உருமாற்றம் - அருளப்படாத மீட்பு

நிறுவனத்தில் பணமோசடி செய்து தப்பிவிட்ட க்ரகர் சேம்சாவின் மனசாட்சியாக அந்தக் கரப்பான்பூச்சியை உருவகித்தால் அவனை நம்மால் மேலும் நன்றாக அணுகி அறிய முடிகிறது. கரப்பானாக மாறிய அவனை அவன் தந்தை மிரட்டி அறையில் போட்டு அடைக்கிறார். அவன் அன்னை அன்றாடத்தில் ஏற்படும் எதிர்மறை சலனங்களை தாங்கிக் கொள்ள இயலாதவளாக மகனின் நிலையை எண்ணி செயலற்றுப் போகிறாள். சேம்சாவின் தங்கை மட்டுமே அருவருப்படைந்தாலும் தன் சகோதரனை நெருங்குகிறாள். அருவருப்பான அவனை நெருங்குதல் என்ற தியாகத்தை செய்வதன் வழியாக தன் குடும்பத்தில் தனக்கு என்றுமில்லாத ஒரு அதிகாரம் உருவாகி வருவதை ரசிக்கிறாள். க்ரகர் சேம்சா தன்னை (அல்லது தன்னைப் பற்றிய தன் குடும்பத்தின் நினைவை) ஏன் ஒரு அருவருப்பூட்டும் (யூதர்களுக்கு) கரப்பானாக கற்பனை செய்து கொள்கிறான் என்ற கேள்வியின் வழியாக இக்குறுநாவலை அணுகலாம் என நினைக்கிறேன்.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் அப்பா. கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் அம்மா. சிறுமியான தங்கை. இந்த மூவரையும் காக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு சமூகம் ஒத்துக் கொள்ளும் ஒரு மரியாதையான வாழ்க்கையை வாழப்போராடும் பயந்த சுபாவம் கொண்ட நல்ல இளைஞனாக க்ரகர் சேம்சா இருக்கிறான். தன் தங்கையை இசைப்பள்ளிக்கு அனுப்ப விழையும் அன்பான அண்ணனாகவும் குடும்பத்தை கடன்களில் இருந்து மீட்க நினைக்கும் பொறுப்பான மகனாகவுமே அவன் இருக்கிறான். அப்படிப்பட்ட ஒருவன் ஒரு மனித உடல் அளவிலான அருவருக்கத்தக்க கரப்பானாக மாறி படுக்கையில் இருந்து எழ முடியாமல் சிரமப்படுவதுடன் உருமாற்றம் தொடங்குகிறது. சேம்சா கரப்பானாக மாறியவுடன் அந்த குடும்பத்தின் அமைப்பே மாறிவிடுகிறது. விட்டேற்றியாகத் திரிந்த அப்பா வேலைக்குச் செல்லத் தொடங்குகிறாள். அம்மாவுக்கும் தங்கைக்கும் அவனை கவனித்துக் கொள்வதற்கான பொறுப்பு கூடுகிறது. அப்படியொரு கரப்பான் தன் வீட்டில் இருப்பது ஊருக்குத் தெரிந்தால் தங்களுக்கு ஏற்படப்போகும் அவமதிப்புக்கு அஞ்சி அக்குடும்பம் சுமந்தாக வேண்டிய கூடுதல் பொறுப்புகளுடன் தன் நாட்களை கழிக்கிறது. அருவருக்கத்தக்கவனாக தன்னை உணரும் சேம்சா ஒவ்வொரு கணத்தையும் வலியுடனும் பயத்துடனும் கழிக்கிறான். அவன் தங்கை மட்டுமே அவன் மீது சற்று விசேஷ அக்கறை எடுத்துக் கொள்கிறாள். அக்குடும்பத்துக்கு தங்களுடைய அன்றாடமே சிக்கலாகிய பிறகு சேம்சா ஒரு தொல்லையாக மாறுகிறான். ஒரு எல்லையில் அக்குடும்பம் கரப்பானாக மாறிய அவனைக் கைவிடவும் துணிகிறது. அவனை அத்தனை நாள் பொறுத்துக் கொண்ட அவன் தங்கை தன் பெற்றோரிடம் இப்படிச் சொல்கிறாள்.

"இந்தப் பூச்சிதான் க்ரகர் என்ற எண்ணத்திலிருந்து விடுபட நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீண்டகாலம் நாம் அப்படி நம்பியதே நம் துன்பத்துக்கு அடிப்படை. அது எப்படி க்ரகராக இருக்க முடியும்?  அது க்ரகராக இருந்திருந்தால் மனிதர்கள் இந்த மாதிரியான பூச்சியுடன் வாழ முடியாது என்பதை அப்போதே உணர்ந்து அவனாகவே எங்காவது போயிருப்பான். அதற்குப் பிறகு நமக்கு சகோதரன் இருந்திருக்க மாட்டானேயொழிய நாம் தொடர்ந்து வாழ்ந்து அவனுடைய நினைவை கௌரவத்துடன் போற்றியிருப்போம்."

க்ரகரை அக்குடும்பம் கைவிட முடிவெடுப்பது இந்தப் புள்ளியில்தான். அவனும் அன்றிரவே பரிதாபகரமாக செத்துப் போகிறான். முன்பே சொன்னது போல இறப்பது கரப்பானாக மாறிய க்ரகர் அல்ல. அக்குடும்பத்தின் சமநிலையை குலைத்துவிட்ட அவன் நினைவு அவனிடமிருந்தே இறக்கிறது. யதார்த்தத்தில் இந்த நாவலில் நாம் க்ரகரின் குடும்பத்தை சந்திக்கவே இல்லை என்பதே இதனை துயரார்ந்த படைப்பாக மாற்றுகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிய க்ரகரால் அவன் குடும்பம் அடைய நேரும் சாத்தியமான துயரின் உச்சங்களை அருவருக்கத்தக்க கரப்பானாக தன்னை உருவகித்து கற்பனை செய்து கொள்ளும் க்ரகரின் வழியே அறிய நேர்கிறது.

அவன் ஏன் தன்னை கரப்பானாக உருவகிக்கிறான் என்பதே இக்கதையின் முக்கியமான இடம். க்ரகர் உண்மையில் எந்தவித நாயக எதிர்நாயகச் சாயலும் இல்லாத அன்றாடங்களில் புழங்கக்கூடிய மிகச்சாதாரணன். மிகச் சாதாரணமானவர்களின் பிறழ்வுகளை சமூகம் என்னவாக பார்க்கிறது என்பதற்கான பதிலே அந்த கரப்பான் என்கிற உருவகம். அது அஞ்ச வைக்கும் நாகமோ மிரள வைக்கும் சிங்கமோ அல்ல. பார்த்தவுடனேயே அருவருத்து நசுக்கிக் கொன்றுவிடத் தூண்டும் கரப்பான். க்ரகர் தன்னை அந்த கரப்பானுக்குள் அடைக்கலமாக்கிக் கொண்டு தன்னை எவ்வளவு இயலுமோ அவ்வளவு தாழ்த்திக் கொண்டு அக்கரப்பானின் வழியாக அவன் பிறழ்வினை நம்மிடம் எடுத்து வைக்கிறான். உண்மையில் ஆற்றலற்றவனின் பிறழ்வு என்பது நம்முள் கோபத்தை தூண்டுவதில்லை. அருவருப்பையே தூண்டுகிறது. அந்த அருவருப்பின் உருவகமாகவே க்ரகர் இந்த நாவலில் வருகிறான். அவனுடைய எதிர்ப்பில்லாத மரணம் நம்மை தொந்தரவு செய்ய வேண்டும் என்று அவன் எண்ணுவதற்கும் அவன் குடும்பம் அவப்பெயர் தேடித்தந்த அவனை முற்றாக மறந்து மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணுவதற்கும் அவனது குற்றவுணர்வே காரணமாகிறது. க்ரகரின் சிக்கல் தன்னை ஆற்றலற்ற நல்லவனாக உணர்வதே. அவன் நிறுவனத்தின் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக தலைமை எழுத்தர் வந்து பூட்டப்பட்ட அவன் அறைக்கு வெளியே நின்று சத்தம் கொடுக்கும் போது அந்த அறைக்குள் கரப்பானாக உருமாறி எழுவதற்கே போராடுகிறான் க்ரகர். அந்த அறைக்கு வெளியே இருப்பவர்களை அறைக்குள் வரவேற்பது க்ரகரின் இன்மையே. அந்த இன்மையைத்தான் க்ரகர் கரப்பானாக உருவகிக்கிறான். சாதுவான துணிச்சலற்ற இளைஞனான க்ரகர் தான் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியதும் அனைவர் மனதிலும் அருவருப்பையே தூண்டுவோம் என்று கற்பனிப்பதும் அவனுக்கு வாழ்விலிருந்த ஒரு பிடிப்பான அவன் குடும்பம் என்ன ஆகும் என்று அவன் எண்ணிப் பார்ப்பதுமே இந்த நாவல்.

துயரை ஏற்படுத்தும் இந்த நாவலின் முடிவில் க்ரகர் இல்லாத அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது என்ற ஆசுவாசத்தை தகர்ப்பது இவை அனைத்தும் க்ரகரின் கற்பனை என்ற சாத்தியமே. க்ரகர் கரப்பானாக மாறிய பிறகு பொறுப்பானவராக பணி புரியத்தொடங்கும் அப்பா வீட்டை மீட்கப் போராடும் அம்மா மற்றும் தங்கை போன்ற நேர்மறைகள் அனைத்தும் இந்த நாவல் முன்வைக்கும் துயருக்குப் பின்னே இன்னும் பெரிய துயர் இருக்கலாம் என்ற அனுமானத்தை நம்மிடம் ஏற்படுத்துகின்றன.

இறுதியாக அர்த்தமும் அறமும் அற்ற யதார்த்தத்தை ஒரு துயர் கற்பனையின் வழியிலாவது கடந்து செல்லலாம் என்று எண்ணும் வாசகனிடம் அதற்கும் உனக்கு வழியை நான் கொடுக்கப் போவதில்லை என்று காஃப்கா சொல்வதாகவே தோன்றுகிறது. புனைதல் நம்மை எதிலிருந்தும் மீட்கப் போவதில்லை என்பதை ஒரு புனைவின் வழியாகவேச் சொல்வது சிகரெட் பாக்கெட்டில் புற்றுச் செல்களை பார்ப்பதைப் போல ஒரு அபத்தமான சிரிப்பை வரவழைக்கிறது.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024