நீலப்புடவை - சிறுகதை
சுசித்ராவிடம் இரண்டு ஜோடி காலணிகள் உள்ளன. ஒன்று நேரடியாக செருப்பின் அடிமுனையில் இருந்து கால்களை நுழைத்து போட்டுக்கொள்வது. அந்தக் காலணிகள் வெண்மையும் மஞ்சளும் கலந்தது போன்ற நிறத்திலானவை. அடிப்பகுதிக்கு சற்று மேலிருந்து கட்டைவிரலையும் மற்ற விரல்களையும் பிரிக்கும் இடத்துக்கு இரண்டுபக்க வார்களும் வந்துசேரும். அவ்விடத்தில் சிறிய கருநிற பளிங்கால் செய்யப்பட்ட ஒரு மூன்றிதழ் பூ பளபளக்கும். மற்றொரு காலணி நேரடியாக கால்களை நுழைத்துக்கொள்ளும் வகையிலானது அல்ல. சற்று சிரமப்பட்டு வலப்பக்கத்தில் உள்ள ஒரு திறப்பினை பிரித்து அணிய வேண்டும். காலணியை விரித்து கால்களை உள்நுழைத்து பின்னர் குதிகாலில் இருந்து சற்று மேலாக ஒரு வாரினைக் கொண்டு சென்று மாட்டிக்கொள்ளும்படியான காலணி. சுவரில் ஒரு கையினை ஊன்றியபடி அக்காலணிகளை அணிந்துகொள்வது சற்று வேலையை எளிமையாக்கும். ஒருவேளை நெருங்கிய தோழி நண்பன் காதலன் சகோதரன் சகோதரி என்று உரிமையுள்ள யாரேனும் அருகில் இருந்தால் அந்த சுவருக்கு வேலை இருக்காது.
சுசித்ரா போட்டுக் கொள்வதற்கு சிரமமான அந்தக் காலணிகளை அணிந்து வருவதை நான் இரண்டு காரணங்களுக்காக விரும்பினேன். ஒன்று அவளுக்கு சுவரின் தேவையை இல்லாமல் ஆக்குவதற்கு. மற்றொன்று அக்காலணிகளை அணிந்துவரும் நாட்களில் தான் சுசித்ரா புடவை அணிந்து வருவாள். சுசித்ரா நல்ல பளபளக்கும் கருமை. அழகான கண்கள் கருமையான பெண் முகத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியவை. வெண்ணிறமோ மஞ்சள் நிறமோ கொண்ட பெண்களுக்கு கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவற்றில் உணர்ச்சிகளுக்கு ரசமேற்றும் மாயம் நிகழ்வதில்லை. சுசித்ராவின் கண்கள் கருந்தோலின் ஒரு துளியையும் வீணாக்காதவை. அவளது உடலும் அப்படியே. அவ்வுடலை அதன் முழு அழகுடனும் பிரதிபலித்துக் காட்ட சுடிதார்களால் முடிவதில்லை. சணல் சாக்கில் சுற்றப்பட்ட விக்ரஹம் போல அந்நாட்களில் சுசித்ரா தெரிவாள். சுசித்ரா ஒல்லியான உடல்வாகு கொண்டவளல்ல. ஆனாலும் உடற்சதை ஒருபிடியும் கூடிவிடாத முழுமையைக் கொண்டிருக்கும் பரிபூரணமான உடல் அவளுடையது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போதுதான் பரந்தமார்பில் மேடிட்டிருக்கும் முலைகளும் மார்பிலிருந்து முலைகள் தொடங்கும் இடத்தில் ரொம்பவும் ஒடுங்காத படிந்த வயிறும் அவளின் வடிவத்தை சரியாக காண்பித்துக் கொடுக்கும்.
இத்தகைய பெண்களுக்கு புடவை சங்கடம் தரும் உடைதான். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்பதால் பெருத்த முலைகள் அவளுக்குண்டு. ஆனால் அவற்றில் தளர்ச்சியை காண இயலாது. உருளைக்கல்லின் வழுவழுப்பைக் கொண்டிருக்கும் தோல். அத்தோலின் முழுமையும் பூரிப்பும் வெளிப்படும் அவளது முலையழகை எண்ணி பலநாட்கள் எச்சில் விழுங்கி இருக்கிறேன். பொதுவாக கருநிறப் பெண்கள் வெண்மை இளமஞ்சள் இளம்பச்சை போன்ற மென்மையான நிறமுடைய உடைகளை அணிய வேண்டும் என்று அம்மா சொல்வாள். உடல் நிறத்துக்கு எதிரான நிறத்தில் உடையணியவது தான் உடலை எடுப்பாகக் காட்டும் என்பது அம்மாவின் எண்ணம். ஆனால் சுசித்ரா எப்போதும் அடர்த்தியான நிறங்களில் தான் உடையணிவாள். கரும்பச்சையும் காபிநிறமும் கலந்த ஒரு புடவை அவளை மிகுந்த கவர்ச்சியுடன் காண்பிக்கும். கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு புடவையை அணிந்து அவள் அலுவலகம் வரும் தினங்களில் அவள் பக்கம் திரும்பாதிருக்க ரொம்பவும் கஷ்டமாகிவிடும். ஈரத்தால் நைந்து போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையான புடவை அது. எவ்வளவு நேரம் அயர்ன் செய்தாலும் அவள் உதடுகளின் சுருக்கங்கள் போல அப்புடவையிலும் சுருக்கங்கள் தென்பட்டபடியேதான் இருக்கும். இயல்பிலேயே சுசித்ராவுக்கு நீர்மை படர்ந்த தேகம். வெள்ளைத் துணியால் அவளது திரட்சியான கைகளை ஒற்றி எடுத்தால் அத்துணி ஒளி ஊடுருவும்படித் தெரியலாம். கழுத்தில் பூத்து ஜாக்கெட்டில் இறங்கும் வியர்வை அக்குளில் இருந்து முலைகளின் திரட்சி நோக்கிவரும் வியர்வை என அவளால் மனதில் அதிர்வும் கூச்சமும் சஞ்சலமும் அருவருப்பும் பிரியமும் மாறிமாறி தோன்றியபடி இருக்கும். ஆனால் அவளிடம் ஒரேயொரு வெண்ணிறப்புடவை இருந்தது. அதன் நிறத்தை வெண்மை என்றுகூட சொல்லமுடியாது. கறந்த பசும்பாலின் நிறம் அது. புடவையில் எம்பிராய்ட்ரி செய்த பெரிய பூக்கள் சில ஆங்காங்கு தென்படும். பார்வைக்குத் தென்படும்படியான மச்சங்கள் ஏதுமற்ற அவளது உடலுக்கு அந்த கருப்புநிற எம்பிராய்ட்ரி பூக்கள் மச்சங்களென செயல்பட்டன. அப்புடவைக்கு ஏற்றவாறு பளபளக்கும் கருநிற ஜாக்கெட் ஒன்றும் அணிந்துவருவாள்.
இத்தகைய இனிமையான அவஸ்தைகளுக்கென்றே அவள் புடவையில் அலுவலகம் வரும் தினங்களை விரும்பினேன். ஒன்பது மணிக்குத் தொடங்கும் எங்கள் அலுவலகத்துக்கு இரண்டு பேருந்துகள் மாறி அவள் வந்துசேர வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவளுக்கு நேரம் எஞ்சியிருந்தது என்றால் சாவகாசமாக ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னமர்ந்து தன்னையே குறும்பென்று சொல்லிவிட முடியாத ஒருவித பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டு அணிந்திருந்த காதணிகள் போட்டிருந்த அலங்காரச் சங்கிலிகள் ஆகியவற்றை கழற்றிவிட்டு அன்றைய உடைக்கு ஏற்றவாறு அணிகலன்களை அவள் தேர்வு செய்வதை கற்பனை செய்து பார்த்துக் கொள்வேன்.
ஒருநாள் அவள் வீடிருக்கும் தெருவுக்கு யதார்த்தமாக சென்று ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவளை அழைத்தேன்.
"சுசித்ரா மேம் நான் இந்திரா நகர்ல இருக்கேன். இங்க ஒரு வேலையா வந்தேன். கொஞ்சம் வழிதவறிட்டேன் போல. மெயின்ரோடு எங்க இருக்குன்னு தெரியல. இப்போ நான் இருக்கிற எடத்துக்கு எதிர்ல ஒரு தண்ணிடேங்க் தெரியுது. இங்கிருந்து எப்படி மெயின்ரோட் போறதுன்னு கெயிட் பண்றீங்களா? மொபைல்ல டேட்டா இல்ல. மத்தவங்கள்ட்ட கேக்கவும் கூச்சமா இருக்கு" என்று என் இக்கட்டினை அவளிடம் சொன்னேன்.
"சார் என் வீடும் இந்திரா நகர்தான்"
"ஓ அப்படியா?"
என்னை இடப்புறமாக இரண்டு வீதிகள் திரும்பினால் வரப்போகும் அவள் வீட்டுக்கு அழைக்கப் போகிறாளா அல்லது வலப்புறமாக திரும்பினால் மூன்று வீதிகள் தள்ளி வரப்போகும் மையச்சாலைக்கு செலுத்தப் போகிறாளா என்று நான் பதற்றமடையத் தொடங்கினேன்.
"ரைட்ல மூணு ஸ்ட்ரீட் தாண்டினா மெயின்ரோட் ஜி" என்றாள். எனக்கு ஏமாற்றமும் எரிச்சலும் அலைபேசியை இறுகப்பற்ற வைத்தது. நான் பதிலளிக்க ஆகும் வினாடிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தினேன். அவ்விடைவெளியில் அவளை வலிய நுழையச் சொல்வது என்னை இழிவாக உணரச் செய்தது. அவள் நுழையவும் செய்தாள்.
"அப்படியே லெஃப்ட்ல ரெண்டு ஸ்ட்ரீட் தள்ளினா உங்க அப்பாவி கலீக் சுசித்ரா வீடு. பச்சைகலர் பெயிண்ட் பண்ண கேட்" என்றாள்.
இதையே சொல்வாள் என்று தெரிந்தாலும் அதை அவள் சொன்னவிதம் முழுமையான தோல்வியுணர்வை கொடுக்காமல் இருந்தது.
சாலையில் இருந்து உயரமாக ஏற்றிக் கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு மாடிவீடு. நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது அலங்கரித்துக் கொண்டே என்னிடம் பேசத் தொடங்கினாள்.அலங்கரித்து முடித்ததும் "அய்யோ டைம் ஆச்சே அருண் நீங்க பைக்ல தானே வந்திருக்கீங்க?" என்றாள். அவள் என் பெயர் சொல்லி அழைத்தது அதுவே முதல்முறை. மனம் இரட்டிப்பாக மகிழ்ந்தது.
வீட்டை பூட்டிவிட்டு வாசலுக்கு வந்து அமர்வாள் என்றெண்ணி பைக்கில் சாவியைப் போட்டதும் "ஓகே அருண் ஆஃபீஸ்ல மீட் பண்ணலாம்" என்று சொல்லிவிட்டு எதிர்முனையில் நின்றிருந்த ஆட்டோவை என்னைக் கடந்த கையை நீட்டி கூப்பிட்டாள். திரவிய மணம் மனதை நெகிழ்வுகொள்ள வைத்தது.
அலுவலகத்துக்கு எனக்கு முன்பாக வரும்நாட்களில் புடவையுடனும் அந்த சிக்கலான காலணிகளுடனும் இருப்பாள். எனக்குப் பின்பாக சற்று தாமதித்து வரும்நாட்களில் சுடிதாரிலும் எளிய காலணிகளுடனும் இருப்பாள்.
அன்று சுசித்ராவை இவ்விரண்டு நிலைகளிலும் பொறுத்திப் பார்க்க முடியவில்லை. எனக்கு முன்பாகவே அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்தாள். சேர்ந்து போயிருந்த சில வேலைகளை முடிக்க வேண்டும் என்பதற்காக நான் ஏழரை மணிக்கே அன்று அலுவலகம் வந்திருந்தேன். சுசித்ரா அன்று புடவைதான் அணிந்து வந்திருந்தாள். ஆனால் காலில் போட்டுக்கொள்ள சிரமம் தராத காலணிகள் இருந்தன. எப்போதும் அணிந்திருக்கும் தங்க வளையல்கள் தவிர வேறு அலங்கார நகைகள் அவள் கழுத்திலோ உடலிலோ இல்லை. மெல்லிய பாம்புக்குட்டிகளை போல நெளியும் அவள் கூந்தலையும் அன்று சாதாரணமாகவே விட்டு வைத்திருந்தாள். அக்கூந்தலில் கொஞ்சத்தை முன்னே எடுத்து போட்டுக்கொண்டு அவள் நீவும்போது நெஞ்சதிர்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.
முடிக்க வேண்டிய வேலைகள் எனக்கு மறந்து போயிருந்தன. சுசித்ரா அலட்சிய சுபாவம் கொண்டவள். அந்த அலட்சியம் ஒருவகையில் கணவனில்லாத அவளுக்கு கேடயமாகவும் இருந்தது. அலட்சியம் மின்னும் அவள் விழிகளை கண்டு துடித்த பல ஆண்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அந்த அலட்சியம் நஞ்சற்றது. அது அவள் உருவாக்கிக் கொண்டதல்ல. ஒருவகையான விட்டேத்தி மனநிலையின் வெளிப்பாடு. அவளது கவர்ந்திழுக்கும் உருவம் அவள் விட்டேத்தித்தனத்தை பெருந்திமிர் என பலரை கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆனால் அவளால் செயல்களை முழு ஒருமையுடன் செய்ய முடிவதில்லை என்று அவளுடன் பழகிய சில தினங்களிலேயே கண்டுகொண்டேன். ஒருவகையில் நான் உள்நுழைந்து அவளுடன் நட்புடன் பழகுவதற்கும் அவளது அந்த விட்டேத்தித்தனம்தான் உதவியது.
நெருங்கி அமர்வது தொட்டுப்பேசுவது என்று அலட்சியமா நோக்கத்துடன் செய்கிறாளா என்று பிரித்துப்பார்க்க முடியாதபடிக்கு அவள் என்னை நெருங்கிக் கொண்டிருந்தாள். அதனினும் அபாயகரமாக என் மனம் அவளை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
தன்னுடைய கணினியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கழுத்தோ கண்களோ மெலிதாகக்கூட என்னை நோக்கித் திரும்பவில்லை. அவ்வளவு அழுத்தமாக என்னை தவிர்க்கிறாள் என்றால் அவள் எதிர்பார்த்திருப்பது என்னைத்தான். நான் மிக இயல்பாக அவளிடம் சென்று உரையாடலைத் தொடங்க வேண்டும். அதே இயல்புடன் அந்த உரையாடலை "தற்செயலாக" அவள் தான் சொல்ல விரும்புவதை நோக்கி கொண்டு செல்வதற்கு நான் உதவி செய்ய வேண்டும்.
சட்டென்று அங்கு நிற்பதற்கு மனம் ஆழமான அருவருப்புணர்வை அடைந்தது. என் தகுதிகள் ஒவ்வொன்றாக என் நினைவுக்கு வரத்தொடங்கின. மிகப்பெரிய குடும்பம் ஒன்றில் பிறந்து அதீதமான சொத்துக்களுடன் என்னை விட்டுச்சென்ற அம்மாவின் மகன் நான். இந்த ஏற்றுமதி நிறுவனத்தில் செய்யும் வேலைகூட எனக்கு பெரிய பொருட்டல்ல. கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட என்னை விட ஒரு வயது மூத்தவளான இவளுடன் என் மனதை ஏன் இவ்வளவு முடிச்சிட்டுக் கொள்கிறேன் என்ற நேரடிக் கேள்வியை மனதின் ஒரு மூலை எழுப்பியபோதே அதே காரத்துடன் மற்றொரு மூலை அதற்கு பதில் கொடுத்தது. குலையாத அந்த உடல் உனக்கு வேண்டும் வேறென்ன என்று. இரண்டு மூலைகளையும் உதறி "சுசி" என்று அவளுக்கு பக்கவாட்டில் நின்றவாறு அழைத்தேன். பொதுவாக எரிச்சலுடனோ சஞ்சலத்துடனோ இருப்பவர்களை பக்கவாட்டில் இருந்து எதிர்கொள்வது பயனளிக்கும். எரிச்சல் கோபம் போன்ற மனநிலை உடையவர்கள் தங்கள் மீது சூழலின் அதிகாரம் செயல்படுவதாக உணர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எதிரே சென்று நிற்றல் என்பது அந்த அதிகாரம் அவர்கள் மேல் அழுத்தமாக படிந்திருப்பதை உணர்த்துவது போலாகும்.
அவள் திரும்பவில்லை. விரல் நுனிகள் கூசுமளவு ஆத்திரம் தலைக்கேறியது. கட்டுப்படுத்திக்கொண்டு மீண்டும் "சுசி" என்றேன். அலட்சியமாக முகத்தை திருப்ப வேண்டும் என்று அவள் எத்தனித்தாலும் அது இயலாமல் ஏக்கம் படர்ந்த முகத்துடன் என்னை நோக்கித் திரும்பினாள். அவள் விழிகளில் நீர்மை படர்ந்திருந்ததைக் கண்டபோது எனக்குள் ஒரு நடுக்கம் கடந்து சென்றது. அந்த சோர்வுற்ற முகத்துக்கென என் மனம் உண்மையிலேயே வருந்துவதை எண்ணி பதற்றப்படத் தொடங்கினேன். இந்தப் பதற்றத்துடன் பேச்சைத் தொடங்கினால் அவள் எதையும் சொல்வதற்கு முன்பே எரிச்சலோ சலிப்போ அடைந்துவிடுவேன் என்று பயந்தேன். அவளே "டீ குடிச்சிட்டு வரலாமா அருண்?" என்றாள். நான் கொஞ்சம் விடுதலை அடைந்தது போல உணர்ந்தாலும் அவள் சொல்லவிருப்பதை கேட்கும் ஆர்வம் முற்றாக அவிந்திருந்தது.
டீக்கடையில் அவள் எதுவுமே பேசவில்லை. அப்போது எதுவும் கேட்கக்கூடாது என்பது எனக்குத் தெரியும் என்பதால் இரு கைகளாலும் டம்ளரைப் பற்றியபடி உதடு குவித்து டீ குடிப்பவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு முறை உதட்டை குவிக்கும் போதும் உள் உதட்டுச் சிவப்புத் தெரிந்தது. கடையில் இருந்து வெளியே வரும்போது எதிரேயிருந்த சிவன் கோவிலைப் பார்த்தாள். பிறகு என்னை.
"போகணுமா?" என்றேன் அழும் குழந்தையை சமாதானம் செய்யும் குரலில்.
அவளும் குழந்தை போலவே ஆம் என்று தலையசைத்தாள்.
நான் சிரித்துக்கொண்டே சரி என்றால் மீண்டும் குழந்தை போலவே முகம் மலர்வாள். அவளை அப்படிப் பார்க்க அப்போது மனம் விரும்பினாலும் அதைத்தவிர்த்து சரி எனச்சொல்ல வந்து நான் அப்படி சாதாரணமாகச் சொன்னால் அவள் மனம் கூம்பும் என்ற எண்ணம் வந்தவுடன் சிரித்துக்கொண்டே "சரி" என்றேன். சந்தோஷத்தில் என் கைகளைப் பற்ற நெருங்கி அந்த உந்துதலை சிரிப்புக்கு இன்னும் அதிகமளித்துவிட்டு நான் பின்தொடர்வேன் என்ற முழு நம்பிக்கையுடன் அவள் முன்னே நடந்தாள். அப்படிச் செல்கிறவளைப் பார்ப்பதற்கு எனக்கு சற்று அச்சமாக இருந்தது.
தன்னைத் தொடர்வதன்றி தன் ஆளுகைக்குள் அடங்கியிருப்பதன்றி உலகில் யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பது போன்றான நம்பிக்கை அவளில் வெளிப்பட்டது. தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பது போல. உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டால் கோவிலில் இருக்கும் சிலைகளில் ஒன்றாகி அமர்ந்து விடுவாளோ என்ற ஒரு விசித்திரமான ஆனால் உண்மையான பயம் தோன்ற அவளை கலைத்துவிடும் நோக்கத்துடன் பின்னே ஓடினேன். அப்படிச்செல்லும் போதுதான் அவளைக் கலைக்க என் கட்டுப்பாட்டில் எடுக்க என்னிடம் சொற்களே இல்லை என்று புரிந்தது. ஆனால் பிரக்ஞை மீறி இயங்கும் நுண்புலம் ஒன்று "சுசித்ரா" என்று அவளை அழைத்துவிட்டது. அவள் மகனைத் திரும்பி நோக்கும் கனிவுடன் என்னைப் பார்த்தாள். கோவில் வாசலில் பரப்பியிருந்த வண்டல் மண்ணில் சூரிய ஒளி பிரதிபலித்து கண்கூசத் தொடங்கியது. அவள் உள்ளே சென்றாள்.
இருளும் குளிரும் சூழ்ந்த அந்தக் காலை நேரக்கோவில் என்னை எந்த அதிகாரமும் இல்லாதவனாக உணரச் செய்தது. அவள் வியாழன் சன்னதிக்கு எதிரே சென்று அமர்ந்திருந்தாள். இப்போது என்னில் சற்று நம்பிக்கை கூடியது. அச்சூழலின் மெல்லிய மணமும் குளிர்ச்சியும் அவள் உடலில் இருந்து பரவுவதாக எண்ணியபோது நான் முழுதாகவே விடுதலையடைந்து விட்டேன்.
எந்த முன்முடிவும் இல்லாமல் அவள் அருகில் செல்லும்போது தோன்றும் முதல் வார்த்தையுடன் பேச்சைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தபடி அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.
"இந்த புடவை உனக்கு நல்லா இருக்கு சுசி" என்றேன். அன்று அவள் நீலப்புடவை அணிந்திருந்தாள்.
அவள் என்னை நோக்கி கேள்வியுடன் திரும்பினாள். ஆனால் முகத்தில் ஒரு மெல்லிய மலர்வு தென்பட்டது.
"நீ இப்படி ஒரு நாளும் இதுவரை சொன்னதில்லையே. இப்ப என்ன புதுசா?"
"ஏதோ சொல்லத் தோணுச்சு. இஃப் யு ஃபீல் டிஸ்டர்ப்ட் ஐயம் சாரி" என்றேன்.
"அப்படி இல்ல அருண். ஃப்ராங்க்ளி செட் உங்கிட்ட இதெல்லாம் சொல்லிடணும்னுதான் இன்னிக்கு சீக்கிரமா வந்தேன். ஆனா இப்போ சொல்லணுமான்னு இருக்கு. உனக்குள்ள ஒரு இன்னொஸென்ஸ் இருக்கு. அதை நான் கெடுக்க விரும்பல" என்றாள்.
எனக்குள் மெல்லிய சீற்றம் பரவியது. அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரிக்கும் அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. என் மீது துளியும் கோபம் கொள்ளாத அப்பாவை அவ்வளவு ஆழமாக வெறுக்க வைத்தது அம்மாவின் இந்தக் கண்ணீர்தான் என்று அவர் இறந்தபோது எண்ணிக் கொண்டேன். அவர் ஏதோவொரு வட்டத்தை நிறைவுசெய்யவில்லை என்று எண்ணினேன். அம்மா அப்படி அழுகையை மறைக்கும் நாட்களில் அந்த மனிதர் எனக்கு மிக மிக அந்நியமானவராகத் தோன்றுவார். அந்த அந்நியத்தன்மை அவர் உலகம் சார்ந்த அனைத்தையும் என்னிடமிருந்து அந்நியப்படுத்தியது. அவரும் எனக்கு ஏழு வயதாகும்போதே தனக்கு மகன் என்ற உணர்வுரீதியான உறவு இல்லை என்பதை புரிந்து கொண்டார். அடுத்த வருடத்தில் நான் மகிழ்ந்து நிறைவு கொள்ளும்படி செத்தும் போனார். அம்மாவின் பெயரில் இருந்த அரிசி ஆலையில் இருந்து அவளுக்கான வருமானம் வந்து கொண்டிருந்தது. சரியாகச் சொல்வதானால் என்னுடன் இருப்பதன்றி அம்மாவுக்கு வேறு வேலைகள் கிடையாது. ஆனால் அம்மா அப்படி இருக்கமாட்டாள். தினமும் ஆலைக்குச் செல்வாள். ஆலையின் அருகிலேயே ஒரு பால் பூத்தும் அதன்பிறகு திறந்தாள். அதனருகில் பெரிய அளவிலான மளிகை. பின்னர் அது சூப்பர் மார்க்கெட்டானது. அம்மா இதையெல்லாம் ஓராண்டுக்குள் செய்து முடித்தாள் என்பதுதான் என்னை எப்போதும் ஆச்சரியப்பட வைத்தது. அதுவும் அப்பா இறந்த ஓராண்டுக்குள்.
அப்பா இருக்கும் வரை அவளது மாலைப்பொழுது அவ்வளவு உற்சாகத்துடன் இருந்ததில்லை. அவர் இறந்த சில தினங்களில் இருந்து சரியாக ஆலைக்கு சென்றுவரத் தொடங்கியவள் மாலை வீடு திரும்பிய உடனே குளித்துவிட்டு பூஜையறையில் விளக்கேற்றி பக்திப் பாடல்களை ஒலிக்கவிட்டபடி சமைக்கத் தொடங்குவாள். சமைத்து முடித்ததும் சினிமாப் பாடல்கள். இரவுடைக்கு மாறி உறங்கச் செல்லும்போது வயலின் ஒலி மென்மையாகக் கேட்கும் ஒரு இசை. அந்த இசையை நான் வெண்மையுடன் இணைத்து நினைவில் வைத்திருந்தேன். அம்மாவின் விசாலமான படுக்கையில் அப்பா இருத்தவரை ஒரு செந்நிற விரிப்பு கிடத்தப்பட்டிருந்தது. அது அந்ந அறையின் முழு வெண்மைக்கு எதிராக அமைந்து அழகூட்டியது. மேலும் அரிதாக சில நாட்களில் செந்நிற விரிப்பில் எழுந்து அமர்ந்திருக்கும் அம்மாவைக் காணநேரும் ரத்தச்சகதியில் சொட்டிய பால்துளி போல. அம்மா நல்ல வெள்ளை நிறம்.
அம்மா இப்போது முற்றாக வெண்மைக்கு மாறியிருந்தாள். எனக்கு இரவுணவு பரிமாறும்வரை முகத்தில் தென்படும் ஒரு வகையான மென்னிறுக்கம் அதன்பிறகு முற்றாகத் தளர்த்து அம்மா ததும்பத் தொடங்குவாள். மதிலுக்குப் பின்னிருந்து அலையடிக்கும் கடல்போல அம்மாவின் அழகிய தத்தளிப்புகள் அவள் செயலில் கூடும். அந்த நாட்களில் நான் அவளுடனேயே இருந்து கொள்ள விரும்பியது அந்த தத்தளிப்புகளை முழுக்கப் பருகவே என்று இப்போது தோன்றுகிறது. வேலைகள் முழுதாக முடிந்த பின்பு அம்மா நைட்டிக்கு மாறுவாள். வெண்ணிறந்தான். என் அறையில் என் நெற்றிக்கான இறுதி முத்தத்தை கொடுக்கும் போது முகப்பக்கவாட்டில் சரிந்து விழும் அவளது கனத்த கூந்தலின் ஷாம்பூ மணம் அவளை அங்கேயே படுத்துக் கொள்ளச் சொல்லித் தூண்டும். சில நாட்களில் அம்மா தன் வலப்பக்க மார்புடன் என் தலையை சேர்த்துக் கொண்டு கண்மூடி சிறிது நேரம் படுத்திருப்பாள். நானும் நிம்மதியாய் உறங்கிப் போவேன். பிரக்ஞையின் இறுதி இழை அறுந்து நான் உறக்கத்தில் நுழையும் கணம் அம்மாவுக்கு சரியாகத் தெரிந்திருந்தது. எழுந்து சென்று விடுவாள்.
அன்று என் எட்டாவது பிறந்தநாள் அன்று அம்மா எனக்குப் பிடித்த உணவு வகைகளாக செய்து குவித்திருந்தாள்.
"குளிச்சிட்டு வாடா குட்டி" என்று என் தோள்பையினை வாங்கிக் கொண்டாள். என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் காலையிலேயே முடிந்திருந்ததால் எனக்கு குழப்பமாக இருந்தது.
"அதான் மார்னிங் கேக் வெட்டியாச்சேம்மா" என்று நான் அவள் கையை பிடித்துக் கொண்டு நடந்தபடியே கேட்டேன்.
அப்படியே என்னைத் தூக்கிக் கொண்டாள். அவ்வளவு தூய வெண்ணிற புடவை அணிந்திருந்த அம்மாவின் இடுப்பில் பொருந்தி அமர்ந்திருப்பது பொருத்தமில்லாததாகத் தெரிந்தது. அவள் தூய்மையை குலைப்பது போலத் தோன்றியது.
ஒற்றைக் கதவு மட்டும் திறந்திருந்த வாயிலில் என்னையும் தூக்கியபடி சிரமப்பட்டு உள்நுழைந்தாள்.அவள் என் மோவாயை தன் பக்கம் திருப்பி "என் செல்லம் எனக்காக இன்னொரு தடவ கேக் வெட்டாதா?" என்று கேட்டாள். நான் வெட்கப்பட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டேன். அம்மாவின் ஒற்றைச் சங்கிலி முகத்தில் பட்டு உறுத்தியது. எனக்காக வாங்கப்பட்டிருந்த சிறிய பாத்டப்பில் குளித்து வெளியே வந்தபோது வீடு முழுவதும் இருட்டாகத் தெரிந்தது. பின்னரே கூடம் மென்நீல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது புரிந்தது. அம்மாவின் கைகள் புடவை அனைத்தும் நீலமாகத் தெரிய வெள்ளி கேண்டிலில் செருகப்பட்டிருந்த மெழுகுவர்த்தி அம்மாவின் முகத்தை மஞ்சள் நிறத்தில் காட்டியது.
"குட்டி வந்துட்டியா" என்று அருகே இழுத்து எனக்கென வாங்கப்பட்டிருந்த உடைகளை அணிவித்தாள். அம்மாவின் கைகளுக்குள் என் கைகள் இருந்தன. நான் மீண்டும் கேக் வெட்டியபோது என் தோள்களுக்குப் பின்னிருந்த அம்மாவின் முகத்தில் இருந்து சில துளி கண்ணீர் கேக்கில் விழுந்தது. அம்மாவின் மினுமினுக்கும் கேசம் பக்கவாட்டில் வந்து விழுந்து அதன் நறுமணத்தில் எனக்கு மூச்சடைத்தது.
அன்று நள்ளிரவில் எனக்கு விழிப்பு வந்தது. அம்மாவைப் போய் பார்க்கத் தோன்றியது. அம்மாவின் அறைக்கதவு சாத்தப்பட்டிருக்கவில்லை. மெல்லிய விளக்கொளியில் தலையணையை முதுகுக்கு கொடுத்தபடி வெண்ணிற நைட்டியில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
கண்களை கசக்கிக் கொண்டு கிட்டதட்ட அழும் குரலில் "ம்மா" என்றேன்.
சற்றும் அதிராமல் என்னை திரும்பிப் பார்த்து எப்போதும் போல உள்ளுக்குள் கனிவைத்தவிர வேறெதுவுமே இல்லை என்றுணர்த்தும் அதேசிரிப்பை எனக்களித்து "என்னடா குட்டி அம்மாகிட்ட படுத்துக்கிறியா?" என்று கட்டில் மெத்தையை தட்டினாள். நான் ஓடிச்சென்று படுத்துக் கொண்டேன். அன்றுமுதல் அம்மாவின் மென்மையான உடல் மணத்துடன்தான் உறங்கினேன். நான் உறங்கி பின்பும் அம்மா எழுந்து செல்லாதிருந்தாள்.
அம்மா இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எட்டு வருடங்கள் இருக்கலாம். அப்போது எனக்கு இருபது வயது நடந்து கொண்டிருந்தது. அதற்கு எட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே அம்மா என்னுடன் படுத்துக் கொள்வதை தவிர்த்துவிட்டாள். அம்மா என்னுடன் படுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு உயிருடன் இருந்த அந்த எட்டு வருடங்களும் அவளை மனரீதியாக துன்புறுத்திக் கொண்டே இருந்தேன். என்னுடன் படுத்துக் கொண்ட அந்த நான்கு வருடங்களில் எங்கள் சொத்து பல மடங்கு பெருகியிருந்தது. அதன்பிறகும் சொத்துகள் குறையவில்லை என்றாலும் அம்மா உழைப்பதை தவிர்த்துவிட்டாள். எந்நேரமும் எரிச்சலும் படபடப்பும் கொண்டவளாகவே இருந்ததால் அவள் உடல் அழகும் அவளைவிட்டு வழிந்து சென்றது. அவள் தன்னை பதற்றமில்லாமல் சமநிலையில் நிறுத்தி அவள் தோற்றத்தை பொலிவுறச்செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் சில நாட்கள் பலன் அளிக்கும். ஆனால் அது அவளாகவே உருவாக்கிக் கொண்ட சமநிலை என்பதால் என்னுடைய எளிய சீண்டல் கூட அம்மாவை மேலும் சமன்குலையச் செய்து அவளது உடலை உருக்குலைக்கும். அந்த விளையாட்டை அவள் உயிருடன் இருந்த எட்டு வருடங்களும் நான் ரசித்து விளையாடிக் கொண்டிருந்தேன். அம்மா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பட்டம் பெற்று ஏதோவொரு வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன்.
அம்மாவுக்கும் எனக்கும் ஏறக்குறைய பேச்சென எதுவும் இல்லாமல் போயிருந்தது. சிவந்த கிரானைட் பதித்த அகலமான கூடம் கொண்ட வீடு நாங்கள் வசித்தது. அப்பா இருக்கும் போதே கட்டி முடித்திருந்தார். முற்றத்தின் இருபுறமும் நிற்கும் தென்னை மரங்கள் அந்த வீட்டுக்கு இயல்பான கம்பீரத்தைக் கொடுக்கும். அவள் இறந்தவன்று வேலைக்குச் சென்று திரும்பியிருந்தேன். வண்டியை முற்றத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது கூடத்தின் மத்தியில் அம்மா குப்புறப்படுத்திருந்தாள். அவள் அப்படி விரிப்புகள் எதுவும் இல்லாமல் தரையில் படுத்துக் கொள்வது வழக்கம் தான் எனினும் ஒரு சிறு சத்தத்துக்கு கூட எழுந்து கொண்டு விடுவாள். அசைவில்லாமல் கிடந்தவளை தொட்டு உலுப்பினேன். முதலில் தொட்டபோதே அந்த உடலில் உயிர் இல்லையென்பது தெரிந்துவிட்டது. பிரக்ஞையில் அவ்வுடலின் உயிரின்மை குறித்த வலுவான தடம் பதிந்த உடனேயே என் கைகள் சோர்வுற்றுவிட்டன. நான் எதையோ எதிர்மறையாக கற்பனை செய்து கொள்கிறேன் என்று எண்ணி இரு கைகளாலும் அம்மாவின் தோளைப் பிடித்து திருப்பினேன். நரைகோடிட்டிருந்த முடிகள் முகத்தில் சரிந்து விழுந்தன. அம்மாவின் முகத்தின் வழக்கத்தை போல அல்லாமல் அழகாக இருந்தது.
என்ன செய்வதென்று புரியாமலேயே அம்மாவை தூங்கும் குழந்தையை தூக்கிச் செல்வவது போல அலுங்காமல் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்தேன். அந்தச் செய்கை அம்மா தூங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் என்ற நம்பிக்கையை அளித்தது. சமையலறை பாத்திரத்தின் சத்தம் கேட்டால் எழுந்து விடுவாள் என்று சமையலறைக்கு ஓடினேன். அங்கு வந்தது அம்மாவுக்கு காஃபி போடத்தான் என்று எண்ணியவனாய் பாலை எடுக்க ஃப்ரிட்ஜைத் திறந்தேன். பால் இல்லை என்பது மட்டும் தான் நினைவில் இருந்தது. கடைத்தெருவுக்குச் செல்ல வண்டியை எடுத்தவன் "பக்கத்துல போறதுக்கு கூட வண்டி தானா?" என்று அம்மா சொல்வது ஞாபகத்துக்கு வர நடந்தே கடைத்தெருவுக்குச் சென்றேன். அங்கிருந்த பெட்டிக் கடைகளில் அம்மா விரும்பும் பால் ரகம் இல்லை. இன்னும் ஒரு கிலோமீட்டர் நடந்து மஞ்சுளா அத்தையின் வீட்டில் பசும்பால் வாங்கி வந்தேன். கதவைத் திறக்கும் போது அம்மா எழுந்திருப்பாள் என்று மீண்டும் தோன்றியது. அம்மா தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். பாலைக் காய்ச்சி காஃபி போட்டுக் கொண்டு அம்மாவுக்கு அருகில் வந்தேன். அவள் நான் கிடத்திச் சென்றபடியே படுத்திருந்தாள்.
கட்டிலில் அம்மாவை சற்று தள்ளிப்படுக்கச் செய்து அவளது கொடுங்கையில் படுத்துக் கொண்டேன். அம்மா எவ்வளவோ மாறியும் ஏன் இப்போது இறந்தும் கூட அவள் புடவையின் வாசம் மாறியிருக்கவேயில்லை. ஆறுதலான அம்மாவின் மணத்தை அனுபவித்தபடியே தூங்கிப் போனேன். தூக்கத்தில் தான் அம்மா அன்று அணிந்திருந்தது என்னுடன் பேச்சை நிறுத்திய தினத்தன்று அணிந்திருந்த நீலப்புடவை என்று நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து அவள் இறந்துவிட்ட செய்தியை அத்தையிடம் ஃபோனில் சொன்னேன். அத்தை வருவதற்குள் அந்த நீலப்புடவை அவிழ்த்து சிவப்பு நிறப்புடவையை அம்மாவுக்கு அணிவித்து விட்டிருந்தேன்.
அம்மா என்னுடன் படுத்துக் கொண்ட அந்த நான்கு வருடங்களில் நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் மாணவனாக தேறினேன். பாட்டு நடனம் விளையாட்டு என்று அவ்வளவு உற்சாகம் கொப்பளித்தது அந்த நாட்களில் .அந்த நாட்களில் எனக்கிருந்த தன்னம்பிக்கையையும் என்னுள் நிறைந்திருந்த உருக்குலையாத மௌனத்தையும் இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஒருவேளை நான் அந்த நிலையிலேயே நீடித்திருந்தால் இன்று ரகசிய இச்சைகளாக என்னுள் திரிந்து போயிருப்பவை அனைத்துக்கும் நான் நேரடியாக பாத்தியதைப்பட்டவனாகி இருந்திருக்கலாம். ஆனால் என் எட்டு வயதுவரை நான் சராசரியாகவே இருந்தேன். அம்மா தன்னுடன் என்னை படுத்துக்கொள்ள அனுமதித்த அவ்விரவில் நான் மிகப்பெரிய ஒன்றை சம்பாதித்துவிட்டவனாக உணர்ந்தேன். நான் நிற்பதற்கான வலுவான தடம் கிடைத்துவிட்ட ஒரு உணர்வு தோன்றியது. எப்போதும் நினைத்து மகிழ ஒரு மனிதர் இருந்துவிட்டால் எதையும் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்துவிடும் இல்லையா. அம்மா எனக்கு அப்படி இருந்தாள். கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட இனிய பரிசுப்பொருள் போல. அம்மாவின் உலகில் எவ்வளவோ அலுவல்கள் இருந்தன. எனக்கும் அவள் நிறைய அலுவல்களைக் கொடுத்தாள். பியானோ கற்றுக் கொள்ளச் செய்தாள். பிரஞ்சு ஜெர்மன் என வெவ்வேறு மொழிகளைக் கற்பதற்கான பயிற்சியாளர்களிடம் என்னை அனுப்பினாள். அவளும் தன் அலுவல் வட்டத்தை பெரிதுபடுத்திக் கொண்டே இருந்தாள். நாங்கள் ஒன்றாக வீட்டிலிருக்கும் நேரங்கள் ரொம்பவும் குறைவாகவே இருந்தன. இனிமை குறைவானதாகவே இருக்க முடியும் என்று உணர்ந்து கொண்ட நாட்கள் அவை.
அம்மா என்னை பத்து மணிக்கு உறங்க அழைப்பாள். அம்மா என்னை அழைக்கும் விதத்தின் மீது ஒருவகை கவர்ச்சி எனக்கிருந்தது. அவள் கூப்பிடுவதை ரசிக்க வேண்டும் என்ற விருப்பத்திலேயே ஒவ்வொரு முறையும் அவள் அழைப்பதன் அழகை தவறுவிட்டுவிடுவேன். இருந்தாலும் அழைத்த உடனே ஓடிச்சென்று அம்மாவின் அருகில் படுக்காமல் இருந்ததில்லை. அம்மா எனக்கு உறங்கும் முன்பு கதைகள் சொல்வாள். அதாவது நான் உறங்கும் முன்பு. ஏதேனும் நூலினை வாசித்துக் கொண்டிருக்கும் தினங்களில் என் தலையையும் காது மடல்களையும் வருடியே உறங்க வைத்துவிடுவாள். அவள் வாசிப்புக்கு நானோ என் அருகாமைக்கு வாசிப்போ தடையாகாதபடிக்கு அம்மா பார்த்துக் கொண்டாள்.
அம்மா என்னுடன் படுத்துக் கொள்வதை தவிர்க்கத் தொடங்கிய நாள் இப்படித் தொடங்கியது. அன்று அம்மா வழக்கத்துக்கு மாறாக நீல நிறப்புடவை அணிந்திருந்தாள். வழக்கத்துக்கு மாறாக கூந்தலை முடியாமல் விட்டிருந்தாள். வழக்கத்துக்கு மாறாக பள்ளி செல்லும் வேனில் ஏறும் முன்பு எனக்கு முத்தம் கொடுத்தாள்.
அன்றைய தினத்தின் மதியம்வரை ஏதோ காந்தலை உள்ளுக்குள் உணர்ந்தபடியே இருந்தேன். அப்போது எனக்கு பன்னிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அவ்வயதுக்குரிய காரணமற்ற கோபங்கள் வரத்தொடங்கி இருந்தன. மதியம் எனக்கு ஜுரம் கண்டது. என்னை வீட்டில் கொண்டு விடுமாறு அம்மாவை தொடர்பு கொண்டபோது சொன்னதாக என் வகுப்பாசிரியர் சொன்னார். அம்மா என்னை வந்து அழைத்துப் போக வேண்டும் என்று அன்று ஏனோ முதல்முறையாக விரும்பினேன். ஆனால் அப்போதும் நான் அம்மாவை பார்க்க விரும்பவில்லை. வந்து அழைத்துச் செல்வது என்ற ஒரு செயலையே அவளிடமிருந்து எதிர்பார்த்தேன். வீட்டில் அம்மா இருக்கலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போனது.
தனியாகவே புறப்பட்டு அம்மாவின் அலுவலகத்துக்கு சென்றேன். அலுவலகத்துக்கு முன்னே ஒரு சிறிய கோவிலுண்டு. ஏதோவொரு மனவுந்தத்தால் கோவிலுக்குள் நுழைந்தேன். நீலநிறப்புடவை அணிந்த என் அம்மா கண்களில் கண்ணீர் வழிய இன்னொரு ஆணின் தோளில் சாய்ந்திருந்தாள். அவன் அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
அன்று அம்மா என்ன சொல்லியிருப்பாள் என சுசித்ரா என் தோளில் சாய்ந்து அழுதபோது என்னால் உணர முடிந்தது. நான் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை.
Comments
Post a Comment