தயங்கிச்சுடரும் தீபம் - கண்மணி குணசேகரனின் அஞ்சலை
இயல்புவாதம் என்ற இலக்கியப் போக்கின் துவக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கில் நிகழ்கிறது. சுருங்கச் சொன்னால் இயல்புவாதம் வாழ்வு தாண்டிய அதீதங்களான மன உச்சங்களான கடவுள்,ஆன்மீகம்,காதல் போன்றவற்றை முற்றாகத் தவிர்த்துவிட்டு எழுதப்படும் ஒரு புனைவு வகை. ஸ்பீல்பர்க் இயக்கிய Lincoln திரைப்படத்தில் இறுதிக்காட்சிக்கு சற்று முன்னர் Lincoln சொல்வதாக ஒரு வசனம் வரும். "உங்கள் முன்னிருப்பதைப் பாருங்கள். இன்று இருப்பதையும் இங்கு இருப்பதையும் பாருங்கள். அதைக் காண்பதை நமக்கு மிகுந்த துன்பம் தரக்கூடியது" என்பது அதன் உத்தேச மொழியாக்கம். ஏறக்குறைய இயல்புவாதத்தின் அழகியல் நோக்கும் இதுதான். அது புனைவில் நடைபெறும் சம்வங்களில் எந்தவித மாயத்தன்மையையும் கூட்டாமல் "இயல்பாக" நடக்கக்கூடியவற்றின் தொகை என்ற பாவனையை மேற்கொள்கிறது. இப்போக்கின் வளர்ச்சியான யதார்த்தவாதமும் தர்க்கத்து உட்பட்ட விஷயங்களை மட்டுமே கணக்கில் கொண்டாலும் யதார்த்தவாதத்தில் மேலும் சில காரணிகள் இயங்குவதைக் காணலாம். யதார்த்தவாதத்தில் எழுத்தாளனின் சிந்தனையும் நோக்கும் கதைப்போக்கில் வெளிப்படுவதை உணர முடியும்.
இயல்புவாதம் மற்றும் யதார்த்தவாதம் என்ற இவ்விரு இலக்கிய போக்குகளுக்கு இடையேயான நுண்ணிய வேறுபாடுகளைத் தாண்டி இவற்றை ஒன்றிணைத்துக் காண வைக்கும் பொது அம்சம் இவற்றின் "உண்மைக்கதையை" சொல்லும் பாவனை தான். ஒரே வகையான உற்பத்தி முறைக்குள் சமூகம் தன்னை திணித்துக் கொள்ளத் தொடங்கிய தாராளமயமாக்கல் அமலாக்கம் பெற்றுவிட்ட தொன்னூறுகளுக்குப் பிறகான நம் சூழலில் இயல்புவாத மற்றும் யதார்த்தவாத அழகியலில் முக்கியமான நாவல்கள் உருவாகி வருவது தற்செயலானது அல்ல.
ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,யுவன் சந்திரசேகர் என ஒரு பக்கம் மாய யதார்த்தம், மீபுனைவு, புராணங்களை மறுவார்ப்பு செய்வது என தமிழ் நாவல்கள் ஒரு வகையில் பயணித்துக் கொண்டிருக்க சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன்,இமையம் போன்றவர்கள் இயல்பு மற்றும் யதார்த்த வாதத்தளங்களில் புத்தாயிரத்திலும் அதற்கு சற்று முந்தைய வருடங்களிலும் இயங்கத் தொடங்கினர். இரண்டாம் வகைப் படைப்புகளின் தேவைக்கு ஒரு புறவயமான காரணமும் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் தினம் தினம் வாழந்து வந்த நிலத்தின் முகத்தை மாற்றின. ஒரு நிலத்தின் முகம் மாறுவதென்பது அதன் வரலாறு மாறுவதையே சுட்டுகிறது. பண்பாடு சிதைந்த இடத்தில் உருவாகி வரும் மாற்றத்தை ஆக்கப்பூர்வமானதாகப் பார்க்கலாம். போர்கள் இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றால் சீர்குலைந்த ஒரு சமூகம் தன்னை மீண்டும் கட்டித் தொகுத்துக் கொள்வது என்பது ஆக்கப்பூர்வமானது. ஆனால் நம் நிலங்களின் முகம் மாறத் தொடங்கியது தேவை சார்ந்து. நிலத்தில் நிகழ்ந்த மாற்றம் பண்பாட்டில் பிரதிபலித்ததன் விளைவே நிலம் சார்ந்து உருவான யதார்த்தவாதப் படைப்புகளும் இயல்புவாதப் படைப்புகளும். அவற்றின் ஆவணத்தன்மை முதலில் அவற்றை நோக்கி நம்மை ஈர்க்கிறது. குரூஸின் ஆமந்துறையையும்(ஆழி சூல் உலகு) கோபாலகிருஷ்ணனின் திருப்பூரையும்(மணல்கடிகை) நாம் முதன்முறையாக எதிர்கொள்ள நேர்கிறது. அங்கு நிகழும் மாற்றங்களை மெல்ல மெல்ல அறிந்து அந்த வாழ்க்கைக்குள் சென்று வாழத் தொடங்குகிறோம். அந்த நிலமும் மக்களும் நமக்குள் ஒரு நினைவாக எஞ்சுகிறார்கள். வெகு மக்கள் நினைவு என்பது நவீன அதிகார மேடைகளில் முக்கியமானதொரு பேரக்கூறு. விவசாயி என்ற அடையாளத்தின் மீது இருக்கும் ஈர்ப்பு மீனவன் என்ற அடையாளத்தின் மீது உருவாகாமல் இருப்பதற்கு காரணம் மீனவர்களைப் பற்றிய வெகுமக்கள் நினைவின்மையே. இவ்வகைப் படைப்புகள் குறிப்பிட்ட இனக்குழு அல்லது நிலம் குறித்த மனப்பதிவுகளை வாசகனிடம் உருவாக்குகின்றன. மற்றொன்று வழக்குச் சொற்கள் நிலம் சார்ந்த உபகரணங்கள் பிரத்யேக தொழில்நுட்பங்கள் என இப்படைப்புகள் ஒரு வகையான ஆவணத்தன்மையுடன் இயங்குகின்றன. ஆனால் இந்த அம்சங்கள் எதுவுமே ஒரு படைப்பில் கலைத்தன்மையை கூட்டிவிடுவதில்லை. கலைத்தன்மை அற்ற ஆவணத்தன்மை மட்டுமே கொண்ட படைப்புகள் ஒரு சாட்சியாக வேறெந்த வகையிலான பதிவுகளும் இல்லாதபோது தனித்து நிற்கும் ஆவணமாக நிலைபெறலாம். ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி மலைப்பழங்குடிகளிடம் வீரப்பனின் தேடுதல் வேட்டையின் போது காவல்துறை நிகழ்த்திய அத்துமீறல்களின் ஆவணப்பதிவு. பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கு தங்கி வாழ்ந்த அனுபவங்களின் அடிப்படையில் அந்த நாவலை எழுதியதாக மனித உரிமைச் செயல்பாட்டாளரான பாலமுருகன் முன்னுரையில் தெரிவிக்கிறார். ஆகவே "உண்மைத்தன்மையால்" அப்படைப்பு ஒரு மதிப்பினைப் பெறுகிறது. ஆனால் அங்கு நிகழ்ந்த வன்கொடுமைகளின் ஆவணப்பதிவு என்பதைத்தாண்டி அப்படைப்பு செல்லவில்லை.
கண்மணி குணசேகரனின் அஞ்சலை முழுக்க முழுக்க இயல்புவாதத்தின் தளத்தில் நின்று இயங்கினாலும் பேசுபொருளினால் அது ஆவணத்தன்மை காலமாற்றம் போன்றவற்றைத் தாண்டி நிலைக்கிறது. அதற்கும் ஒரு படி மேலே சென்று நம்மிடம் புராணப் பாத்திரம் போல மலைப்பைத் தரக்கூடிய ஒரு நவீன நாயகியை உருவாக்கி அளித்து விடுகிறது.
அஞ்சலையின் கதைக்களம் தமிழகத்தின் வட மாவட்டப் பகுதிகளில் உள்ள சிறு கிராமங்கள். சொந்த ஊரான கார்குடலில் இருந்து கணேசனை மணமுடித்து அஞ்சலை மணக்கொல்லை செல்கிறாள். அத்திருமண உறவு நிலைக்காமல் திரும்பி வருகிறவளை அவளது மூத்த அக்கா கல்யாணி தன் கணவனின் இளைய சகோதரன் ஆறுமுகத்துக்கு மணமுடித்து வைத்து தன் ஊரான தொளாருக்கு அழைத்துச் செல்கிறாள். அவனுக்கு வெண்ணிலா என்ற மகளைப் பெற்று எடுத்துக் கொண்டு தாய்வீடான கார்குடலுக்கே மீண்டும் திரும்புகிறாள் அஞ்சலை. வெண்ணிலாவை தாய், கார்குடலிலேயே இருக்கும் இளைய சகோதரி தங்கமணி ,இளைய சகோதரன் மணிகண்டன் ஆகியோரின் பொறுப்பில் விட்டு முதல் கணவனான கணேசனிடமே திரும்புகிறாள். கணேசனில் அஞ்சலைக்கு அஞ்சாயா செவ்வி என்று இரண்டு மகள்கள் பிறக்கின்றன.
கதையென்று எதையேனும் சொல்வதென்றால் அஞ்சலையைப் பொறுத்தவரை இவ்வளவு தான். அதுவும் நேர்க்கோட்டிலேயே எந்தவித மர்மங்களும் இன்றிதான் கதைப் பயணிக்கிறது. ஆனால் இந்த நாவலை முக்கியமானதாக மாற்றுவது நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சமூகம் என்ற விளங்கிக்கொள்ள முடியாத பெருவிசை மனிதர்களின் மீது செலுத்தும் அழுத்தத்தை எந்தவித ஆரவாரமும் இன்றி நாவல் கோடிட்டுச் செல்லும் விதமே.
இப்படித் தொடங்குகிறது நாவல். "புகைய ஆரம்பித்த போதே அணைத்துவிடத்தான் நினைத்தாள் பாக்கியம். கையில் தோதுமாது இல்லாமல் வெறுங்கையை முழம் போட முடியவில்லை."
வயல் வேலைக்குச் சென்ற மகள் நிலத்தின் சொந்தக்காரரின் மகனுடன் சற்று துடுக்காக பேசி சிரித்துவிடுகிறாள். அது ஊரில் அலரைக் கிளப்புகிறது. நில உரிமையாளர் படையாச்சி சாதி. அஞ்சலை பறைச்சாதி. கணவனில்லாமல் இரண்டு மகள்களை மணம் புரிந்து வைத்துவிட்டு அஞ்சலைக்கு திருமணத்தை இதுபோன்ற அலர்கள் பெருகும் முன்னே முடித்துவிட நினைக்கிறாள் அஞ்சலையின் அம்மா பாக்கியம்.
அஞ்சலை நாவலில் இந்த அலர் ஒரு முக்கிய பாத்திரமாகவே இடம்பெறுகிறது. இந்த அலருக்கு பயந்து வாழ்கிறவளாகவே அஞ்சலை முழு நாவலிலும் வருகிறாள். நாவலின் முதன்மையான பலம் என மிகக்கூர்மையான அதேநேரம் இயல்பான மொழியின் வழியே புற உலகம் அதைவிட கிராமத்து சொலவடை போன்ற வார்த்தைகள் வழியாக அக உலகும் கட்டமைக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம். படையாச்சிகள் நில உரிமையாளர்களாகவும் அவர்கள் நிலங்களில் உழைப்பவர்களாக பறையர்களும் சித்தரிக்கப்படுகின்றனர். பறையர் தெருவைக் கடந்து தான் படையாச்சிகள் வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் பறைத்தெருவை ஒவ்வொரு முறை கடக்கும் போதும் எழ வேண்டி இருக்கிறது. அதன் காரணமாவே வீட்டை சாலையைப் பார்த்தவாக்கில் பறையர் தெருவில் கட்டுவதில்லை போன்ற குறிப்புகள் பறையர் தெரு ஆட்களுக்கு தண்ணீர் கொடுக்க நேரிட்டால் கொடுத்த பாத்திரத்தை "தீட்டுக் கழித்து" எடுத்துச் செல்வது போன்ற வழக்கங்கள் வழியாகவே எந்த பெரும் உரசல்களும் இன்றி ஜாதிய அதிகாரத்தை ஆசிரியர் சித்தரித்து விடுகிறார். அதை விட நுணுக்கமாக அக உலகு சித்தரிக்கப்படுகிறது.
அஞ்சலைக்கு பெண் பார்க்கும் பொறுப்பை இரண்டாவது மருமகனான சின்னச்சாமியிடம் விடுகிறாள் அஞ்சலையின் அம்மா பாக்கியம். அவன் அஞ்சலையின் அழகுக்காக அஞ்சலையை தானே மணந்து கொள்வதாகச் சொல்கிறான். அவள் மறுத்துவிடவே மணக்கொல்லையில் இருந்து மாப்பிள்ளை கூட்டி வருகிறான். மாப்பிள்ளையை அஞ்சலைக்கு பிடித்துவிடுகிறது. தனக்குச் சொல்லாமல் மாப்பிள்ளை எப்படி வந்து சென்றானென்று அஞ்சலையின் மூத்த அக்கா கல்யாணி வந்து அம்மாவிடம் சண்டையிடுகிறாள்.
"கோர்த்த பல் குலையாமல் நெஞ்சு வெடிக்க குந்தியிருந்த பாக்கியம் வாயைத் திறந்தாள்" என்பன போன்ற சொல்லாட்சிகள் சட்டென உணர்வுநிலையைக் கடத்தி விடுகின்றன. பாக்கியம் கல்யாணியை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள்.அஞ்சலை தன்னைப் பார்த்து சென்ற மணமகனை எண்ணிக் கனவுகளை வளர்த்துக் கொள்கிறாள். விட்டுப் போகும் ஊரில் கடைசியாக குளித்து முடித்து முழு உடலும் பூரித்து நிற்க வீட்டுக்கு வரும் மகளைப் பார்த்து பூரிப்பு அடையும் பாக்கியத்தின் விழிகளில் முதல் அத்தியாயம் முடிகிறது.
திருமணம் அஞ்சலையைக் குலைத்துவிடுகிறது. அவளுக்கு மாப்பிள்ளை என்று காட்டப்பட்டவனின் தம்பி தான் உண்மையில் கணவனாக வரவிருக்கிறவன் என அஞ்சலை பின்னரே அறிகிறாள். இந்த ஏமாற்றத்தின் துயரை அடுத்தடுத்த அத்தியாயங்கள் சொல்கின்றன. அஞ்சலை மனதில் நினைத்திருந்தவனுக்கு ஏற்கனவே மணமாகி குழந்தை இருக்கிறது. ஒரே வீட்டின் இரண்டு பகுதியில் அஞ்சலை தன்னுடைய "நோஞ்சான்" கணவன் கணேசனுடனும் தனக்கு மாப்பிள்ளை எனக்காட்டப்பட்டவன் அவன் மனைவியுடனும் வசிக்கின்றனர். கணவனை அஞ்சலை அணுக விடுவதே இல்லை. திருமணம் முடிந்து வெறுத்துப் போய் தூக்கிடப் போகிறவள் எதிரே உள்ள மரத்தில் அம்மாவும் தூக்கிட நிற்பதை பார்த்து முடிவினை மாற்றிக் கொள்கிறாள். மணக்கொல்லையில் வள்ளி அறிமுகமாகிறாள். அவளது துணை அஞ்சலைக்கு ஆறுதல் தருகிறது. அவளும் மணமாகிப் போய்விட கணவனின் அண்ணன் மனைவியுடன் ஏற்படும் மோதலில் அஞ்சலை மணக்கொல்லையை விட்டு வெளியேறுகிறாள். விருதாச்சலத்தில் அவளை சந்திக்கும் மூத்த அக்கா கல்யாணி அவளை அங்கேயே தன் கணவனின் சகோதரன் ஆறுமுகத்துக்கு மணமுடித்து வைக்கிறாள்.
அஞ்சலை அக்காவுடன் தொளார் போவதோடு மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அங்கு கணவனுக்கு ஏற்கனவே அக்காவுடன் தொடர்பிருப்பது தெரிய வரும் போது அஞ்சலை கருவுற்றிருக்கிறாள். ஒரு அபலைப் பெண்ணை சித்தரிப்பதைப் போன்றே செல்லும் இந்த கதைப்போக்கில் சற்று ஊன்றி கவனித்தால் இரண்டு விஷயங்களை அவதானிக்க முடியும். இரண்டின் வழியாகவும் வெளிப்படும் சமூக விமர்சனமே இப்படைப்பை மறுக்க முடியாததாக மாற்றுகிறது.
ஒன்று அஞ்சலைக்கு நிகழும் எந்தத் துயரும் அவளுக்குத் தெரியாமல் நடப்பதில்லை என்பது. அவளது அக்கா தங்கமணியின் கணவன் மேல் அவளுக்கு சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. அவளைப் பெண் பார்க்க வரும் போது மணக்கொல்லைக்காரர்கள் மேம்போக்காகவே மாப்பிள்ளையை அவளிடம் காண்பிக்கிறார்கள். ஊராரின் திட்டம் அவலட்சணமான கணேசனின் அண்ணனை மாப்பிள்ளை எனக்காண்பித்து திருமணத்தன்று கணேசனை மணமுடித்து வைப்பது. ஆனால் அஞ்சலையின் பார்வை அவலட்சணமானவனின் மீதே முதலில் விழுகிறது. அதன் பின்னரே அவள் மற்றவனைப் பார்க்கிறாள். தான் மணம் புரிந்து கொள்ள இருப்பவனை நம்பி அஞ்சலை பூரிக்கும் தருணங்களில் கூட அவலட்சணமானவனின் முகமும் இணைந்தே நினைவில் எழுகிறது.
அதுபோலவே அக்கா அவளது கொழுந்தனை அவளுக்கு மணமுடித்து வைக்க நினைக்கும் போதும் பெண்ணுக்கே உரிய கூர்மை அக்காவையும் அவனையும் ஒரு கணம் இணைத்துப் பார்க்கிறது. ஆனால் இரண்டு முறையும் அஞ்சலை அந்த அப்பட்டமான நிஜத்தை எதிர்கொள்ள அஞ்சுகிறாள்.முதல்முறை உண்மையில் அவன்தான் தனக்கு கணவனாக வரப்போகிறானா என்பதை அவள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க முடியும். இரண்டாவது முறை அக்கா அவளை மணமுடித்து வைக்க அவசரப்படுத்துவதை சற்று சந்தேகப்பட்டிருக்க முடியும். இரண்டு வாய்ப்புகளையும் அவள் தெரிந்தே விலக்குகிறாள் என்பதை அவளது பின்புலத்தை நோக்கி நம்மை சிந்திக்க வைக்கிறது.
இரண்டு மகள்களை மணமுடித்து வைத்திருக்கும் அம்மா. இன்னும் விபரம் தெரியாத நிலையிலிருக்கும் தம்பி. ஊரும் அலர் பேசத் தொடங்கியிருக்கிறது எனும் போது அவளுக்கு வேறு வழி இருப்பதில்லை. இருந்தும் அவளது கனவுகளை அவள் நீடித்துக் கொள்கிறாள். அக்கனவுகளை நீடித்துக் கொள்ளச் செய்தவனிடம் அவள் பேசத் தொடங்கும் போது தான் சமூகம் என்ற அமைப்பும் அது அஞ்சலையின் மீது செலுத்தும் வன்முறையும் நமக்கு புலப்படத் தொடங்குகிறது.
இரண்டாவது காரணம் பொதுமகள் என்கிற அடையாளம். அஞ்சலையின் துயர் தொடங்குவது அவள் மனதுக்குள் வரித்துக் கொண்டவனின் மனைவியிடமிருந்தே. அஞ்சலை முதல்முறை பயந்து நடுங்குவதும் அவள் முன் தான். நம் சமூகத்தில் "பத்தினி" என்ற கருத்தாக்கம் மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. காணும் பெண் பத்தினியா இல்லையா என்பது நமது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இந்த பத்தினித்தனத்திற்கான வரையறை மிக இறுக்கமானதாக இருக்கும் ஒரு சமூகமாக அஞ்சலை பிறந்து வளரும் பறையர் சமூகம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் உழைப்பு நிலமின்மை வறுமை என்கிற சூழலிலும் ஒரு பெண் தன்னுடைய பத்தினித்தனத்தை பேணிக் கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை சூழல் அவள் மேல் திணிக்கிறது. இந்த பத்தினித்தன எதிர்பார்ப்புக்கு வரிய சமூகங்களில் வேறொரு வகையான காரணமும் உண்டு. "இரண்டு மனைவியரை" பேணும் அளவு ஆண் வலுவான பொருளாதார பின்புலம் உடையவனாக இருப்பதில்லை. ஆகவே அன்பு உடமையுணர்வு(possessiveness) போன்றவற்றைத் தாண்டி பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பு தான் முதல் மனைவியை எரிச்சல் கொள்ளச் செய்யும். அஞ்சலையின் கொழுந்தன் மனைவி அடைவதும் அத்தகைய பயத்தைத்தான். அது அஞ்சலையை பொதுமகள் என்று சொல்ல வைக்கிறது. குலமகள் என்ற உருவகம் வலுப்பெற்ற எங்குமே பொதுமகளுக்கான வரையறையும் மிகத்தெளிவாகவே இருக்கும். பொதுமகள் கணவனைத் தாண்டி பிற ஆண்களின் மீதும் இச்சை கொண்டிருக்கிறவள், கணவனைத் தாண்டி பிறனுடன் உறவு வைத்துக் கொண்டவள் என அந்த வரையறை நீணடு கொண்டே செல்லும். அஞ்சலையை இந்த பொதுமகள் அடையாளத்துக்குள் அவள் வாழும் சமூக மற்றும் பொருளாதாரச் சூழல் தொடர்ந்து இழுத்தபடியே இருக்கிறது. மணக்கொல்லையை விட்டு அஞ்சலை வெளியேறுகிறாள்.
அவள் மூத்த சகோதரி கல்யாணி அவளை தன் கொழுந்தனுக்கு மணமுடித்து வைக்கிறாள். அங்கும் அஞ்சலையால் நிலைக்க முடியவில்லை. கணவனை விடுத்து கொழுந்தனுடன் வெளிப்படையாக உறவிலிருக்கும் கல்யாணி தைரியமானவளாகவும் அஞ்சலை குறுகி நிற்பவளாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். ஏனெனில் அஞ்சலை "அறுத்துக் கட்டிக்கொண்டவள்". அவள் பிறந்தது அதற்கு வாய்ப்பளிக்காத சமூகச் சூழல். ஆகவே இங்கு பொதுமகள் என்ற அடையாளம் இன்னும் தீவிரமாக அஞ்சலையின் மீது சுமத்தப்படுகிறது.
அக்காவுக்கும் தன் கணவனுக்குமான உறவு தெரிந்த பிறகு கூட அஞ்சலை "என்னா செய்றது? வாழ்ந்துதான் ஆவணும். மனக்கொல்லையில் வாக்கப்பட்டது- சனமா ஏத்திவுட்டது. இங்க வந்தது-நாம ஏறிக்கிட்டது. அழுதா தீந்துடாது" என்று எண்ணிக் கொள்கிறாள். அவளை நம் சமூகம் கைவிடத் தொடங்குவது இங்குதான். ஒரு அழகான பெண்ணினால் ஆணுக்குள் ஏற்படும் தாழ்வுணர்வு. இரண்டாவது அக்காவின் கணவன் சின்னச்சாமியின் தாழ்வுணர்வு அல்லது இச்சை தான் அஞ்சலையை மணக்கொல்லைக்குத் தள்ளுகிறது. அடுத்தபடியாக அவளது அக்கா அஞ்சலையைப் பயன்படுத்திக் கொள்கிறாள். அஞ்சலையின் கணவன் கல்யாணிக்கும் ஆறுமுகத்துக்குமான உறவு எத்தன்மை உடையது எங்குமே நேரடியாக சொல்லப்படவில்லை என்பது இந்த நாவலின் மற்றொரு முக்கியமான கூறு. ஆறுமுகம் அஞ்சலைக்குப் பிறக்கும் தன் மகள் வெண்ணிலாவை சீந்துவதே இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். கல்யாணி மிகத்தீவிரமான ஒரு எதிர்பார்த்திரமாக உருவம் கொள்கிறாள். மணக்கொல்லையைப் போல தொளாரை விட்டும் அஞ்சலை வெளியேறுகிறாள். இம்முறை கையில் ஒரு குழந்தையுடன் பொதுமகள் என்ற அடையாளப்படுத்தல் இன்னும் தீவிரமடைந்த நிலையில்.
அவள் ஊரான கார்குடலும் அவளை முன்பு போல பார்ப்பதில்லை. ஆண்களின் கண்களுக்கு "பயன்படுத்திக் கொள்ளத்" தக்கவளாகவும் பெண்களை அச்சுறுத்துகிறவளாகவும் தங்களுடைய அப்பாவிப் பிள்ளைகளை "தூண்டுகிறவளாகவும்" தெரிகிறாள். மனம் கசந்து மகளை விடுத்து அஞ்சலை அவளது தோழி வள்ளியின் உதவியுடன் மீண்டும் முதல் கணவன் கணேசன் வீட்டுக்கே வருகிறாள். அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகளைப் பெறுகிறாள். அதன்பிறகான அலைகழிப்புகளால் அஞ்சலை அடையும் துயரும் வீழ்ச்சியுமே இந்த நாவல்.
நாவலை வாசித்து முடித்ததும் நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. அஞ்சலை ஒரு பொதுமகள்தன்மை கொண்ட பெண் என அவளது கொழுந்தனின் மனைவியால் பின்னர் சகோதரியால் அதன்பிறகு ஊரால் அதன்பிறகு தாயால் என அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறாள். அவள் முதல் குழந்தை பெற்ற பிறகும் அஞ்சலையின் அழகிற்கென அவளை ஏற்றுக் கொள்ளும் கணேசனும் அவளை பொதுமகள் என்கிறான். நாவலின் இறுதியில் அவளது சொந்த மகளே அவளை பொதுமகள் என்று சொல்கிறாள். இந்த படைப்பில் நம்மை மிகுந்த மனத்தொந்தரவுக்கு உள்ளாக்குவது அஞ்சலையின் மீது சுமத்தப்படும் இந்த பிம்பமே.
பெண் விடுதலை, சமூக மாற்றம் என்பது போன்ற எந்தவிதமான மீட்புகளையும் முன் வைக்காமல் மிகுந்த மௌனத்துடன் நாவலின் பக்கங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அஞ்சலைக்கு மீட்சி என்பதே கிடையாது என்கிற உண்மையை நாம் ஒவ்வொரு சம்பவங்களின் வழியாகவும் உணர்கிறோம்.
அதற்கு மூன்று காரணங்களை இப்படைப்பு முன்வைப்பதாக நான் உணர்கிறேன். முதல் காரணம் பெண்ணின் மீது ஆணக்கிருக்கும் வஞ்சம். அந்த வஞ்சத்தால் அவளை அடைய, அடக்கி வைக்க , முடியாத போது அவளை அழித்துவிட நினைக்கும் மனப்போக்கு. அஞ்சலையை மணக்க நினைக்கும் சின்னச்சாமி அதை வெளிப்படுத்துகிறான்.
இரண்டாவதாக பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் மிகத் தீவிரமாக கண்காணிக்கும் சமூக அமைப்பு. கிராமங்களில் இந்த கண்காணிப்பு கூடுதல் வலுப்பெறுகிறது. அலர் பேசுவது தொலைக்காட்சி வரும் வரை கிராமங்களின் பிரதான பொழுதுபோக்குகளில் ஒன்று. இருவர் அலர் பேசும் போது என்ன நிகழ்கிறது? இருவருமே ஒரு பொது விழுமியத்தை ஒத்துக் கொள்கின்றனர். அந்த விழுமியத்தை கடைபிடிக்காதவர்களைத் தூற்றுகின்றனர். ஆனால் அவ்விருவருமே அந்த விழுமியத்தை பேசும் அந்த நேரத்தில் ஒத்துக் கொண்டால் மட்டும் போதும் அதைக் கடைபிடிக்கத் தேவையில்லை என்பதே அலரை தீவிரமான சமூக உரையாடல்களில் இருந்து வேறுபடுத்துகிறது. இந்த அலருக்கு அஞ்சும் தன்மை நாவல் முழுவதுமே அஞ்சலையிடமும் அவள் தாய் பாக்கியத்திடமும் நீண்டு கிடக்கிறது.
மூன்றாவது பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருப்பவர்கள் மீதும் பாவனைகள் வழியாக சமூகம் கடைபிடிக்கச் சொல்லும் விழுமியங்கள். அஞ்சலை தன் மூத்த மகளைப் பெற்று வீட்டில் வேலை செய்ய முடியாமல் படுத்திருக்கும் போது அவளது அம்மா பாடும் தாலாட்டைப் பற்றி சிந்தித்துப் பார்க்கிறாள். அப்பாடல் அடுப்பில் சோறு கொதித்துக் கொண்டிருக்கும் போது அழும் மகனுக்கு பால் கொடுக்க ஓடுவது பற்றி அலுத்துக் கொள்ளும் தாயினைப் பற்றிய தாலாட்டு. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே அரிச்சோறு கிடைக்கும் தன் ஊரில் இந்தப்பாடல் எப்படி வந்தது என்பதை அஞ்சலையால் புரிந்து கொள்ள முடிவதில்லை. உணவே இல்லாத போதும் அது இருப்பதாக பாவனை செய்ய வேண்டியிருப்பதன் கட்டாயம் போல அஞ்சலையும் சில கற்பு போன்ற "விலையுயர்ந்த" பாவனைகளை கடைபிடிக்க நிர்பந்திக்கப்படுகிறாள்.
இந்த நாவலின் கூர்மையே ஒரு விதத்தில் குறையாகவும் படுகிறது. அஞ்சலை விரோதமாகத் திரும்புவதாகவே அத்தனை சந்தர்ப்பங்களும் அமைகின்றன என்பது தான் நாவலின் போக்கை தீர்மானிக்கிறது எனும் அந்த விரோதத்தை உருவாக்கும் சூழலை சில இடங்களில் வலிந்து உருவாக்கி இருப்பதான தோற்றம் ஏற்படுகிறது. உதாரணமாக தன் மகளை மணம் புரிந்து கொள்ள சொல்லி அஞ்சலை அவள் தம்பி மணிகண்டனிடம் கெஞ்சும் இடம். உண்மையில் அந்த இடத்தில் அஞ்சலை பெற்றதும் விட்டுச் சென்ற மகளை அவ்வளவு நாள் படிக்க வைத்த மணிகண்டனின் தரப்பின் மீதான மறுக்க முடியாத நியாயம் பேசப்படவில்லை. அது தெரிந்தே விடப்பட்ட இடைவெளியாக இருக்கலாம். ஆனால் அஞ்சலைக்கான கனிவினை வாசக மனதில் உருவாக்குவதற்கென பல இடங்களில் இது போன்ற இடைவெளிகள் நாவலில் தெரிகின்றன. அஞ்சலையின் ஓர்ப்படி ஓரிடத்தில் அஞ்சலையை குடும்பத்துடன் சேர்ந்து தாக்குகிறாள். அப்போது அதுவரை நாவலில் அங்கும் இங்கும் தென்பட்ட அந்த ஓர்ப்படியின் மகன்கள் வரை வந்து அஞ்சலையை அடிக்கின்றனர். இதுபோல ஒருசில உணர்வு ரீதியான அதீதங்களைத் தவிர்த்திருக்கலாம்.
நம்முடைய புராணங்களில் மெய்மையைத் தேடிப் பயணிக்கும் அர்ஜுனன் போன்ற பல மாவீரர்களைப் பற்றி வாசிக்கிறோம். அவர்களின் பயணம் சாகசம் நிறைந்ததாக இருக்கிறது. ஒருவகையில் அஞ்சலையும் அப்படியொரு பயணியே. வறுமையும் கடுமையான உழைப்பும் அன்புக்கான ஏக்கமும் எல்லா சமரசங்களையும் செய்து கொண்ட பிறகும் அன்பு கிடைக்காமல் போய் விட்ட விரக்தியும் கொண்ட பயணி அவள்.
ஆசிரியர் சொல்வது போல "கார்குடலில் நெல் அறுக்கவும் அடிக்கவும் சுணையில் வேலை. தொளாரில் கரும்புச்சுணை. மணக்கொல்லையில் முள்ளும் முரட்டுமாய் கொட்டை பொறுக்குகிற வேலை. இங்கு வெள்ளை மண்ணில் கொங்குப் புழுதியில் பிழைப்பு."
கரும்பு முந்திரி நெல் என ஒவ்வொரு நிலத்திலும் இருக்கும் உழைப்பு முறை மாறுபட்டாலும் மனிதர்கள் அஞ்சலையை ஒன்று போலவே நடத்துகின்றனர். கனமான நெல் கட்டை தூக்கிச் செல்லும் பெண் நெல்லின் சுமையால் குடும்பக்கட்டுப்பாட்டுக்கென போட்ட தையல் பிரிந்துவிடும் போல என்று விரக்தியான சிரிப்புடன் சொல்லிச் செல்வது என்பது போன்ற சிறிய சித்தரிப்புகள் வழியாகவே உழைப்பின் சிரமங்களை அந்த வாழ்வின் அவலங்களை சொல்லி விடுகிறார் ஆசிரியர். இப்படி கண்டெடுக்கும் படியான பல இடங்கள் நாவலின் பல பக்கங்களில் நிறைந்திருக்கின்றன.
முழுக்கவே பெண்ணின் அழகுணர்ச்சி தேர்வுணர்வு போன்றவற்றுக்கு எதிரான ஆண் மனதின் வன்மம் என்று வாசித்துச் செல்லவும் இந்த நாவல் இடமளிக்கிறது. முதல் அத்தியாயத்தில் நில உரிமையாளரின் மகனை வம்புக்கிழுக்கும் துடுக்கான அஞ்சலை நாவலின் இறுதியில் எண்ணுவதாக இப்படி வருகிறது.
"அஞ்சலை நிமிர்ந்து வீரனாரைப் பார்த்தாள். கையில் கத்தியை வைத்துக் கொண்டு கண்டந்துண்டமாய் வெட்டிவிடுகிற மாதிரி, உக்கிரப் பார்வையாய் தெரிந்தது."
இறுதியில் எல்லா ஆண்களும் விலக அழுகையும் நம்பிக்கையுமாக மூத்த மகளின் கையைப் பிடித்தபடி மற்ற இருமகள்களும் பின் தொடர நடந்து வரும் அஞ்சலை நமக்குள் இருக்கும் பல பெண் தெய்வங்களின் சித்திரத்தை நினைவுக்கு கொண்டு வந்துவிடுகிறாள்.
இந்த நாவலில் எனக்கு இரு இடங்கள் முக்கியமானதாகப்பட்டன. தனக்குப் பிடிக்காத வகையில் மணவாழ்க்கை அமைந்ததால் அஞ்சலை தூக்கிட்டுக் கொள்ளச் செல்கிறாள். அவளுக்கு எதிரே அவள் அம்மாவும் ஒரு தூக்குக் கயிறுடன் நிற்கிறாள். மூன்று மகள்களைப் பெற்று மூத்த மகளின் வாழ்வும் கேள்விக்குரியாகி நிற்குமிடத்தில் அஞ்சலை மீண்டும் தூக்கிட்டுக் கொள்ளச் செல்கிறாள். அவள் மகள் வெண்ணிலா அஞ்சலையை அடித்து இழுத்து வருகிறாள். வாழ்வதற்கான நம்பிக்கை (தற்காலிகமாவேனும்) கொடுக்கிறாள். பாக்கியத்தின் வழியாக அஞ்சலை வெண்ணிலாவிடம் ஒப்படைக்கப்படுவதாகவே நான் இந்த நாவலை வாசித்து முடித்தேன். அகல் சுடரை காக்கும் கைகள் போல வெண்ணிலாவும் பாக்கியமும் அஞ்சலைக்கு இருபுறமும் நிற்கின்றனர். சமூகமும் ஆண்களும் எதிராக இருக்கும் போதும் தயங்கித் தயங்கியேனும் சுடர்ந்து கொண்டே இருக்கும் நாயகியாக நிலைபெறுகிறாள் அஞ்சலை.
தோழர்
ReplyDeleteபடித்திராத ஒரு நாவலைப் பற்றிய பதிவைப் படிப்பது- நம் வாசிப்புப் பட்டியலில் அது இடம்பெறுமா என்று முடிவு செய்யும்.ஆர்வத்தின் வெளிப்பாடு தான். மிக விரிவாக, ஆழமாக அந்நாவலின் கருவை வாசகருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். பெண்களின் அகச் சிக்கல்களை படைப்பாளர்கள் நேர்மையாக செய்திருந்தாலும், விமர்சகரும் அதே தளத்தில் நின்று புரிந்து பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசியம் வாசிக்கிறேன்.