வீதிகள் சிறுகதை - வாசிப்பனுபவங்கள்
சுரேஷ் பிரதீப் அவர்களின் " வீதிகள் " சிறுகதை குறித்து ஒரு பார்வை :
பிரவீணா, அனிதா என்ற இரு பெண்களுக்குள்ளாக நிகழும் தன்முனைப்பு (Ego) , மனவிகல்பம்,பொறாமை, இருவரில் யார் வாழ்க்கை நிறையானது, யார் பெரியவர் என மனம் எழுப்பும் பெண்களின் ஆழ்மன உளவியலைப் பேசுகிறது இச்சிறுகதை .பிரவீணா ஜி.ஆர்.எம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு பள்ளி சீருடை என்பது பச்சைக் கலர் தாவணி. பிரவீணா உறவுக்கார பெண் அனிதா வேலுடையார் பள்ளியில் படிக்கிறாள்.அவளுக்கு பள்ளி சீருடை சுடிதார்.அனிதாவின் அம்மா ஒரு பள்ளி தலைமையாசிரியர். பிரவீணா பள்ளிக்கு கிளம்பும்போது அவளது அம்மா ,அனிதாவும் உன்னை மாதிரி தானடி படிக்கிறா அவள் இப்படி உன்ன மாதிரி சீவி சிங்காரிக்கிறாளா? என பிரவீணாவுக்குள் இருக்கும் வெறுப்பை, பொறாமையை அனிதா நோக்கி ஊதி பெருக்குகிறாள்.இந்திய மரபில் நடுநிலைக் குடும்பத் தாய்கள் தங்கள் பெண் பிள்ளைகள் கெட்டுவிடக் கூடாது என கண்டிப்பதாய் நினைத்து பிள்ளை மீது வெறுப்பை கக்குகிறார்கள். இச்சமூகம் பெண்கள் மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கும் ஒழுக்கம் எனும் கோட்டையில் ஓட்டை ஏதும் விழுந்துவிடக் கூடாது என்பதே நிறைய தாய்களின் பயத்திற்கு காரணம்.
இந்தியாவில் தான் பெண்கள் ஒரு சுதந்திரமற்ற கட்டுப்பாட்டில் வளர்க்கப்படுகிறார்கள். காற்றடிக்கும் காலத்தில்தான் தாவணியில் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது சிரமமாக உள்ளதால் தன் தந்தையிடம் கூறி தன்னை பதினொண்றாம் வகுப்பு வேலுடையார் பள்ளியில் சேர்க்க சொல்கிறாள். ஆனால் அது நிறைவேறாமல் பணிரெண்டாம் வகுப்பு முடியும் வரை பச்சைத் தாவணியிலேயே படித்து முடிக்கிறாள். பிரவீணாவுக்கு அனிதா படிக்கும் பள்ளி, அவள் டீச்சர் மகள், தன்னை விட பணக்காரி போன்ற வேறுபாடுகள் அனிதா மீது வெறுப்பையும், மன விலக்கத்தையும் அவளுக்குள் உண்டு பண்ணி விடுகிறது. படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்த பிறகு இரண்டு வருடம் கழித்து வீட்டுக்கு வரும் பிரவீணா தன் தாய் மீது கடுமையை காட்டுகிறாள்.ஒரு தருணத்தில் பிரவீணா,அனிதா வீட்டை கடக்கும் போது அனிதாவை சந்தித்து பேசுகிறாள். அப்போது அனிதாவுக்கு ஆசை என்கிற தன் பள்ளி சீனியருடன் காதல் கல்யாணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பையன் உள்ளதையும், இருவரும் திருச்சியில் வேலை செய்வதையும்,வீட்டின் எதிர்ப்பு மீறி திருமணம் செய்ததால் அனிதாவின் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்ததை எல்லாம் பிரவீணா அறிந்து அனிதா மீதான அவள் வெறுப்பு உடைந்து கனிவடைகிறது அவள் மனம். கனிவடைய காரணம் தன்னை விட உயர்ந்தவள், தனக்கு சமமாக வைக்கப்பட்டவளின் விழ்ச்சியில் பிரவீணாவின் உள்மனம் எழுச்சி கொள்கிறது.அனிதாவின் சறுக்கலில் ஒரு உள் மன சந்தோஷத்தை உணர்கிறாள் பிரவீணா .தன் மகனுக்கு நாளை மொட்டை அடிக்கிறது, நீ வரணும் என அனிதா, பிரவீணாவை கூப்பிடுகிறாள்.மறுநாள் பிரவீணா, அனிதாவின் வீட்டுக்கு வருகிறாள். அப்போது அனிதா துயராக உறைந்த வன்மத்தை உதட்டில் தேக்கி புன்னகையாக பிரவீணாவை நோக்கும் போது பிரவீணா உள்ளுக்குள் நடுக்கம் கொள்கிறாள்.பிரவீணா இரு உலகங்களில் வாழ்கிறாள்.உள் மன உலகத்தில் ஒன்றை வைத்தும், வெளியில் பாவனைகளுடனும் வாழ்கிறாள். அனிதாவின் மாமியார் பிரவீணாவை அணுகி மீன், கறியெல்லாம் சாப்டுவியா, இவதான் எதுவும் சாப்பிடுவதில்லை எனும் போது கடுமையான வார்த்தைகளில் உங்கள யாரு கூப்பிட்டா இங்க.அவ உங்க வீட்டு கறி திங்கத்தான் வந்தாளா, என் வாழ்க்கை இங்க சீரழிந்தது பத்தாது என்று என் தங்கச்சி வாழ்க்கையும் அழிக்கனுமா?உன்ன யார்டி கூப்பிட்டா? நான் செத்தா கூட நீ வரக்கூடாது என கடுமையாக பேசிவிட்டு தலையில் அய்யோ அய்யோ என அடித்துக் கொள்ளும் போது ஆசை அவளை சமாதானப்படுத்த ,பிரவீணா அவர்களை கடந்து வீட்டுக்கு போயி படுத்துக் கொண்டு சத்தமாக அழ வேண்டும் போல் இருக்கிறாள்.வீதி அவள் முன்னே முடியாமல் பரந்து கிடந்தது என கதை முடிகிறது.அனிதா தன் மாமியாரை கடிந்து பேசியது மாமியாரை அவமதிக்கவா இல்லை பிரவீணாவை அவமதிக்கவா? ஏனெனில் அனிதா வீட்டை மீறி காதல் கல்யாணம் செய்து குடும்பத்தை இழந்ததில் தனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி சர்பம் போல் நெளிவதை பிரவீணாவிடம் காட்டுகிறாள். தனக்கு ஒரு நிறைவில்லாத தோல்வியான வாழ்வு அமைந்து விட்டது,தான் பிரவீணா முன் ஒரு தோற்றுவிட்ட ஒரு துயரம் என அனிதா உணர்வதால் பிரவீணாவுக்கு ஆதரவாக பேசுகிறாளா என எனக்கு புரியவில்லை.அதே போல் அனிதா மீது பிரவீணா கொண்டுள்ள அந்த கர்வம், வெறுப்பு உடைந்து அது அழுகையாகிறதா என்பதும், இங்கே எல்லா பெண்களின் வாழ்வும் சுதந்திர மற்ற ஒரு சுமையாகவே உள்ளதை அவள் அழுகை உணர்த்துகிறதா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் பெண்களின் அக உலகம் அர்த்தம் காண முடியாத வார்த்தைகளால் நிரப்பப்பட்டது.அவர்களின் மன வீதி ஒரு முடிவற்ற வடிவம், சிக்கல்கள் கொண்டது.
வேலு மலையன்
சுரேஷ் பிரதீப் ன் வீதிகள் சிறுகதையை முன்வைத்து : இக்கதையை நேரிடையாக இரு பெண்களின் நுட்பமான காரணமற்ற மோதல் என எடுத்துக் கொள்ளலாம் ஆனால் கதையின் ஆழ்மன உளவியலுக்கு செல்லும்போது கலவி, குழந்தை பெறுவது பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்கு மட்டும்சமூகத்தால் பயன்படுத்தப்படும் இரண்டு பொம்மைகளின் ஆழ்மன பெரும் பள்ளங்களை கொண்ட கையறு நிலையே,அதன் உள் கதை எனத் தோன்றுகிறது .ஒரு வகையில் இன்று உள்ள ஒட்டுமொத்த பெண்களின் நிலை என்றும் கூறலாம். பிரவீணாவின் பள்ளி காலத்தில் அனிதாவை முன்னுதாரணம் காட்டி வெறுப்பை கக்கும் அம்மா அவள் சம்பாத்திக்கும் காலத்தில் வாய் மூடி பணிவிடை புரியும் இடத்திற்கு வந்து சேர்கிறாள். தன் பள்ளி கால தோழி அனிதாவை சந்திக்கும் பிரவீணா அவள் காதலித்து மணமாகி பூரிப்படைந்து குழந்தை பெற்று நிறைவாய் வாழ்வதை கண்டு மனதில் பெரும்பள்ளம் உருவாகி அதை இட்டு நிரப்ப குரூர உரையாடலை நிகழ்த்துகிறாள். அடுத்து தன் மகனின் காதுகுத்து நிகழ்விற்கு பிரவீணாவை அனிதா அழைக்கிறாள். முந்தைய நாள் சந்திப்பில் பிரவீணாவிடம் தோல்வியுற்ற அனிதா தன் கணவரின் குடும்பத்தையும் அவளையும் எதிர்பாரா விதமாக அவமானபடுத்துகிறாள். இந்த இடத்தில் கதை முடிந்து விடுகிறது. அனிதாவும் வேலைக்கு செல்லும் பெண்ணாகவும், கூடுதலாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணாகவும் இருந்தும் தன் உள்ளில் பெரும் நிறைவின்மையை அடைந்து வெடிக்கிறாள். ஒட்டு மொத்த தற்கால நவீன வாழ்க்கை பெண்களின் நிலையை இன்று பெரிதாக மாற்றிவிடவில்லை. அவர்களுக்கு விதவிதமான உடைகள் அணிவித்து கல்வி அளித்து, உழைப்பை உறிஞ்சி அவர்களை பொருட்களாக பார்க்கும் தன்மையை கதை வாசகனுக்கு அளித்து விடுகிறது. மாற்றம் என்பது செல்போனும், உடைகளும், ஸ்கூட்டிகளும், நகைகளும், பொதுவில் கணவனை "எங்க மாமா" என்று பெண்கள் அழைப்பது அல்ல. மனப்பள்ளத்தை நிரப்பும் விடுதலை மட்டுமே என்று சொல்கிறது இக்கதை.
ஜெயவேல்
Comments
Post a Comment