முன்னுரை - எஞ்சும் சொற்கள்

கிழக்குப் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் என் இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கான முன்னுரை

கரைசேர்ந்தவை

பியோதர் தஸ்தாவெய்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து செப்டம்பர் 2017ல் என் தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரை வெளியான அன்றே எழுத்தாளர் கே.என்.செந்தில் அலைபேசியில் தொடர்பு கொண்டார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் என நான் எண்ணும் ஒருவர் அழைத்துப் பேசுவது மிகுந்த மனநிறைவை கொடுத்தது. அதோடு இலக்கியம் குறித்த கறாரான மதிப்பீடுகள் கொண்ட ஒருவரிடம் பேசுவதால் ஏற்படும் மெல்லிய பதற்றமும் அவ்வுரையாடலின் போது இருந்தது. கபாடபுரம் இதழுக்காக ஒரு சிறுகதை அல்லது கட்டுரை எழுத வேண்டும் என கே.என்.செந்தில் கேட்டார். என் அலுவலகத்தில் தோழி ஒருவருக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் மனதின் ஒரு மூலையில் அப்போது கதை வடிவம் கொள்ளத் தொடங்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சில வாரங்களில் கதையை எழுதி அனுப்புவதாக ஒப்புக் கொண்டேன். அதன்பிறகே ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தை அதுவரை கதையாக்கியதில்லை என்பதும் நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர் என்னிடம் இப்படியொரு கோரிக்கையை வைத்ததில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இப்படியான சில சிறு சவால்களுடன்  இத்தொகுப்பின் முதல் கதையான வீதிகளை எழுதினேன் . 




நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பு வெளியாவதற்கும் வீதிகள் கதை எழுதப்படுவதற்கும் இடையேயான மாதங்களில் நான் எழுதிய சிறுகதைகளின் மீதான ஆழ்ந்த சந்தேகங்களை வீதிகள் ஏற்படுத்தியது. வீதிகளுக்குப் பிறகு எழுதிய கதைகளே இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.அக்டோபர் 2017ல் இருந்து ஏறக்குறைய ஓராண்டு இடைவெளியில் இக்கதைகளை எழுதியிருக்கிறேன். வடிவம் உத்தி போன்றவற்றின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்துகிறவன் என்று நான் அறியப்படுவதாக நண்பர்கள் சொல்லும்போது புன்னகைக்கவே தோன்றுகிறது. அவர்களுக்கு எப்போதும் தரும் உறுதிமொழியை இந்த முன்னுரையிலும் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். வடிவத்திற்கென மெனக்கெடுவதோ கதையை எழுதிய பிறகு "சிதைத்து" வடிவப்புதுமைகளில் ஈடுபடுவதோ என் எழுத்துமுறை அல்ல. மேலும் எழுதப்பட்டுவிட்ட ஒரு கதையை எழுத்துப்பிழைகளை பொருள் மயக்கங்களை சரிசெய்வதைத் தாண்டி மேம்படுத்திவிட முடியும் என்பதிலும் எனக்குப் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால் வடிவச்சிதைவு என்பது சிறுகதையின் இயல்பான பரிணாமமே. வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்க்கோட்டினை கற்பனை செய்து அதன்படியே வாழக்கூடிய வரம் பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படி கிடைக்காதவர்களில் ஒருவனின் அல்லது நேர்க்கோடு என்பதன் மீது தீராத சந்தேகங்கள் கொண்ட ஒருவனின் எழுத்தாகவே என் எழுத்தினை அடையாளப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.  

முழுமையாக யதார்த்த தளத்தில் இயங்கும் எஞ்சும் சொற்கள்,பரிசுப்பொருள்,வீதிகள் போன்ற கதைகளை தொடக்கத்திலும் அபி,ஆழத்தில் மிதப்பது,வரையறுத்தல் போன்ற வடிவச்சிதைவு கொண்ட கதைகளை ஒரு கட்டத்திலும் எழுதியிருந்தாலும் இத்தொகுப்பில் உள்ள கதைகளின் இயங்குதளம் எப்படியானது என்று என்னால் வரையறுத்துக் கொள்ள இயலவில்லை. எழுத்தாளனின் வேலை அது இல்லை என்றாலும் கூட இத்தொகுப்பில் உள்ள புனைவுகளை சரியாக வரையறுத்து நிறுத்தும் விமர்சகனுக்காக மெல்லிய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்!

என்னளவில் என் புனைவுலகை சற்று புனைவுத்தன்மையுடன் இவ்வாறாக வரையறுத்துக் கொள்கிறேன்.  உடைமைகள் அனைத்தையும்  கடற்சீற்றத்தில் இழந்து உயிர்தப்பி கரையில் அமர்ந்திருக்கும் ஒரு வணிகனைப் போல கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன். அலைகள் கொண்டு வந்து கரைசேர்க்கும் உடைமைகளின் மிச்சங்கள் போல இக்கதைகள் என்னிடம் வந்து சேர்கின்றன. பயன்படுத்த முடியாதவை விற்க முடியாதவை. முன்பும் இவை என்னுடன் இருந்தன.  நான் இவற்றுக்கு ஒரு பொருளை கற்பித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு சீற்றத்தில் சிக்கித் தப்பியபின் இப்பொருட்கள் முழுமையாக வேறுவகையாக பொருள்படுகின்றன. முன்பிருந்தது போல அல்லாமல் கற்றுக் கொண்டவற்றின் பெற்றவற்றின் இழந்தவற்றின் சாட்சியங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திரும்பி வந்திருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு கற்பித்தன. என்னை எனக்குக் காட்டித் தந்தன. இக்கதைகளுக்கென இவ்வருடத்தில் வந்த வாசக எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது இக்கதைகள் பலருடன் உரையாடியிருப்பதை உணர முடிகிறது. அத்தகையதொரு உரையாடலின் முழுவடிவமாகவே இத்தொகுப்பினை நான் காண்கிறேன்.  



இக்கதைகள் வழியாக என்னுடன் உரையாடிய எழுத்தாளர்கள்,வாசகர்களை இங்கு குறிப்பிட்டால் அதுவே ஒரு நீண்ட பட்டியலாகிவிடும். அவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும். பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற கதைகளை எழுதிய போது என்னைக் கண்டித்து எழுதும் போது இருக்க வேண்டிய பொறுப்பான மனநிலையை எனக்கு உணர்த்திய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. இத்தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்ட கபாடபுரம்,சொல்வனம்,காலச்சுவடு,வல்லினம் இதழ்களுக்கு நன்றி. வெளியிடும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி. 

சுரேஷ் பிரதீப் 

04.12.2018

சமர்ப்பணம் 

எழுத்தாளர் அசோகமித்திரனின் நினைவுக்கு

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024