்ததால் கொஞ்சம் தாமதப்பட்டது. வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் சென்னையில் பணிபுரியும் ஒரு இளைஞர் தன்னை இறுதிவரை அறிமுகப்படுத்திக் கொள்ளாத ஒரு நடுத்தர வயது கடந்தவர் ஆகியோர் ஐந்தரைக்கு முன்பே சரியாக வந்துவிட்டனர். அதன்பிறகு மெல்ல ஒவ்வொருவராக வந்து ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
மைய நூலகர் ஆண்டாள் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நூலகர் ஆசைத்தம்பி போலவே வாசிப்பு செயல்பாடுகளில் ஆர்வம் உடைய மற்றொரு அரசு அலுவலர் அவர். நூலக ஊழியர் அபிராமி ஒருங்கிணைத்தார்.
தமிழரசி என்ற முனைவர் பட்ட மாணவி அறம் சிறுகதை குறித்துப் பேசினார். அச்சிறுகதையின் போக்கினை எடுத்து சொல்லி அதிலிருந்து தான் புரிந்து கொண்டவற்றை சொன்னார். உண்மையில் அவரும் நவீன இலக்கிய கூடுகைகள் எதிலும் இதுவரை பங்கு பெற்றதில்லை. நூலகர் ஆசைத்தம்பி அவரை இந்த நிகழ்வுக்காக பேசுவதற்கென தயார் செய்ய சொல்லி இருக்கிறார். அதற்கென தயாரித்திருந்தாலும் அவர் அக்கதையின் போக்கினை சரியாக தொட்டிருந்ததாக எனக்குப் பட்டது. இருந்தும் எதிரே இருந்த பார்வையாளர்களில் ஜெயமோகனை ஏற்கனவே வாசித்திருந்தவர்களும் இலக்கிய கூடுகைகளில் கலந்து கொண்டிருந்தவர்களும் நம்பிக்கை இழப்பதை நான் உணர்ந்தேன். எனக்கு முன் பேசிய சிலரில் தமிழரசி தவிர வேறு யாருமே ஜெயமோகன் குறித்தோ அறம் சிறுகதை தொகுப்பு குறித்தோ எதுவும் சொல்லவில்லை.
நான் என் உரை எப்படி இருக்க வேண்டுமென பேச எழுந்ததும் முடிவு செய்து கொண்டேன். நவீன இலக்கியம் குறித்து அறிந்து கொள்ள வந்திருப்பவர்கள் ஏற்கனவே இலக்கிய வாசிப்பு உடையவர்கள் என இரு தரப்பினராக வாசகர்கள் அங்கிருந்தனர். ஆகவே முதலில் சிறுகதை என்ற வடிவம் குறித்து சொன்னேன். புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற அதேநேரம் எளிமையான சிறுகதையான பொன்னகரம் கதையைச் சொல்லி அச்சிறுகதையின் இறுதி வரி ஒரு வாசகனுக்கு அளிக்கக்கூடிய திறப்பினைப் பற்றி சொன்னதும் ஒரு மெல்லிய ஆர்வத்தை நண்பர்களிடம் காண முடிந்தது. சிறுகதை என்ற வடிவம் இயல்பாகவே பூடகத்தன்மையும் கரவுகள் நிறைந்ததாகவும் இருப்பதை குறிப்பிட்டேன். ஒரு சிறுகதையில் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டு குறித்து சொல்லிச் சென்று இந்த வடிவத்தில் ஒரு மீறலை மேம்படுத்துதலை நிகழ்த்தும் படைப்புகளே காலத்தில் முக்கியமானவையாக நிலைக்கின்றன என்றேன். அவ்வகையில் அறம் சிறுகதை தொகுப்பு நிகழ்த்தும் வடிவ ரீதியான மீறல்களையும் அடங்கிய குரல் தன்மை என்பது நீங்கி அது ஓங்கி ஒலிப்பதையும் அப்படி ஓங்கி ஒலிக்கும் தன்மைக்கு பின்னே அத்தொகுப்பின் எல்லா சிறுகதைகளிலும் இருக்கும் மௌனங்களையும் சிக்கல்களையும் பற்றிச் சொன்னேன்.
யானை டாக்டர் கதையில் வரும் டாக்டர்.கே சோற்றுக் கணக்கின் கெத்தேல் சாகிப் நூறு நாற்காலிகளில் வரும் நாயாடி சமூகத்தைச் சேர்ந்த ஆட்சியர் முதுகெலும்பு செயலிழந்த பிறகும் இமயம் நோக்கிப் புறப்படும் கோமல் சுவாமிநாதன் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களைப் பற்றிச் சொல்லும் போது இத்தொகுப்பினை வாசித்து விட வேண்டும் என்ற உந்துதல் ஒரு சிலருக்காவது ஏற்பட்டது. பேசி முடித்த உடனேயே மேசையை நகர்த்திவிட்டு சுற்றி அமர்ந்து கொண்டோம். அப்படி அமர்ந்து கொண்டதுமே எல்லோரிடமும் ஒரு இயல்புத்தன்மை வந்து விட்டது. ஒரு சிலர் எல்லா சிறுகதைகளையும் வாசித்திருந்தனர் என்பது ஆச்சரியம் அளித்தது. அவர்களுக்கு நான் சொன்னவற்றுடன் இருந்த ஏற்பு மறுப்புகளை விவாதித்தோம். முதல் நிகழ்வு என்பதால் இலக்கியம் சார்ந்து பொதுவான கேள்விகளும் கேட்கப்பட்டன. மணி எட்டை நெருங்கிய போதும் புறப்படும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இல்லாமல் இருந்தது நிறைவளித்தது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின் சென்னையில் பணிபுரியும் இளைஞரான நரேன் திருவாரூர் பி.எஸ்.என்.எல்லில் பொறியாளராக பணிபுரியும் பாலாஜி அறிமுகம் செய்து கொண்டனர்.
கூத்தாநல்லூர் நூலகரான செல்வகுமார் அரசுப்பள்ளி மாணவர்களிடம் வாசிப்பினை கொண்டு சேர்ப்பதற்கான நடைபெறும் பணிகள் குறித்து உற்சாகமாக பேசிக்கொண்டு வந்தார்.
மகேஷ் என்னை திருவாரூர் பேருந்து நிலையத்தில் விடுவதாகச் சொன்னார். நான் செல்வகுமார் அவர்களுடன் கமலாபுரம் வரை அவரது இருசக்கர வாகனத்திலேயே வந்துவிட்டேன். அப்போதும் அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு குறித்து அவர் சொன்னவை ஆச்சரியமூட்டின. அரசு நூலகங்கள் அரசுப்பள்ளிகளுடன் இத்தகைய நெருக்கமான தொடர்பினை பேணுவது உண்மையில் ஆரோக்கியமனது.
நேற்று முந்தினம் தஞ்சைக்கூடல் நேற்று காலை நதிக்கரை மாலை வாசகசாலை என தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருந்திருக்கிறேன். புயலடித்து ஓய்ந்தது போல வீட்டுக்கு வந்தபோது மனம் ஓய்ந்திருந்தது. ஒரு ஆறுமாத காலம் சோர்வின்றி செயல்பட்டால் திருவாரூரில் நவீன இலக்கியத்திற்கான ஒரு வாசகப் பரப்பை உருவாக்கி இயங்கச் செய்துவிட முடியும் என்ற மெல்லிய நம்பிக்கையை இந்த நிகழ்வுகள் கொடுத்தன. நிறைவான தினம்.
செல்வகுமார் மற்றொரு தகவலும் சொன்னார். கேரளாவிற்கு நூலகம் தொடர்பான பயிற்சிக்கு சென்றிருந்த போது ஊர்புற நூலகங்கள் கூட நன்கு பராமரிக்கப்படுவதையும் நம்மில் பாதியளவோ நிலப்பரப்போ மக்கள் தொகையோ இல்லாத அந்த மாநிலத்தில் தமிழகத்தை விட இருமடங்கு எண்ணிக்கையில் நூலகங்கள் இருப்பதைக் குறிப்பிட்டார். அப்படியெனில் தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிகமாக கேரளம் வாசிக்கிறது.
Comments
Post a Comment