வீதிகள் - கடிதம்
அன்பின் சுரேஷ்
இரண்டு நாட்களுக்கு முன்னர் ”வீதிகள்” வாசித்தேன். ஒருமுறை வாசித்தபின்னர், கதைக்குள் எதையோ தவறவிட்டது போலிருந்தது, இன்று அடுத்த வகுப்பிற்கான இடைவெளியில் மீண்டும் வாசித்தேன். கொங்குபிரதேசத்தில் கேள்விப்பட்டிராத ஊர்களின் பெயர்களினாலேயே புதியதாய் ஒரிடத்திற்கு செல்லும் கிளர்ச்சியை பதட்டத்தை எப்போதுமுங்கள் எழுத்து உருவாக்கும். இதிலும் அப்படியே! அறிமுகமான இடங்களின் பரிச்சயத்தன்மையினாலும் சில எழுத்துக்களுடன் அணுக்கமுண்டாகும் எனினும் நீங்கள் எழுதுகையில் அந்த கதையுடன் ஒன்றி புதியதோர் இடத்தில் புதிதாக எனக்கே அவை நிகழ்வது போல உணர்வேன்.
உறவுக்காரியான ,சம வயதிலிருக்கும், இன்னும் மணமாகாத பிரவீணாவுக்கும், காதல்திருமணமும்,அன்னையுமாகிவிட்ட அனிதாவுக்குமான அகப்போராட்டத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு ஆச்சர்யமென்னவென்றால் இது பிரத்யேகமாய் பெண்களுக்கான ஒரு உளச்சிக்கல். இதை எப்படி நீங்கள் உள்ளபடிக்கே உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் என்பதுதான்.
அம்மா அப்பாவிடம் , மனதிலிருக்கும் குழப்பங்களையும் அசெளகரியங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளும் வாய்பில்லாத லட்சக்கணக்கான பதின்பருவப்பெண்களில் ஒருத்தி பிரவீணா. மகளின் ஒழுக்கத்திற்கு, நற்பெயருக்கு பங்கம் வந்துவிடகூடாதென்னும் அம்மாவின் அதீத கண்டிப்பை அம்மாவின் வன்மமெனக்கொள்கிறாள் பிரவீணா.
சொந்தக்கால்களில் சுயமாக நிற்கத்துவங்கியதும் வன்மத்தை இயன்றவரையிலும் கடுமையாக திருப்பிக்கொட்டுகிறாள் அம்மாவின் மீது. தாவணி காற்றில் பறக்க சைக்கிளில் செல்லும் சங்கடத்தை அப்பாவிடமும், சுடிதாராக இருந்தால் மாட்டிக்கொண்டு உடன் பள்ளிக்கு கிளம்பலாம், தாவணி அதுவும் சைக்கிளில் செல்வதால் கவனமாக உடுத்திக்கொள்ள கூடுதல் சமயமாகும் என்பதை அம்மாவிடமும் சொல்லத் தயங்கிய அவளுக்கு வேலைக்கு சென்றதும் பனியனுடன் வீட்டில் இருக்கும் தைரியம் வந்துவிடுகின்றது.
அவளின் தங்கை இப்போது பதின்பருவத்தில். வீடு பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமலிருக்கையில் பிரவீணா பெரிதும் மாறிவிட்டிருக்கிறாள். அந்த மாற்றத்தை பிறருக்கு தெரியப்படுத்தும் ஆவலும் கொண்டிருக்கிறாள், மேலும் பள்ளிக்கால நினைவுகளை முடிந்தவரை மறக்கவே விரும்புகிறாள்.
பள்ளியில் படிக்கையில் ஒருபோதும் சென்றிராத சாலைச்சுழல்களுக்குள் இப்போது வேண்டுமென்றே செல்கிறாள். அம்மாவின் கண்டிப்பு நிறைந்த வீட்டிலிருந்து தப்பித்து, வேலைக்கு வெளியூரில் போய் இருந்தாலும் அவளுக்கு அங்குமிருக்கும் ஒன்றேபோலான அவ்வாழ்வு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. மனம் புதிதாய் ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறது ஏதோ ஒன்று அரிதாக புதிதாக பரவசமளிப்பதாக நிகழனும் என அவள் மனம் விரும்புகிறது, காத்துக்கொண்டுமிருக்கிறது.
நுணுக்கமாக விடுமுறைக்கு வரும் போதெல்லாம் மகள்களை, சோதிக்கும் அம்மாக்களையும் நானறிவேன். மாதாந்திர விலக்கு சரியாக இருக்கிறதா என்பதை பலவகையிலும் அம்மாக்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வேலை கொடுத்திருக்கும் சுதந்திரத்தை மகள் எத்தனை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்னும் பதட்டத்துடன்தான் பெரும்பாலான மத்தியதர குடும்பத்து பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
வெளியூருக்கு வேலைக்குச்செல்லும் வாய்ப்புகளற்ற அவ்வாழ்வு குறித்தான அறியாமையினால் அலைக்கழிக்கப்படும் அம்மாக்கள் மகள்களிடம் நேரடியாக கேட்கமுடியாத கேள்விகளால் நிறைந்து ததும்பியபடியேதான் இருக்கிறார்கள்.
இதை வாசிக்கையிலும் எனக்கு எப்படி சுரேஷ் இதை எழுதினார் என்று தோன்றியது.
திருமண வயதில் திருமணத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் பெண்களின் மனநிலை இப்படித்தான் இருக்கும். திருமணத்திலும் பெரிதாக ஒன்றுமில்லை வாணலிக்குத்தப்பி அடுப்பில் விழுந்த கதைதானென்பதை மணமானபின்னரே தெரிந்துகொள்ள முடியும் அனிதா தெரிந்துகொண்டதைப்போல!
ப்ரவீணா, அனிதாவை பார்க்கவும் தவிர்க்கவும் ஒரேசமயத்தில் விழைகிறாள் பார்த்தும் விடுகிறாள்.
அனிதாவை அழகாக விவரித்திருக்கிறீர்கள். புதிதாய் திருமணம் , அந்தப்பூரிப்பு குடும்பத்தை எதிர்த்து செய்துகொண்ட காதல் திருமணம், அந்த குற்ற உணர்வு, இளம் அன்னைக்கான குழப்பமான மனநிலை, என அவளை சரியாக, அழகாக காட்டியிருக்கிறீர்கள்.
//எந்நேரமும் பேசும்போது இந்தஉறையை கழற்ற முடிவதேயில்லை.ஒரு அழுகைக்கோ புணர்வுக்கோ முன் மட்டும் வார்ததைகள் சற்றே உறைகளை கழற்றிக்கொள்கின்றன. அப்படிகழற்றியதற்காக அஞ்சி வெட்கி மீண்டும் மீண்டும் மேலும் மேலும் உறைகளை அணிந்துகொள்கின்றன.//சுரேஷின் signature வாக்கியங்கள்! Loved this.
காதல் திருமணமும் அன்னைமையும் குடும்பச்சிக்கல்களுமாய் ஒரு கணத்தில், துடிக்கும் உதடுகளும் தேங்கியிருக்கும் அழுகையுமாக, இன்னும் மணவாழ்வென்னும் சுழலில் சிக்கிக்கொள்ளாத , இளமையும் அழகும் கொஞ்சமும் குறையாத, சுதந்திரமாக வேலைசெய்துகொண்டிருக்கும் பிரவீணாவெனும் தோழியின் முன் கீழிறங்கிய அனிதா அடுத்த கணம் தன்னைச்சுதாரித்துக்கொண்டு, அந்த பலஹீனங்களை சாமர்த்தியமாய் குடும்பத்தலைவி, காதல் மனைவி, அன்னை என்னும் போர்வைக்குள் புகுந்துகொண்டு மறைப்பதும், தன்னைவிட பொருளாதார நிலையில் கீழிருந்த அதே பள்ளிக்கால பிரவீணாவை, பிரவீணாவின் முன்னேயே கொண்டு வந்து நிறுத்தியதுமாய், வாசிக்கும் நமக்கும் "என்ன சாமார்த்தியம்!" என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த உரையாடலையும் அப்போதான இருஇளம்பெண்களுக்கிடையேயான நுண்ணிய மனப்போராட்டங்களையும் அருமையாக அமைத்திருக்கிறீர்கள்.
முலையூட்டிக்கொண்டிருக்கும் மனைவியைக்காணும் ஆசையின் கண்களில் இருந்த பரிவும் அன்பும் பிரவீணாவென்னும் இளம்பெண்ணை பொறாமை கொள்ள வைக்கும் இயல்பான ஒன்றை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். 25 வயதில் முனைவர் பட்ட ஆய்வில் மும்முரமாக இருந்தபொழுது பல தோழிகளின் தோழர்களின் திருமணத்திற்கும் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில் இதை நானும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். போகனுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போரட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பேன். பிறந்த அந்தக்குழந்தையும் இளம் அன்னைக்கான சிறப்புக்கவனிப்பும் பலநாட்கள் என உறக்கத்தை கெடுக்கும். சிசுக்களின் இளஞ்சிவப்பு பிஞ்சுக்கால்களும். இறுக்க மூடிக்கொண்டிருக்கும் குட்டிக்குட்டி விரல்கலுடனான கைகளும் கொழுகொழு கன்னங்களும் அங்கிருக்கும் ஒரு வாசனையுமாக என்னை பலநாட்களுக்கு எந்த வேலையையும் செய்யவிடாமல் தொந்தரவு செய்திருக்கிறது. ஒரு தோழியின் காதல் திருமணத்திற்கு சென்று திரும்பியபின்னர் காரணமின்றி இரவெல்லாம் அழுதும்கொண்டிருந்தேன். நேரெதிராக மணப்பெண்கள் கொஞ்சநாட்களுக்குப்பிறகு எதேச்சையாக என்னை எங்காவது காண நேர்கையில் ஏக்கமாக பார்ப்பதும் மிகைப்படுத்தபட்ட பூரிப்பை உடல்மொழியில் காட்டியதையும் இப்போது நினைத்துக்கொண்டேன்.
//துயராக உறைந்த ஒரு வன்மத்தை// அருமை!
கதையின் இறுதிப்பகுதியில் பிரவீணாவின் வரவழைத்துக்கொண்ட துணிவும், அனிதாவின் செயற்கையான செயல்களுமாய் , இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நுட்பமாய் புண்படுத்துவதும், அகநடிப்பும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. வெகுநாட்களுக்கு மறக்கமுடியாத உங்கள் கதைகளின் பட்டியல் விரிவடைந்துகொண்டே போகின்றது சுரேஷ்
அன்புடன்
லோகமாதேவி
Comments
Post a Comment